Sunday, May 17, 2009

தமிழகத்தில் தி.மு.க., - காங்., கூட்டணி அபாரம்: பா.ம.க., - ம.தி.மு.க.,வை வீழ்த்தியது; தே.மு.தி.க., - பா.ஜ., அணி தோல்வி






தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பலம் வாய்ந்த கூட்டணி என்று கருதப்பட்ட அ.தி.மு.க., அணியை வீழ்த்தி, தி.மு.க., - காங்கிரஸ் கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது. மாறி மாறி கூட்டணி அமைத்து வந்த பா.ம.க., - ம.தி.மு.க., தோல்வி அடைந்தன. பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க., - பா.ஜ., அணிகளும் தோல்வியடைந்துள்ளன.



லோக்சபா தேர்தலில் தேசிய அளவில் வெவ்வேறு பிரச்னைகள் அலசப்பட்ட போதிலும், தமிழகத்தில் கூட்டணி பலத்தை வைத்து மதிப்பிடப்பட்டு வந்தது. அ.தி.மு.க., - பா.ம.க., - ம.தி.மு.க., மற்றும் இடதுசாரிகள் சேர்ந்து அமைத்த கூட்டணியே பலமான கூட்டணியாக கருதப்பட்டது. இதுதவிர, இலங்கைப் பிரச்னையை முன்னிறுத்தி இக்கூட்டணி பிரசாரம் செய்ததால், தி.மு.க., அணிக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதப்பட்டது.



அனைத்தையும் மீறி, மிகப் பெரிய வெற்றியை தி.மு.க., அணி பெற்றுள்ளது. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதலே, 20க்கும் மேற்பட்ட தொகுதிகளில் இந்த அணி முன்னிலை வகித்தது. சில தொகுதிகளில் மட்டும் இழுபறி நீடித்தது. இறுதியில், திருச்சி, விழுப்புரம் போன்ற தொகுதிகளில் முன்னணியில் இருந்த தி.மு.க., அணி வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். அதேபோல், காஞ்சிபுரம், சிவகங்கை, தேனி போன்ற தொகுதிகளில் முன்னணியில் இருந்த அ.தி.மு.க., அணி வேட்பாளர்கள் தோல்வியைத் தழுவினர். தி.மு.க., அணி 28 தொகுதிகளிலும், அ.தி.மு.க., அணி 12 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன.



இதில், தி.மு.க., 18 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒன்பது தொகுதிகளிலும், விடுதலைச் சிறுத்தைகள் ஒரு தொகுதியிலும், அ.தி.மு.க., ஒன்பது தொகுதிகளிலும், ம.தி.மு.க., இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் ஆகியவை தலா ஒரு தொகுதியிலும் வெற்றி பெற்றன. தி.மு.க., 22 தொகுதிகளில் போட்டியிட்டு 18 தொகுதிகளை வென்றுள்ளது. காங்கிரஸ் 16 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்பதிலும், விடுதலைச் சிறுத்தைகள் இரண்டில் போட்டியிட்டு ஒன்றிலும் வென்றுள்ளன.



அ.தி.மு.க., 23 தொகுதிகளில் போட்டியிட்டு ஒன்பது தொகுதிகளிலும், பா.ம.க., ஏழு தொகுதிகளில் போட்டியிட்டு பூஜ்யத்தையும், ம.தி.மு.க., நான்கில் போட்டியிட்டு ஒன்றிலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் தலா மூன்றில் போட்டியிட்டு தலா ஒன்றிலும் வென்றுள்ளன. ஆளுங்கட்சிக்கு எதிரான பிரசாரம், இலங்கைப் பிரச்னை போன்ற எதுவும் இத்தேர்தலில் எடுபடவில்லை. வேட்பாளர்களின் மீதான அதிருப்தி காரணமாகவே, சில இடங்களை தி.மு.க., இழந்துள்ளது. மேலும், அ.தி.மு.க., வெற்றி பெற்றதில் அதிக தொகுதிகள் காங்கிரசுக்கு எதிராக வென்றவை. இத்தொகுதிகளிலும் தி.மு.க., நேரடியாக களமிறங்கி இருந்தால், கூடுதல் வெற்றி கிடைத்திருக்கும் எனக் கருதப்படுகிறது.



இத்தேர்தலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கருதப்பட்ட சில கட்சிகள், ஓட்டுக்களை மட்டுமே பிரிக்க முடிந்ததே தவிர, டிபாசிட் கூட பெற முடியவில்லை. தே.மு.தி.க., 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டாலும், ஒவ்வொரு தொகுதியிலும் 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஓட்டுகள் வரை பெற்றது. எனினும், எந்த தொகுதியிலும் இரண்டாவது இடத்தைக் கூட பிடிக்கவில்லை. இக்கட்சி போட்டியிட்ட தொகுதிகளில், அதிகபட்சமாக கள்ளக்குறிச்சியில் விஜயகாந்த் மைத்துனர் சுதீஷ், ஒரு லட்சத்து 32 ஆயிரத்து 322 ஓட்டுகளும், விழுப்புரத்தில் ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 476 ஓட்டுகளும், விருதுநகரில் ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 229 ஓட்டுகளும்,



ஆரணியில் ஒரு லட்சத்து 5,893 ஓட்டுகளும், தர்மபுரியில் ஒரு லட்சத்து 3,485 ஓட்டுகளும் பெற்றுள்ளது. மற்ற தொகுதிகளில் குறைந்தளவு ஓட்டுகளே பெற்றுள்ளது. இத்தேர்தலில் பாரதிய ஜனதாவும் புதிய அணியை அமைத்து போட்டியிட்டது. இதில், கன்னியாகுமரியில் இரண்டு லட்சத்து 54 ஆயிரத்து 474 ஓட்டுகளை பெற்று இரண்டாவது இடத்தையும், ராமநாதபுரத்தில் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 322 ஓட்டுகளை பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தது.



கன்னியாகுமரியில் அ.தி.மு.க., அணியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் பெல்லார்மின் டிபாசிட் இழந்து, தே.மு.தி.க., வேட்பாளருக்கு அடுத்தபடியாக நான்காவது இடத்துக்குத் தள்ளப்பட்டார். மற்றபடி இக்கட்சி சார்பில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்களான இல.கணேசன் 42 ஆயிரத்து 925 ஓட்டுகளையும், தமிழிசை சவுந்தரராஜன் 21 ஆயிரத்து 942 ஓட்டுகளையும், லலிதா குமாரமங்கலம் 30 ஆயிரத்து 329 ஓட்டுகளையுமே பெற்றனர். கோவையில் இக்கட்சி 37 ஆயிரத்து 909 ஓட்டுகளையும், நெல்லையில் 39 ஆயிரத்து 987 ஓட்டுகளையும் அதிகபட்சமாக பெற்றுள்ளது. தேர்தலுக்கு தேர்தல் அணி மாறி வந்தது மட்டுமன்றி, எதிரணியை கடுமையாக விமர்சித்துவந்த பா.ம.க.,வுக்கு ஒரு தொகுதி கூட கிடைக்கவில்லை. அதேபோல், ம.தி.மு.க.,வும் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது.