Sunday, November 30, 2008

இந்தியா-பாகிஸ்தான் போர் மூளுமா?




இஸ்லாமாபாத், டிச.1-
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய யுத்தத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
மும்பையில் உள்ள முக்கிய ஓட்டல்கள் உள்பட 11 இடங்களில் கடந்த புதன்கிழமை அன்று தீவிரவாதிகள் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டனர். கடல் வழியாக இந்தியாவுக்குள் ழைந்து ராணுவத்துடன் நேருக்கு நேர் மோதிய 11 தீவிரவாதிகளில் 10 பேர், 60 மணி நேர சண்டைக்கு பிறகு சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
உயிருடன் பிடிபட்ட அஜ்மல் என்ற தீவிரவாதியை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மும்பைக்குள் வந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களை இந்தியாவுக்குள் அனுப்பி வைத்ததில் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.க்கு முக்கிய பங்கு உள்ளது என்பதும் தெரிய வந்தது.

இது தவிர பாகிஸ்தான் கடற்படை மற்றும் கராச்சியில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் ஆகியோரும் ஏராளமான உதவிகள் செய்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் கோபத்தில் உள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு பேசிய மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜியும் கடுமையான வார்த்தைகளால் அந்த நாட்டை எச்சரித்தார்.
இதனால், உளவுத்துறை தலைவர் சுஜா பாட்ஷாவை இந்தியாவுக்கு அனுப்புவதாக முதலில் தெரிவித்த பாகிஸ்தான் பின்னர் அவரை அனுப்ப மறுத்து விட்டது. மும்பை சம்பவம் காரணமாக இந்தியா போர் தொடுக்குமோ என்ற அச்சத்தில் பாகிஸ்தான் உள்ளது.
எனவே பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ராணுவ தளபதி பர்வேஸ் கயானி ஆகியோர் நேற்று முன்தினம் மட்டும் சில மணி நேர இடைவெளியில் இரண்டு முறை ஆலோசனை நடத்தினர். அப்போது, ராணுவ தளபதி கயானி, `எந்தவொரு சவாலையும் சமாளிக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருக்கிறது. இந்தியா படையெடுத்தால் அதை எதிர்கொள்ளும் சக்தியுடன் பாகிஸ்தான் ராணுவம் உள்ளது' என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அந்த நாட்டின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அதிபர் சர்தாரி தொடர்பு கொண்டு பேசினார். மேலும், ஹாங்காங் நாட்டுக்கு நான்கு நாள் பயணமாக செல்ல இருந்த பிரதமர் கிலானியும் தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்திய எல்லையில் அதிக அளவில் ராணுவத்தை குவிக்கவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "நிலைமை எப்படி செல்கிறது என்பதை தீர்மானிப்பதில் அடுத்த இரண்டு நாட்களும் மிகவும் முக்கியமானவை. இந்தியா படைகளை குவித்தால், வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள அனைத்து படைகளையும் பாகிஸ்தான் திரும்ப பெற்று இந்திய எல்லையில் நிறுத்தும்'' என்றார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தலீபான் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருப்பதற்காக சுமார் ஒரு லட்சம் படை வீரர்களை வடமேற்கு எல்லையில் பாகிஸ்தான் நிறுத்தி இருக்கிறது. அவர்கள் அனைவரையும் இந்திய எல்லைக்கு கொண்டு வர பாகிஸ்தான் திட்டமிட்டு இருக்கிறது.

எல்லையில் பதட்டம் ஏற்படும்போது தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு முன்னுரிமை அழிக்க முடியாது என்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறி வருகின்றனர். எல்லைப் பகுதியில் போர் நிறுத்தம் செய்து கொள்ள கடந்த 2003-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது பாகிஸ்தான் தரப்பில் இருந்து ராணுவத்தை குவிக்கத் தொடங்கி இருப்பதால், பதிலுக்கு இந்தியாவும் எல்லை பகுதியில் கூடுதல் ராணுவத்தை அனுப்பி வைக்கும் என்று தெரிகிறது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்து போர் ஆரம்பிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

Saturday, November 29, 2008

கருணாநிதி தலைமையிலான தமிழக குழுவுடன் டிசம்பர் 4-ல் சந்திப்பு பிரதமர் கடிதம்


சென்னை, நவ.30-
இந்திய பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு நேற்று (சனிக்கிழமை) எழுதியுள்ள கடிதத்தில், இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து 25.11.2008 தேதியிட்டு முதல்-அமைச்சர் எழுதிய கடிதம் கிடைத்ததாகவும், 4.12.2008 அன்று காலை 10.15 மணி அளவில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் வருகின்ற அனைத்து கட்சி தலைவர்களின் குழுவினை அவரது அலுவலகத்தில் சந்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதுதவிர, தமிழக அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த பிரச்சினை பற்றி 2.12.2008-ல் பிரதமரை சந்தித்து கோரிக்கை வைப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அதற்கான நேரம் காலையா, மாலையா என்பது பிரதமரின் அலுவலகத்திலிருந்து தெரிந்தவுடன் அறிவிக்கப்படும்.
மேற்கண்ட தகவல் அரசு வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாஜ் ஓட்டலில் பதுங்கி இருந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை கமாண்டோக்கள் சுட்டுத் தள்ளி, ஓட்டலை மீட்டனர்.







மும்பையில் தீவிரவாதிகளுடன் நடந்த 62 மணி நேர துப்பாக்கி சண்டை நேற்று காலை 8.30 மணியுடன் ஓய்ந்தது. தாஜ் ஓட்டலில் பதுங்கி இருந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை கமாண்டோக்கள் சுட்டுத் தள்ளி, ஓட்டலை மீட்டனர். தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை, நவ.30-
பாகிஸ்தானில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் கடந்த புதன்கிழமை மும்பைக்கு வந்த தீவிரவாதிகள் நகரை யுத்த களமாக்கி விட்டார்கள்.

பாகிஸ்தானில் இருந்து கப்பல் மற்றும் ரப்பர் படகு மூலம் கடந்த புதன்கிழமை இரவு மும்பைக்கு வந்து சேர்ந்த தீவிரவாதிகள், மும்பை மீது போர் தொடுப்பது போல கடுமையான தாக்குதல் நடத்தினர்.
10-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள், 300 பேர் காயம் அடைந்தனர்.


மேலும், மும்பை தாஜ் ஓட்டல், டிரைடண்ட் ஓட்டல், நரிமன் இல்லம் ஆகியவற்றில் தீவிரவாதிகள் புகுந்து அங்கு இருந்தவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர். தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துவதற்காக ராணுவத்தினரும், அதிரடிப்படையினரும் உள்ளே புகுந்தனர். 50 மணி நேரத்துக்கும் மேல் நடந்த சண்டையை தொடர்ந்து நேற்றுமுன்தினம் டிரைடண்ட் ஓட்டலும், நரிமன் இல்லமும் மீட்கப்பட்டன.
ஆனால் தாஜ் ஓட்டலில் மட்டும் சண்டை தொடர்ந்து நடந்து வந்தது. புயல் வேக நடவடிக்கை என்பதை குறிக்கும் வகையில், அங்கு நடந்த ராணுவ நடவடிக்கைக்கு `ஆபரேஷன் சைக்ளோன்' என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது.நேற்றுமுன்தினம் நடந்த சண்டையில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரம் அமைதி நிலவியது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3.40 மணிக்கு மீண்டும் சண்டை தொடங்கியது. ஓட்டலின் பழைய (ஹெரிடேஜ்) கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். உள்ளே 4 தீவிரவாதிகள் இருந்தனர். இருப்பினும், ஒரே ஒரு தீவிரவாதி மட்டுமே துப்பாக்கியுடன் இருப்பதாக கமாண்டோக்கள் தரப்பில் கருதப்பட்டது.
சண்டை தொடங்கியவுடன், கமாண்டோக்களை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். கை எறிகுண்டுகளையும் வீசினர். அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.


இதனால் 6 மாடிகள் கொண்ட ஓட்டலின் தரைத்தளம் மற்றும் முதல் மாடி தீப்பிடித்து எரிந்தது. ஓட்டலின் சன்னல் வழியாக கரும்புகை வெளிவருவதை காண முடிந்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு நடுவே சண்டை நடந்தது. காலை 8 மணிக்கு சண்டை தீவிரம் அடைந்தது. கமாண்டோக்கள் இறுதிக்கட்ட தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு உதவியாக, ஓட்டலை சுற்றிலும் கடற்படை கமாண்டோக்கள் குவிக்கப்பட்டனர். ஓட்டலுக்குள் நிலவிய இருட்டையும் மீறி, கமாண்டோக்கள் தங்களை நெருங்கி விட்டதை உணர்ந்த தீவிரவாதிகள், அடிக்கடி ஓட்டல் அறைகளுக்கு தீவைத்தபடி இருந்தனர்.

அதை சமாளித்தபடி முன்னேறிய கமாண்டோக்கள், இறுதியாக 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் வைத்திருந்த ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. காலை 8.30 மணிக்கு சண்டை முடிவுக்கு வந்தது. புதன்கிழமை இரவு தொடங்கி, 62 மணி நேர சண்டைக்கு பிறகு தாஜ் ஓட்டல் மீட்கப்பட்டது. இதன்மூலம், மும்பை நகரம் முழுவதும் மீண்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.
ராணுவ நடவடிக்கை வெற்றி என்பதை குறிக்கும் வகையில், இரண்டாவது மாடியில் இருந்து கமாண்டோ ஒருவர், கீழே இருந்த பத்திரிகையாளர்களை நோக்கி சைகை காண்பித்தார். உடனே ஓட்டலை சுற்றி இருந்த பொதுமக்கள் ஆனந்த கூச்சலிட்டனர்.

சண்டைக்கு நடுவே சிக்கித் தவித்த 2 ஓட்டல் ஊழியர்களை கமாண்டோக்கள் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். சண்டை முடிவடைந்தவுடன், டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, ஓட்டலுக்கு வந்து பார்வையிட்டார்.

4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் தீவிரவாதிகள் யாராவது பதுங்கி இருக்கிறார்களா? வெடிகுண்டுகள் இருக்கின்றனவா? என்பதை தேடும் பணி தொடங்கியது. இதற்காக, வெளியே இருந்த கமாண்டோக்களும் உள்ளே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தாஜ் ஓட்டலில் 565 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையாக தேடும் பணி நடந்தது.
தாஜ் ஓட்டலில் இருந்து 22 உடல்கள் மீட்கப்பட்டதாக மத்திய உள்துறை சிறப்பு செயலாளர் எம்.எல்.குமாவத் நேற்று இரவு தெரிவித்தார்.


இதற்கிடையே, தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. டிரைடண்ட் ஓட்டல் மற்றும் நரிமன் இல்லத்தில் இருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து, சாவு எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
295 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
துப்பாக்கி சண்டையில் மொத்தம் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரு தீவிரவாதி தப்பி ஓடிவிட்டான். ஒருவன், உயிருடன் பிடிபட்டுள்ளான். அவனிடம் துருவித்துருவி விசாரணை நடந்து வருகிறது.

Tuesday, November 25, 2008

கருணாநிதி தலைமையில் டில்லிக்கு தூதுக்குழு: மன்மோகனை 4ம் தேதி சந்திக்க முடிவு


முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. வருகிற 4-ந்தேதி பிரதமர் மன்மோகன்சிங்கை நேரில் சந்தித்து, இலங்கையில் போரை நிறுத்தும்படி வற்புறுத்துவது என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
சென்னை, நவ.26-
இலங்கையில் விடுதலைப்புலிகளுடன் போரை நடத்துவதாக கூறி தமிழர்கள் வசிக்கும் பகுதியில் சிங்கள ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.
இதில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுகிறார்கள்.

இலங்கையில் போரை நிறுத்தி, அப்பாவி தமிழர்களை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க, சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டம், காலை 10 மணிக்கு தொடங்கி 11 மணிக்கு முடிந்தது.
இந்த கூட்டத்தில், முதல்-அமைச்சர் கருணாநிதி, காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் டி.சுதர்சனம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய னியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன் மற்றும் புரட்சி பாரதம் கட்சி தலைவர் பூவை ஜெகன்மூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

கூட்டத்தின் முடிவில், தமிழகத்தின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், வருகிற 28-ந் தேதி பிரதமரை சந்தித்து இது பற்றி முறையிடுவது என்றும், அடுத்த மாதம் (டிசம்பர்) 4-ந் தேதி, முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில், சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள், பிரதமரை சந்திப்பது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழினப் படுகொலையைத் தடுத்து நிறுத்திட, அங்கு உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், 50 லட்சத்துக்கு மேற்பட்ட இலங்கைத் தமிழர்களின் நியாயமான உரிமைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு உரிய பேச்சுவார்த்தை நடத்திட வேண்டும் என்றும், இந்திய பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்துக்கு இணங்க வைத்து, தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுத்துவதற்கு உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளும் ஒவ்வொருவரும் ஒரே குரலாக இல்லாவிட்டாலும் தங்கள் தங்களால் இயன்ற அளவுக்கு தனித்தனியாகவும், ஒரு சிலர் இணைந்தும் போர்க் குரல் கொடுத்து வருகிறார்கள்.
இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து 23-4-2008-லும், 12-11-2008-லும், இரண்டு முறை தமிழ்நாடு சட்டப் பேரவையிலே ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றி மத்திய அரசுக்கு முறையாக அனுப்பிவைத்திருக்கின்றோம். 14-10-2008 அன்று அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறோம்.

இதுவரை எங்கும் நடைபெறாத அளவுக்கு 24-10-2008-ல் வரலாறு காணாத மனிதச்சங்கிலி ஒன்றினை நடத்திக் காட்டியிருக்கின்றோம். தமிழகத்திலே உள்ள அனைத்து அரசியல் இயக்கங்களும்- அரசியல் சார்பற்ற அமைப்புகளும் - ஆர்ப்பாட்டங்களையும், மறியல்களையும், ரெயில் நிறுத்தம் போன்ற போராட்டங்களையும் செய்து தங்கள் எதிர்ப்பினைத் தெரிவித்திருக்கின்றன.
திரைப்படத் துறையைச் சேர்ந்தவர்கள், சின்னத் திரையைச் சேர்ந்தவர்கள் அனைவருமே பேரணி நடத்தி, உண்ணாவிரதம் நடத்தி இலங்கை தமிழரின் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணப்பட வேண்டுமென்று சொல்லியிருக்கின்றார்கள்.
வாழ்வாதாரம் தேடி கடலுக்கு மீன் பிடித்திடச் செல்லும் தமிழக மீனவர்களின் துயரம் களையப்பட வேண்டுமென்றும், அவர்களை இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துச் செல்வது தவிர்க்கப்பட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

அவதியுறும் இலங்கை தமிழர்களுக்கு தமிழக அரசின் சார்பாகவும் நிவாரண உதவிகள் அனுப்புவதற்காக நிதி உதவி கோரி, தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, விடுத்த வேண்டுகோளையேற்று இதுவரை 37 கோடி ரூபாய்க்கு மேல் நிதி, ஒரு மாதக் காலத்துக்குள்ளாகவே சேர்ந்துள்ளது.
நாம் எடுத்த இந்த முயற்சிகளின் பயனாகவும், மத்திய அரசு எடுத்துக் கொண்ட அக்கறையின் காரணமாகவும், போரினால் வீடு, வாசல்களை இழந்து சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக ஆக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு இடர் உதவிப் பொருட்களை செஞ்சிலுவைச் சங்க அமைப்புகளின் மூலமாகவும், இலங்கையிலே உள்ள இந்திய தூதுவர் வழியாகவும் நம்மால் அனுப்பி வைக்க முடிந்திருக்கின்றது. அதுபோலவே மீனவர் பிரச்சினையில் மத்திய அரசு, இலங்கை அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, தமிழக மீனவர்களை சுடக் கூடாது என்று உடன்பாடு காண முடிந்துள்ளது.
எனினும், தமிழகத்தில் உள்ள தமிழர்களும், உலகத் தமிழர்களும் நாளும் விரும்புகின்ற போர் நிறுத்தம் இலங்கையிலே இதுவரையிலே கைகூடவில்லை. நாம் கேட்டுக் கொண்டவாறு, போர் நிறுத்தம் செய்வதற்குத் தயார் என்று ஒரு தரப்பினர் அறிவித்த பிறகும், இலங்கை அரசு போரை நிறுத்த மாட்டேன் என்று அடம் பிடிப்பதோடு, இரண்டொரு நாட்களில் இலங்கை தமிழர்களையெல்லாம் கொன்றொழிப்பேன் என்று கண்ணை மூடிக் கொண்டு வெறித்தாக்குதல் நடத்தும் செய்தி அன்றாடம் ஏடுகளில் வந்து கொண்டிருக்கின்றது.
இலங்கை தமிழர்கள் பெரும்பகுதியினராக வாழ்கின்ற பகுதிகளை முற்றிலுமாகப் பிடிக்கும் வரை போரை நிறுத்தமாட்டோம் என்று இலங்கை சிங்கள அரசு தொடர்ந்து நடத்தி வரும் போரில்- பெருமளவில் அப்பாவித் தமிழர்களும், அவர்தம் குழந்தைகளும்தான் கொல்லப்படுகிறார்கள் என்றும், பெரும்பாலானோர் அகதிகளாக்கப்பட்டு அல்லல்படுகிறார்கள் என்றும் துயரச் செய்திகள் வந்து கொண்டே இருக்கின்றன. பள்ளிகளுக்குச் செல்லும் வயதுடைய பல்லாயிரக்கணக்கான தமிழ் சிறார்கள் பல மாதங்களாக கல்விக் கூடங்களுக்கே செல்ல முடியாத நிலையில் காடுகளிலும், மலைப் பகுதிகளிலும் தஞ்சம் புகுந்து தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாலே போதுமென்று திரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் செய்திகள் வருகின்றன.
இவ்வாறு ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகள் நம்மைப் பொறுமையாக இருக்கவிடாத நிலையில் இனி என்ன செய்வதென்று யோசித்ததில்- மத்திய அரசு, இலங்கை அரசுடன் மேலும் மேலும் வேண்டுகோள் என்ற அளவில் நில்லாது, போர் நிறுத்தம் உடனடியாக அறிவிக்கப்பட கடுமையான குரல் கொடுத்து எச்சரிக்கை விடுக்க வேண்டுமென்று அனைத்து கட்சி தலைவர்களின் இந்த கூட்டம் வலியுறுத்தி தெரிவிக்க விரும்புகின்றது.

மத்திய அரசு தன்னால் இயன்ற அளவுக்கு குரல் கொடுத்து வருகின்றது என்பதை தமிழகம் உணர்ந்த போதிலும், இலங்கை அரசு அதனை மதிக்காத நிலையில், இந்திய அரசு இலங்கை தமிழர்களின் பிரச்சினையில் மேலும் வேகத்தைக் காட்ட வேண்டுமென்று இந்த கூட்டம் வலியுறுத்துகின்றது.
இந்த தீர்மானத்தை வலியுறுத்தும் வகையில் தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி தலைவர்கள் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி, தலைமையில் டிசம்பர் 4-ந் தேதி டெல்லியில் பிரதமரை சந்திப்பதென்றும்- அதற்கிடையே நவம்பர் 28-ந் தேதி (நாளை மறுநாள்), தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமரை சந்திப்பதென்றும் இக்கூட்டம் தீர்மானிக்கின்றது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Monday, November 24, 2008

சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் தேவையற்றது ; தே.மு.தி.க. கலந்துகொள்ளாது: விஜயகாந்த்


சென்னை, நவ.25-
போர் நிறுத்தம் செய்ய மனிதாபிமான முறையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் தேவையற்றது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

25-11-2008 செவ்வாய்கிழமை (இன்று) இலங்கை தமிழர் பிரச்சினையை ஒட்டி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்களின் கூட்டத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டி உள்ளதாகவும், அதனையொட்டி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க உள்ளதாகவும் அறிகிறேன்.
தே.மு.தி.க.வை பொறுத்த வரையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து இளைஞர் அணி மாநாட்டின் போதே எங்கள் நிலையை தெளிவுபடுத்தி உள்ளோம்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு வழிவகை காண வேண்டும் என்றும், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி மற்றும் இதர உதவிகள் செய்யுமானால், அதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்த வரை ராணுவத் தீர்வு சாத்தியம் இல்லை என்றும், அரசியல் தீர்வு மட்டுமே காணப்பட வேண்டும் என்றும் எடுத்து விளக்கி உள்ளோம்.

எவ்வளவு விரைவாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித உயிர்கள் காப்பாற்றப்படும். அவசர கோலத்தில் செயல்பட வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இதுவரை தங்கள் பொறுப்புகளை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களை டெல்லிக்கு தந்தி கொடுக்க சொல்வதும், மனித சங்கிலி நடத்துவதும், அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டுவதும் இங்குள்ள தமிழ் மக்களை, திசை திருப்ப பயன்படுமே தவிர, இலங்கையில் பற்றி எரியும் தீயை அணைக்கப்பயன்படாது. அத்தகைய கூட்டங்களின் தொடர்ச்சியாகவே, டெல்லியில் பிரதமரை சந்திக்க சட்டமன்றத்தில் உள்ள கட்சி தலைவர்களை அழைத்து பேசுவதும் ஆகும்.

மனிதாபிமான முறையிலும், தமிழ் உணர்வின் அடிப்படையிலும் இலங்கை போர் நிறுத்தத்தை வலியுறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற வகையில் கருணாநிதி நடவடிக்கை எடுத்தால் போதுமானது.
அதற்காக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதும், டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதும் தேவையற்றது என்றே கருதுகிறேன். மேற்சொன்ன காரணங்களினால் தே.மு.தி.க. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை, நவ.25-
சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்துவது மிகப்பெரிய மோசடி நாடகம் என்றும், கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிங்கள அரசால் இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டம் கடந்த 14.10.2008 அன்று தி.மு.க. அரசால் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் 2 வார காலத்தில் பதவி விலகுவார்கள் என்ற அளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய பிறகு, "மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது'' என்று கூறி பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவிற்கு கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்தார்.

பின்னர், "இந்திய பேரரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்ற அளவில் 12.11.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஓர் தீர்மானம் இயற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில் கலந்து கொண்டு அ.தி.மு.க. சார்பில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், போர் நிறுத்தம் இல்லை என்று இலங்கை அதிபர் அறிவித்துவிட்டதால், ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு கூட்டணி கட்சிகள் கொடுத்து வரும் ஆதரவை திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சூழ்நிலையில், 25.11.2008 அன்று காலை 10 மணியளவில் முதல்-அமைச்சரின் அறையில் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படும் என்று அழைப்பிதழை இன்று (24.11.2008) மாலை அனுப்பியிருக்கிறார் கருணாநிதி. இந்த கூட்டம் எதற்கு என்றே புரியவில்லை. இந்த கூட்டம் தேவையற்ற ஒன்று என்பதுதான் அ.தி.மு.க.வின் கருத்து.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தவறிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முதல்-அமைச்சர் கருணாநிதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையை கலைக்க வேண்டும்; தமிழகத்தை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்; மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த கூட்டணி கட்சிகள் கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
இதனை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, முதல்-அமைச்சர் கருணாநிதியால் நாளை கூட்டப்பட்டிருக்கும் சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்திய கம்னிஸ்டு கட்சி பங்கேற்காது


சென்னை, நவ.25-
இலங்கையில் போரை நிறுத்தக்கோரி மறியல் போராட்டம் நடத்துவதால், சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தில் இந்திய கம்னிஸ்டு கட்சி பங்கேற்காது என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இதுகுறித்து இந்திய கம்னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய கம்னிஸ்டு கட்சி பல்வேறு அரசியல் கட்சிகளோடு கூடி 25-11-2008 (இன்று) அன்று இலங்கையில் போர் நிறுத்தம் நடைபெற மத்திய அரசை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடத்திட விரிவான ஏற்பாடுகளோடு திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு திடீரென 25-11-2008 அன்று சட்டமன்ற கட்சித் தலைவர்கள் மற்றும் கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டியுள்ளது. இதில் இந்திய கம்னிஸ்டு கட்சி பங்கேற்க இயலாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஒட்டு மொத்த தமிழக மக்களின் உடனடி கோரிக்கையான, இலங்கையில் உடனடி போர் நிறுத்தம், நடைபெற மத்திய அரசை வலியுறுத்தியும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், மனிதச் சங்கிலி போராட்டத்தில் வலியுறுத்தப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களை வலியுறுத்தியும் மத்திய அரசின் அலுவலகங்களுக்கு முன் இந்த மறியல் தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது என்பதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள்.
இலங்கையில் போர் நிறுத்தத்திற்காக, மற்ற அரசியல் கட்சிகளுடனும், பொதுமக்களின் பேராதரவுடனும் தொடர்ந்து இந்திய கம்னிஸ்டு கட்சி போராடும். தமிழக மக்கள் எந்த குழப்பதிற்கும் ஆளாகாமல் இந்த போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என இந்திய கம்னிஸ்டு கட்சி அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு அறிக்கையில் தா.பாண்டியன் கூறியுள்ளார்.

சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்காது வைகோ அறிவிப்பு


சென்னை, நவ.25-
ம.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் மு.கண்ணப்பன் விடுத்த கோரிக்கையை முதல்-அமைச்சர் ஏற்காததால், சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ம.தி.மு.க. கலந்து கொள்ளாது.
இதுகுறித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வஞ்சகமாக திட்டமிட்டே, கடந்த 4 ஆண்டுகளாக சிங்கள அரசுக்கு ராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் வழங்கி வந்து உள்ளது.
இலங்கை வான்படைக்கு ராடர்களைத் தந்தது; ரூ.2 ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் கொடுத்தது; மிகப்பெரிய கொடுமையாக பலாலி விமான தளத்தை இந்திய அரசின் செலவில், இந்திய விமானப்படை நிபுணர்களை கொண்டே புதுப்பித்துக் கொடுத்தது.

ஈழத்தமிழர்களை நிரந்தரமாக அடிமை இருளில் மூழ்கடிக்கத் திட்டமிட்டுள்ள இலங்கை அரசின் வஞ்சகத்துக்கு, இந்திய அரசு முழுக்க முழுக்க உடந்தையாகச் செயல்பட்டு வருகிறது.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மத்திய அரசும், அனைத்து உலகமும் அறிந்த நிலையில் தீர்மானத்தின் மை காய்வதற்கு உள்ளாக, டெல்லியில் பிரதமரை சந்தித்துவிட்டு இலங்கை அதிபர் ராஜபக்சே `போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டுத்தான் மறுவேலை' என்று அகங்காரத்தோடு கொக்கரித்து, இந்திய அரசின் முகத்தில் கரியையும் பூசினார்.


இந்த நிலையில்கூட, இலங்கைக்கு தந்த ராடார்களை திரும்ப பெற வேண்டும்; வட்டி இல்லாக் கடனை ரத்து செய்ய வேண்டும்; ஆயுத உதவி செய்யக்கூடாது; உதவிக்கு அனுப்பிய ராணுவ நிபுணர்களை திரும்ப அழைக்க வேண்டும்; சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தரக்கூடாது என்று ம.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் மு.கண்ணப்பன் விடுத்த கோரிக்கையை முதல்-அமைச்சர் ஏற்கவில்லை. மத்திய அரசும் இதை பரிசீலிக்கவே தயாராக இல்லை என்பதால், முதல்-அமைச்சர் அறிவித்து உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் ம.தி.மு.க. கலந்து கொள்ளாது.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

விசா கிடைத்தது: வைகோ லண்டன் புறப்பட்டு சென்றார்


சென்னை, நவ.25-
விசா கிடைத்ததை அடுத்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

லண்டனில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய கூட்டத்துக்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்று பேச ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக, தனக்கு விசா வழங்க கோரி, இங்கிலாந்து தூதரகத்திடம் வைகோ விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால் அவருக்கு இங்கிலாந்து தூதரகம் விசா வழங்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது. இதனால் வைகோ, தனது விமான டிக்கெட்டை ரத்து செய்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், வைகோ நேற்று காலை மதுரையில் இருந்து சென்னை வந்தார். நேற்று இரவு 8.45 மணிக்கு அவர் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நார்வே நாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய கூட்டத்தில் பங்கேற்க நான் திட்டமிட்டு இருந்தபோது, இங்குள்ள சிலர் எனக்கு விசா கிடைக்க விடாமல் செய்தனர். ஆனால் நார்வே தூதரக அதிகாரிகள் பெருமுயற்சி எடுத்து எனக்கு விசா கிடைக்கச் செய்தனர்.

அதுபோல், இப்போது நான் லண்டன் செல்வதை விரும்பாத சிலருடன் இலங்கை தூதரக அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு எனக்கு விசா கிடைக்கவிடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் எனது நலம் விரும்பிகள் சிலரது முயற்சியால் எனக்கு விசா கிடைத்துள்ளது.
நான் மும்பை போய், அங்கிருந்து வேறு விமானம் மூலம் லண்டன் செல்கிறேன். கடைசி நேரத்தில் கூட விசாவை ரத்து செய்ய சிலர் முயற்சி செய்யக்கூடும் என்பதால்தான் இதுபற்றி நான் யாரிடமும் தகவல் சொல்லாமல் இருந்தேன்.
லண்டன் கூட்டத்தில் பேசி விட்டு 30-ந் தேதி சென்னை திரும்புகிறேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.

இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கருணாநிதி தலைமையில் இன்று நடக்கிறது


இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க சட்டமன்ற கட்சித்தலைவர் களின் கூட்டம் சென்னை கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது.
சென்னை, நவ.25-
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது.
கிளிநொச்சியை பிடிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு சிங்கள ராணுவம் அசுர தாக்குதல் நடத்துவதால் அப்பாவி தமிழர்கள் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.


இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் இலங்கை ராணுவம் போரை நிறுத்த மறுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
எனவே அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்ன நடவடிக்கை எடுப்பது?என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்க சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினையில்- நாளுக்கு நாள்- இலங்கையில் வாழும் தமிழர்கள் உயிர், உடைமைகளை இழந்து வாழ்வதற்கே பயந்து பாதிக்கப்படும் நிலையில் மேலும், மேலும் நம் சிந்தை கலக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அது பற்றி நமது மத்திய அரசுடன் தொடர்பு கொள்ளவும், சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் 25.11.2008 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் எனது அறையில் நடைபெறவிருக்கிறது.
கட்சியின் தலைவர், பொது செயலாளர், மாநில செயலாளர் என்ற முறையில் ஒருவரும், சட்டமன்ற கட்சி தலைவர் ஒருவருமாக இரண்டு பேர் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகளை கூற வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.


இந்த கூட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இந்த அவசர கூட்டம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், நானும் கலந்து பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராகவும், கட்சி தலைவராகவும் கோ.க.மணி இருந்தபோதிலும், நிறுவனர் தலைவர் என்ற முறையில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்வார்.
அதைப் போலவே ம.தி.மு.க. என்றால் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.கண்ணப்பன் இருக்கிறார், அவரும் கலந்து கொள்ளலாம். அந்த கட்சியின் பொது செயலாளரான வைகோவும் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், இன்று காலையில் நடைபெறுவதை முன்னிட்டு, அது தொடர்பான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி, நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென கோட்டைக்கு சென்றார். அங்கு, அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ள அறையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.
அந்த அறையில் இருக்கைகளை எப்படி அமைப்பது? யார், யாரை எந்த இருக்கையில் அமர வைப்பது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் வழங்கினார். அங்கு செய்யப்படும் ஏற்பாடுகளை அருகில் இருந்து கவனித்து கொண்டிருந்தார். அங்கு நீண்ட நேரம் இருந்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்
.

விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதலில் 43 ராணுவத்தினர் பலி


கொழும்பு, நவ.25-
இலங்கையில் நல்லூர் நகரை கைப்பற்ற முயன்ற ராணுவத்தை விடுதலைப்புலிகள் விரட்டியடித்தனர். அதில் 43 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் இலங்கை ராணுவத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு தலைநகராக இருக்கும் கிளிநொச்சியை கைப்பற்றுவதில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மூன்று பகுதிகள் வழியாக போர் செய்து வருகிறது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளும் தீவிரமாக பதில் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.
பூநகரி-பரந்தன் சாலையில் அமைந்துள்ள முக்கிய நகரான நல்லூரை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் (ஞாயிறு) இரவு முதல் விடுதலைப்புலிகள் பதில் தாக்குதலில் இறங்கினர். மிக கடுமையாக சண்டை நடந்தது. இறுதியாக, ராணுவத்தினரை விடுதலைப்புலிகள் விரட்டி அடித்தனர்.

வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்குள் ழைய முக்கிய வாயிலாக நல்லூர் உள்ளது. இந்த சண்டையில் 43 ராணுவ வீரர்கள் பலியானதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். அதில் 8 பேருடைய உடல்களை அவர்கள் கைப்பற்றினர். சண்டை முடிந்த பிறகு, ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாக விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் 70 பேரும் காயம் அடைந்தனர்.
ஆனால், இந்த சண்டையில் தங்கள் தரப்பில் பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் 8 வீரர்களை மட்டும் காணவில்லை என்றும் இலங்கை ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
பல்வேறு இடங்களில் சண்டை
இதற்கிடையே, பரந்தனில் உள்ள உருத்திராபுரம், குன்சுப் ஆகிய இடங்களிலும், பூநகரி அருகிலும் கடுமையான சண்டை நடந்தது. கிளிநொச்சிக்கு தெற்கே உள்ள புறநகர் பகுதியான முறிகண்டி, அறிவியல் நகர் ஆகிய இடங்களிலும் ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடந்த இந்த சண்டைகளில் மேலும் 35 ராணுவ வீரர்களை கொன்று விட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கிருந்து யாழ்ப்பாணத்துக்குள் செல்லும் குடமுருட்டி ஆறும் நிரம்பி வழிகிறது. இதனால் இலங்கை ராணுவத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (26-ந் தேதி) மாவீரர் தினம் கொண்டாடப்பட உள்ளது. எனவே, பெரிய அளவிலான தாக்குதலில் விடுதலைப்புலிகள் ஈடுபடுவார்கள் என்று கருதப்படுகிறது. எனவே, அதை சமாளிக்க இலங்கை ராணுவம் தயாராகி வருகிறது.

ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்கரா கூறும்போது, ``கிளிநொச்சியின் தெற்கு பகுதியில் உள்ள பரந்தனில் நடந்த சண்டையில் 120 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். முல்லைத் தீவு அருகே நடந்த சண்டையில் 27 ராணுவ வீரர்கள் பலியானார்கள். மூன்று பகுதிகளில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. அங்கு பலத்த மழை பெய்யத் தொடங்கி விட்டது. எனினும் ராணுவத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்றார்.

Sunday, November 23, 2008

இலங்கையில் கடுமையான போர்: கிளிநொச்சியை நெருங்கி விட்டதாக ராணுவம் அறிவிப்பு நாளை மறுநாள் பிரபாகரன் 54-வது பிறந்த நாள்




கொழும்பு, நவ.24-
இலங்கையில் விடுதலைப்புலி களின் தலைநகரான கிளிநொச்சியை நெருங்கி விட்டதாக ராணுவம் நேற்று அறிவித்தது. இதற்கிடையே நாளை மறுநாள் 54-வது பிறந்தநாளை முன்னிட்டு மாவீரர் தினமாக விடுதலைப்புலிகள் கொண்டாட உள்ளனர்.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் தலைநகராக விளங்கும் கிளிநொச்சியை கைப்பற்ற ராணுவம் முழு வீச்சில் ஈடுபட்டு இருக்கிறது. மன்னாரில் இருந்து கிளிநொச்சியின் மூன்று எல்லை வழியாக ராணுவத்தின் 1 மற்றும் 57-வது படைப்பிரிவுகள் முன்னேறி வருகின்றன. வடக்கு அடம்பன், தெற்கு அடம்பன், தெருமுறிகண்டி ஆகிய மூன்று இடங்களில் நேற்று காலையில் இருந்தே கடுமையான சண்டை நடக்கிறது.
கிளிநொச்சியை சுற்றிலும் அகழி போல பெரிய குழிகளை தோண்டி வைத்து இருப்பதால் ராணுவத்தால் வேகமாக செல்ல முடியவில்லை. விடுதலைப்புலிகளும் கொரில்லா தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர். எனவே, ராணுவத்தினர் முன்னேறி செல்வதற்காக போர் விமானங்கள் சரமாரியாக குண்டு மழை பொழிந்து வருகின்றன.

கிளிநொச்சியின் புறநகர் பகுதியில் ராணுவம் முகாமிட்டு இருப்பதாகவும் அந்த இடங்கள் வரை கைப்பற்றி விட்டதாகவும் ராணுவ அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது. இதுபோல கிளிநொச்சியில் உள்ள கோகாவில் பகுதியிலும் ராணுவம் போரிட்டு வருகிறது. ஏ-9 நெடுஞ்சாலையை நோக்கி முன்னேறிச் செல்கிறது.
இந்த சண்டையின்போது விடுதலைப்புலிகளுக்கு கடுமையாக சேதம் ஏற்பட்டு இருப்பதாக ராணுவம் தெரிவித்தது. அவர்களுடைய ரேடியோ தகவல்களை இடைமறித்து கேட்டபோது இந்த தகவல் உறுதி செய்யப்பட்டது. ஆனால், ராணுவ தரப்பில் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியிடப் படவில்லை.

விடுதலைப்புலிகள் வலிமையாக இருக்கும் முல்லைத்தீவிலும் அந்தன்குளம் பகுதியில் ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. அக்கராயன்குளம், நிவில் ஆகிய பகுதிகளிலும் வியாழக்கிழமை முதல் சண்டை நடைபெறுகிறது. அந்தன்குளம் பகுதியில் ஏராளமான ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.
யாழ்ப்பாணத்தில் கிலாலி, முகமாலை ஆகிய பகுதிகளில் விடுதலைப்புலிகள் நடத்திய கண்ணிவெடி தாக்குதலில் ராணுவத்துக்கு பலத்த சேதம் ஏற்பட்டது. இதற்கிடையே விடுதலைப்புலிகள் பகுதியில் இருந்து ஓமந்தை வழியாக ராணுவ கட்டுப்பாட்டு பகுதிக்குள் 80 தமிழர்கள் வந்ததாக ராணுவம் தெரிவித்து இருக்கிறது.

கடந்த 1972-ம் ஆண்டில் விடுதலைப்புலிகள் இயக்கம் தொடங்கப்பட்டது. சரியாக 10 ஆண்டுகள் கழித்து 1982-ம் ஆண்டு நவம்பர் 27-ந் தேதி அன்றுதான் அந்த அமைப்பின் முதல் நபரை ராணுவம் கொன்றது. அதை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் நவம்பர் கடைசி வாரத்தை `மாவீரர்கள் வாரமாக' விடுதலைப்புலிகள் கடைப்பிடிக்கின்றனர்.
மேலும், நவம்பர் 26-ந் தேதி (நாளை மறுநாள்) விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் 54-வது பிறந்தநாள். ஒவ்வொரு ஆண்டு பிறந்தநாளின்போதும், விடுதலைப்புலிகளுக்கு கட்டளை பிறப்பிக்கும் வகையில் எழுச்சியுரை ஆற்றுவது பிரபாகரன் வழக்கம். எனவே, இந்த வாரத்தில் மிகப்பெரிய அளவில் விடுதலைப்புலிகளின் பதிலடி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் போர் நடைபெறும் வடக்கு பகுதிக்குள் செல்ல பத்திரிகையாளர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்கள் ஆகியோருக்கு இலங்கை அரசு தடை விதித்து இருக்கிறது. எனவே, அங்கு உள்ள உண்மை நிலவரத்தை முழுமையாக அறிய முடிவதில்லை. இரு தரப்பினரின் சேதங்கள் குறித்தும் தெரிவதில்லை.

தமிழக முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை அகதிகளை திரும்பி செல்ல மத்திய அரசு அறிவிக்கவில்லை தமிழக அரசு விளக்கம்







சென்னை, நவ.24-
தமிழகத்தில் உள்ள 115 அகதிகள் முகாம்களில் தங்கி இருக்கும் இலங்கை தமிழர்களை திரும்பி செல்ல மத்திய அரசு அறிவிக்கவில்லை என்று தமிழக அரசு விளக்கம் தந்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாம்களில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழர்கள், அவர்களுக்கு அனுமதிக்கப்பட்ட காலம் முடிந்துவிட்டதால், இலங்கைக்கே திரும்பி செல்ல வேண்டும் என்று, மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு செய்யப்பட்டுள்ளதாக அரசியல் கட்சி ஒன்றின் மாநில செயலாளர் கூறியுள்ளது இன்று (23-11-2008) அந்த கட்சியின் தமிழ் நாளேட்டில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் திரும்பி செல்ல வேண்டும் என்று எந்தவித அறிவிப்பும் அரசால் செய்யப்படாத நிலையில், அவர் அப்படி கூறியிருப்பது தவறான செய்தி மட்டுமல்ல, தமிழகத்தில் அகதிகள் முகாம்களில் வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்கள் மத்தியில் பீதியையும், கலக்கத்தையும் ஏற்படுத்திடக் கூடியதாகும்.

தமிழ்நாட்டில் உள்ள 115 முகாம்களில் தங்கியுள்ள இலங்கை தமிழர்கள் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு வழங்கிவரும் அனைத்து வகையான உதவிகளையும் பெற்று அமைதியாக வாழ்ந்து வருகின்றனர். எனவே, நாளேட்டில் வெளியிடப்பட்டுள்ள செய்தியைத் தமிழக அரசு வன்மையாக மறுக்கிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

லண்டனில் தமிழ் எம்.பி.க்கள் கூட்டம்: வைகோவுக்கு `விசா' வழங்க இங்கிலாந்து தூதரகம் மறுப்பு


சென்னை, நவ.24-
லண்டன் செல்ல ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு `விசா' வழங்க இங்கிலாந்து தூதரகம் மறுத்துவிட்டது.

இங்கிலாந்து நாட்டின் தலைநகர் லண்டனில், தமிழ் பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு சார்பில் 26-ந் தேதி கூட்டம் ஒன்று நடக்க இருக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கூட்டத்தில் கலந்துகொள்ள வைகோவும் சம்மதம் தெரிவித்து இருந்தார். இதற்காக லண்டன் செல்ல அனுமதிக்கக்கோரி `பொடா' கோர்ட்டில் வைகோ மனு செய்திருந்தார்.
கோர்ட்டும் அவரது கோரிக்கையை ஏற்று லண்டன் செல்ல அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து வைகோ, சென்னையில் இருந்து லண்டன் செல்ல 24-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) விமானத்தில் டிக்கெட் எடுத்திருந்தார்.

லண்டன் செல்ல `விசா' கேட்டு வைகோ, இங்கிலாந்து தூதரகத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால், இங்கிலாந்து தூதரகம் வைகோவுக்கு `விசா' வழங்க மறுத்துவிட்டது. இதைத் தொடர்ந்து, வைகோ தனது லண்டன் பயணத்தை ரத்து செய்து விட்டார்.
ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவுக்கு `விசா' வழங்க அனுமதி மறுத்தது குறித்து, சென்னையில் உள்ள இலங்கிலாந்து தூதரக அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் பதில் கூற மறுத்துவிட்டனர்.
போலீசாரிடம் கேட்டபோது, விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக வைகோ பேசி வருவதால், அவருக்கு `விசா' வழங்க இலங்கிலாந்து தூதரகம் மறுத்துவிட்டாக தெரிவித்தனர்.

இலங்கையில் தமிழன் அமைதியாக வாழ வழிகாண்பதே எனது முதன்மையான, கடைசியான சாதனை : கருணாநிதி


சென்னை, நவ.24-
இலங்கைத் தீவிலே தமிழன் அமைதியாக வாழ ஒரு வழி கண்டாகி விட்டது என்ற அந்தச் செய்தி தான் நான் முதன்மையானதாகவும், கடைசியாகவும் செய்கின்ற சாதனை என்று முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்தார்.
தமிழக ஆயர்கள் பேரவையின் ஊடகக் குழுவான, சாந்தோம் கலைத் தொடர்பு நிறுவனம், முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை நேற்று வழங்கி கவுரவித்தது. இந்த விருதினையும், பதக்கம் மற்றும் பாராட்டுப் பத்திரத்தையும் பெற்றுக் கொண்ட முதல்-அமைச்சர் கருணாநிதி தனது ஏற்புரையில் கூறியதாவது:-

இன்றையதினம் "வாழ்நாள் சாதனையாளர்'' விருது எனக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சாந்தோம் கலை விழா மன்றம் என்னைப் பெருமைப்படுத்தி, ஊக்கத்ததை, உற்சாகத்தை வழங்கியிருக்கின்றது. அதற்கு நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
என்னை சாதனையாளன் என்று குறிப்பிடுவதை விட, நான் பல சோதனைகளைக் கண்டவன் என்ற முறையில் சோதனையாளன் என்றே குறிப்பிடலாம். எனவே சாதனையாளர் விருது இப்போது எனக்கு வேண்டாம், விழாவை ஒத்தி வையுங்கள் என்று நான் கேட்டுக்கொண்டேன்.
அது மாத்திரமல்ல, இப்படிப்பட்ட ஒரு சிறப்பான விழா, தமிழகத் தலைநகரத்தில் நடைபெறும்போது, அதிலே கலந்து கொள்ள என் மனம் ஒப்பவில்லை, அதற்குக் காரணம் விழா நடக்கின்ற இந்த நேரம், நம்முடைய தமிழன் வெட்டப்பட்டு, குத்தப்பட்டு, சுடப்பட்டு இலங்கைத் தீவிலே பிணமாகச் சாய்ந்து கொண்டிருக்கிறான், இந்த நேரத்திலே விழாவிலே கலந்து கொண்டு விருது பெறுவதை நான் சிறப்பாகக் கருதவில்லை, ஆகவே வேறொரு நாளில் வைத்துக் கொள்ளலாம் என்று எவ்வளவோ வேண்டிக் கேட்டுக் கொண்டேன்.

சாதனையாளன் என்பதை நீங்கள் விரும்புகிறவாறு நான் ஏற்றுக்கொண்டாலுங் கூட, என்னுடைய சாதனைகளை வரிசைப்படுத்தித் தொடர்ந்தாலும் கூட, என்னுடைய சாதனை, என்னுடைய உணர்விற்கேற்ப, தமிழர்கள் உண்மையிலேயே வாழ்த்துவதற்கேற்ப அமைந்தது அந்தச் சாதனை என்று சொன்னால், அது இலங்கைத் தீவிலே தமிழன் அமைதியாக வாழ ஒரு வழி கண்டாகி விட்டது என்ற அந்தச் செய்தி தான் நான் முதன்மையானதாகவும், கடைசியாகவும் செய்கின்ற சாதனை என்பதை உங்களுக்கு நான் இந்த நேரத்தில் எடுத்துக் காட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

ஒரு இனமே, பக்கத்திலே இலங்கைத் தீவிலே அழிக்கப்படுகிறது. எந்த இனம்? அங்கே ஆண்ட இனம். எந்த இனம்? ராஜ ராஜ சோழனால் படையெடுக்கப்பட்டு, வெற்றிக்கொடி பறக்க பரிபாலனம் செய்யப்பட்ட அந்த நாட்டில், இன்றைக்கு அவனுடைய இனம் அழிந்து கொண்டிருக்கின்ற அந்தக் காட்சியை காணுகின்றோம், செய்திகளைக் கேள்விப்படுகிறோம்.
அவர்களைக் காப்பாற்ற முடியாமல், காப்பாற்ற நம்முடைய கரத்தை நீட்ட முடியாமல், நம்முடைய நிலை, பரிதாபத்திற்குரியதாக ஆகியிருக்கிறது. இந்த நிலை மாறினால் - மாறித் தீர வேண்டும், மாற்றப்படவேண்டும், மாற்றுவதற்கு எல்லா தமிழர்களும், தமிழகத்திலே உள்ள மக்களும் உலகத்திலே வாழ்கிற தமிழர்களும் ஒற்றுமையாகக் குரல் கொடுக்க வேண்டும், அணி வகுக்க வேண்டும். அப்போது தான் நீங்கள் இங்கே வழங்குகின்ற வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு பெருமை, சிறப்பு, பொருத்தம் என்று நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
நான் செய்த சாதனையால் ஒரு கோடீஸ்வரர், முன்பு கட்டியிருந்த வீட்டை விட இன்னும் நான்கு மாடி வைத்து வீட்டைக் கட்டியிருக்கிறார் என்றால்- அது என்னுடைய சாதனை அல்ல. எனக்கு ஏற்பட்ட சோதனைகளிலே ஒன்று. நான் அடைகின்ற வேதனைகளிலே ஒன்று. அதல்ல சாதனை.
பொட்டுப் பூச்சிகளாய், புன்மைத் தேரைகளாய், புழுக்களாய் இந்த உலகத்திலே ஏன் இந்த நாட்டிலே வாழுகின்ற ஏழையெளிய மக்கள், ஊனமுற்ற மக்கள், குருடாகிப் போன மக்கள், ஊமைகளாய் வாழ்கின்ற மக்கள் -அந்த மக்களுக்கெல்லாம் நல்லுயிர் கொடுத்து, நல்வாழ்வளித்து, அவர்களை நடமாடச் செய்வதை விட பெரிய சாதனை ஒன்றும் இருக்க முடியாது என்பதை கிறித்தவ மக்கள் கூடியிருக்கின்ற இந்த இடத்தில் சொல்வதைக் காட்டிலும் வேறு இடம் பொருத்தமாக இருக்க இயலாது.

என்னை ஆளாக்கிய தலைவர், அறிஞர் அண்ணா, 1969-ம் ஆண்டு மறைந்த பிறகு, அந்தப் பொறுப்பு என் மீது திணிக்கப் பட்டு அந்தப் பொறுப்பையேற்று மக்கள் தொண்டனாக - முதல் அமைச்சராக நான் ஆட்சிக்கு வந்த பிறகு, தமிழகத்தில், இந்தியாவிலே எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு, கண்ணெளி முகாம்கள், கிராமத்திற்கு கிராமம், ஆயிரக் கணக்கான கிராமங்களில் நடத்தப்பட்டு, லட்சக்கணக்கான கண் பார்வை இழந்த மக்களுக்கு கண்ணொளி வழங்கிய நிகழ்ச்சி- கண்ணொளி திட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
அந்தத் திட்டம் கூட எப்படி என் சிந்தையிலே உதித்தது என்றால் - நானே விபத்து ஒன்றில் சிக்கி, கண் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த போது - நான் தங்கியிருந்த மருத்துவமனைக்குப் பக்கத்தில் அந்த நாட்டு மருத்துவர்கள் ஒன்று கூடி, பல முனைகளில் ஏழையெளிய மக்களுக்கு கண்ணொளி வழங்குகின்ற திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைக் கண்டேன். வேங்கடசாமி என்ற ஒரு கிறித்தவ நண்பர்தான் என்னோடு வந்த மருத்துவர். அவர் சொன்னார் - இதையே தமிழகத்தில் அரசின் சார்பாக ஏன் நடத்தக் கூடாது என்று கேட்டார். அப்போது நல்வாழ்வுத் துறை அமைச்சராக பேராசிரியர் அன்பழகனார் இருந்தார். அவரோடு கலந்து பேசி நாங்கள் இருவரும் சேர்ந்து தயாரித்த அரசின் திட்டம் தான் கண்ணொளி வழங்கும் திட்டம்.
லட்சக்கணக்கான மக்களுக்கு கண்ணொளி வழங்கிய திட்டம். நீங்கள் சொல்கின்ற சாதனைகளில் முதல் தரமான சாதனையாக அதைச் சேர்த்துக் கொள்ளலாம். இன்றைக்கும் அந்தச் சாதனை தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

பிச்சைக்காரர் மறுவாழ்வுத் திட்டத்தை தமிழகத்திலே அமைத்து - செங்கற்பட்டிலே - பரணூரிலும், மற்றும் ஒவ்வொரு மாவட்டத்தின் தலைநகரங்களிலும் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்களை - அதிலும் குறிப்பாக தொழுநோய் பிச்சைக்காரர் மறுவாழ்வு இல்லங்கள் தொடங்கப்பட்டு இன்றைக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. அது நீங்கள் எண்ணுகின்ற சாதனைகளிலே ஒன்றாக இருக்கக் கூடும்.
சென்னையிலே இருந்த 5000 கை ரிக்ஷாக் களையும், மதுரை, கடலூர் போன்ற இடங்களில் இருந்த கை ரிக்ஷாக் களையும் ஒழித்து விட்டு - அதனை இழுத்தவர்களுக்கெல்லாம் பிழைப்புக்கு வழி காட்டவேண்டுமென்பதற்காக அவர்களுக்கெல்லாம் இலவசமாக சைக்கிள் ரிக்ஷா கொடுத்த ஆட்சி தான் என்னுடைய தலைமையிலே அமைந்த ஆட்சி. இதை வைத்து வேண்டுமானால் நீங்கள் வாழ்நாள் சாதனைகளிலே ஒன்றாக ஆக்கிக் கொள்ளலாம்.
குடிசை மாற்று வாரியம் என்று கண்டு, பல்லாயிரக்கணக்கான குடிசை மாற்று வாரிய வீடுகளை சென்னையிலும், மற்றும் உள்ள நகர்ப்புறங்களிலும் அமைத்து, அந்த குடிசை மாற்று வாரிய வீடுகளிலே நம்முடைய ஏழையெளிய மக்களை குடி அமர்த்தியதும் நம்முடைய ஆட்சி தான்.
ஆனால் இந்தச் சாதனைகளுக்கெல்லாம் மேலான சாதனை தான் வயிறு ஒட்டியவனை வாழ வைக்கின்ற சாதனை. விழியற்றவனை பார்க்க வைக்கின்ற சாதனை. வாய் பேச முடியாத ஊமையை பேச வைக்கின்ற சாதனை.

அந்தச் சாதனைகளின் வரிசையில் இன்னமும் வாய் திறந்திருந்தாலுங்கூட, பேச முடியாத - அழுத்திப் பேச முடியாத - உரிமை இல்லாத - அடிமைத்தனம் மிகுந்த மக்கள் நாட்டிலே இருக்கின்றார்கள். சிறுபான்மை மக்கள் கிறிஸ்தவ மக்கள், இஸ்லாமிய மக்கள் - எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும், எங்களுக்கு கல்வியில் உத்தியோகத்தில் உரிய இடம் தேவை என்று சொல்லி, அவர்கள் கோரிக்கை வைத்ததும், இல்லை யென்று சொல்லாமல், இஸ்லாமியர்களுக்கு 3.5 சதவிகிதம், கிறித்தவர்களுக்கு 3.5 சதவிகிதம் என்று இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.
பத்து நாளைக்குப் பிறகு திரும்ப வந்து பீட்டரும், சின்னதுரையும் ஏற்கனவே எங்களுக்கு இந்த உரிமைகள் எல்லாம் கிடைத்திருக்கின்றன, இன்னமும் கிடைக்கவிருக்கின்றன, நீங்கள் அளித்துள்ள சலுகையினால் எங்களுக்கு நன்மை இல்லாவிட்டாலும் தீமை வராமல் இருக்க வேண்டுமல்லவா? ஆகவே இந்தச் சலுகையை நீங்கள் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள் என்றார்கள். கணக்கிட்டுப் பார்த்தோம், சிந்தித்துப் பார்த்தோம், விவாதித்துப் பார்த்தோம். அவசரப்படவில்லை, ஒரு நாள், இரண்டு நாள் விவாதித்து அதற்குப் பிறகு பீட்டரும், சின்னதுரையும் மாத்திரம் சொன்னால் போதாதென்று, ஆயர் பெருமக்கள் அனைவரையும் அழைத்து பேசினோம். அவர்கள் யாருக்காவது மாறுபட்ட கருத்து இருக்கிறதா என்பதை அறிந்து கொள்ள விசாரித்தோம். ஒருவருக்கு மாறுபட்ட கருத்து இருந்தாலும், அதை மீறி நான் நடக்க முடியாது என்ற காரணத்தால், அத்தனை பேருடைய எண்ணத்தையும் அறிந்து இன்றுள்ள, அதே பழைய நிலையிலேயே அவர்களை 3.5 சதவிகிதம் என்ற அந்தச் சலுகையைத் திரும்பப் பெற்று, பழைய நிலையிலேயே அவர்களை வைத்திருக்கிறோம். கடைசியாக ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன்.

அருந்ததியர் சமுதாயம் தங்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டுமென்று கேட்டார்கள். அதற்காக நீதியரசர் ஜனார்த்தனம் குழு அமைக்கப்பட்டு அது குறித்த அறிக்கையைத் தந்திருக்கிறார். அந்த அறிக்கையை இன்னும் இரண்டொரு நாளில் கூடுகின்ற எங்களுடைய அமைச்சரவை கூட்டத்திலே ஆலோசித்து, விவாதித்து, அந்தச் சமுதாயத்திற்குத் தேவையான அருந்ததியர் சமுதாயத்திற்குத் தேவையான சலுகையை இந்த அரசு அளிக்கவிருக்கிறது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அரசு செயலாளர்கள் என்னிடம் பேசும்போது, இப்போதே இதைச் செய்ய வேண்டுமா என்றார்கள். அப்போது நான் சொன்னேன். கீழான மக்கள், கேவலப்படுத்தப்படும் மக்கள், புழுக்களாய் நெளிந்து கொண்டிருக்கின்ற மக்கள், மனிதனைப் பார்த்து மனிதனே மதிக்காத அளவிற்கு மட்டரகமாக ஆக்கப் பட்ட மக்கள் - அந்த மக்களைக் கைதூக்கி விடுவது தான் இந்தக் கருணாநிதியின் வேலை. இதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.
அந்தச் சாதனையிலே - சரித்திரத்திலே இதுவரையில் இடம் பெறாமல் இருப்பது இந்த அருந்ததி மக்களுக்கு நாம் அன்பு காட்டி அவர்களை கை தூக்கி விடாமல் இருப்பது தான் - நான் என்னுடைய சரித்திரத்தில் கடைசியாகவாவது - கடைசிப் பக்கத்தில் எழுத வேண்டிய - அச்சடிக்கப் பட வேண்டிய செய்தி, அருந்ததியர்களுக்கு சமூக நீதி அளித்தேன் என்ற அந்தச் செய்தி இடம் பெற வேண்டுமென்று சொன்னேன். அந்தச் சாதனையும் முற்றுப் பெறவிருக்கிறது.
இவ்வாறு கருணாநிதி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், இந்திய கத்தோலிக்க ஆயர்கள் பேரவை பொதுச் செயலாளர் தனிஸ்லாஸ் பெர்ணான்டோ, முதல்-அமைச்சருக்கு விருதினை வழங்கி வாழ்த்தி பேசினார். பீட்டர் அல்போன்ஸ் எம்.எல்.ஏ, மதுரை பேராயர் பீட்டர் பெர்ணான்டோ, ஆயர் டோனி டிவோட்டா, அருட்திரு சின்னதுரை, சென்னை மயிலை பேராயர் சின்னப்பா, `இந்து' ஆசிரியர் என்.ராம் ஆகியோர் பேசினார்கள். அமைச்சர் மு.க.ஸ்டாலினும் கவுரவிக்கப்பட்டார். தமிழக அமைச்சர்கள், மத்திய மந்திரிகள் கலந்து கொண்டார்கள்.

Saturday, November 22, 2008

28-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக கூடுதல் விமானம் இயக்கப்படுகிறது அரசு அறிவிப்பு




சென்னை, நவ.23-
புனித ஹஜ் பயணம் செல்பவர்களுக்காக 28-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை ஏர்-இந்தியா நிறுவனம் கூடுதல் விமானங்களை இயக்குகிறது என்று அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழு உறுப்பினர்-செயல்அலுவலர் கா.அலாவுதீன் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் இருந்து மத்திய அரசின் ஒதுக்கீடு, கூடுதல் ஒதுக்கீட்டின் கீழ் புனித ஹஜ் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ள புனிதப் பயணிகள் அனைவரும் சென்னையில் இருந்து ஜித்தா செல்வதற்கு 200 இருக்கைகள் கொண்ட கூடுதல் விமானங்களை ஏர்-இந்தியா நிறுவனம் 28-ந் தேதி முதல் டிசம்பர் 1-ந் தேதி வரை இயக்க உள்ளது. 28-ந் தேதி காலை 8.15 மணிக்கு ஏ1-2259 விமானம், 29-ந் தேதி காலை 8.05 மணிக்கு ஏ1-2261 விமானம், 30-ந் தேதி காலை 8.25 மணிக்கு ஏ1-2263 விமானம், டிசம்பர் 1-ந் தேதி காலை 8.05 மணிக்கு ஏ1-2265 விமானம் இயக்கப்படுகிறது.
மேற்கண்ட பயணத்திற்கான விமான ஒதுக்கீட்டினை மும்பையில் உள்ள மத்திய ஹஜ் குழு ஒதுக்குகிறது. இதன் விபரத்தை அதன் இணைய தளத்தில் காணலாம். புனிதப் பயணிகள் அனைவரும் சென்னை, சூளையில் அமைந்துள்ள தமிழ்நாடு பைத்துல் ஹுஜ்ஜாஜ், ஹஜ் இல்லம், எண்:3, டிமெல்லோஸ் சாலையில் இயங்கும் தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் தற்காலிக அலுவலகத்தில், பயணம் மேற்கொள்ளும் இரண்டு நாட்களுக்கு முன்னர் புனிதப் பயணத்திற்கான பயண ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் வாழும் 41/2 லட்சம் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முயற்சி தா.பாண்டியன் புகார்


வேலூர், நவ.23-
தமிழகத்தில் வாழும் 41/2 லட்சம் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்துள்ள திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் கோரி வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே வேலூர் தமிழ் சங்கம் சார்பில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற உண்ணாவிரதம் போராட்டம் நேற்று நடந்தது.
இந்த போராட்டத்துக்கு தமிழ்சங்க தலைவரும், வி.ஐ.டி.வேந்தருமான ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் பதுமனார் வரவேற்றார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இந்திய கம்னிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது:-

இலங்கையில் இருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 41/2 லட்சம் அகதிகள் குடியேறி உள்ளனர். இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முயற்சி நடக்கிறது.
இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாகவும், அகதிகள் தங்குவதற்கான அனுமதி காலம் முடிந்து விட்டதாகவும் கூறி கடந்த 3 நாட்களுக்கு முன் மத்திய அரசு ஒவ்வொரு அகதிக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.
இந்த கடிதம் தமிழில் அனுப்பப்பட்டுள்ளதால் இது தமிழக அரசுக்கு தெரியாமல் நடந்திருக்காது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கும், முதல்வருக்கும் கடிதம் எழுதி உள்ளேன். இங்குள்ள தமிழர்களை இலங்கைக்கு அனுப்பி அவர்களை ராணுவத்தோடு சேர்த்து தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த மத்திய அரசு ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க உடனடி போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும். அதன் பிறகு, இலங்கை அரசுடன் நேரடியாக தமிழர்களை பேச வைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இதற்காக நாம் ஒருமித்த கருத்தோடு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
சினிமா டைரக்டர் பாரதிராஜா உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக கூட இருக்கட்டும். அதை ஏன் தடை செய்ய வேண்டும். எதற்காக தடை செய்ய வேண்டும் என்று நான் கேட்கிறேன். அப்படி கேட்டால் இனத்தின் மீது பற்று இல்லாதவர்களும், விசுவாசம் இல்லாதவர்களும் உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். இந்த மண்ணுக்காகவும், தமிழனுக்காகவும் நான் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், உள்ளே செல்ல நான் தயாராக இருக்கிறேன்.
இப்போது பெரியார் இருந்திருந்தால் நிலைமையே வேறு விதமாக இருந்திருக்கும். இறையாண்மை என்ற பெயரில் தமிழர்களை இரையாக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்தால் வரலாற்றில் மிக பெரிய கறை தமிழகத்துக்கு வந்துவிடும். அரசியல் பேரங்களை மறந்து விட்டு இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
மாலை 5 மணி அளவில் கலைப்புலி எஸ்.தாணு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். டைரக்டர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.

விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்ற பிரபல நடிகர் ஆதாரத்தை விரைவில் வெளியிடுவதாக சுப்பிரமணியசுவாமி பேட்டி


சென்னை, நவ.23-
விடுதலைப்புலிகளிடம் பணம் பெற்ற பிரபல தமிழ் நடிகரின் பெயரை தக்க ஆதாரத்துடன் விரைவில் நிரூபிப்பேன் என்று சுப்பிரமணியசுவாமி கூறினார்.
ஜனதாகட்சி தலைவர் சுப்பிரமணியசுவாமி சென்னையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஸ்பெக்ட்ரம் அலைவரிசை சுவான், இன்டெக் ஆகிய நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டத்தில் முறைகேடுகள் நடந்து உள்ளது.
இந்த முறைகேடு மூலம் மத்திய அரசுக்கு 50 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த ஊழல் குறித்து மத்திய அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இல்லையென்றால் நான் கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.


தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக இல்லை. இலங்கை பிரச்சினையில் தமிழக அரசு மேற்கொண்ட எந்த முயற்சியும் பலன் அளிக்கவில்லை. விடுதலைப்புலிகளிடம் இருந்து பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஒருவரும் பணம் பெற்றிருக்கிறார். இதற்கான ஆதாரத்தை திரட்டி வருகிறேன். விரைவில் அதை நான் நிரூபிப்பேன்.
இந்துக்களிடையே உள்ள ஒற்றுமையை குலைப்பதற்கு மத்திய அரசு சதி செய்து வருகிறது. சிறுபான்மையினரின் ஓட்டுக்களை பெறுவதற்காக காங்கிரஸ் நாடகம் ஆடி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Friday, November 21, 2008

மதகுருவின் இறுதிச்சடங்கு நடந்தபோது பாகிஸ்தானில் குண்டு வெடிப்பில் 10 பேர் பலி.


இஸ்லாமாபாத், நவ.22-
பாகிஸ்தானில் வடமேற்கு எல்லைப்புற மாநிலத்தில் உள்ள டேரா இஸ்மாயில் கான் நகரில் குண்டு வெடித்ததில் 10 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர்.
இந்த நகரம் மதமோதல்களுக்கு பெயர் போன ஒன்று ஆகும். ஷியா முஸ்லிம்களுக்கும், சன்னி முஸ்லிம்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவது வழக்கம். நேற்று முன்தினம் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு ஷியா மதகுரு பலியானார். அவரது இறுதி சடங்கு நேற்று நடந்தது. அப்போது ஒரு குண்டு வெடித்தது. இதில் 10 பேர் பலியானார்கள். 40 பேர் காயம் அடைந்தனர்.
இந்த குண்டு வெடித்ததால் காயம் அடைந்தவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டனர். இதை பார்த்து ஆத்திரம் அடைந்த சிலர் ஆஸ்பத்திரி பகுதியில் துப்பாக்கியால் சுட்டனர். இதை பார்த்த போலீசார் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசினார்கள்.
அல்கொய்தா தலீபான் தீவிரவாதிகள் சன்னி முஸ்லிம்கள் ஆவார்கள்.

மடோனாவுக்கு விவாகரத்து




லண்டன், நவ.22-
அமெரிக்க பாப் பாடகி மடோனாவுக்கு லண்டன் ஐகோர்ட்டு விவாகரத்து வழங்கியது. 50 வயதான இவர் 40 வயதான இங்கிலாந்து நாட்டு சினிமா டைரக்டர் கய்ரிட்சியை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் திருமண வாழ்க்கை 8 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது.
இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொள்ள கடந்த மாதம் தீர்மானித்தனர். இதற்காக அவர்கள் லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த கோர்ட்டு இவர்களுக்கு விவாகரத்து வழங்கியது. தீர்ப்பு வந்தபோது இருவருமே கோர்ட்டில் ஆஜராக வில்லை.
இவர்கள் இருவருக்கும் பொதுவாக 2,625 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. இவர்களுக்கு ரோக்கோ என்ற மகன் இருக்கிறான். இதுதவிர மாலாவியை சேர்ந்த டேவிட் பாண்டா என்ற சிறுவனை அவர்கள் தத்து எடுத்தனர். இந்த குழந்தைகள் யாரிடம் வளரப்போகின்றன என்பது தெரியவில்லை.

ஹிலாரி கிளிண்டனுக்கு வெளிநாட்டு மந்திரி பதவி கொடுக்க ஒபாமா முடிவு




சிகாகோ, நவ.22-
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக தேர்ந்து எடுக்கப்பட்ட ஒபாமா, வெளிநாட்டு மந்திரி பதவியை ஹிலாரிக்கு கொடுக்க தீர்மானித்து இருக்கிறார். இதற்கான அறிவிப்பை அவர் வருகிற 27-ந் தேதிக்கு பிறகு எடுக்க முடிவு செய்து இருக்கிறார்.
ஹிலாரி முன்னாள் ஜனாதிபதி கிளிண்டனின் மனைவியும் நியார்க் நகரின் செனட்டரும் ஆவார். இவர் அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டார். இவருக்கும் ஒபாமாவுக்கும் தான் கடுமையான போட்டி இருந்தது.

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் 2 நாளில் விடுதலை கருணாநிதியிடம் மத்திய மந்திரி உறுதி

"இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் ஓரிரு நாட்களில் விடுதலை ஆவார்கள். அதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது'' என்று முதல் - அமைச்சர் கருணாநிதியிடம் மத்திய இணை மந்திரி அகமது தெரிவித்தார்.
சென்னை, நவ.22-
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுமார் 1,000 பேர் கடந்த 17-ந் தேதி 250-க்கும் மேற்பட்ட இயந்திர படகுகளில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து 5 படகுகளை சுற்றி வளைத்தனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்து மீன் பிடித்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 22 மீனவர்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்று அங்கு காவலில் வைத்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுடன் உடனடியாக தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
இதையடுத்து மத்திய அரசு தமிழக மீனவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 22 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்துச் சென்றது குறித்து உடனடியாக அவர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி அகமதுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது தமிழக மீனவர்களை மீட்பது குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கையிலே ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் மத்திய இணை மந்திரி அகமதுவை, முதல்-அமைச்சர் கருணாநிதி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நமது மீனவர்கள் இலங்கை கடலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையிலே சென்று மீன் பிடித்ததால், இலங்கை ராணுவத்திற்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில் இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு அனுப்பிய பொருட்கள் வன்னி பகுதியை அடைந்தன செஞ்சிலுவை சங்கம் மூலம் விநியோகம்


கொழும்பு, நவ.22-
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த உணவு மற்றும் மருந்துப் பொருட்கள், வன்னி பகுதியை அடைந்தன.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போரில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை திரட்டி அனுப்புவது என்று முதல்-அமைச்சர் கருணாநிதியும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியும் நடத்திய ஆலோசனையின்போது முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அரசு இதுவரை திரட்டி உள்ள நிவாரண நிதி ரூ.25 கோடியை தாண்டி உள்ளது.
அதுபோல், இலங்கை தமிழர்களுக்காக உணவு, மருந்து பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. மொத்தம் 1,600 டன் எடையுள்ள பொருட்கள், கப்பல் மூலம் சென்னையில் இருந்து கொழும்பு நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு இலங்கை சுங்கத்துறையின் பரிசோதனைக்கு பிறகு, இந்திய தூதரிடம் நிவாரண பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.


இந்நிலையில், இந்த நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வினியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது. நிவாரண பொருட்கள் 56 லாரிகளில் ஏற்றப்பட்டு வன்னி பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வன்னி பகுதியின் ழைவாயிலான ஓமந்தையில் உள்ள சோதனைச்சாவடியில் இலங்கை ராணுவத்தினர், இந்த நிவாரண பொருட்களை சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.
தமிழக அரசு அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள் மட்டுமின்றி, உலக உணவு திட்டத்தின்கீழ் 44 வாகனங்களில் 430 மெட்ரிக் டன் உணவு பொருட்களும் நேற்று வன்னி பகுதியை சென்றடைந்தன. 12 இலங்கை அரசு ஏஜெண்டுகளின் வாகனங்களில் 125 மெட்ரிக் டன் உணவு பொருட்களும் வன்னியை சென்றடைந்தன. இந்த நிவாரண பொருட்களுடன் செஞ்சிலுவை சங்க அதிகாரிகளும் உடன் சென்றனர்.
பூநகரி கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, வன்னி பகுதிக்கு சாலை வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

அதே சமயத்தில், வன்னி பகுதிக்குள் ழைய விடாமல் 200-க்கும் மேற்பட்ட தமிழர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மண்டல கல்வி இயக்குனர்கள், கிளிநொச்சி பிராந்திய சுகாதார இயக்குனர், 15 பள்ளி முதல்வர்கள், முல்லைத்தீவில் உள்ள மக்கள் வங்கி மேலாளர் உள்ளிட்டோரை ஓமந்தை சோதனைச்சாவடியில் ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அவர்களை வன்னி பகுதிக்குள் ழைய அனுமதிக்கவில்லை. மேலும், வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து 4 ஆம்புலன்ஸ்களில் வன்னி பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த 50 நோயாளிகளையும் ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
அனுமதி மறுப்புக்கான காரணத்தை தமிழ் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு ராணுவத்தினர், `பொதுமக்கள் இன்று (நேற்று) வன்னிக்கு செல்ல அனுமதி கிடையாது` என்று கூறினர்.
இதற்கிடையே, யாழ்ப்பாணம்-கண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற சண்டையில் 52 விடுதலைப்புலிகள் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் முன்னணி பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்டன. கிளிநொச்சி அருகே விடுதலைப்புலிகளின் விமான தளத்தையும் கைப்பற்றியதாக ராணுவம் கூறியுள்ளது.

மரணம் அடைந்த நடிகர் எம்.என்.நம்பியார் உடல் தகனம் நடந்தது



சென்னை, நவ.21-
மரணம் அடைந்த நடிகர் எம்.என்.நம்பியார் உடல் தகனம், சென்னையில் நேற்று நடந்தது. அவருக்கு நடிகர்-நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ் திரையுலகில் `வில்லன்' நடிப்பில் தனி முத்திரை பதித்தவர், எம்.என்.நம்பியார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் போன்ற பழம்பெரும் கதாநாயகர்களில் இருந்து இளைய தலைமுறை கதாநாயகர்களான அர்ஜுன், விஜய் வரை பல தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். திரையுலகை மீளா துயரில் ஆழ்த்திவிட்டு, நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார்.
நடிகர்-நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றிருந்த அவருடைய மூத்த மகன் சுகுமாரன் நம்பியார், கோவை சென்றிருந்த இளைய மகன் மோகன் நம்பியார் ஆகிய இருவரும் தந்தை மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், உடனடியாக சென்னை திரும்பினார்கள்.

நம்பியாரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. `தினத்தந்தி' அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கே.பாக்யராஜ், கார்த்திக், பிரகாஷ்ராஜ், ராமராஜன், பார்த்திபன், விஜயகுமார், விசு, விவேக், மனோஜ், ராஜீவ், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கஞ்சா கருப்பு, நடிகைகள் வைஜயந்திமாலா, மீனா, குஷ்பு, சிம்ரன், ஷோபனா, பூர்ணிமா பாக்யராஜ், எம்.என்.ராஜம், கோவை சரளா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, கவிஞர் வைரமுத்து, டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், அமிர்தம், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷங்கர், கஸ்தூரிராஜா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பட அதிபர்கள் `கலைப்புலி' எஸ்.தாணு, சங்கிலி முருகன், பிரமிட் நடராஜன், திருவான்மிர் வட்டார நாடார் சங்க செயலாளர் திருப்புகழ் நாடார் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின், எம்.என்.நம்பியார் உடலுக்கு குடும்ப முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றன.
பிற்பகல் 2.30 மணிக்கு அவருடைய உடல் ஊர்வலமாக பெசன்ட்நகர் மின்சார மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் தகனம் நடந்தது.
நம்பியாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, மும்பையில் இருந்து நடிகர் அமிதாப்பச்சன் இரங்கல் செய்தி அனுப்பி இருந்தார். அதில், ``மிக சிறந்த நடிகரை, ஆன்மிகவாதியை, நல்ல மனிதரை இந்த சமூகம் இழந்து விட்டது'' என்று குறிப்பிட்டு இருந்தார். செல்போன் மூலமும் தொடர்புகொண்டு நம்பியாரின் மகன் சுகுமாரன் நம்பியாரிடம், அமிதாப்பச்சன் துக்கம் விசாரித்தார்.

பெங்களூரில் இருந்து நடிகை சரோஜாதேவி அனுதாபம் தெரிவித்தார். நம்பியாரின் மறைவு பற்றி அவர், நிருபரிடம் கூறியதாவது:-
``நம்பியார் மரணம் அடைந்த தகவல் அறிந்து, நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடன் நான் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். பரிசுத்தமான மனிதர். எப்போதும் தமாசாக பேசுவார். என்னை பார்க்கும்போதெல்லாம் பெங்களூரில் உள்ள ஒரு பத்திரிகையின் பெயரை சொல்லித்தான் கூப்பிடுவார்.
``எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு'' என்று கேட்பார். நீங்க குடிக்க மாட்டீர்களே என்று கேட்டால், ``நான் காவிரி தண்ணீரை சொன்னேன்'' என்பார். வயதானால் எல்லோருக்கும் முகம் மாறும். நம்பியாருக்கு கடைசி வரை முகம் மாறவில்லை. அது கடவுள் அருள்.
என் காலில் `ஆபரேஷன்' நடந்திருப்பதால், உடனடியாக சென்னை வர முடியவில்லை. வருகிற 8-ந் தேதி நேரில் வந்து துக்கம் விசாரிக்க முடிவு செய்து இருக்கிறேன்.''

இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.
மரணத்தை முன்பே அறிந்திருந்தார்
மறைந்த எம்.என்.நம்பியார் தனது மரணத்தை முன்பே அறிந்திருந்தார். மகன் சுகுமாரன் நம்பியார் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு புறப்பட்டபோது, ``எனக்கு 90 வயதாகி விட்டது. இதற்கு மேல் நான் தாங்க மாட்டேன். நான் போயிடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.
இந்த தகவலை சுகுமாரன் நம்பியார் சொல்லி, கண்கலங்கினார்.

ரனில் விக்ரமசிங்கே கார் முற்றுகை இந்திய கம்னிஸ்டு கட்சியினர் கறுப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்







கோட்டூர், நவ.21-
இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்னிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவரது கார் முற்றுகையிடப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காட்டில் அக்னீசுவரர் கோவில் உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்வதற்காக இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று வந்தார்.
இதனை அறிந்த இந்திய கம்னிஸ்டு கட்சியினர் முன்கூட்டியே அங்கு திரண்டனர். அவர்கள், ரனில் விக்ரமசிங்கே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கையில் தமிழர்களை கொன்று குவிப்பதை இலங்கை ராணுவம் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கறுப்பு கொடி ஏந்தியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார்.

ரனில் விக்ரமசிங்கே காரில் கோவிலை நோக்கி வந்தபோது மறியலில் ஈடுபட்டவர்கள் அவரது காரை நோக்கிச் சென்று முற்றுகையிட்டனர். பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ரனிலை பாதுகாப்பாக கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அவர், கோவிலுக்குள் சென்ற பிறகும், போராட்டக் குழுவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு, ரனில் பாதுகாப்பாக மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.


இதேபோல, நீடாமங்கலத்திலும் ரனில் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. திருக்கொள்ளிக்காட்டில் இருந்து ரனில் திரும்பி வரும் நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
இதேபோல, திருவாரூரில் உள்ள நாகை பை-பாஸ் சாலையில் மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்தனர். மாங்குடியில் போராட்டம் நடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

Wednesday, November 19, 2008

ஈழத் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறி விட்டது உண்ணாவிரத்தில் வைகோ குற்றச்சாட்டு



சென்னை, நவ.20-
`தொப்புள் கொடி' உறவான ஈழத்தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டது என்று சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் வைகோ குற்றம் சுமத்தினார்.

இலங்கையில் உடனே போரை நிறுத்தவும், அங்குள்ள தமிழர்களை பாதுகாக்கவும் கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு, கட்சியின் பொது செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
இந்திய கம்னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் போராட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று சர்வ கட்சி கூட்டத்திலும், சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, போரை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்ட மத்திய அரசும் ஒன்றும் சொல்லவில்லை. இதில், இந்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
இலங்கையில் போரை நிறுத்தவா?, வேண்டாமா? என்று முடிவு செய்வது இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கையில் உள்ளது. ஆனால், இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதா?, வேண்டாமா? என்ற முடிவு நம்முடைய கையில் தான் உள்ளது. எனவே, மத்திய அரசு ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும்.

இந்த நிலையில், இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதாக இந்திய அரசு கூறிவருகிறது. மேலே குண்டு வீசும்போது, எப்படி கீழே இருந்து சாப்பிட முடியும். இதை மக்கள் சிந்திக்க பார்க்க வேண்டும். இது ஒன்றும் அரசியல் கோரிக்கை அல்ல. மனிதாபிமான கோரிக்கை.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்தால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பக்க பலமாக நாங்கள் இருப்போம். வரும் 25-ந் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
பின்னர், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கையில் நடைபெறும் சிங்கள ராணுவ தாக்குதலால், அங்குள்ள தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள். தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை காக்க இந்திய அரசு தவறிவிட்டது. ஆயுதம், பணம் போன்ற உதவிகளை அளித்து வருகிறது. இதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரை பின்னால் இருந்து நடத்துவதே இந்தியா தான். மத்திய அரசின் செயல்பாடு, பச்சை துரோகத்தை கண்டித்து இந்த போராட்டம் நடத்துகிறோம். தமிழக மக்களின் ஒட்டு மொத்த குரலும், சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமுமான, இலங்கையில் போர் நிறுத்தம் என்பதை மத்திய அரசு உதாசீனப்படுத்திவிட்டது. 61/2 கோடி தமிழர்களின் உணர்வை புறந்தள்ளிவிட்டது.

`அடிப்பது போல் அடி, அழுவது போல் அழுகிறேன்' என்று தமிழக அரசு மத்திய அரசுடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறது. நிலவில் அடியெடுத்து வைக்கும் இடத்தில் நாம் இருக்கிறோம். அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர்கள் மீதான போரை நிறுத்த முடியாதா?. போரை நிறுத்த முடியாது என்று இந்திய மண்ணில் இருந்து கொண்டே ராஜபக்சே கூறியிருக்கிறார்.
இந்திய அரசு இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவில்லை. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் போர் நிறுத்தம் குறித்து என்னிடம் பேசவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு இந்திய அரசும் மறுப்பு தெரிவிக்கவில்லை. சென்னை வந்த வெளியுறவு துறை மந்திரி பிரணாப் முகர்ஜியும், இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய நம்மால் எப்படி சொல்ல முடியும் என்கிறார். இதில் இருந்து இந்திய அரசு, இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவில்லை என்பது தெளிவாகிறது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரணாக விடுதலைப்புலிகள் உள்ளனர். அவர்களை அழித்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ராஜபக்சே நினைக்கிறார். ஆனால், விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது. விடுதலைப்புலிகள் வேறு, தமிழர்கள் வேறு அல்லர். அங்கு நிலைமை மாறும், தமிழர்கள் சீறும் நிலை உருவாகும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், ஜீவன், மகளிரணி மாநில செயலாளர் குமரி விஜயகுமார், கவிஞர் முத்து லிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் இறுதியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசியதாவது:-

தற்போது, போர் முனையில் விடுதலைப்புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக சிங்கள அரசு தரப்பில் செய்திகள் வருகின்றன. இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வழங்கும் ஆயுதத்தை கொண்டு மக்களை கொன்று குவித்து தமிழர் வாழும் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக கூறுகிறார். அவர் ஒரு உண்மையை புரிய தவறிவிட்டார். போர் முனையில் பெற்ற வெற்றி நிலையானது அல்ல. அதை தக்கவைத்து கொள்ள போவதும் கிடையாது.
இங்கிருந்து அனுப்பப்படும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களை போய் சேரப்போவதில்லை. 90 சதவீதத்திற்கு மேல் சிங்கள ராணுவத்திற்கும், சிங்கள மக்களுக்கும் போய் சேரப்போகிறது. அங்கு நடைபெறும் குண்டு வீச்சுக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும்.

இலங்கையில் தமிழ் ஈழம் மலர்ந்தால், அது தென் தமிழகத்திற்கு பாதுகாப்பாகத்தான் இருக்கும். என்றைக்கும் இந்திய மக்களை நேசிக்கிறோம் என்ற நிலையில் தான் விடுதலைப்புலிகள் உள்ளனர். நாங்கள் கூட தனித்தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு என்று திருச்சியில் நடந்த மாநாட்டில் கூறினோம். போரில் விடுதலைப்புலிகளை ஒருபோதும் வெல்ல முடியாது.
இவ்வாறு வைகோ பேசினார்.
உண்ணாவிரதத்தில் இந்திய கம்னிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர்கள் மணிவண்ணன், சுந்தர்ராஜன், கவிஞர் காசி ஆனந்தன், சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஓவியர் வீரசந்தானம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

ஈழத் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறி விட்டது உண்ணாவிரத்தில் வைகோ குற்றச்சாட்டு

நடிகர் எம்.என்.நம்பியார் மரணம் நடிகர், நடிகைகள் கண்ணீர் அஞ்சலி


பழம்பெரும் வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் சென்னையில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 89. ரஜினிகாந்த் - கமலஹாசன் உள்பட நடிகர், நடிகைகள் நம்பியார் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
சென்னை, நவ.20-
தமிழ் திரைப்பட உலகில் வில்லன் வேடங்களில் கொடி கட்டி பறந்து, ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்தவர், எம்.என்.நம்பியார்.

இரண்டு கண்களையும் உருட்டிக்கொண்டு, கைகளை பிசைந்தபடி அவர் நடிக்கும்போது, சூழ்ச்சி, சதி, கோபம், ஆவேசம், மிரட்டல் என வில்லனுக்குரிய அத்தனை அம்சங்களையும் தனது முகத்தில் கொண்டு வந்து, ரசிகர்களை பயத்தில் மூழ்க வைப்பதில் நம்பியார் தனி முத்திரை பதித்தவர்.
மறைந்த மாபெரும் கலைஞர்கள் எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் ஆகியோருடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
"எங்க வீட்டு பிள்ளை'', "ஆயிரத்தில் ஒருவன்'', "படகோட்டி'', "திரிசூலம்'', "தில்லானாமோகனாம்பாள்'' போன்ற படங்களில் அவருடைய `வில்லன்' நடிப்பு ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.


திரையுலகில் புகை பழக்கம், மது பழக்கம் போன்றவை இல்லாத ஒரு சில நடிகர்களில் எம்.என்.நம்பியாரும் ஒருவர்.
70 வருடங்களாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் உள்பட 1000-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

முதுமை காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அடிக்கடி சென்று தனது உடல்நிலையை பரிசோதித்து வந்தார்.
இருதயம், சிறுநீரகம் போன்றவைகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் நல்ல உடல்நிலையுடன் அவர் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள். 89 வயதாகிவிட்ட முதுமை காரணமாக சமீபகாலமாக அவர் தனது ஞாபக சக்தியை இழந்தார்.


நேற்று பகல் 12 மணிக்கு சென்னை கோபாலபுரத்தில் உள்ள தனது வீட்டில் நம்பியார் மதிய உணவு சாப்பிட்டார். 12.30 மணியளவில் அவர் தூங்க ஆரம்பித்தார். பகல் 1 மணிக்கு அவர் திடீரென மரணம் அடைந்தார். தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்தது.
நம்பியாரின் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவருடைய வீட்டில் வைக்கப்பட்டது.

நம்பியார் மரணம் அடைந்த தகவல், சினிமா வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. தகவல் அறிந்ததும், நடிகர் ரஜினிகாந்த் விரைந்து வந்து நம்பியார் உடலுக்கு மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறும்போது, "இந்த புண்ணிய ஆத்மா சாந்தி அடைய ஆண்டவனை வேண்டுகிறேன்'' என்றார்.
ரஜினிகாந்தை தொடர்ந்து, நடிகர்கள் கமலஹாசன், பிரபுதேவா, ஸ்ரீகாந்த், ராதாரவி, செந்தில், எஸ்.வி.சேகர், கரண், ராஜேஷ், நடிகைகள் கே.ஆர்.விஜயா, மனோரமா, விஜயகுமாரி, டைரக்டர்கள் முக்தா சீனிவாசன், சி.வி.ராஜேந்திரன், பி.வாசு, படஅதிபர்கள் ஆர்.பி.சவுத்ரி, எஸ்.ராமநாதன், கே.டி.குஞ்சுமோன், ராம்குமார், ஒளிப்பதிவாளர் டி.என்.சுந்தரம், டான்ஸ்மாஸ்டர் சுந்தரம் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து நம்பியார் உடலுக்கு மாலை வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு பாரதீய ஜனதா தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர் திருநாவுக்கரசர், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், எம்.ஜி.ஆர்.கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், போலீஸ் டி.ஜி.பி.(பயிற்சி) விஜயகுமார் ஆகியோரும் இறுதி மரியாதை செலுத்தினார்கள்.


நம்பியாரின் இறுதி சடங்கு இன்று (வியாழக்கிழமை) மாலை 3.30 மணிக்கு நடைபெறுகிறது.
அவருடைய உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு, பெசன்ட்நகர் மின்சார மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.


நம்பியாருக்கு ருக்குமணி என்ற மனைவியும், சுகுமாரன், மோகன் என்ற 2 மகன்களும், சினேகலதா என்ற மகளும் இருக்கிறார்கள்.
நம்பியாரின் உயிர் பிரியும்போது, அவருடைய மனைவி ருக்குமணி அருகில் இருந்தார். மூத்த மகன் சுகுமாரன் நேற்று முன்தினம் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டார். இளைய மகன் மோகன் கோவை சென்றிருந்தார். மகள் சினேகலதா அவருடைய மகனை பார்ப்பதற்காக அமெரிக்கா போய் இருந்தார். இவர்கள் 3 பேருக்கும் நம்பியார் மரணம் அடைந்த தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக அவர்கள் சென்னைக்கு புறப்பட்டார்கள்.
ஜெயலலிதா இரங்கல்
அ.தி.மு.க. பொது செயலாளர் ஜெயலலிதா விடுத்துள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
"பழம்பெரும் திரைப்பட நடிகரும், நாடக நடிகரும், தீவிர ஐயப்ப பக்தருமான எம்.என்.நம்பியார் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மன வருத்தம் அடைந்தேன்.
ஏராளமான திரைப்படங்களில் நான் அவருடன் இணைந்து நடித்திருக்கிறேன். எல்லோரிடமும் மிகுந்த கலகலப்புடனும், நகைச்சுவை பாங்குடனும் பேசக்கூடியவர். நம்பியாருடன் படிப்பிடிப்பு என்றாலே வேலைப்பளுவும் தெரியாது. பொழுது போவதும் தெரியாது. நம்பியார் என் மீது தனிப்பட்ட முறையில் மிகுந்த அன்பு வைத்திருந்தார்.
நம்பியாரின் இழப்பு திரைப்படத்துறையினருக்கு மட்டுமல்லாமல் ஆன்மீக வாதிகளுக்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன்.'
இவ்வாறு ஜெயலலிதா கூறியிருக்கிறார்.
பாரதீய ஜனதா தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி., அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் ஆகியோரும் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.

இலங்கை இன பிரச்சினைக்கு தீர்வு காண விடுதலைப்புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு


கொழும்பு, நவ.20-
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வருமாறு விடுதலைப்புலிகள் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை மீட்க ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். எனவே, போர் நிறுத்தம் செய்யுமாறு உலக அளவில் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில்தான் ராணுவம் ஈடுபட்டு இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகிறார். இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வருமாறு விடுதலைப்புலிகள் ஆதரவு அரசியல் கட்சிகளுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்து இருக்கிறார். இது குறித்து வெளியுறவு மந்திரி ரோஹிதா பொகலகாமா கூறியதாவது:-

விடுதலைப்புலிகளுடன் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தபோதிலும் இலங்கை அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது. ஒரு அரசியல் தீர்வை நோக்கியே இலங்கை அரசு செல்கிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக இறுதி தீர்வு காண வருமாறு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவை பெற்ற தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்து உள்ளார்.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கமிட்டியின் தலைவரும் அறிவியல் மந்திரியுமான திஸா விடரனா சமர்ப்பித்த இடைக்கால திட்டங்களை கடந்த ஜனவரி மாதம் அதிபர் ராஜபக்சே ஏற்றுக் கொண்டதோடு உடனடியாக அமலுக்கு கொண்டு வந்தார். அதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக அரசு மலர்ந்து தமிழர் ஒருவர் முதல்-மந்திரியாக இருக்கிறார். மக்களின் கையில் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தீவிரவாதத்தை ஒடுக்கும் பணியில் மட்டுமே ராணுவம் முழுவீச்சில் ஈடுபடுத்தப்படுகிறது. அரசியல் பிரச்சினைகளை அரசியல் தீர்வு மூலமாகவே முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை சர்வதேச சமுதாயத்துக்கு ராஜபக்சே மீண்டும் உறுதி அளிக்கிறார். அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவை அமலுக்கு கொண்டு வருவதில் இலங்கை அரசு உறுதியாக இருக்கிறது.
அண்டை நாடான இந்தியா உடன் இலங்கை அரசுக்கு நெருக்கமான உறவு உள்ளது. இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரண்டு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களும் பரஸ்பரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தனியாக பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது.
இவ்வாறு பொகலகாமா தெரிவித்தார்.

முன்னதாக இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் உரையாற்றியபோது, "இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகளின் உதவியும் ஆதரவும் கிடைக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இருதரப்பு உறவுகள் மேம்பாடு அடைந்துள்ளன. இலங்கையில் உள் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள சீனா பெரிய அளவில் உதவி செய்கிறது. ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக ஜப்பானில் இருந்து 25 சதவீதம் அதிகமாக உதவி கிடைக்கிறது''என்றார்.