Monday, November 17, 2008

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி தமிழகத்தில் 25-ந் தேதி முழு அடைப்பு அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு


சென்னை, நவ.18-
இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி, தமிழகத்தில் 25-ந் தேதி முழு அடைப்பு நடத்துவது என்று தா.பாண்டியன் தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி, இந்திய கம்னிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் தலைமையில் சென்னையில் நேற்று அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில், பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ம.தி.மு.க. துணை பொதுசெயலாளர் மல்லை சத்யா, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, சமத்துவ மக்கள் கட்சி அரசியல் ஆலோசகர் ரவீந்திரன் துரைசாமி, லட்சிய திராவிட முன்னேற்றக் கழக பொது செயலாளர் விஜய டி.ராஜேந்தர், தேசியவாத காங்கிரஸ் தலைவர் திண்டிவனம் ராமமூர்த்தி, தமிழர் தேசிய இயக்க தலைவர் பழ.நெடுமாறன், அகில இந்திய பார்வர்டு பிளாக் மாநில செயற்குழு உறுப்பினர் பி.வி.கதிரவன், தேசிய லீக் தலைவர் பசீர் அகமது, அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக நிறுவனர் சேதுராமன், பெரியார் திராவிடர் கழக பொது செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில், தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு கட்சி, தே.மு.தி.க., விடுதலைச்சிறுத்தைகள் ஆகியவை பங்கேற்கவில்லை.
கூட்டத்தில் கலந்து கொண்ட தலைவர்கள் தங்களது கருத்துக்களை எடுத்துரைத்தனர். கூட்ட முடிவில் இந்திய கம்னிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல் போராக வெடித்துள்ளது. அங்கு வாழும் தமிழ் மக்கள் கொல்லப்படுகிறார்கள். இதை தடுக்கக்கோரி தமிழகத்தில் பலர் போராட்டம் நடத்தினார்கள். இந்த நிலையில் தமிழக அரசு அனைத்து கட்சி கூட்டம் ஒன்றை கூட்டியது. அந்த கூட்டத்தில், "இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும். இலங்கை ராணுவத்திற்கு செய்யும் உதவியை மத்திய அரசு நிறுத்த வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உணவு, மருந்து பொருட்களை அனுப்ப வேண்டும். தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குவதை நிறுத்த வேண்டும். இலங்கையில் போரை நிறுத்தி பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காண வேண்டும்'' போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கோரிக்கைகளை மத்திய அரசு, இலங்கை அரசிடம் வலியுறுத்தும் என்று எதிர்பார்த்தோம். இந்த நிலையில், டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று கூறியுள்ளார்.

இன்று காலை பத்திரிகையில் கூட, இலங்கையில் ராணுவ தாக்குதலில் 100 தமிழர்கள் கொல்லப்பட்டதாக செய்தி வந்துள்ளது. இதுவரை பேசாத மத்திய அரசிடம் நாங்கள் ஒன்றுபட்ட குரலில் கேட்கிறோம். இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும். இதுகுறித்து இந்திய அரசு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.
நவம்பர் 25-ந் தேதி (செவ்வாய்கிழமை) தமிழகத்தில் முழு அடைப்பு நடத்துவது என்று அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை, தொழில் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்காது. பஸ், ரெயில் ஓடாது. பொதுமக்கள் அனைவரும் அன்றைய பயண திட்டத்தை மாற்றி கொள்ள வேண்டும். போராட்டத்தில் பங்குபெறுகின்றவர்கள் பொதுமக்களுக்கு இடைறு செய்யக்கூடாது.

அதற்குள் இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு வலியுறுத்தவில்லை என்றால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து சர்வ கட்சி கூட்டம் கூட்டி அறிவிப்போம். அந்த போராட்டம் கடுமையாக இருக்கும்.
அனைத்து கட்சி கூட்டத்திற்கு, எங்களின் அழைப்பை சில கட்சிகள் நிராகரித்து இருக்கலாம். ஆனால், ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க நடத்தும் போராட்டத்தை நிராகரிக்க மாட்டார்கள்.
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தக்கோரி குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரை கடைசி வேண்டுகோளாக கேட்கிறோம். இலங்கை பிரச்சினை தொடர்பாக முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டத்திலும், அவர் நடத்திய மனிதச்சங்கிலியிலும் நாங்கள் கலந்து கொண்டோம். சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கும் ஆதரவு தந்தோம்.

இன்று கூட இலங்கையில் போர் நிறுத்தம் அவசியம் என்று முதல்-அமைச்சர் கருணாநிதி கூறியிருக்கிறார். இதை அவர் மத்திய அரசிடம் வலியுறுத்தட்டும். நாங்களும் மத்திய அரசை வலியுறுத்துகிறோம். இலங்கையில் வாழும் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க நினைப்பவர்கள் இந்த முழு அடைப்பு போராட்டத்தில் கலந்துகொள்வார்கள்.
இலங்கையில், விடுதலைப்புலிகள் ஏற்கனவே போர் நிறுத்தத்திற்கு தயார் என்று கூறிவிட்டனர். எனவே, அங்கு அவர்கள் போர் நடத்தவில்லை. தற்காப்புக்காகத்தான் ஆயுதம் எடுத்திருக்கிறார்கள்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன், இந்திய கம்னிஸ்டு கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியனுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
தாங்கள் கூட்டுகின்ற அனைத்து கட்சி கூட்ட அழைப்பு நேற்று கிடைத்தது. இலங்கை தமிழர் பிரச்சினையில், ஒன்றுபட்டு முடிவுகள் மேற்கொண்டு முறைப்படி நடவடிக்கைகள் மேற்கொள்ளும் முயற்சிகளை முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடைபெற்று வருவதை அறிவீர்கள்.
இந்த முயற்சிகளுக்கு எல்லோரும் இணைந்து ஒத்துழைப்பதுதான் இலங்கை தமிழர்களுக்கு ஏற்படக் கூடிய உரிய பயன்கள் ஏற்படும் என்று நம்புவதால் இதைப் போன்ற தனித்தனி முயற்சிகள் உரிய பயனை அளிக்காது என்று நம்புகிறேன். மேலும், இலங்கை தமிழர்களை பாதுகாக்கும் முயற்சியை மேற்கொள்ளும் தங்கள் கட்சி ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் தேர்தல் முடிவுகள் எப்படி அமையும் என்ற தங்களின் ஆசையையும் வெளியிட்டு கொண்டிருப்பதால், தங்களின் இச்செயல் உரிய தகுதியை இயற்கையாகவே இழந்து விடுகிறது என்பதை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு கடிதத்தில் ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.

No comments: