Monday, November 10, 2008

இலங்கை தமிழர்களுக்கு நிவாரண பொருட்கள் கப்பலில் 13-ந் தேதி அனுப்ப ஏற்பாடு

சென்னை, நவ.11-
இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்கள் அனைத்தும் சென்னையில் இருந்து கண்டெய்னர்களில் கப்பல் மூலம் 13-ந் தேதி கொண்டு செல்லப்படுகிறது.

இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் உச்சகட்ட போர் நடந்து வருகிறது. இந்த போரில் ஏராளமான அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். லட்சக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் தங்களது வீடுகளை விட்டுவிட்டு காடுகளுக்குள் பதுங்கிக் கிடக்கின்றனர். உணவு, உடை கிடைக்காமல் அவர்கள் கடும் அவதிக்கு உள்ளாகி இருக்கின்றனர்.
பாதிக்கப்பட்டு உள்ள அப்பாவி தமிழர்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக அரசை இங்குள்ள பல கட்சிகள் வற்புறுத்தின. அதைத் தொடர்ந்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களும் கொடுத்து உதவ இருப்பதாக அரசு அறிவித்தது. இதற்காக முதல்-அமைச்சரிடம் நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை கப்பலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை இந்திய கப்பல் கழகம் மேற்கொண்டுள்ளது. அரிசி, பருப்பு, துணிகள் போன்ற நிவாரணப் பொருட்களை கொண்டு செல்வதற்கு வசதியாக அவற்றை பாக்கெட்டுகளில் போட்டு, கண்டெய்னர்களில் அடைத்து, கப்பலில் ஏற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இதற்காக 100 கண்டெய்னர்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. அவற்றில் 40 அடி நீளம் கொண்ட 17 கண்டெய்னர்களில் துணிகளும், 20 அடி நீளம் உள்ள 83 கண்டெய்னர்களில் உணவுப் பொருட்களும் கொண்டு செல்லப்படும். சேலை, வேட்டி, பெட்சீட், லுங்கி, நைட்டி, டவல், குளியல் மற்றும் துணி துவைக்கும் சோப்புகள், பேஸ்ட் ஆகிய பொருட்களையும், அரிசி, பருப்பு, சர்க்கரை, ஊட்டி தேயிலை, பிஸ்கட், ரொட்டி உள்ளிட்ட உணவுப் பொருட்களையும் `பேக்கிங்' செய்யும் பணி நடக்கிறது.

ஒரு பாக்கெட்டில் 15.5 கிலோ அரிசி அடைக்கப்படுகிறது. ஒரு கண்டெய்னரில் 20 முதல் 25 மெட்ரிக் டன் எடை அளவில் பொருட்கள் அடைக்கப்படும். கோ-ஆப் டெக்ஸ் மற்றும் சிவில் சப்ளைஸ் ஆகியவை பெரும்பாலான பொருட்களை சப்ளை செய்துள்ளன.
சென்னையில் அண்ணாநகர், பாந்தியன் சாலை, விருகம்பாக்கம், தண்டையார்பேட்டை, தங்கசாலை, நாராயணபிள்ளை சாலை, கோபாலபுரம், நந்தனம், திருவொற்றிர் ஆகிய இடங்களில் உள்ள குடோன்களில் இருந்து இந்த பொருட்கள் லாரிகள் மூலம் கொண்டுச் செல்லப்படுகின்றன.
இவை அனைத்தும் கண்டெய்னர் நிலையத்தில் குவிக்கப்படுகின்றன. அங்கு அவை பார்சல் செய்யப்பட்டு கண்டெய்னர்களில் அடைக்கப்படும். இந்த கண்டெய்னர்கள் அனைத்தும் லாரிகள் மூலம் 12-ந் தேதி சென்னை துறைமுகத்தில் உள்ள சி.சி.டி.எல். (சென்னை கண்டெய்னர் டெர்மினல் லிமிடெட்) நிறுவனத்துக்கு கொண்டு வரப்படும்.
இந்திய கப்பல் கழகத்துக்கு சொந்தமான 3 கப்பல்களுமே வெளிநாட்டில் போக்குவரத்தில் உள்ளன. அவற்றில் ஒன்று தற்போது புறப்பட்டு சென்னைக்கு வருகிறது. அந்த கப்பல் வருவதற்கு 17-ந் தேதி ஆகிவிடும். எனவே, மற்றொரு பங்குதாரர் நிறுவனத்திற்கு சொந்தமான `எம்.வி.கான்டிஜோர்க்' என்ற கப்பல் வரவழைக்கப்படுகிறது.
இந்த கப்பல் தற்போது கொழும்பில் இருந்து புறப்பட்டு வருகிறது. இது சென்னை துறைமுகத்தை 12-ந் தேதி (நாளை) வந்தடையும். உணவு பொருட்களுடன் தயாராக இருக்கும் 100 கண்டெய்னர்களையும் சி.சி.டி.எல். நிறுவனம் அந்த கப்பலில் ஏற்றும். அதைத் தொடர்ந்து 13-ந் தேதியன்று கான்டிஜோர்க் கப்பல் இலங்கைக்கு புறப்படும். 15-ந் தேதி இலங்கையை கப்பல் சென்றடையும். அங்கு நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உடனே வழங்க முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
அரிசி உள்ளிட்ட சில உணவுப் பொருட்களை இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்வதற்கு இங்கு தடை உள்ளது. இந்த தடையை நீக்க மத்திய அரசின் வெளியுறவுத்துறை, வணிகத்துறை ஆகிய அமைச்சகங்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றன.
தடையை நீக்கி விரைவில் அரசிதழ் வெளியிட்ட பிறகே, அந்த உணவுப் பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்ல முடியும். இதற்கான பணியும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளது.
மேலும், இந்த பொருட்களை இலங்கைக்கு கொண்டு செல்வதற்கான அனுமதியை உடனே வழங்கும்படி சுங்கத்துறை அதிகாரிகளிடமும் கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. இந்த பணிகள் அனைத்தையும் கடந்த 8-ந் தேதியில் இருந்து இரவு பகல் பாராமல் இந்திய கப்பல் கழக பணியாளர்கள் மேற்கொண்டுள்ளனர்.

No comments: