Thursday, November 6, 2008

தமிழக செய்திகள்

சென்னையில் இருந்து கப்பலில். . . இலங்கை தமிழர்களுக்கு வழங்க,2 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள்
இலங்கை தமிழர்களுக்கு வழங்க சென்னையில் இருந்து 2 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் கப்பலில் அனுப்பப்படுகின்றன. அவற்றை முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று பார்வையிட்டார்.
சென்னை, நவ. 7-
இலங்கையில் சிங்கள ராணுவம் நடத்தி வரும் போரால் பல்லாயிரக்கணக்கான அப்பாவி தமிழர்கள் வீடு, வாசலை இழந்து பசி, பட்டினியோடு வாழ்க்கை நடத்தி வருகிறார்கள்.
போரினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்களுக்கு மத்திய அரசு சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் நிவாரண பொருட்களை கப்பலில் அனுப்ப ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
தமிழக அரசால் முதல் கட்டமாக 2 ஆயிரம் டன் நிவாரண பொருட்கள் கப்பலில் அனுப்புவதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
அந்த நிவாரணப்பொருட்களை சென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் கருணாநிதி, செஞ்சிலுவை சங்க சர்வதேச நிர்வாகி ஆகியோர் நேற்று பார்வையிட்டனர்.
இது பற்றி தமிழக அரசு வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

இலங்கையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் தமிழர்களுக்கு உதவுவதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, நிதி உதவிகளும், நிவாரணப் பொருட்களும் இதுவரையில் 10 கோடி ரூபாய் அளவுக்கு தமிழக அரசுக்கு வந்து சேர்ந்துள்ளன.
அரிசி, பருப்பு, டீத்தூள், சர்க்கரை போன்ற உணவுப்பொருட்களுடன், குளிக்கும் சோப்பு, துவைப்பதற்கான சோப்பு, பற்பசை ஆகியனவும், வேட்டி, கைலி, சேலை, பெண்கள் அணியும் ஆயத்த ஆடை, துண்டுகள் மற்றும் படுக்கை விரிப்புகள் ஆகிய துணி வகைகளும் அடங்கிய நிவாரணப் பொருட்கள் 80 ஆயிரம் குடும்பங்களுக்கு வழங்குவதற்காகத் தனித்தனியே சிப்பங்களாகத் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.

தமிழக அரசினால் முதல் கட்டமாக அளிக்கப்படும் ஏறத்தாழ 2 ஆயிரம் டன் எடையுள்ள இந்த நிவாரணப் பொருட்கள் சென்னையில் இருந்து கப்பல் மூலம் கொழும்பு துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு இலங்கையில் உள்ள இந்திய தூதரிடம் ஒப்படைக்கப்படும். அவரிடமிருந்து இந்த நிவாரணப் பொருட்கள் செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர், இலங்கையில் பாதிப்புக்கு ஆளாகியிருக்கும் மக்களில் ஏறத்தாழ 80 ஆயிரம் தமிழர் குடும்பங்களுக்கு பகிர்ந்து வழங்கப்படும்.
இந்த நிவாரணப் பொருட்கள் கப்பல் மூலம் இலங்கைக்குக் கொண்டு செல்லப்படுவதையும், அங்கு பாதிப்புக்கு ஆளாகியுள்ள தமிழ் மக்களுக்கு இவற்றை வழங்குவதற்கான ஏற்பாடுகளை இந்திய தூதரகம் மேற்கொள்வதையும் கண்காணிக்கும் பொறுப்பை மத்திய அரசின் வெளியுறவுத் துறை ஏற்று உள்ளது.

இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ள இந்த நிவாரணப் பொருட்களை முதல்-அமைச்சர் கருணாநிதி பார்வையிட்டார். அப்போது, செஞ்சிலுவைச் சங்கத்தின் பன்னாட்டுக் குழுமத்தின் அதிகாரி தாமஸ் ரீஸ், மத்திய அரசின் வெளியுறவுத்துறையைச் சேர்ந்த அதிகாரி ஐ.எம்.பாண்டே, தமிழக அரசு தலைமைச் செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி மற்றும் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
நிவாரணப்பொருட்களைப் பார்வையிட்ட தாமஸ் ரீஸ், நிவாரணப்பொருட்கள் அனைத்தும் நல்ல தரமுடன் உள்ளதாகத் தெரிவித்தார்.
நிவாரணப்பொருட்கள் தமிழகத்தில் இருந்து 8-ந் தேதி (சனிக்கிழமை) அல்லது 9-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கையில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அரசு செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.
நிவாரண பொருட்களை பார்வையிட்டு, முதல்-அமைச்சர் கருணாநிதியை சந்தித்தபின் வெளியே வந்த செஞ்சிலுவை சங்க அதிகாரி தாமஸ் ரீஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக அரசு முதல் கட்டமாக அரிசி, பருப்பு, சர்க்கரை, டீத்தூள், மருந்துப்பொருட்கள், சேலை, வேட்டி உள்ளிட்ட பொருட்களை சேகரித்துள்ளது.
இவை, இந்திய அரசால் இலங்கை அரசிடம் வழங்கப்படும். இன்னும் 2 வாரங்களில் கொழும்புக்கு வந்து சேரும். அவர்களிடமிருந்து நாங்கள் (செஞ்சிலுவை சங்கம்) பெற்று, இலங்கையில் வன்னி உள்பட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள தமிழர்களுக்கு நேரடியாக வழங்குவோம். இந்த மாத இறுதிக்குள் இவை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுவிடும்.
தமிழக அரசு சேகரித்துள்ள உணவுப்பொருட்கள், மருந்து வகைகள், துணிமணிகள் உள்பட அனைத்துப்பொருட்களும் மிகவும் தரமானதாக உள்ளன. இவை அனைத்தும் அங்கு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மிகவும் தேவையான பொருட்கள் ஆகும்.
இவ்வாறு தாமஸ் ரீஸ் கூறினார்.
IF MORE DETAILS PL VISIT: www.communicationspoint.co.in

No comments: