Tuesday, November 11, 2008

7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்க இலங்கை அதிபர் ராஜபக்சே டெல்லி வந்தார் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி மன்மோகன்சிங்குடன் முக்கிய பேச்சு

புதுடெல்லி, நவ.12-
7 நாடுகள் மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று டெல்லி வந்தார். இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி, பிரதமர் மன்மோகன்சிங்குடன் அவர் முக்கிய பேச்சு நடத்துகிறார்.
7 நாடுகள் மாநாடு
`பீம்டெக்ஸ்' என்று அழைக்கப்படும் 7 தெற்காசிய பிராந்திய நாட்டு தலைவர்கள் பங்கேற்கும் 2-வது கூட்டமைப்பு மாநாடு, டெல்லியில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது.

இந்திய பிரதமர் மன்மோகன்சிங், வங்காள தேச முதன்மை ஆலோசகர் டாக்டர் பக்ருதீன் அகமது, பூடான் பிரதமர் யோன்சன் ஜிக்மி, தாய்லாந்து பிரதமர் வாங்ஸ்வாட், மியான்மர் பிரதமர் ஜெனரல் தீன் சீன், நேபாள பிரதமர் பிரசண்டா, இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே ஆகிய 7 நாட்டு தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள்.
ராஜபக்சே வருகை
இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, இலங்கை அதிபர் ராஜபக்சே நேற்று இரவு டெல்லி வந்தார். 7 நாட்டு தலைவர்களுக்கும் பிரதமர் மன்மோகன்சிங் இன்று இரவு விருந்து அளிக்கிறார். முன்னதாக இன்று காலை முதல் கட்டமாக 7 நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் மாநாடு நடைபெறுகிறது.
அதைத் தொடர்ந்து நாளை நடைபெறும் மாநாட்டில் கல்வி, வர்த்தகம், எல்லை பிரச்சினை மற்றும் பல்வேறு துறைகளில் கூட்டு பிரகடனம் வெளியிடப்படுகிறது.
இலங்கை தமிழர் பிரச்சினை
மாநாட்டில் பங்கேற்கும் ராஜபக்சே, இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கை தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் இந்திய மீனவர்களின் உரிமையை பாதுகாக்கும் நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்துகிறார்கள்.

No comments: