Sunday, November 16, 2008

"போர் நிறுத்தம் அவசியம்" - கருணாநிதி பேட்டி

கோவை, நவ.17-
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண போர் நிறுத்தம் அவசியம் என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.
முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று கோவையில் நிருபர்களுக்கு நேற்று பேட்டி அளித்தார். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளும், முதல்-அமைச்சர் கருணாநிதி அளித்த பதில்களும் வருமாறு:-
கேள்வி:- இலங்கை பிரச்சினையில் தி.மு.க.வின் தற்போதைய நிலைப்பாடு என்ன? இது சம்மந்தமாக நீங்கள் டெல்லி சென்று பிரதமரை சந்திக்க இருக்கிறீர்களா?
பதில்:- பிரதமரை, சோனியா காந்தியை எல்லாம் இலங்கை பிரச்சினை சம்மந்தமாக ஏற்கனவே சந்தித்துப் பேசியிருக்கிறேன். அதற்கு பிறகு கடிதம் மூலமாகவும் தொடர்பு கொண்டிருக்கிறேன். டெல்லியில் இருக்கிற கழக அமைச்சர்கள், டி.ஆர்.பாலு, ஆ.ராஜா ஆகியோர் மூலமும் அடிக்கடி - சொல்லப் போனால் ஒவ்வொரு நாளும் கூட தொடர்பு கொண்டு இலங்கை பிரச்சினை சம்மந்தமாக கருத்து பரிமாற்றம் நடைபெற்றிருக்கிறது. இலங்கை பிரச்சினை சம்பந்தமாக - ஏற்கனவே தி.மு.க. செயற்குழுவிலே நிறைவேற்றப்பட்ட தீர்மானம், அதற்கு பிறகு தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் - இதுதான் தி.மு.க.வின் அணுகுமுறை, நிலைப்பாடுகளாகும்.
கேள்வி:- இந்த பிரச்சினை குறித்து பிரதமரை சந்திக்கப் போகிறீர்களா?
பதில்:- பிரதமர் தற்போது டெல்லியில் இல்லை. வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளார்.
கேள்வி:- இந்த பிரச்சினையிலே சோனியா காந்தி நேரடியாக எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லையே?
பதில்:- நாங்கள் அரசு ரீதியாக தொடர்பு கொண்டிருப்பது பிரதமரிடம்தான் இலங்கை பிரச்சினை பற்றி பேசுகிறோம். கட்சி சார்பாக பேசுவதாக இருந்தால், காங்கிரஸ் கட்சித் தலைவர் என்ற முறையில் சோனியாகாந்தி அம்மையாரிடம் பேசியிருப்போம்.

கேள்வி:- இரண்டு நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் ராஜபக்சேயை நம்பக்கூடாது என்று ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து நிறைவேற்றியிருக்கிறீர்கள். அதற்குப் பிறகும் நேற்றைக்குக் கூட அகதிகள் வந்ததாக செய்திகள் வந்திருக்கிறதே?
பதில்:- ராஜபக்சேயை நம்பக் கூடாது என்று தீர்மானம் போடவில்லை. தீர்மானத்தின் மீது பேசும்போது, அவர் தமிழர்களுக்காக பரிந்து பேசுவதாகவும், தீவிரவாதிகளைத்தான் வீழ்த்துவதில் அக்கறையாக இருக்கிறேன் என்று சொல்கிறார். ஆனால் அவருடைய செயல்களைப் பார்க்கும்போது, அவருடைய கூற்றை நம்புவதற்கில்லை, நம்பமுடியாது என்றுதான் சொல்லியிருக்கிறேன்.

கேள்வி:- இந்திய கம்னிஸ்டு கட்சி சார்பில் இலங்கை தமிழர் பிரச்சினைக்காக நாளையதினம் அனைத்துக்கட்சி கூட்டம் ஒன்றை நடத்துகிறார்களே?
பதில்:- இலங்கை தமிழர் பாதுகாப்பிற்காக தனித்தனியாக அவரவர்களும் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அதிலே தி.மு.க. சார்பில் யாருக்கும் தொடர்பு இல்லை.
கேள்வி:- சட்டசபை தீர்மானத்துக்கு பிறகு தொடர் நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்திகரமாக உள்ளதா?
பதில்:- போர்நிறுத்தம் வேண்டும் என்பது எங்களுடைய எல்லா தீர்மானங்களின் பொழிப்புரையாகும். அதுதான் மூலக்கரு. மையக்கருத்து. அது ஏற்படாத வரையில் எங்களுக்கு எப்படி திருப்தி ஏற்பட முடியும்?

கேள்வி:- இந்த பிரச்சினையிலே பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கையில் மத்திய அரசு இந்த பிரச்சினையை ஐ.நா.மன்றத்துக்கு கொண்டு போக வேண்டுமென்று சொல்லி யிருக்கிறாரே?
பதில்:- இன்றுதான் அந்த அறிக்கையை பார்த்தேன். அவருடைய அறிக்கை இன்றைக்குத்தான் இங்கே வந்திருக்கிறது. இதைப்பற்றி மேலும் கருத்துக்கள் அவரிடமிருந்து தெரிந்து கொள்ளவோ, செயல்படவோ நான் சென்னை சென்றபிறகுதான் அதற்கான முயற்சியில் ஈடுபட முடியும்.

கேள்வி:- இலங்கை பிரச்சினையில் போர் நிறுத்தம் என்பதுதான் எல்லா தீர்மானங்களிலும் அடிப்படையாக சொல்லப்படுகிறது. அது தெரிந்திருந்தும் இலங்கை அதிபர் போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று சொல்கிறார். அது எதனை காட்டுகின்றது?
பதில்:- இலங்கை அதிபருடைய விளக்கத்தை டெல்லியிலும் சொல்லியிருக்கிறார். அதற்கு முன்பும் அதையே அறிவித்திருக்கிறார். நாங்கள் அங்குள்ள தீவிரவாதிகளை அடக்குவதற்காக இந்த போரை நடத்துகிறோம், தமிழர்களை அழிப்பதற்காக அல்ல என்று சொல்லியிருக்கிறார். எங்களுடைய கருத்து என்னவென்றால், தீவிரவாதிகளை அடக்குவது என்ற பெயரால் அங்குள்ள தமிழர்கள் பெரும் பாதிப்புக்கும் அழிவுக்கும் ஆட்படுகிறார்கள் என்பதுதான்.

No comments: