Monday, November 24, 2008

விடுதலைப்புலிகள் அதிரடி தாக்குதலில் 43 ராணுவத்தினர் பலி


கொழும்பு, நவ.25-
இலங்கையில் நல்லூர் நகரை கைப்பற்ற முயன்ற ராணுவத்தை விடுதலைப்புலிகள் விரட்டியடித்தனர். அதில் 43 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இதற்கிடையே, கிளிநொச்சி மற்றும் முல்லைத் தீவு பகுதிகளில் பலத்த மழை பெய்வதால் இலங்கை ராணுவத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளுக்கு தலைநகராக இருக்கும் கிளிநொச்சியை கைப்பற்றுவதில் ராணுவம் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. மூன்று பகுதிகள் வழியாக போர் செய்து வருகிறது. இந்த நிலையில் விடுதலைப்புலிகளும் தீவிரமாக பதில் தாக்குதலில் ஈடுபட்டு உள்ளனர்.
பூநகரி-பரந்தன் சாலையில் அமைந்துள்ள முக்கிய நகரான நல்லூரை கைப்பற்றும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டது. இதையடுத்து நேற்று முன்தினம் (ஞாயிறு) இரவு முதல் விடுதலைப்புலிகள் பதில் தாக்குதலில் இறங்கினர். மிக கடுமையாக சண்டை நடந்தது. இறுதியாக, ராணுவத்தினரை விடுதலைப்புலிகள் விரட்டி அடித்தனர்.

வடக்கு பகுதியான யாழ்ப்பாணத்தில் இருந்து கிளிநொச்சிக்குள் ழைய முக்கிய வாயிலாக நல்லூர் உள்ளது. இந்த சண்டையில் 43 ராணுவ வீரர்கள் பலியானதாக விடுதலைப்புலிகள் தெரிவித்தனர். அதில் 8 பேருடைய உடல்களை அவர்கள் கைப்பற்றினர். சண்டை முடிந்த பிறகு, ஏராளமான ஆயுதங்களையும் பறிமுதல் செய்ததாக விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் 70 பேரும் காயம் அடைந்தனர்.
ஆனால், இந்த சண்டையில் தங்கள் தரப்பில் பெரிய அளவில் எந்த சேதமும் ஏற்படவில்லை என்றும் 8 வீரர்களை மட்டும் காணவில்லை என்றும் இலங்கை ராணுவம் தெரிவித்து இருக்கிறது.
பல்வேறு இடங்களில் சண்டை
இதற்கிடையே, பரந்தனில் உள்ள உருத்திராபுரம், குன்சுப் ஆகிய இடங்களிலும், பூநகரி அருகிலும் கடுமையான சண்டை நடந்தது. கிளிநொச்சிக்கு தெற்கே உள்ள புறநகர் பகுதியான முறிகண்டி, அறிவியல் நகர் ஆகிய இடங்களிலும் ராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் தாக்குதல் நடத்தினர். வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடந்த இந்த சண்டைகளில் மேலும் 35 ராணுவ வீரர்களை கொன்று விட்டதாக விடுதலைப்புலிகள் தெரிவித்து உள்ளனர்.

அதே நேரத்தில், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் அந்த பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இங்கிருந்து யாழ்ப்பாணத்துக்குள் செல்லும் குடமுருட்டி ஆறும் நிரம்பி வழிகிறது. இதனால் இலங்கை ராணுவத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிளிநொச்சியை கைப்பற்றுவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் பிறந்தநாளை முன்னிட்டு நாளை (26-ந் தேதி) மாவீரர் தினம் கொண்டாடப்பட உள்ளது. எனவே, பெரிய அளவிலான தாக்குதலில் விடுதலைப்புலிகள் ஈடுபடுவார்கள் என்று கருதப்படுகிறது. எனவே, அதை சமாளிக்க இலங்கை ராணுவம் தயாராகி வருகிறது.

ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்கரா கூறும்போது, ``கிளிநொச்சியின் தெற்கு பகுதியில் உள்ள பரந்தனில் நடந்த சண்டையில் 120 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர். முல்லைத் தீவு அருகே நடந்த சண்டையில் 27 ராணுவ வீரர்கள் பலியானார்கள். மூன்று பகுதிகளில் கடுமையான போர் நடைபெற்று வருகிறது. அங்கு பலத்த மழை பெய்யத் தொடங்கி விட்டது. எனினும் ராணுவத்துக்கு எந்த பாதிப்பும் இல்லை'' என்றார்.

No comments: