Friday, November 21, 2008

ரனில் விக்ரமசிங்கே கார் முற்றுகை இந்திய கம்னிஸ்டு கட்சியினர் கறுப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டம்







கோட்டூர், நவ.21-
இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்திய கம்னிஸ்டு கட்சியினர் போராட்டம் நடத்தினர். அவரது கார் முற்றுகையிடப்பட்டது.

திருவாரூர் மாவட்டம், திருக்கொள்ளிக்காட்டில் அக்னீசுவரர் கோவில் உள்ளது. இங்கு சாமி தரிசனம் செய்வதற்காக இலங்கை முன்னாள் பிரதமர் ரனில் விக்ரமசிங்கே நேற்று வந்தார்.
இதனை அறிந்த இந்திய கம்னிஸ்டு கட்சியினர் முன்கூட்டியே அங்கு திரண்டனர். அவர்கள், ரனில் விக்ரமசிங்கே வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இலங்கையில் தமிழர்களை கொன்று குவிப்பதை இலங்கை ராணுவம் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் கறுப்பு கொடி ஏந்தியவாறு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்திற்கு திருத்துறைப்பூண்டி எம்.எல்.ஏ. உலகநாதன் தலைமை தாங்கினார்.

ரனில் விக்ரமசிங்கே காரில் கோவிலை நோக்கி வந்தபோது மறியலில் ஈடுபட்டவர்கள் அவரது காரை நோக்கிச் சென்று முற்றுகையிட்டனர். பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி, ரனிலை பாதுகாப்பாக கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.

அவர், கோவிலுக்குள் சென்ற பிறகும், போராட்டக் குழுவினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் 2 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கோவிலில் சாமி தரிசனம் முடிந்த பிறகு, ரனில் பாதுகாப்பாக மீண்டும் அழைத்துச் செல்லப்பட்டார்.


இதேபோல, நீடாமங்கலத்திலும் ரனில் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடந்தது. திருக்கொள்ளிக்காட்டில் இருந்து ரனில் திரும்பி வரும் நேரத்தில் இந்த ஆர்ப்பாட்டம் நடந்ததால், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 30 பேரை கைது செய்தனர்.
இதேபோல, திருவாரூரில் உள்ள நாகை பை-பாஸ் சாலையில் மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.
தகவல் அறிந்த போலீசார் அங்கு சென்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை கைது செய்தனர். மாங்குடியில் போராட்டம் நடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

No comments: