Wednesday, November 19, 2008

ஈழத் தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறி விட்டது உண்ணாவிரத்தில் வைகோ குற்றச்சாட்டு



சென்னை, நவ.20-
`தொப்புள் கொடி' உறவான ஈழத்தமிழர்களை காப்பாற்ற மத்திய அரசு தவறிவிட்டது என்று சென்னையில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தில் வைகோ குற்றம் சுமத்தினார்.

இலங்கையில் உடனே போரை நிறுத்தவும், அங்குள்ள தமிழர்களை பாதுகாக்கவும் கோரி ம.தி.மு.க. சார்பில் சென்னையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை முன்பு நடந்த இந்த போராட்டத்திற்கு, கட்சியின் பொது செயலாளர் வைகோ தலைமை தாங்கினார்.
இந்திய கம்னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் போராட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
இலங்கையில் உடனே போரை நிறுத்த வேண்டும் என்று சர்வ கட்சி கூட்டத்திலும், சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், டெல்லி வந்த இலங்கை அதிபர் ராஜபக்சே, போரை நிறுத்த முடியாது என்று கூறியுள்ளார். இதை கேட்ட மத்திய அரசும் ஒன்றும் சொல்லவில்லை. இதில், இந்திய அரசு தனது நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.
இலங்கையில் போரை நிறுத்தவா?, வேண்டாமா? என்று முடிவு செய்வது இலங்கை அதிபர் ராஜபக்சேவின் கையில் உள்ளது. ஆனால், இலங்கைக்கு ஆயுத உதவி செய்வதா?, வேண்டாமா? என்ற முடிவு நம்முடைய கையில் தான் உள்ளது. எனவே, மத்திய அரசு ஆயுத உதவி செய்வதை நிறுத்த வேண்டும்.

இந்த நிலையில், இலங்கை தமிழர்களுக்கு உணவுப் பொருட்களை அனுப்புவதாக இந்திய அரசு கூறிவருகிறது. மேலே குண்டு வீசும்போது, எப்படி கீழே இருந்து சாப்பிட முடியும். இதை மக்கள் சிந்திக்க பார்க்க வேண்டும். இது ஒன்றும் அரசியல் கோரிக்கை அல்ல. மனிதாபிமான கோரிக்கை.
இலங்கையில் ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவது தொடர்ந்தால், அடுத்த கட்ட போராட்டம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும். இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு பக்க பலமாக நாங்கள் இருப்போம். வரும் 25-ந் தேதி மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு நடைபெறும் மறியல் போராட்டத்திற்கு நீங்கள் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறினார்.
பின்னர், ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இலங்கையில் நடைபெறும் சிங்கள ராணுவ தாக்குதலால், அங்குள்ள தமிழர்கள் வாழ்வாதாரத்திற்காக போராடுகிறார்கள். தொப்புள் கொடி உறவான ஈழத் தமிழர்களை காக்க இந்திய அரசு தவறிவிட்டது. ஆயுதம், பணம் போன்ற உதவிகளை அளித்து வருகிறது. இதை நான் பகிரங்கமாக குற்றம் சாட்டுகிறேன்.
இலங்கையில் நடைபெற்று வரும் போரை பின்னால் இருந்து நடத்துவதே இந்தியா தான். மத்திய அரசின் செயல்பாடு, பச்சை துரோகத்தை கண்டித்து இந்த போராட்டம் நடத்துகிறோம். தமிழக மக்களின் ஒட்டு மொத்த குரலும், சட்ட மன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானமுமான, இலங்கையில் போர் நிறுத்தம் என்பதை மத்திய அரசு உதாசீனப்படுத்திவிட்டது. 61/2 கோடி தமிழர்களின் உணர்வை புறந்தள்ளிவிட்டது.

`அடிப்பது போல் அடி, அழுவது போல் அழுகிறேன்' என்று தமிழக அரசு மத்திய அரசுடன் சேர்ந்து நாடகம் ஆடுகிறது. நிலவில் அடியெடுத்து வைக்கும் இடத்தில் நாம் இருக்கிறோம். அண்டை நாட்டில் நடைபெறும் தமிழர்கள் மீதான போரை நிறுத்த முடியாதா?. போரை நிறுத்த முடியாது என்று இந்திய மண்ணில் இருந்து கொண்டே ராஜபக்சே கூறியிருக்கிறார்.
இந்திய அரசு இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவில்லை. இலங்கை அதிபர் ராஜபக்சேவும் போர் நிறுத்தம் குறித்து என்னிடம் பேசவில்லை என்று கூறியுள்ளார். இதற்கு இந்திய அரசும் மறுப்பு தெரிவிக்கவில்லை. சென்னை வந்த வெளியுறவு துறை மந்திரி பிரணாப் முகர்ஜியும், இலங்கை அரசை போர் நிறுத்தம் செய்ய நம்மால் எப்படி சொல்ல முடியும் என்கிறார். இதில் இருந்து இந்திய அரசு, இலங்கை அரசிடம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தவில்லை என்பது தெளிவாகிறது.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அரணாக விடுதலைப்புலிகள் உள்ளனர். அவர்களை அழித்துவிட்டால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ராஜபக்சே நினைக்கிறார். ஆனால், விடுதலைப்புலிகளை அழிக்க முடியாது. விடுதலைப்புலிகள் வேறு, தமிழர்கள் வேறு அல்லர். அங்கு நிலைமை மாறும், தமிழர்கள் சீறும் நிலை உருவாகும்.
இவ்வாறு வைகோ கூறினார்.
உண்ணாவிரத போராட்டத்தில் ம.தி.மு.க. துணை பொது செயலாளர் மல்லை சத்யா, மாவட்ட செயலாளர்கள் மணிமாறன், ஜீவன், மகளிரணி மாநில செயலாளர் குமரி விஜயகுமார், கவிஞர் முத்து லிங்கம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
போராட்டத்தின் இறுதியில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ பேசியதாவது:-

தற்போது, போர் முனையில் விடுதலைப்புலிகளுக்கு பின்னடைவு ஏற்பட்டதாக சிங்கள அரசு தரப்பில் செய்திகள் வருகின்றன. இலங்கை அதிபர் ராஜபக்சே, இந்தியா வழங்கும் ஆயுதத்தை கொண்டு மக்களை கொன்று குவித்து தமிழர் வாழும் பகுதிகளை கைப்பற்றிவிட்டதாக கூறுகிறார். அவர் ஒரு உண்மையை புரிய தவறிவிட்டார். போர் முனையில் பெற்ற வெற்றி நிலையானது அல்ல. அதை தக்கவைத்து கொள்ள போவதும் கிடையாது.
இங்கிருந்து அனுப்பப்படும் நிவாரண பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களை போய் சேரப்போவதில்லை. 90 சதவீதத்திற்கு மேல் சிங்கள ராணுவத்திற்கும், சிங்கள மக்களுக்கும் போய் சேரப்போகிறது. அங்கு நடைபெறும் குண்டு வீச்சுக்கு இந்தியாவே பொறுப்பேற்க வேண்டும்.

இலங்கையில் தமிழ் ஈழம் மலர்ந்தால், அது தென் தமிழகத்திற்கு பாதுகாப்பாகத்தான் இருக்கும். என்றைக்கும் இந்திய மக்களை நேசிக்கிறோம் என்ற நிலையில் தான் விடுதலைப்புலிகள் உள்ளனர். நாங்கள் கூட தனித்தமிழ் ஈழம் தான் நிரந்தர தீர்வு என்று திருச்சியில் நடந்த மாநாட்டில் கூறினோம். போரில் விடுதலைப்புலிகளை ஒருபோதும் வெல்ல முடியாது.
இவ்வாறு வைகோ பேசினார்.
உண்ணாவிரதத்தில் இந்திய கம்னிஸ்டு கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு, புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, நடிகர்கள் மணிவண்ணன், சுந்தர்ராஜன், கவிஞர் காசி ஆனந்தன், சினிமா தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, ஓவியர் வீரசந்தானம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments: