Saturday, November 15, 2008

உலக நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் புஷ் விருந்து


வாஷிங்டன், நவ.16-
ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள உலக நாடுகளின் தலைவர்களுக்கு அதிபர் புஷ் விருந்து அளித்தார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த விருந்தில் புஷ் மனைவி லாராவும் கலந்து கொண்டார்.

சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் பல்வேறு நாடுகளும் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே, நிதி சிக்கலை தீர்க்கும் வழி முறைகள் குறித்து விவாதிப்பதற்காக ஜி-20 நாடுகளின் மாநாட்டை அதிபர் புஷ் கூட்டி இருக்கிறார். இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங் உட்பட பல்வேறு உலக நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இதற்காக வாஷிங்டன் வந்துள்ள அவர்களுக்கு வெள்ளை மாளிகையில் அதிபர் புஷ் விருந்து அளித்தார். வெள்ளை மாளிகையில் உள்ள டைனிங் ஹாலில் நேற்று முன்தினம் இரவில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. அப்போது புஷ் மனைவி லாரா புஷ்சும் விருந்தில் கலந்து கொண்டார். பிரதமர் மன்மோகன் சிங், திட்ட கமிஷன் துணை தலைவர் அலுவாலியா ஆகியோரும் பங்கேற்றனர்.

விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்ற தலைவர்கள் மத்தியில் பேசிய அதிபர் புஷ், `சர்வதேச பொருளாதார நிதி நெருக்கடி என்னும் பிரச்சினை ஒரு நாள் இரவில் உருவானது அல்ல. அதை ஒரே நாளில் தீர்க்க முடியாது. உலக நாடுகளின் தொடர்ச்சியான ஒத்துழைப்பின் மூலமாகவே இந்த சிக்கலுக்கு முடிவு காண முடியும்' என்றார்.
விருந்துக்கு பிறகு வெள்ளை மாளிகை சார்பாக அறிக்கை வெளியிடப்பட்டது. அதில், `ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ளும் தலைவர்களுடன் நடந்த சந்திப்பு நல்லதொரு ஆக்கப்பூர்வமான சந்திப்பாக அமைந்தது' என்று குறிப்பிடப்பட்டது.
ஒபாமா பங்கேற்க மாட்டார்
இந்தியா சார்பாக பிரதமருடன் கலந்து கொண்ட திட்டக்கமிஷன் துணைத்தலைவர் அலுவாலியா, "இந்த மாநாட்டில் ஏழை நாடுகளின் குரலை இந்தியா ஒலிக்கும். இந்த நாடுகளுக்கான பொருளாதார சலுகைகளை ஜி-20 நாடுகள் ஒப்புக்கொள்ளும் என்று இந்தியா நம்புகிறது'' என்றார்.
இதற்கிடையே புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கும் ஒபாமா, ஜி-20 மாநாட்டில் கலந்து கொள்ள மாட்டார் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த மாநாட்டில் பங்கேற்றால், அதிபர் புஷ்சின் கொள்கைகளை ஆதரித்தது போல அமைந்து விடும் என்று அவர் கருதுகிறார். மேலும் முற்றிலும் புதிய ஆட்சியை நடத்த விரும்பும் ஒபாமா, அந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவுகளை ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டு விடுமோ என்றும் எண்ணுகிறார்.

No comments: