Tuesday, November 18, 2008

சிங்கள கடற்படையினர் நடுக்கடலில் 22 தமிழக மீனவர்கள் சிறைபிடிப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் அருகே நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த 22 மீனவர்களை இலங்கை கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறைபிடித்து சென்று விட்டனர். அவர்கள் இலங்கை காங்கேசன்துறை துறைமுகத்தில் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
புதுக்கோட்டை நவ.19-
இலங்கை கடற்படையினர் விடுதலைப்புலிகளை பிடிப்பதாக கூறிக்கொண்டு அப்பாவி தமிழக மீனவர்கள் மீது அடிக்கடி தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சிங்கள கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதில் தமிழக மீனவர்கள் பலர் தங்கள் உயிரை இழந்துள்ளனர். சில நேரங்களில் தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை துப்பாக்கிமுனையில் கடத்திச்செல்வதும் உண்டு.
தமிழக மீனவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்திக்கொள்ளும்படி மத்திய அரசு பலமுறை கேட்டுக்கொண்டும் இலங்கை கடற்படையினர் தங்கள் தாக்குதலை நிறுத்துவதாக தெரியவில்லை. இப்போது அவர்கள் மீண்டும் கைவரிசை காட்டி உள்ளனர்.இது பற்றிய விவரம் வருமாறு-


புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம் மீன்பிடி துறைமுகத்தை சேர்ந்த மீனவர்கள் 1000 பேர் 252 விசைப்படகுகளில் நேற்று முன்தினம் காலை கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இந்த பகுதியில் இப்போது மீன் பிடி சீசன் நடந்து வருகிறது. அதனால் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்து மீனவர்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் முகாமிட்டு மீன் பிடித்து வருகிறார்கள்.
அவர்கள் வழக்கமாக படகுகளில் மொத்தமாக கடலுக்குள் சென்று மீன் பிடித்து விட்டு அடுத்த நாள் கரைக்கு திரும்புவது வழக்கம். அதன்படி ஆயிரம் மீனவர்கள் நேற்று முன்தினம் மீன் பிடிக்க கடலுக்குள் சென்றிருந்தனர்.
அவர்கள் தனித்தனி குழுக்களாக நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அன்று இரவு சிங்கள கடற்படையினர் ராணுவ படகுகளில் திடீரென்று அங்கு வேகமாக வந்தனர். அவர்கள் தமிழக மீனவர்களின் 5 படகுகளை சுற்றிவளைத்தனர். எங்கள் கடல் எல்லைக்குள் வந்து எப்படி மீன்பிடிக்கலாம் உங்களை சுட்டுக்கொன்று விடுவோம் என்று துப்பாக்கியைக்காட்டி மிரட்டினார்கள்.
பின்னர் அந்த 5 படகுகளிலும் இருந்த 22 மீனவர்களை கைது செய்வதாக கூறி படகுகளுடன் பிடித்துச்சென்று விட்டனர்.
அவர்கள் அனைவரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுக போலீஸ் நிலையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.

இலங்கை கடற்படையினர் பிடித்துச்சென்றது போக மீதமுள்ள 247 படகுகளும் நேற்று ஜெகதாப்பட்டினம் திரும்பின. அதில் வந்த மீனவர்கள் நடந்த சம்பவம் பற்றி புதுக்கோட்டை மாவட்ட விசைப்படகு மீனவர் சங்கத்தினரிடம் புகார் கூறினார்கள்.
உடனே அவர்கள் மீன்வளத்துறை அமைச்சர் சாமி, புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் ரீட்டா ஹரிஷ்தாக்கர் மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகள் ஆகியோருக்கு தந்தி கொடுத்தனர். இலங்கை கடற்படையினர் பிடித்து சென்ற மீனவர்களை மீட்டுத்தருமாறு தந்தியில் கூறப்பட்டுள்ளது. மேலும் இதுபற்றி ஜெகதாபட்டினம் போலீசில் மீனவர் சங்கத்தினர் புகார் தெரிவித்துள்ளனர். சிறைபிடிக்கப்பட்ட மீனவர்கள் ஜெகதாப்பட்டினம் மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.

மீனவர்களை இலங்கை கடற்படையினர் பிடித்து சென்றது பற்றி கரைக்கு திரும்பி வந்த மீனவர்கள் கூறியதாவது:-
22 மீனவர்களும் ஜெகதாபட்டினம் கடலில் இந்திய எல்லை பகுதியில் படகை நிறுத்தி மீன்பிடித்து கொண்டிருந்தனர். ஆனால் இலங்கை கடற்படையினர், அவர்களை அத்துமீறி இலங்கை கடற்பகுதியில் ழைந்து மீன் பிடித்ததாக கூறி பிடித்து சென்று விட்டனர். நாங்கள் எல்லை தாண்டி மீன்பிடிக்க போவதில்லை. இந்திய கடற்பகுதியில் தான் மீன்பிடித்து கொண்டு வருகிறோம். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக பொய் புகார் கூறி தமிழக மீனவர்களை பிடித்து செல்கிறார்கள். பிடித்து செல்லப்பட்ட மீனவர்கள் தற்போது இலங்கையில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது பற்றி அதிகாரிகளிடம் கூறியுள்ளோம். அவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
இலங்கை கடற்படையினர் பிடித்து சென்று விட்டதால் புதுக்கோட்டை மாவட்டத்தில் மீனவர் கிராமங்கள் சோகத்தில் மூழ்கி உள்ளன. சிறைபிடிக்கப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினர், கதறி அழுத வண்ணம் உள்ளனர். எனவே தமிழக அரசு உடனடி நடவடிக்கை எடுத்து அவர்கள் 22 பேரையும் மீட்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments: