Tuesday, November 18, 2008

பாதுகாப்பை பலப்படுத்த கடலோர காவல் படைக்கு 20 அதிநவீன ரோந்து கப்பல்கள்


சென்னை, நவ.19-
பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, இந்திய கடலோர காவல் படைக்கு 20 அதிநவீன ரோந்து கப்பல்கள் வாங்கப்படுவதாக, அதன் தலைமை அதிகாரி வைஸ் அட்மிரல் கான்டிராக்டர் கூறினார்.

இந்திய கடலோர காவல் படைக்கு சென்னை, அந்தமான், மும்பை ஆகிய 3 பிராந்தியங்கள் உள்ளன. கடலோர காவல் படையின் டைரக்டர் ஜெனரலாக, வைஸ் அட்மிரல் ஆர்.எப். கான்டிராக்டர் உள்ளார். இவர் வரும் 30-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். அதனையொட்டி, நேற்று சென்னை வந்த அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.
இதற்காக, இந்திய கடற்படைக்கு சொந்தமான 8 ரோந்து கப்பல்களில், கடலோர காவல் படையினர் கடலுக்குள் சென்றனர். நடுக்கடலில் 8 கப்பல்களும் ஒன்றன்பின் ஒன்றாக அணி வகுத்து சென்றன. அதில் ஒரு கப்பலுக்கு, ஹெலிகாப்டர் மூலமாக டைரக்டர் ஜெனரல் கான்டிராக்டர் அழைத்து வரப்பட்டார். பின்னர், கப்பல் மேல் தளத்தில் அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அவருடன் கடலோர காவல் படை உயர் அதிகாரிகள் இருந்தனர்.
கப்பல் மேல் தளத்தில் நின்ற டைரக்டர் ஜெனரல் கான்டிராக்டருக்கு, மற்ற கப்பல்களில் வந்த கடலோர காவல் படை வீரர்கள் தொப்பியை கழற்றி வணக்கம் தெரிவித்தனர். முன்னதாக, கடலோர காவல் படையின் சாகச நிகழ்ச்சிகள் நடுக்கடலில் நடத்தப்பட்டன. அப்போது, கடலில் விழுந்தவர்களை மீட்பது, எதிரிகள் கப்பல் மீது குண்டு போடுவது, கப்பலில் தீவிபத்து ஏற்பட்டால் அணைப்பது போன்ற சாகச நிகழ்ச்சிகளை வீரர்கள் செய்து காண்பித்தனர்.
பின்னர், கடலோர காவல் படையின் டைரக்டர் ஜெனரல் ஆர்.எப். கான்டிராக்டர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பதினோராவது ஐந்தாண்டு திட்டத்தில் கடலோர காவல் படை நவீனப்படுத்தப்படுகிறது. விரைவில் அதிநவீன 20 புதிய ரோந்து கப்பல்கள் வாங்கப்பட உள்ளன. மேலும், கடலோர காவல் படைக்கு கூடுதல் ஆட்கள் நியமிக்கப்பட உள்ளனர். இன்னும் 2 ஆண்டுகளில் பலம்வாய்ந்த கடலோர காவல் படையாக உருவாக்கப்படும்.
தற்போது, சோமாலியா நாட்டு கடல் பகுதியில் கடல் கொள்ளை அதிகம் நடைபெறுகிறது. கடல் கொள்ளையை தடுக்க கடலோர காவல் படையை நவீனப்படுத்துவது அவசியம் ஆகிறது. இதற்காக, அதிவேக ரோந்து கப்பல்கள், ஜெட் விமானங்கள் வாங்கப்பட உள்ளன.

இந்த ஆண்டு இறுதிக்குள் கடலோர காவல் படையில், `சாம்ராட்' என்ற அதிநவீன ரோந்து கப்பல் இணைக்கப்படும். 2009-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாசு கட்டுப்படுத்தும் கப்பலும் இணைக்கப்படும்.
ஆசிய பிராந்தியத்தில் கடல் கொள்ளையை தடுக்க 14 நாடுகள் இணைந்து கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதில், இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்.
இவ்வாறு ஆர்.எப்.கான்டிராக்டர் கூறினார்.
பேட்டியின்போது, இந்திய கடலோர காவல் படை கிழக்கு பிராந்திய ஐ.ஜி. பஸ்ரா உடன் இருந்தார்.

No comments: