Friday, November 21, 2008

இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் 2 நாளில் விடுதலை கருணாநிதியிடம் மத்திய மந்திரி உறுதி

"இலங்கை கடற்படையால் சிறை பிடிக்கப்பட்ட 22 தமிழக மீனவர்கள் ஓரிரு நாட்களில் விடுதலை ஆவார்கள். அதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது'' என்று முதல் - அமைச்சர் கருணாநிதியிடம் மத்திய இணை மந்திரி அகமது தெரிவித்தார்.
சென்னை, நவ.22-
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் சுமார் 1,000 பேர் கடந்த 17-ந் தேதி 250-க்கும் மேற்பட்ட இயந்திர படகுகளில் நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அப்போது இலங்கை கடற்படையினர் அங்கு வந்து 5 படகுகளை சுற்றி வளைத்தனர். இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி புகுந்து மீன் பிடித்ததாக கூறி அந்த படகுகளில் இருந்த 22 மீனவர்களை துப்பாக்கி முனையில் சிறைபிடித்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களுடைய படகுகளையும் யாழ்ப்பாணத்தில் உள்ள காங்கேசன்துறை துறைமுகத்துக்கு கொண்டு சென்று அங்கு காவலில் வைத்துள்ளனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி மத்திய அரசுடன் உடனடியாக தொடர்பு கொண்டு தமிழக மீனவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்கும்படி வலியுறுத்தினார்.
இதையடுத்து மத்திய அரசு தமிழக மீனவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என்று தெரிய வந்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினம் அருகே நடுக்கடலில் மீன் பிடித்துக்கொண்டிருந்த 22 மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கி முனையில் சிறை பிடித்துச் சென்றது குறித்து உடனடியாக அவர்களை மீட்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட முதல்-அமைச்சர் கருணாநிதி, மத்திய வெளியுறவுத் துறை இணை மந்திரி அகமதுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
அப்போது தமிழக மீனவர்களை மீட்பது குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கையிலே ஈடுபட வேண்டுமென்று வலியுறுத்தி இருந்தார்.

அதன் தொடர்ச்சியாக நேற்று காலையில் மத்திய இணை மந்திரி அகமதுவை, முதல்-அமைச்சர் கருணாநிதி தொடர்பு கொண்டு பேசினார். அப்போது, நமது மீனவர்கள் இலங்கை கடலில் ஒரு கிலோ மீட்டர் தொலைவு வரையிலே சென்று மீன் பிடித்ததால், இலங்கை ராணுவத்திற்கு சந்தேகம் ஏற்பட்டு அவர்களைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்திருப்பதாகவும், ஓரிரு நாட்களில் அவர்களை விடுதலை செய்வதற்கான ஏற்பாடுகளில் இலங்கையில் உள்ள இந்திய தூதுவர் தொடர்ந்து ஈடுபட்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments: