Sunday, November 30, 2008

இந்தியா-பாகிஸ்தான் போர் மூளுமா?




இஸ்லாமாபாத், டிச.1-
மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய யுத்தத்தின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய எல்லைப் பகுதியில் ஒரு லட்சம் ராணுவ வீரர்களை பாகிஸ்தான் குவித்து வருகிறது.
மும்பையில் உள்ள முக்கிய ஓட்டல்கள் உள்பட 11 இடங்களில் கடந்த புதன்கிழமை அன்று தீவிரவாதிகள் நேரடி யுத்தத்தில் ஈடுபட்டனர். கடல் வழியாக இந்தியாவுக்குள் ழைந்து ராணுவத்துடன் நேருக்கு நேர் மோதிய 11 தீவிரவாதிகளில் 10 பேர், 60 மணி நேர சண்டைக்கு பிறகு சுட்டு வீழ்த்தப்பட்டனர்.
உயிருடன் பிடிபட்ட அஜ்மல் என்ற தீவிரவாதியை விசாரித்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன. மும்பைக்குள் வந்த தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா இயக்கத்தை சேர்ந்தவர்கள் என்பதும், அவர்களை இந்தியாவுக்குள் அனுப்பி வைத்ததில் பாகிஸ்தான் உளவுத் துறையான ஐ.எஸ்.ஐ.க்கு முக்கிய பங்கு உள்ளது என்பதும் தெரிய வந்தது.

இது தவிர பாகிஸ்தான் கடற்படை மற்றும் கராச்சியில் பதுங்கி இருக்கும் தாவூத் இப்ராகிம் ஆகியோரும் ஏராளமான உதவிகள் செய்துள்ளனர். இதையடுத்து பாகிஸ்தான் மீது இந்தியா கடும் கோபத்தில் உள்ளது. பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்தை தொடர்பு கொண்டு பேசிய மத்திய வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜியும் கடுமையான வார்த்தைகளால் அந்த நாட்டை எச்சரித்தார்.
இதனால், உளவுத்துறை தலைவர் சுஜா பாட்ஷாவை இந்தியாவுக்கு அனுப்புவதாக முதலில் தெரிவித்த பாகிஸ்தான் பின்னர் அவரை அனுப்ப மறுத்து விட்டது. மும்பை சம்பவம் காரணமாக இந்தியா போர் தொடுக்குமோ என்ற அச்சத்தில் பாகிஸ்தான் உள்ளது.
எனவே பாகிஸ்தான் அதிபர் சர்தாரி, பிரதமர் கிலானி ராணுவ தளபதி பர்வேஸ் கயானி ஆகியோர் நேற்று முன்தினம் மட்டும் சில மணி நேர இடைவெளியில் இரண்டு முறை ஆலோசனை நடத்தினர். அப்போது, ராணுவ தளபதி கயானி, `எந்தவொரு சவாலையும் சமாளிக்க பாகிஸ்தான் ராணுவம் தயாராக இருக்கிறது. இந்தியா படையெடுத்தால் அதை எதிர்கொள்ளும் சக்தியுடன் பாகிஸ்தான் ராணுவம் உள்ளது' என்று தெரிவித்தார்.
இதன் தொடர்ச்சியாக அந்த நாட்டின் அனைத்து அரசியல் கட்சி தலைவர்களையும் அதிபர் சர்தாரி தொடர்பு கொண்டு பேசினார். மேலும், ஹாங்காங் நாட்டுக்கு நான்கு நாள் பயணமாக செல்ல இருந்த பிரதமர் கிலானியும் தனது பயணத்தை ரத்து செய்து விட்டார். நாட்டின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அதே நேரத்தில் இந்திய எல்லையில் அதிக அளவில் ராணுவத்தை குவிக்கவும் பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. இது குறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறுகையில், "நிலைமை எப்படி செல்கிறது என்பதை தீர்மானிப்பதில் அடுத்த இரண்டு நாட்களும் மிகவும் முக்கியமானவை. இந்தியா படைகளை குவித்தால், வடமேற்கு பகுதியில் ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள அனைத்து படைகளையும் பாகிஸ்தான் திரும்ப பெற்று இந்திய எல்லையில் நிறுத்தும்'' என்றார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து தலீபான் தீவிரவாதிகள் ஊடுருவாமல் இருப்பதற்காக சுமார் ஒரு லட்சம் படை வீரர்களை வடமேற்கு எல்லையில் பாகிஸ்தான் நிறுத்தி இருக்கிறது. அவர்கள் அனைவரையும் இந்திய எல்லைக்கு கொண்டு வர பாகிஸ்தான் திட்டமிட்டு இருக்கிறது.

எல்லையில் பதட்டம் ஏற்படும்போது தீவிரவாதிகளை ஒழிப்பதற்கு முன்னுரிமை அழிக்க முடியாது என்றும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் கூறி வருகின்றனர். எல்லைப் பகுதியில் போர் நிறுத்தம் செய்து கொள்ள கடந்த 2003-ம் ஆண்டில் இந்தியா-பாகிஸ்தான் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
தற்போது பாகிஸ்தான் தரப்பில் இருந்து ராணுவத்தை குவிக்கத் தொடங்கி இருப்பதால், பதிலுக்கு இந்தியாவும் எல்லை பகுதியில் கூடுதல் ராணுவத்தை அனுப்பி வைக்கும் என்று தெரிகிறது. இதனால் போர் நிறுத்த ஒப்பந்தம் முடிவுக்கு வந்து போர் ஆரம்பிக்க கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

No comments: