Friday, November 21, 2008

தமிழக அரசு அனுப்பிய பொருட்கள் வன்னி பகுதியை அடைந்தன செஞ்சிலுவை சங்கம் மூலம் விநியோகம்


கொழும்பு, நவ.22-
இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்த உணவு மற்றும் மருந்துப் பொருட்கள், வன்னி பகுதியை அடைந்தன.

இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான போரில் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த 2 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நிவாரண நிதி மற்றும் நிவாரண பொருட்களை திரட்டி அனுப்புவது என்று முதல்-அமைச்சர் கருணாநிதியும், மத்திய வெளியுறவுத்துறை மந்திரி பிரணாப் முகர்ஜியும் நடத்திய ஆலோசனையின்போது முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தமிழக அரசு இதுவரை திரட்டி உள்ள நிவாரண நிதி ரூ.25 கோடியை தாண்டி உள்ளது.
அதுபோல், இலங்கை தமிழர்களுக்காக உணவு, மருந்து பொருட்கள், ஆடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களையும் தமிழக அரசு அனுப்பி வைத்துள்ளது. மொத்தம் 1,600 டன் எடையுள்ள பொருட்கள், கப்பல் மூலம் சென்னையில் இருந்து கொழும்பு நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டன. அங்கு இலங்கை சுங்கத்துறையின் பரிசோதனைக்கு பிறகு, இந்திய தூதரிடம் நிவாரண பொருட்கள் ஒப்படைக்கப்பட்டன.


இந்நிலையில், இந்த நிவாரண பொருட்களை பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வினியோகிக்கும் பணி தொடங்கி உள்ளது. நிவாரண பொருட்கள் 56 லாரிகளில் ஏற்றப்பட்டு வன்னி பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வன்னி பகுதியின் ழைவாயிலான ஓமந்தையில் உள்ள சோதனைச்சாவடியில் இலங்கை ராணுவத்தினர், இந்த நிவாரண பொருட்களை சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதித்தனர்.
தமிழக அரசு அனுப்பி வைத்த நிவாரண பொருட்கள் மட்டுமின்றி, உலக உணவு திட்டத்தின்கீழ் 44 வாகனங்களில் 430 மெட்ரிக் டன் உணவு பொருட்களும் நேற்று வன்னி பகுதியை சென்றடைந்தன. 12 இலங்கை அரசு ஏஜெண்டுகளின் வாகனங்களில் 125 மெட்ரிக் டன் உணவு பொருட்களும் வன்னியை சென்றடைந்தன. இந்த நிவாரண பொருட்களுடன் செஞ்சிலுவை சங்க அதிகாரிகளும் உடன் சென்றனர்.
பூநகரி கைப்பற்றப்பட்டதை தொடர்ந்து, வன்னி பகுதிக்கு சாலை வழியாக நிவாரண பொருட்கள் கொண்டு செல்லப்படுவது இதுவே முதல்முறை ஆகும்.

அதே சமயத்தில், வன்னி பகுதிக்குள் ழைய விடாமல் 200-க்கும் மேற்பட்ட தமிழர்களை ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் மண்டல கல்வி இயக்குனர்கள், கிளிநொச்சி பிராந்திய சுகாதார இயக்குனர், 15 பள்ளி முதல்வர்கள், முல்லைத்தீவில் உள்ள மக்கள் வங்கி மேலாளர் உள்ளிட்டோரை ஓமந்தை சோதனைச்சாவடியில் ராணுவத்தினர் தடுத்து நிறுத்தினர். அவர்களை வன்னி பகுதிக்குள் ழைய அனுமதிக்கவில்லை. மேலும், வவுனியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை முடிந்து 4 ஆம்புலன்ஸ்களில் வன்னி பகுதி நோக்கி சென்று கொண்டிருந்த 50 நோயாளிகளையும் ராணுவத்தினர் அனுமதிக்கவில்லை.
அனுமதி மறுப்புக்கான காரணத்தை தமிழ் அதிகாரிகள் கேட்டனர். அதற்கு ராணுவத்தினர், `பொதுமக்கள் இன்று (நேற்று) வன்னிக்கு செல்ல அனுமதி கிடையாது` என்று கூறினர்.
இதற்கிடையே, யாழ்ப்பாணம்-கண்டி தேசிய நெடுஞ்சாலை அருகே நடைபெற்ற சண்டையில் 52 விடுதலைப்புலிகள் பலியானதாக இலங்கை ராணுவம் தெரிவித்துள்ளது. விடுதலைப்புலிகளின் முன்னணி பாதுகாப்பு அரண்கள் தகர்க்கப்பட்டன. கிளிநொச்சி அருகே விடுதலைப்புலிகளின் விமான தளத்தையும் கைப்பற்றியதாக ராணுவம் கூறியுள்ளது.

No comments: