Monday, November 24, 2008

சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் தேவையற்றது ; தே.மு.தி.க. கலந்துகொள்ளாது: விஜயகாந்த்


சென்னை, நவ.25-
போர் நிறுத்தம் செய்ய மனிதாபிமான முறையில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், தமிழக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் தேவையற்றது என்றும் விஜயகாந்த் கூறியுள்ளார்.
இதுகுறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

25-11-2008 செவ்வாய்கிழமை (இன்று) இலங்கை தமிழர் பிரச்சினையை ஒட்டி சட்டமன்ற எதிர்கட்சி தலைவர்களின் கூட்டத்தை, முதல்-அமைச்சர் கருணாநிதி கூட்டி உள்ளதாகவும், அதனையொட்டி டெல்லி சென்று பிரதமர் மன்மோகன்சிங்கை சந்திக்க உள்ளதாகவும் அறிகிறேன்.
தே.மு.தி.க.வை பொறுத்த வரையில் இலங்கை தமிழர் பிரச்சினை குறித்து இளைஞர் அணி மாநாட்டின் போதே எங்கள் நிலையை தெளிவுபடுத்தி உள்ளோம்.
இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு வழிவகை காண வேண்டும் என்றும், இலங்கைக்கு இந்திய அரசு ஆயுத உதவி மற்றும் இதர உதவிகள் செய்யுமானால், அதை உடனே நிறுத்த வேண்டும் என்றும், இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்த வரை ராணுவத் தீர்வு சாத்தியம் இல்லை என்றும், அரசியல் தீர்வு மட்டுமே காணப்பட வேண்டும் என்றும் எடுத்து விளக்கி உள்ளோம்.

எவ்வளவு விரைவாக இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு மனித உயிர்கள் காப்பாற்றப்படும். அவசர கோலத்தில் செயல்பட வேண்டிய மத்திய, மாநில அரசுகள் இதுவரை தங்கள் பொறுப்புகளை உணர்ந்ததாகத் தெரியவில்லை.
இந்த சூழ்நிலையில் தமிழ் மக்களை டெல்லிக்கு தந்தி கொடுக்க சொல்வதும், மனித சங்கிலி நடத்துவதும், அனைத்து கட்சி கூட்டங்களை கூட்டுவதும் இங்குள்ள தமிழ் மக்களை, திசை திருப்ப பயன்படுமே தவிர, இலங்கையில் பற்றி எரியும் தீயை அணைக்கப்பயன்படாது. அத்தகைய கூட்டங்களின் தொடர்ச்சியாகவே, டெல்லியில் பிரதமரை சந்திக்க சட்டமன்றத்தில் உள்ள கட்சி தலைவர்களை அழைத்து பேசுவதும் ஆகும்.

மனிதாபிமான முறையிலும், தமிழ் உணர்வின் அடிப்படையிலும் இலங்கை போர் நிறுத்தத்தை வலியுறுத்த இந்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாட்டின் முதல்-அமைச்சர் என்ற வகையில் கருணாநிதி நடவடிக்கை எடுத்தால் போதுமானது.
அதற்காக சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்களின் கூட்டத்தை கூட்டுவதும், டெல்லி சென்று பிரதமரை சந்திப்பதும் தேவையற்றது என்றே கருதுகிறேன். மேற்சொன்ன காரணங்களினால் தே.மு.தி.க. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ளாது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

No comments: