Wednesday, November 12, 2008

மன்மோகன்சிங்-ராஜபக்சே இன்று பேச்சு வார்த்தை

புதுடெல்லி, நவ.13-
இலங்கையில் அப்பாவித் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் மற்றும் மனித உரிமை மீறல் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவுடன் இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்த தகவலை மத்திய உள்துறை இணை மந்திரி ஷகீல் அகமது தெரிவித்தார். டெல்லியில் நேற்று இது தொடர்பாக அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-
இலங்கை தமிழர் பிரச்சினை
சார்க் மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை சென்றிருந்த பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை அதிபருடன் அப்பாவித் தமிழர்களின் பிரச்சினை மற்றும் இந்திய மீனவர்கள் மீதான தாக்குதல் குறித்து விரிவாக பேச்சு வார்த்தை நடத்தினார்.
இதனடிப்படையில் வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜியுடன், இலங்கை வெளியுறவு அமைச்சர் ரோஹித போகல்லகம்மா டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினார். தொடர்ந்து இலங்கை அதிபரின் ஆலோசகர் பாசில் ராஜபக்சே டெல்லி வந்து, பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்த போது, இலங்கைத் தமிழர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த மேற்கொண்டுள்ள நடவடிக்கையை விளக்கி கூறினார்.
இன்று பேச்சு வார்த்தை
இந்த நிலையில், `பீம்ஸ்டெக்' நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர், ராஜபக்சே நாளை (அதாவது இன்று) பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். இந்த பேச்சு வார்த்தை பிற்பகல் 2.45 மணிக்கு நடக்கிறது.
அப்போது இலங்கை இனப் பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்தும், இந்திய மீனவர்கள் பாதுகாப்பு உள்ளிட்ட பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தும் இரு தலைவர்களும் ஆலோசனை நடத்துவார்கள்.
இலங்கை அரசு உறுதி
குறிப்பாக, இலங்கை தமிழர்களுக்கு பாதுகாப்பு, அவர்களை மனிதாபிமான முறையில் நடத்தி, இந்தியா அனுப்பி வைத்துள்ள நிவாரண உதவிகள் தங்குதடையின்றி விநியோகிப்பது குறித்து இலங்கை அதிபர் பிரதமர் மன்மோகன்சிங்கிடம் விளக்குவார் என்று எதிர் பார்க்கப்படுகிறது. இது குறித்து இலங்கை அரசு ஏற்கனவே உறுதியளித்துள்ளது. இலங்கை தமிழர்களின் பாதுகாப்பு நிலைமை குறித்து இந்தியா கவலை கொண்டுள்ளதால் இது தொடர்பாக இரு நாடுகளின் உயர்மட்ட அளவில் ஆலோசித்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு ஷகீல் அகமது தெரிவித்தார்.
புதிய திருப்பம்
இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை நடத்தும் தாக்குதல் சம்பவங்களின் பின்னணி குறித்து ராஜபக்சே, பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விளக்குவார் என்று இலங்கை தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.
இலங்கை தமிழர் பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர தமிழக அரசியல் கட்சிகள் குரல் கொடுத்து வரும் நிலையில், இந்திய பிரதமருடன் இலங்கை அதிபர் நடத்தும் பேச்சு வார்த்தை இனப்பிரச்சினை விவகாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: