Monday, November 24, 2008

விசா கிடைத்தது: வைகோ லண்டன் புறப்பட்டு சென்றார்


சென்னை, நவ.25-
விசா கிடைத்ததை அடுத்து, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

லண்டனில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய கூட்டத்துக்கு இங்கிலாந்து எம்.பி.க்கள் சிலர் ஏற்பாடு செய்துள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்று பேச ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு அவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். இதற்காக, தனக்கு விசா வழங்க கோரி, இங்கிலாந்து தூதரகத்திடம் வைகோ விண்ணப்பித்து இருந்தார்.
ஆனால் அவருக்கு இங்கிலாந்து தூதரகம் விசா வழங்க மறுத்து விட்டதாக கூறப்பட்டது. இதனால் வைகோ, தனது விமான டிக்கெட்டை ரத்து செய்து விட்டதாகவும் தகவல் வெளியானது.

இந்நிலையில், வைகோ நேற்று காலை மதுரையில் இருந்து சென்னை வந்தார். நேற்று இரவு 8.45 மணிக்கு அவர் விமானம் மூலம் லண்டன் புறப்பட்டுச் சென்றார்.
முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நார்வே நாட்டில் இலங்கை தமிழர் பிரச்சினை பற்றிய கூட்டத்தில் பங்கேற்க நான் திட்டமிட்டு இருந்தபோது, இங்குள்ள சிலர் எனக்கு விசா கிடைக்க விடாமல் செய்தனர். ஆனால் நார்வே தூதரக அதிகாரிகள் பெருமுயற்சி எடுத்து எனக்கு விசா கிடைக்கச் செய்தனர்.

அதுபோல், இப்போது நான் லண்டன் செல்வதை விரும்பாத சிலருடன் இலங்கை தூதரக அதிகாரிகளும் சேர்ந்து கொண்டு எனக்கு விசா கிடைக்கவிடாமல் தடுக்க முயன்றனர். ஆனால் எனது நலம் விரும்பிகள் சிலரது முயற்சியால் எனக்கு விசா கிடைத்துள்ளது.
நான் மும்பை போய், அங்கிருந்து வேறு விமானம் மூலம் லண்டன் செல்கிறேன். கடைசி நேரத்தில் கூட விசாவை ரத்து செய்ய சிலர் முயற்சி செய்யக்கூடும் என்பதால்தான் இதுபற்றி நான் யாரிடமும் தகவல் சொல்லாமல் இருந்தேன்.
லண்டன் கூட்டத்தில் பேசி விட்டு 30-ந் தேதி சென்னை திரும்புகிறேன்.
இவ்வாறு வைகோ கூறினார்.

No comments: