Thursday, November 13, 2008

`போர் நிறுத்தம் செய்ய இந்தியா தலையிட வேண்டும்' இலங்கை தமிழ் எம்.பி.க்கள் வலியுறுத்தல்




புதுடெல்லி, நவ.14-
இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய, இந்தியா உடனடியாக தலையிட வேண்டும் என்று இலங்கை தமிழ் எம்.பி.க்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இலங்கையில் லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் பாதிக்கப்பட்டு இருப்பதால் போர் நிறுத்தம் அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது. ஆனால், நேற்று டெல்லி வந்த அதிபர் ராஜபக்சே, போர் நிறுத்தம் செய்ய முடியாது என்றும் விடுதலைப்புலிகளை முற்றிலுமாக அழிக்கப் போவதாகவும் அறிவித்தார்.
இதற்கிடையே இந்திய தலைவர்களை சந்திப்பதற்காக தமிழர் தேசிய கூட்டமைப்பு கட்சியை சேர்ந்த தமிழ் எம்.பி.க்களான சிவாஜி லிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் டெல்லி வந்துள்ளனர். அவர்கள் நேற்று டெல்லியில் பேட்டி அளித்தனர்.

அப்போது சிவாஜி லிங்கம் கூறியதாவது:-
ஆயுதங்களை விடுதலைப்புலிகள் கைவிட்டால்தான் அமைதிப் பேச்சுக்கு ஒத்துழைப்போம் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுவது, பிரச்சினையை திசை திருப்பும் நாடகம் ஆகும். இதற்கு முன்பு இருந்த அதிபர்களைப் போலவே இரட்டை வேடம் போடுகிறார். தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா உடனே தலையிட வேண்டும்.
இலங்கையில் போர் நிறுத்தத்தை அறிவிக்காமல் ராணுவ அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்படுவதால் அப்பாவி தமிழர்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இனப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாவிட்டால் இலங்கையில் உள்ள தமிழ் எம்.பி.க்கள் அனைவரும் ராஜினாமா செய்வார்கள். இது குறித்து கொழும்பு சென்றதும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்வோம்.

இவ்வாறு சிவாஜி லிங்கம் தெரிவித்தார்.
மற்றொரு எம்.பி.யான ஸ்ரீகாந்தா கூறியதாவது:-
இலங்கையில் சிங்கள மக்களுக்கு இணையாக தமிழர்களுக்கு சம உரிமை வழங்க வேண்டும் என்பதே எங்களுடைய கோரிக்கை. தமிழ் மக்களின் அடிப்படை விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையிலான தீர்வை ஏற்க தயாராக இருக்கிறோம். அரசியல் சட்ட ரீதியாக அடிப்படை உரிமைகள் வழங்கப்பட்டால், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனும் அரசியல் பாதையில் இணைவார்.
அரசியல் தீர்வு காண்பதற்கு ராஜபக்சே உண்மையிலே விரும்பினால், போர் நிறுத்தம் செய்ய ஏன் மறுக்க வேண்டும்? விடுதலைப்புலிகளை இலங்கை ராணுவத்தால் அழிக்க முடியாது. வன்னி பகுதியில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்துக்கும் இடையே நடைபெறும் சண்டையால் ஏராளமான தமிழர்கள் உயிரிழந்து வருகின்றனர். எனவே, இந்திய அரசு உடனடியாக தலையிட்டு போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு ஸ்ரீகாந்தா தெரிவித்தார்.

No comments: