Monday, November 10, 2008

போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசுக்கு, மத்திய அரசு உணர்த்த வேண்டியது அவசியம் கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை, நவ.11-
"போர் நிறுத்தம் செய்யும்படி இலங்கை அரசுக்கு மத்திய அரசு உணர்த்த வேண்டியது அவசர அவசிய தேவையாகும்'' என்று முதல்-அமைச்சர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
பேச்சுவார்த்தை மூலம் தீர்வு
இலங்கையில் போர் நிறுத்தம் என்பது இரு சாராரும் கடைபிடிக்க வேண்டிய ஒன்று என நான் குறிப்பிட்டிருந்தேன். தாங்கள் போர் நிறுத்தத்துக்குத் தயார் என்று விடுதலைப் புலிகளின் சார்பாக நடேசன், தற்போது அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையே "இந்திய அரசு நினைத்தால் ஒரே நாளில் இலங்கையில் நடக்கும் சண்டையை நிறுத்திவிடமுடியும்'' என்று டாக்டர் ராமதாஸ் கூறியிருக்கிறார். டாக்டர் அதை மட்டும் சொல்லவில்லை. "இலங்கை அரசும், விடுதலைப்புலிகளும் உட்கார்ந்து பேசி அரசியல் தீர்வு காண்பதற்கு இந்திய அரசு முயற்சிக்க வேண்டும்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மன்மோகன் சிங், 14-10-2008 அன்று செய்தியாளர்களிடம் வெளியிட்ட கருத்து; "இலங்கைப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது. சமரசப் பேச்சு வார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணவேண்டும்'' என்பதாகும்.
பிரணாப் முகர்ஜி
22-10-2008, நாடாளுமன்றத்தில் நமது வெளியுறவுத் துறை மந்திரி பிரணாப் முகர்ஜி, வைத்த அறிக்கையிலும் "இனப் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை தீர்வாகாது என்ற நமது ஆழ்ந்த நம்பிக்கையை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் அரசியல் தீர்வு காணவேண்டும். அது ஒன்றுபட்ட இலங்கையின் சட்டதிட்டத்தின்படி தமிழ்ச் சமுதாயம் உள்ளடக்கிய சிறுபான்மையினரின் வாழ்வுரிமையைப் பாதுகாக்கும் வகையில் இருக்க வேண்டும்'' என்று சொல்லியிருக்கிறார்.
இப்படியொரு பேச்சுவார்த்தை நடைபெறவும், அரசியல் தீர்வு காணவும் இலங்கையில் போர் புரிந்து கொண்டிருக்கின்ற இலங்கை ராணுவம் - விடுதலைப் புலிகள் இரு சாராருமே இணக்கம் தெரிவித்து - போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும். அதை வலியுறுத்தித்தான் அக்டோபர் 14-ந் தேதியன்று தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை அரசின் கடமை
அந்தத் தீர்மானம் படிப்படியாக நடைமுறைக்கு வரக்கூடும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக நமது பிரதமரின் கருத்தும், வெளியுறவுத் துறை அமைச்சரின் கருத்தும் அமைந்துள்ளன. இனி அந்த கருத்தை செயலாக்கத்துக்குக் கொண்டுவர வேண்டியது இலங்கை அரசுக்குரிய தவிர்க்க முடியாத பொறுப்பும் கடமையுமாகும். இதனை இந்திய அரசு இலங்கை அரசுக்கு உணர்த்தி செயல்பட செய்வது அவசர அவசியத் தேவையாகும்.
இவ்வாறு அதில் கருணாநிதி கூறியுள்ளார்.

No comments: