Monday, November 24, 2008

இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க சட்டமன்ற கட்சித் தலைவர்கள் கூட்டம் கருணாநிதி தலைமையில் இன்று நடக்கிறது


இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி விவாதிக்க சட்டமன்ற கட்சித்தலைவர் களின் கூட்டம் சென்னை கோட்டையில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் நடக்கிறது.
சென்னை, நவ.25-
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கடும் போர் நடந்து வருகிறது.
கிளிநொச்சியை பிடிக்கப்போகிறோம் என்று கூறிக்கொண்டு சிங்கள ராணுவம் அசுர தாக்குதல் நடத்துவதால் அப்பாவி தமிழர்கள் ஈவு இரக்கமில்லாமல் கொன்று குவிக்கப்படுகிறார்கள்.


இலங்கையில் போரை நிறுத்தி அப்பாவி தமிழர்களை காப்பாற்ற தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும் இலங்கை ராணுவம் போரை நிறுத்த மறுத்து தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
எனவே அடுத்த கட்டமாக என்ன செய்வது? என்ன நடவடிக்கை எடுப்பது?என்பது பற்றி விவாதித்து முடிவு எடுக்க சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி ஏற்பாடு செய்துள்ளார்.
இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் கருணாநிதி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தமிழர் பிரச்சினையில்- நாளுக்கு நாள்- இலங்கையில் வாழும் தமிழர்கள் உயிர், உடைமைகளை இழந்து வாழ்வதற்கே பயந்து பாதிக்கப்படும் நிலையில் மேலும், மேலும் நம் சிந்தை கலக்கும் செய்திகள் வந்து கொண்டிருப்பதால் அது பற்றி நமது மத்திய அரசுடன் தொடர்பு கொள்ளவும், சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்களின் கூட்டம் 25.11.2008 செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு, தலைமைச் செயலகத்தில் எனது அறையில் நடைபெறவிருக்கிறது.
கட்சியின் தலைவர், பொது செயலாளர், மாநில செயலாளர் என்ற முறையில் ஒருவரும், சட்டமன்ற கட்சி தலைவர் ஒருவருமாக இரண்டு பேர் கலந்து கொண்டு தக்க ஆலோசனைகளை கூற வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று அவர்களுக்கு நான் கடிதம் எழுதியிருக்கிறேன்.


இந்த கூட்டம் செவ்வாய்க்கிழமை (இன்று) நடைபெறுகிறது. இந்த அவசர கூட்டம், பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், நானும் கலந்து பேசி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் சட்டமன்ற கட்சி தலைவராகவும், கட்சி தலைவராகவும் கோ.க.மணி இருந்தபோதிலும், நிறுவனர் தலைவர் என்ற முறையில் டாக்டர் ராமதாஸ் கலந்து கொள்வார்.
அதைப் போலவே ம.தி.மு.க. என்றால் சட்டமன்ற கட்சித் தலைவராக மு.கண்ணப்பன் இருக்கிறார், அவரும் கலந்து கொள்ளலாம். அந்த கட்சியின் பொது செயலாளரான வைகோவும் கலந்து கொள்ளலாம்.
இவ்வாறு கருணாநிதி கூறினார்.

அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம், இன்று காலையில் நடைபெறுவதை முன்னிட்டு, அது தொடர்பான ஏற்பாடுகளை கவனிப்பதற்காக முதல்-அமைச்சர் கருணாநிதி, நேற்று இரவு 8 மணி அளவில் திடீரென கோட்டைக்கு சென்றார். அங்கு, அனைத்து சட்டமன்ற கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ள அறையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்பது பற்றி அதிகாரிகளுடன் கலந்தாலோசனை நடத்தினார்.
அந்த அறையில் இருக்கைகளை எப்படி அமைப்பது? யார், யாரை எந்த இருக்கையில் அமர வைப்பது என்பது போன்ற பல்வேறு ஆலோசனைகளை அதிகாரிகளுக்கு முதல்-அமைச்சர் வழங்கினார். அங்கு செய்யப்படும் ஏற்பாடுகளை அருகில் இருந்து கவனித்து கொண்டிருந்தார். அங்கு நீண்ட நேரம் இருந்து அதிகாரிகளுக்கு அறிவுரைகளை வழங்கினார்
.

No comments: