Thursday, November 13, 2008

சென்னையில், 16-ந் தேதி இலங்கை தமிழர்களுக்காக ரசிகர்களுடன் விஜய் உண்ணாவிரதம்



சென்னை, நவ.14-
இலங்கை தமிழர்களுக்காக, சென்னையில் வருகிற 16-ந் தேதி, நடிகர் விஜய் தனது ரசிகர்களுடன் உண்ணாவிரதம் இருக்கிறார்.

இதுதொடர்பாக விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
``என் நெஞ்சில் குடியிருக்கும் அன்பான ரசிகர்-ரசிகைகளே, நண்பர்களே, வணக்கம். நடிகர் சங்கம் சார்பில் நடந்த உண்ணாவிரத போராட்டத்தின்போது நான் கேட்டுக்கொண்டபடி, இந்திய பிரதமருக்கு பல்லாயிரக்கணக்கான தந்திகளை கொடுத்து எனக்கு பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறீர்கள். அதற்கு என் நன்றியையும், பாராட்டுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
தற்போது இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையாவதும், பல ஆயிரக்கணக்கானவர்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வீடுகளை விட்டுவிட்டு குழந்தை குட்டிகளோடு காட்டுக்குள் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்து தவிப்பதையும் கேள்விப்பட்டு இருக்கிறோம்.
என் இயக்கத்தை சேர்ந்த ரசிகர்கள் திரைப்படங்களின் ரசனையையும் தாண்டி சமூக அக்கறையோடு பல சமயங்களில் செயல்பட்டு இருக்கிறீர்கள். குஜராத்தில் பூகம்பம் ஏற்பட்டபோதும், கார்கில் போரில் ராணுவ வீரர்கள் பாதித்தபோதும், சுனாமியால் தமிழ் மக்கள் தவித்தபோதும் பெரிதும் உங்களை ஈடுபடுத்திக்கொண்டு பல உதவிகளை செய்து இருக்கிறோம்.
அதைப்போலவே இப்போதும் இலங்கை தமிழ் சகோதர-சகோதரிகளின் படுகொலையை கண்டித்து, தமிழ் உணர்வை காட்ட வேண்டிய கட்டாயமும், நேரமும் வந்திருக்கிறது என்பதை உணர்ந்து, நம் நற்பணி இயக்கத்தின் சார்பில் ஒரு உண்ணாவிரத போராட்டம் நடத்த வேண்டும் என்று அனைவரும் எனக்கு வேண்டுகோள் விடுத்து இருந்தீர்கள்.

ஆகவே வரும் 16-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நற்பணி இயக்கத்தினரோடு சென்னையில் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்து ஈழ தமிழர்கள் மீது நமக்கு இருக்கும் பரிவையும், பாசத்தையும் வெளிக்காட்ட நான் முடிவு செய்திருக்கிறேன். காலை 8 மணி முதல் மாலை 4 மணிவரை உண்ணாவிரதம் நடைபெறும்.
சென்னையில் நடக்கிற அதே 16-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட தலைநகரங்களிலும், அத்தனை நகரங்களிலும் நீங்களும் உண்ணாவிரதம் இருந்து உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.

அத்தனை சகோதரர்களும், சகோதரிகளும் துயரத்தின் அடையாளமாக கறுப்பு துணியுடன் மவுனமாகவும், அமைதியாகவும், அறவழியிலும், அஹிம்சா வழியிலும் உணர்வுகளை பதிவு செய்ய வேண்டும். இதை அந்தந்த மாவட்ட தலைவர்களும், நகர, ஒன்றிய தலைவர்களும் பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.''
இவ்வாறு அந்த அறிக்கையில் நடிகர் விஜய் கூறியிருக்கிறார்.

No comments: