Tuesday, November 11, 2008

`பெட்ரோல் விலையை குறைக்க முடியாது' பிரதமர் மன்மோகன் சிங் அறிவிப்பு

புதுடெல்லி, நவ.12-
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணை விலை 60 டாலராக குறைந்துள்ள போதிலும் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை தற்போது குறைக்க முடியாது என்று பிரதமர் மன்மோகன் சிங் நேற்று தெரிவித்தார்.
விமானத்தில் பேட்டி
சில மாதங்களுக்கு முன், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணையின் விலை பீப்பாய்க்கு 147 டாலராக இருந்தபோது பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு 5 ரூபாய் வரை உயர்த்தப்பட்டது. சமையல் கியாஸ் விலையிலும் 50 ரூபாயை மத்திய அரசு அதிகரித்தது. தற்போது கச்சா எண்ணை விலை 60 டாலருக்கு விற்கப்படுகிறது.
எனவே, அதிகரித்து வரும் விலைவாசியை கட்டுப்படுத்துவதற்காக பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பொது மக்கள் எதிர் பார்க்கின்றனர். இந்த நிலையில். எண்ணை வளம் மிக்க வளைகுடா நாடுகளான ஓமன் மற்றும் கத்தார் ஆகியவற்றில் 3 நாட்கள் பயணம் செய்து விட்டு பிரதமர் மன்மோகன் சிங் நேற்று இந்தியா திரும்பினார்.
வரும் வழியில் விமானத்தில் அவர் பேட்டி அளித்தபோது கூறியதாவது:-
பெட்ரோல் விற்பனையில் லாபம்
சர்வதேச அளவில் கச்சா எண்ணை விலை பீப்பாய்க்கு 60 டாலராக குறைந்து விட்டது. ஆனால், பெட்ரோல் விற்பனை மூலமாக மட்டுமே இந்திய எண்ணை நிறுவனங்களுக்கு லாபம் கிடைத்து வருகிறது. (லிட்டருக்கு ரூ.4 லாபம் கிடைக்கிறது). மற்ற எரிபொருள்களை இன்னமும் நட்டத்திலேயே விற்பனை செய்கின்றன.
டீசல், மண்ணெண்ணை மற்றும் சமையல் கியாஸ் ஆகியவற்றை விற்பதன் மூலமாக தினமும் ரூ.155 கோடி வரை நட்டம் ஏற்படுகிறது. அரசு மானியம் அளித்த போதிலும் எண்ணை நிறுவனங்களுக்கு அதிக நிதிச் சுமை உள்ளது. இதுபோல டாலரின் மதிப்பு அதிகரிக்கும் போதும், இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்கும்போதும் சில இழப்புகள் ஏற்படுகின்றன.
மேலும் குறைந்தால் பரிசீலனை
எனவே, தற்போதைய சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் விலையை குறைக்கும் பேச்சுக்கே இடமில்லை. ஒருவேளை கச்சா எண்ணை விலை இன்னும் குறைந்தால், அப்போது விலை குறைப்பு குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்யும்.
விமானங்களுக்கான பெட்ரோலின் விலையை குறைக்காவிட்டால் அந்த நிறுவனங்கள் மூடப்படும் அபாயம் உள்ளது. அதனால், ஏராளமானோர் வேலை இழப்பார்கள். அப்படி ஒரு நிலைமை ஏற்படாமல் இருப்பதற்காகவே, விமான பெட்ரோலின் விலை குறைக்கப்பட்டது.
இவ்வாறு மன்மோகன் சிங் தெரிவித்தார்.
ஒபாமா பேசினாரா?
இதற்கிடையே அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒபாமா பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை போனில் தொடர்பு கொண்டு பேசினார். ஆனால் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் மட்டும் இதுவரை பேசவில்லை. புஷ்சுக்கு நெருங்கிய நண்பராக இருந்ததால் மன்மோகன் சிங்கை ஒபாமா ஒதுக்கி விட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மன்மோகன் சிங் கூறுகையில், "உண்மையில் நடந்தது என்னவென்றால், கடந்த சனிக்கிழமை அன்று என்னிடம் பேசுவதற்காக ஒபாமா முயற்சித்தார். ஆனால் வளைகுடா நாடுகளுக்கு நான் சென்று கொண்டு இருந்ததால் அவர் என்னை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஒபாமா அதிபராகும் முன்பே அவருக்கு நான் கடிதம் எழுதி இருக்கிறேன். அவருடைய பாட்டி இறந்தபோதும் இரங்கல் தெரிவித்தேன்'' என்றார்.
இதுவரை மன்மோகன் சிங்கிடம் ஒபாமா பேசவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: