Saturday, November 15, 2008

பூநகரி கடற்படை தளத்தை ராணுவம் கைப்பற்றியது கிளிநொச்சியை சுற்றி விடுதலைப்புலிகள் பாதுகாப்பு அரண்




இலங்கையில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பூநகரி கடற்படை தளத்தை ராணுவம் கைப்பற்றியது. போர் தீவிரம் அடைந்து வருவதால், கிளிநொச்சியை சுற்றி விடுதலைப்புலிகள் பாதுகாப்பு அரண் அமைத்து வருகிறார்கள்.
கொழும்பு, நவ.16-

இலங்கையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றன. விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரமாக கிளிநொச்சி விளங்கி வருகிறது.
கிளிநொச்சி பகுதியை கைப்பற்றுவதற்காக, கடந்த சில மாதங்களாக இலங்கை ராணுவம் கடும் போரில் ஈடுபட்டு வருகிறது. விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்பை சமாளித்து, கிளிநொச்சியை நோக்கி ராணுவத்தினர் மெதுவாக முன்னேறி வந்தனர்.

கிளிநொச்சி பகுதியில் மேற்கு கடற்கரை நகரமான பூநகரி, ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். கடந்த 15 ஆண்டுகளாக விடுதலைப்புலிகளின் கடற்படை தளமாக இது விளங்கி வந்தது. கடற்புலிகள் இங்கிருந்துதான் முக்கிய தாக்குதல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில், இலங்கை ராணுவத்தின் முதலாம் அதிரடிப்படை வீரர்களும் அவர்களுக்கு துணையாக ராணுவத்தின் 10 மற்றும் 12-வது படைப்பிரிவு வீரர்களும் கடந்த சில வாரங்களாக பூநகரியை முற்றுகையிட்டு விடுதலைப்புலிகளுடன் கடும் சண்டையில் ஈடுபட்டு வந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தெற்கு பூநகரியின் சதுப்பு நிலப்பகுதியை கடந்து சென்ற ராணுவ வீரர்கள், விடிய விடிய நடைபெற்ற கடும் சண்டைக்குப்பின் நேற்று அதிகாலை நல்லூர் அருகே உள்ள பூநகரி-பரந்தன் சாலையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். பின்னர் 10 கிலோ மீட்டர் தூரமுள்ள நெடுஞ்சாலையில் அணிவகுத்து சென்ற இலங்கை ராணுவ வீரர்கள் பூநகரிக்குள் ழைந்தனர்.
விடுதலைப்புலிகளின் கடற்படை தளம் உள்ளிட்ட பூநகரி பகுதியை முழுவதுமாக ராணுவம் கைப்பற்றினாலும் இன்னும் ஒரு சில இடங்களில் விடுதலைப்புலிகளுடன் கடும் துப்பாக்கி சண்டை நீடித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சண்டையின்போது இரு தரப்பிலும் ஏற்பட்ட உயிர்ச்சேதம் பற்றி ராணுவ தரப்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. விடுதலைப்புலிகள் தரப்பில் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை.
இதுவரை யாழ்ப்பாணத்துக்கு கொழும்பில் இருந்து கடல் வழியாகவும் விமானம் மூலமாகவும் மட்டுமே இலங்கை அரசு ராணுவ வீரர்களையும் அத்தியாவசிய பொருட்களையும் அனுப்பி வந்தது. பூநகரியை கைப்பற்றியதன் மூலம் இனி சாலை வழியாக யாழ்ப்பாணத்துடன் தொடர்பு கொள்ள முடியும்.
கடந்த 1993-ம் ஆண்டு நடைபெற்ற போரில் இலங்கை ராணுவத்திடம் இருந்து பூநகரியை விடுதலைப்புலிகள் மீட்டனர். சமீபத்தில் குண்டுவீச்சில் பலியான தமிழ்ச்செல்வன் தலைமையில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட விடுதலைப்புலிகள், 700 ராணுவத்தினரை கொன்று குவித்து பூநகரியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
பூநகரியை கைப்பற்றிய ராணுவம், தொடர்ந்து கிளிநொச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. விடுதலைப்புலிகளும் ராணுவத்தினருக்கு பதிலடி கொடுத்து வருவதால் அங்கு போர் தீவிரம் அடைந்துள்ளது.
இதற்கிடையில், கிளிநொச்சியை நெருங்கிவிட்டதாகவும், பேய்முனை பகுதியை முற்றிலும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டதாகவும் ராணுவம் அறிவித்து உள்ளது. இதன்மூலம் கிராஞ்சி, வல்லைப்பாடு, பலாவி ஆகிய பகுதிகளும் தங்கள் வசமாகிவிடும் என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

முன்னேறி வரும் ராணுவத்தை தடுத்து நிறுத்தி கிளிநொச்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக, விடுதலைப்புலிகள் இறுதி கட்ட போருக்கு தயாராகி வருகிறார்கள். கிளிநொச்சி நகரை சுற்றி பாதுகாப்பு அரண்கள் அமைத்துள்ள அவர்கள் ஆங்காங்கே கண்ணி வெடிகளையும் மறைத்து வைத்துள்ளனர்.
கடந்த சில வாரங்களாக நடந்து வந்த தீவிர போரினால் லட்சக்கணக்கான தமிழர்கள் கிளிநொச்சியில் உள்ள பல்வேறு முகாம்களில் தஞ்சம் புகுந்து உள்ளனர். ஏற்கனவே கடுமையான உணவு தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள அவர்கள், தற்போது போர் தீவிரம் அடைந்து இருப்பதால் தங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள வழி தெரியாமல் பீதியில் உள்ளனர்.

முக்கிய கேந்திரமான பூநகரியை ராணுவம் கைப்பற்றியதும், இலங்கை அதிபர் ராஜபக்சே டெலிவிஷனில் பேசினார். அப்போது, இந்த வெற்றியை இரண்டாவது ஈழப்போர் என்று வர்ணித்த அவர் இலங்கை மக்கள் சார்பில் ராணுவத்தினருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.
"விடுதலைப்புலிகளின் வசமிருந்த கடற்படை தள நகரமான பூநகரியை கைப்பற்றியது எங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. பூநகரியை முற்றிலுமாக கைப்பற்றி இருப்பதன் மூலம் யாழ்ப்பாண தீபகற்பத்திற்கு செல்லும் சாலை வழி இணைப்பை திறந்து விட முடியும்'' என்று அவர் கூறினார்.

விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சமாதான பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும் என்றும் ராஜபக்சே அழைப்பு விடுத்து இருக்கிறார். "பிரபாகரன் ஆயுதங்களை ஒப்படைத்தால், அது வடக்கு பகுதி மக்களுக்கு அவர் செய்யும் பெரிய உதவியாக இருக்கும்'' என்றும் அவர் கூறினார்.

No comments: