Sunday, November 9, 2008

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் 10 முக்கிய மசோதாக்கள் தாக்கல் ஆகின்றன. மேலும் இலங்கை பிரச்சினை உள்ளிட்ட முக்கிய பிரச்சினைகள் பற்றி காரசார விவாதமும் நடைபெறும்.
சென்னை, நவ.10-
தமிழக சட்ட சபையின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
10 முக்கிய மசோதாக்கள்
முதல் நாளான இன்று, மறைந்த எம்.எல்.ஏ. வீர.இளவரசன் மற்றும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து கேள்வி-பதில் நேரம் நடைபெறுகிறது. பின்னர் சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்படும்.
தமிழ்நாடு மதிப்பு கூட்டுவரி, புறநகர் போலீஸ் கமிஷனர் ஆணையம், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட திருத்த ஆணை, விற்பனை வரி சட்டம் உள்பட 10 அவசர சட்ட ஆணைகளுக்கான சட்ட முன்வடிவு தாக்கல் செய்யப்பட்டு விவாதித்து சட்டமாக்கப்படும்.
சட்ட முன்வடிவுகள் அறிமுகம் செய்யப்பட்டதும் அலுவல் ஆய்வுக்குழு கூடி எத்தனை நாள் சட்டசபை கூட்டத்தை நடத்துவது, என்னென்ன அலுவல்களை ஏற்பது என்பது பற்றி நிகழ்ச்சி நிரல் முடிவு செய்யப்படும்.
இந்த சட்டசபை கூட்டத்தொடரின் போது பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
2006-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்பு பா.ம.க. மற்றும் இடது சாரி கட்சிகளின் ஆதரவு இல்லாமல் நடைபெறும் முதல் சட்டசபை கூட்டம் ஆகும்.
தமிழ்நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள மின்சார வெட்டு, விலைவாசி உயர்வு, இலங்கை தமிழர் பிரச்சினை, மற்றும் உத்தப்புரம் கலவரம் உள்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.
இலங்கையில் போரை நிறுத்தும்படி மத்திய அரசை வற்புறுத்தி தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பா.ம.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக காங்கிரஸ் நிலைபாடு உள்ளது. இதை வைத்துக்கொண்டு எதிர்க்கட்சிகள் இந்த பிரச்சினையை பெரிதுபடுத்தும் என்று தெரிகிறது.
விடுதலைப்புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டில் அ.தி.மு.க. சமரசம் செய்துகொள்ளாது. இலங்கை பிரச்சினையில் அந்த நாட்டு இறையாண்மைக்கு உட்பட்டு அரசியல் தீர்வு காண வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த நிலையில் இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசியதாக வைகோ கைது செய்யப்பட்டு 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்டு, விடுதலை செய்யப்பட்டார். இதனால் சட்ட சபை கூட்ட தொடரில் இலங்கை பிரச்சினை குறித்து காரசார விவாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் 1,800 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை உள்ளது. ஆகவேதான் மின்வெட்டு நீடிக்கிறது என்று கூறப்படுகிறது. மின்சார தட்டுப்பாட்டை போக்க தி.மு.க. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிவருகின்றன.
இதனால் மின்வெட்டு பிரச்சினை குறித்து எல்லா கட்சிகளும் ஒருமித்த குரலில் சட்டசபையில் பிரச்சினையை எழுப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏன் என்றால் மின்வெட்டால் கோவை, திருப்பூர் போன்ற நகரங்களில் உள்ள தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
விலைவாசி உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விலைவாசி உயர்வு பிரச்சினை சட்ட சபையில் பூதாகரமாக எழுப்பப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை கர்நாடக அரசு எதிர்த்து வருகிறது. இந்த நிலையில் இந்த திட்டம் பற்றியும் சூடான விவாதம் நடக்கும் என்று தெரிகிறது.
தே.மு.தி.க.வின் ஒரே எம்.எல்.ஏ.வான விஜயகாந்த், பல்வேறு மக்கள் பிரச்சினை குறித்தும், இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்படுவதற்கு மத்திய அரசை மாநில அரசு வற்புறுத்தவேண்டும் என்பது பற்றியும் விவாதிப்பார் என்று தெரிகிறது.
இதனால் இந்த கூட்டத்தொடர் மிகவும் பரபரப்பாக இருக்கும்.
இந்த கூட்டத்தொடர் 7 நாட்கள் நடைபெறும் என்று தெரிகிறது.
கடந்த சட்டசபை கூட்டத்தொடரில் சேதுசமுத்திர திட்டம் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீடு பிரச்சினை பரபரப்பாக எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments: