Friday, November 14, 2008

சட்டக் கல்லூரி மாணவர்கள் வன்முறைக்கு யார் காரணம்? விசாரணை கமிஷனுக்கு அரசு உத்தரவு


சென்னை, நவ.15-
சென்னை சட்டக் கல்லூரியில் மாணவர்களிடையே வன்முறை சம்பவம் நடப்பதற்கு காரணமானவரைக் கண்டறிந்து அவர் மீது நடவடிக்கை எடுப்பது பற்றி பரிந்துரைக்க வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.


சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் 12-ந் தேதி மாணவர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. இதில் பல மாணவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து சட்டசபையில் அரசியல் கட்சிகள் விவாதித்தன. இந்த விவகாரம் குறித்து ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி பி.சண்முகம் தலைமையில் கமிஷன் அனைத்து விசாரணை நடத்தப்படும் என்று சட்டத் துறை அமைச்சர் துரைமுருகன் அறிவித்தார்.
இந்த நிலையில் இந்த விசாரணைக் கமிஷனின் நடவடிக்கைகளை வரையறுத்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

* சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் 2 மாணவர் குழுக்களுக்கு இடையே நடந்த வன்முறை சம்பவத்துக்கு தூண்டுதலாக இருந்த சூழ்நிலை எது?
* அந்தக் கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு இடையே முன்விரோதம் நிலவுகிறது என்ற தகவல், அந்தக் கல்லூரியின் முதல்வருக்கு ஏற்கனவே தெரியுமா?
* அப்படி தெரிந்திருந்தால் அதற்காக அவர் மேற்கொண்ட நடவடிக்கைகள் என்னென்ன?
* இந்த விவகாரத்தில் போலீசாரின் செயல்பாடு எப்படி இருந்தது? சம்பவ இடத்துக்கு போலீஸ் தாமதமாக வந்திருந்தால், அதற்கு காரணமான நபர் யார்? அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கலாம்?
* இதுபோன்ற சம்பவங்கள் எதிர்காலத்தில் நேரிடாதபடி என்னென்ன செய்யலாம்?

இந்த விசாரணையை 14-ந் தேதியில் இருந்து (நேற்று) 3 மாதங்களுக்குள் முடித்து, அதுதொடர்பான விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments: