Saturday, November 8, 2008

இலங்கையில் போர் நிறுத்தம் டெல்லி வரும் ராஜபக்சேவிடம் மன்மோகன்சிங் பேசுவார் கே.வி.தங்கபாலு தகவல்

சென்னை, நவ.9-
இலங்கை அதிபர் ராஜபக்சே வரும் 13-ந் தேதி டெல்லி வருகிறார். அவரிடம் போர் நிறுத்தம் குறித்து பேசுவதாக பிரதமர் மன்மோகன்சிங் உறுதி அளித்துள்ளதாக கே.வி.தங்கபாலு கூறினார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு நேற்று சென்னையில் சந்தித்து பேசினார். பின்னர் இருவரும் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, நிருபர்களிடம் கே.வி.தங்கபாலு கூறியதாவது:-
இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் எனில், அங்கு போர் நிறுத்தம் தேவை. பேச்சு வார்த்தை மூலம் தீர்வுகாண வேண்டும் என்பது மத்திய அரசின் நிலை ஆகும். இலங்கை அதிபர் ராஜபக்சேவிடம் வலியுறுத்தும் போதுகூட, இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு பாதிப்பு எதுவும் ஏற்பட கூடாது என்று கூறப்பட்டது.

அங்கு பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை செஞ்சிலுவை சங்கம், ஐ.நா. குழு மூலம் அனுப்ப மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இலங்கை மக்களுக்கு இணையாக அங்குள்ள தமிழர்கள் நடத்தப்படுவதுதான் தீர்வு ஆகும். ஜெயவர்த்தனே - ராஜீவ் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட வேண்டும். அது தான் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஆகும்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினேன். அப்போது இலங்கையில் போர் நிறுத்தம் உள்பட தமிழக மக்கள் எதிர்பார்க்கும் அனைத்து விஷயங்களையும் அவரிடம் விளக்கி கூறினேன். அதற்கு அவர், இலங்கை அதிபர் ராஜபக்சே வரும் 13-ந் தேதி டெல்லி வருவதாகவும், அப்போது அவரிடம் தமிழ் மக்களின் உணர்வுகளையும், அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களையும் வலியுறுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறினார்.

No comments: