Monday, November 24, 2008

சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்காது வைகோ அறிவிப்பு


சென்னை, நவ.25-
ம.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் மு.கண்ணப்பன் விடுத்த கோரிக்கையை முதல்-அமைச்சர் ஏற்காததால், சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டத்தில் ம.தி.மு.க. கலந்து கொள்ளாது.
இதுகுறித்து ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மன்மோகன்சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, வஞ்சகமாக திட்டமிட்டே, கடந்த 4 ஆண்டுகளாக சிங்கள அரசுக்கு ராணுவத் தளவாடங்களையும், ஆயுதங்களையும் வழங்கி வந்து உள்ளது.
இலங்கை வான்படைக்கு ராடர்களைத் தந்தது; ரூ.2 ஆயிரம் கோடி வட்டி இல்லாக் கடன் கொடுத்தது; மிகப்பெரிய கொடுமையாக பலாலி விமான தளத்தை இந்திய அரசின் செலவில், இந்திய விமானப்படை நிபுணர்களை கொண்டே புதுப்பித்துக் கொடுத்தது.

ஈழத்தமிழர்களை நிரந்தரமாக அடிமை இருளில் மூழ்கடிக்கத் திட்டமிட்டுள்ள இலங்கை அரசின் வஞ்சகத்துக்கு, இந்திய அரசு முழுக்க முழுக்க உடந்தையாகச் செயல்பட்டு வருகிறது.

இலங்கையில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்த மத்திய அரசை வலியுறுத்த தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஒருமனதான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இப்படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை மத்திய அரசும், அனைத்து உலகமும் அறிந்த நிலையில் தீர்மானத்தின் மை காய்வதற்கு உள்ளாக, டெல்லியில் பிரதமரை சந்தித்துவிட்டு இலங்கை அதிபர் ராஜபக்சே `போர் நிறுத்தம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. விடுதலைப்புலிகளை முற்றாக அழித்துவிட்டுத்தான் மறுவேலை' என்று அகங்காரத்தோடு கொக்கரித்து, இந்திய அரசின் முகத்தில் கரியையும் பூசினார்.


இந்த நிலையில்கூட, இலங்கைக்கு தந்த ராடார்களை திரும்ப பெற வேண்டும்; வட்டி இல்லாக் கடனை ரத்து செய்ய வேண்டும்; ஆயுத உதவி செய்யக்கூடாது; உதவிக்கு அனுப்பிய ராணுவ நிபுணர்களை திரும்ப அழைக்க வேண்டும்; சிங்கள ராணுவத்துக்கு இந்தியாவில் பயிற்சி தரக்கூடாது என்று ம.தி.மு.க.வின் சட்டமன்ற கட்சி தலைவர் மு.கண்ணப்பன் விடுத்த கோரிக்கையை முதல்-அமைச்சர் ஏற்கவில்லை. மத்திய அரசும் இதை பரிசீலிக்கவே தயாராக இல்லை என்பதால், முதல்-அமைச்சர் அறிவித்து உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் ம.தி.மு.க. கலந்து கொள்ளாது.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.

No comments: