Saturday, November 22, 2008

தமிழ்நாட்டில் வாழும் 41/2 லட்சம் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முயற்சி தா.பாண்டியன் புகார்


வேலூர், நவ.23-
தமிழகத்தில் வாழும் 41/2 லட்சம் அகதிகளை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முடிவு செய்துள்ள திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய கம்னிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறினார்.

இலங்கையில் உடனடி போர் நிறுத்தம் கோரி வேலூர் அண்ணா கலை அரங்கம் அருகே வேலூர் தமிழ் சங்கம் சார்பில் அனைத்து கட்சிகள் பங்கேற்ற உண்ணாவிரதம் போராட்டம் நேற்று நடந்தது.
இந்த போராட்டத்துக்கு தமிழ்சங்க தலைவரும், வி.ஐ.டி.வேந்தருமான ஜி.விஸ்வநாதன் தலைமை தாங்கினார். பொருளாளர் பதுமனார் வரவேற்றார். இந்த போராட்டத்தில் கலந்து கொண்டு இந்திய கம்னிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் தா.பாண்டியன் பேசியதாவது:-

இலங்கையில் இருந்து துரத்தப்பட்ட தமிழர்கள் தமிழகத்தில் அகதிகளாக குடியேறி வருகின்றனர். கடந்த 20 ஆண்டுகளில் 41/2 லட்சம் அகதிகள் குடியேறி உள்ளனர். இவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்ப முயற்சி நடக்கிறது.
இலங்கையில் அமைதி திரும்பி விட்டதாகவும், அகதிகள் தங்குவதற்கான அனுமதி காலம் முடிந்து விட்டதாகவும் கூறி கடந்த 3 நாட்களுக்கு முன் மத்திய அரசு ஒவ்வொரு அகதிக்கும் எச்சரிக்கை கடிதம் அனுப்பி உள்ளது.
இந்த கடிதம் தமிழில் அனுப்பப்பட்டுள்ளதால் இது தமிழக அரசுக்கு தெரியாமல் நடந்திருக்காது. இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி பிரதமருக்கும், முதல்வருக்கும் கடிதம் எழுதி உள்ளேன். இங்குள்ள தமிழர்களை இலங்கைக்கு அனுப்பி அவர்களை ராணுவத்தோடு சேர்த்து தமிழர்களுக்கு எதிரான போராட்டத்தை தீவிரப்படுத்த மத்திய அரசு ரகசிய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்க உடனடி போர் நிறுத்தத்தை கொண்டு வரவேண்டும். அதன் பிறகு, இலங்கை அரசுடன் நேரடியாக தமிழர்களை பேச வைப்பதற்கான நடவடிக்கையை மத்திய அரசு எடுக்க வேண்டும். இதற்காக நாம் ஒருமித்த கருத்தோடு மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
சினிமா டைரக்டர் பாரதிராஜா உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
விடுதலைப்புலிகள் தடை செய்யப்பட்ட இயக்கமாக கூட இருக்கட்டும். அதை ஏன் தடை செய்ய வேண்டும். எதற்காக தடை செய்ய வேண்டும் என்று நான் கேட்கிறேன். அப்படி கேட்டால் இனத்தின் மீது பற்று இல்லாதவர்களும், விசுவாசம் இல்லாதவர்களும் உள்ளே தள்ளிவிடுவேன் என்று மிரட்டுகிறார்கள். இந்த மண்ணுக்காகவும், தமிழனுக்காகவும் நான் எதையாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், உள்ளே செல்ல நான் தயாராக இருக்கிறேன்.
இப்போது பெரியார் இருந்திருந்தால் நிலைமையே வேறு விதமாக இருந்திருக்கும். இறையாண்மை என்ற பெயரில் தமிழர்களை இரையாக்கி விடாதீர்கள். அவ்வாறு செய்தால் வரலாற்றில் மிக பெரிய கறை தமிழகத்துக்கு வந்துவிடும். அரசியல் பேரங்களை மறந்து விட்டு இலங்கையில் உடனடி போர் நிறுத்தத்தை கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
மாலை 5 மணி அளவில் கலைப்புலி எஸ்.தாணு பழச்சாறு கொடுத்து உண்ணாவிரதத்தை முடித்து வைத்தார். டைரக்டர் ஆர்.கே.செல்வமணி மற்றும் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் உண்ணாவிரதத்தில் கலந்துகொண்டனர்.

No comments: