Wednesday, November 12, 2008

சென்னை சட்டக்கல்லூரியில் பயங்கர கோஷ்டி மோதல் இரும்பு கம்பி, உருட்டுக் கட்டைகளால் ரத்தம் சொட்ட, சொட்ட அடித்த கொடூரம்


சென்னை, நவ.13-
சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி மாணவர்களுக்குள் ஏற்பட்ட மோதலில் 2 மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது. இரும்பு கம்பி, உருட்டுக்கட்டைகளால் ரத்தம் சொட்ட, சொட்ட அடித்த கொடூர காட்சி நெஞ்சை பதை பதைக்க வைத்தது.
பயங்கர ஆயுதங்களுடன்
சென்னை பாரிமுனையில் டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரி உள்ளது. இங்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மாணவர்கள் படித்து வருகிறார்கள். பல்வேறு குழுக்களாக செயல்பட்டு வரும் அவர்களில் இரு குழுவினருக்கு இடையே சமீபத்தில் அடிக்கடி மோதல் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் கல்லூரியின் செமஸ்டர் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு முடிந்து வெளியே வரும் ஒரு பிரிவினரை தாக்குவதற்காக மற்றொரு கோஷ்டியை சேர்ந்த ஏறத்தாழ 50 பேர் கல்லூரி வளாகத்தில் பயங்கர ஆயுதங்களுடன் சுற்றிக்கொண்டு இருந்தனர்.
கொலை வெறித் தாக்குதல்
மாலை 5 மணிக்கு தேர்வு முடிந்து மாணவர்கள் வெளியே வந்தபோது ஏற்கனவே தயாராக காத்திருந்த கோஷ்டியை சேர்ந்த மாணவர்களுக்கும், எதிர் தரப்பு மாணவர்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. கத்தி, உருட்டுக்கட்டை, இரும்புக்கம்பி, மண்வெட்டி, டிப் லைட், கற்கள் போன்ற கையில் கிடைத்த ஆயுதங்களால் ஒருவரை ஒருவர் கொலை வெறியுடன் ரத்தம் சொட்டச்சொட்ட கடுமையாக தாக்கிக்கொண்டனர்.
சினிமாவில் வரும் சண்டை காட்சிகளை மிஞ்சும் வகையில், இரு தரப்பினருக்கு இடையே நடந்த இந்த மோதலால் கல்லூரி வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. ஆறுமுகம் என்ற மாணவரை சில மாணவர்கள் சூழ்ந்துகொண்டு தாக்கியபோது அவரை காப்பாற்றுவதற்காக பாரதி கண்ணன் என்ற மாணவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்துக்கொண்டு ஓடினார்.
மயங்கிவிழுந்தபிறகும் தாக்குதல்
உடனே எதிர் தரப்பினர் பாரதி கண்ணனை ஓட ஓட விரட்டி விரட்டி தாக்கினார்கள். இதனால், வெளிகேட்டை நோக்கி ஓடிவந்த பாரதிகண்ணனை கேட் அருகிலேயே சரமாரியாக உச்சி முதல் உள்ளங்கால் வரை சரமாரியாக அடித்து நொறுக்கினார்கள்.
மயங்கி விழுந்த அந்த மாணவர் மூச்சு பேச்சு இன்றி அசைவற்ற நிலையில் கிடந்தபோதும் சரமாரியாக அவர் தாக்கப்பட்டது நெஞ்சை பதைபதைக்க வைத்தது.
2 பேர் கவலைக்கிடம்
இந்த தாக்குதலில் 4 மாணவர்கள் காயம் அடைந்தனர். இதில் ஆறுமுகம், பாரதிகண்ணன் ஆகிய 2 மாணவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சென்னை அரசு பெரிய ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் 3-ம் ஆண்டு மாணவர்கள். அவர்கள் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அய்யாத்துரை என்ற மாணவர் சிறு காயங்களுடன் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். மற்றொரு மாணவரான சித்திரை செல்வன், காதில் அடிபட்டு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
வேடிக்கை பார்த்த போலீசார்
ஆறுமுகம், பாரதி கண்ணன் ஆகியோர் தாக்கப்பட்டபோது மாணவர் பாரதிகண்ணன் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியே ஓடி வர முயற்சித்தார். கல்லூரி வாசலிலேயே விழுந்து மயக்கமான அவரை மற்றொரு தரப்பினர் தொடர்ந்து தாக்கியதை பார்த்து ரோட்டில் நடந்து சென்றவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவர்களுக்குள் முன்விரோதம் இருந்ததால், சட்டக்கல்லூரி ழைவு வாசலில் ஏற்கனவே போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 10 அடி தூரத்தில்தான் அவர்கள் நின்று கொண்டு இருந்தனர். ஆனால் இந்த சம்பவத்தை கண்டும் காணாதது போல அவர்கள் இருந்தனர். அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்கள், தாக்குதலை தடுத்து நிறுத்துங்கள் என்று கெஞ்சியும் போலீசார் அதைக் காதில் போட்டுக்கொள்ளவில்லை. போலீஸ் அதிகாரி ஒருவர் தங்களுக்கு புகார் எதுவும் வரவில்லை என்றும், புகார் வந்தால் மட்டுமே தங்களால் நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

பொதுமக்கள் மீட்டனர்
அதைத் தொடர்ந்து அங்கு கூடிய பொதுமக்களும், பத்திரிகையாளர்களும் கூச்சல் போடவே, பாரதி கண்ணன் மீது தாக்குதல் நடத்திய கும்பல் அங்கிருந்து சென்றது. அடிபட்ட மாணவர்களை பொதுமக்கள் மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகுதான் போலீசார் சட்டக்கல்லூரி வளாகத்திற்குள் வந்தனர்.
சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், துணை கமிஷனர் ஆசியம்மாள், உதவி கமிஷனர் நாராயண மூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். இதற்கிடையே அரசு சட்டக்கல்லூரி முதல்வர் கே.கே.தேவ், மோதலில் ஈடுபட்ட மாணவர்களை சமாதானப்படுத்தினார்.
காரணம் என்ன?
கடந்த 30-ந் தேதி அன்று நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழாவையொட்டி ஒரு பிரிவினர் சென்னை நந்தனத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை அணிவித்து உள்ளனர். இதையொட்டி அடிக்கப்பட்ட போஸ்டரில் கல்லூரியின் பெயரில் அம்பேத்கார் பெயர் இடம்பெறவில்ல என்று கூறப்படுகிறது.
அதைத் தொடர்ந்துதான் இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல் நடைபெற்று வந்ததாக போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
ஒருவர் கைது
இந்த மோதல் தொடர்பாக ரவீந்திரன், மணிமாறன், சித்திரை செல்வன், குபேந்திரன், வெற்றி கொண்டான், பிரேம்குமார், ரவிவர்மன் ஆகிய 7 மாணவர்கள் மீது கல்லூரி முதல்வர் போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குப்பதிவு செய்து திலீப் என்ற இரண்டாம் ஆண்டு மாணவரை கைது செய்துள்ளனர். தாக்குதல் நடத்திய மற்ற மாணவர்கள் இரவுக்குள் கைது செய்யப்படுவார்கள் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்றைய தாக்குதலில் காயம் அடைந்த மாணவர்கள் 3-ம் ஆண்டு படித்து வந்தவர்கள். அவர்களை தாக்கிய மாணவர்களில் பெரும் பகுதியினர் விடுதியில் தங்கி படிக்கும் 2-ம் ஆண்டு மாணவர்கள் என்று கூறப்படுகிறது.
அதிரடி போலீஸ் குவிப்பு
கத்தி, உருட்டுக்கட்டை இரும்புக்கம்பி போன்ற ஆயுதங்களை கல்லூரிக்குள் கொண்டு வர அனுமதி இல்லை என்றும், மோதலில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரி முதல்வர் கே.கே.தேவ் நிருபர்களிடம் கூறினார்.
மாணவர்களின் மோதல் சம்பவத்தை தொடர்ந்து சிறப்பு அதிரடிப்படை போலீசார் சட்டக் கல்லூரி வளாகத்திற்குள் குவிக்கப்பட்டனர்.
இரவு 8 மணிக்கு பதட்டம்
சென்னை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள சட்டக்கல்லூரி மாணவர்களில் ஒருவர் இறந்துவிட்டதாக இரவு 8 மணியளவில் வதந்தி பரவியது. இதனால், ஆஸ்பத்திரி முன் பெரும் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
இதற்கிடையே தாக்குதலுக்கு உள்ளான மாணவர்களின் உறவினர்களும், நண்பர்களும் அரசு பெரிய ஆஸ்பத்திரி முன் குவிந்தனர்.
சாலை மறியல்
இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்டிரல் ரெயில் நிலையம் முன்பாக சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது பற்றிய தகவல் அறிந்ததும், போலீஸ் துணை கமிஷனர் ஆசியம்மாள், உதவி கமிஷனர் பாலசந்திரன் ஆகியோர் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி மொழி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலில் அமர்ந்தவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
போக்குவரத்து ஸ்தம்பித்தது
இந்த திடீர் சாலை மறியல் காரணமாக பூந்தமல்லி நெடுஞ்சாலையில் போக்குவரத்து ஏறக்குறைய 1/2 மணி நேரம் ஸ்தம்பித்தது. ரெயிலுக்கு செல்ல வேண்டிய பயணிகள் தவித்துப்போனார்கள். வேலைக்கு சென்று வீடுகளுக்கு திரும்பியவர்கள் பஸ்களில் தவித்துக்கொண்டு இருந்தனர்.
பிராட்வே மற்றும் உயர்நீதிமன்றம் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச்சென்ற பஸ்கள் மாற்று வழிகளில் திருப்பிவிடப்பட்டன.
இந்த சம்பவம் காரணமாக சென்னை பெரிய ஆஸ்பத்திரி முன்பகுதியிலும், சென்டிரல் ரெயில் நிலையம் அருகிலும் போலீசார் குவிக்கப்பட்டு இருந்தனர். போக்குவரத்து சீரானபிறகும் அந்தப்பகுதியில் தொடர்ந்து பதட்டமான நிலை நீடித்தது.

No comments: