Saturday, November 29, 2008

தாஜ் ஓட்டலில் பதுங்கி இருந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை கமாண்டோக்கள் சுட்டுத் தள்ளி, ஓட்டலை மீட்டனர்.







மும்பையில் தீவிரவாதிகளுடன் நடந்த 62 மணி நேர துப்பாக்கி சண்டை நேற்று காலை 8.30 மணியுடன் ஓய்ந்தது. தாஜ் ஓட்டலில் பதுங்கி இருந்த 4 தீவிரவாதிகளை பாதுகாப்பு படை கமாண்டோக்கள் சுட்டுத் தள்ளி, ஓட்டலை மீட்டனர். தீவிர வாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்களின் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது.
மும்பை, நவ.30-
பாகிஸ்தானில் இருந்து பயங்கர ஆயுதங்களுடன் கடந்த புதன்கிழமை மும்பைக்கு வந்த தீவிரவாதிகள் நகரை யுத்த களமாக்கி விட்டார்கள்.

பாகிஸ்தானில் இருந்து கப்பல் மற்றும் ரப்பர் படகு மூலம் கடந்த புதன்கிழமை இரவு மும்பைக்கு வந்து சேர்ந்த தீவிரவாதிகள், மும்பை மீது போர் தொடுப்பது போல கடுமையான தாக்குதல் நடத்தினர்.
10-க்கும் மேற்பட்ட இடங்களில் அவர்கள் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள், 300 பேர் காயம் அடைந்தனர்.


மேலும், மும்பை தாஜ் ஓட்டல், டிரைடண்ட் ஓட்டல், நரிமன் இல்லம் ஆகியவற்றில் தீவிரவாதிகள் புகுந்து அங்கு இருந்தவர்களை பணயக் கைதிகளாக பிடித்து வைத்துக் கொண்டனர். தீவிரவாதிகளை சுட்டு வீழ்த்துவதற்காக ராணுவத்தினரும், அதிரடிப்படையினரும் உள்ளே புகுந்தனர். 50 மணி நேரத்துக்கும் மேல் நடந்த சண்டையை தொடர்ந்து நேற்றுமுன்தினம் டிரைடண்ட் ஓட்டலும், நரிமன் இல்லமும் மீட்கப்பட்டன.
ஆனால் தாஜ் ஓட்டலில் மட்டும் சண்டை தொடர்ந்து நடந்து வந்தது. புயல் வேக நடவடிக்கை என்பதை குறிக்கும் வகையில், அங்கு நடந்த ராணுவ நடவடிக்கைக்கு `ஆபரேஷன் சைக்ளோன்' என்று பெயர் சூட்டப்பட்டு இருந்தது.நேற்றுமுன்தினம் நடந்த சண்டையில் தேசிய பாதுகாப்பு படை கமாண்டோ மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நேற்றுமுன்தினம் இரவு நீண்ட நேரம் அமைதி நிலவியது. இந்நிலையில், நேற்று அதிகாலை 3.40 மணிக்கு மீண்டும் சண்டை தொடங்கியது. ஓட்டலின் பழைய (ஹெரிடேஜ்) கட்டிடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருந்தனர். உள்ளே 4 தீவிரவாதிகள் இருந்தனர். இருப்பினும், ஒரே ஒரு தீவிரவாதி மட்டுமே துப்பாக்கியுடன் இருப்பதாக கமாண்டோக்கள் தரப்பில் கருதப்பட்டது.
சண்டை தொடங்கியவுடன், கமாண்டோக்களை நோக்கி தீவிரவாதிகள் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். கை எறிகுண்டுகளையும் வீசினர். அரை மணி நேரத்தில் அடுத்தடுத்து 5 குண்டுகளை வெடிக்கச் செய்தனர்.


இதனால் 6 மாடிகள் கொண்ட ஓட்டலின் தரைத்தளம் மற்றும் முதல் மாடி தீப்பிடித்து எரிந்தது. ஓட்டலின் சன்னல் வழியாக கரும்புகை வெளிவருவதை காண முடிந்தது. தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதற்கு நடுவே சண்டை நடந்தது. காலை 8 மணிக்கு சண்டை தீவிரம் அடைந்தது. கமாண்டோக்கள் இறுதிக்கட்ட தாக்குதல் நடத்தினர். அவர்களுக்கு உதவியாக, ஓட்டலை சுற்றிலும் கடற்படை கமாண்டோக்கள் குவிக்கப்பட்டனர். ஓட்டலுக்குள் நிலவிய இருட்டையும் மீறி, கமாண்டோக்கள் தங்களை நெருங்கி விட்டதை உணர்ந்த தீவிரவாதிகள், அடிக்கடி ஓட்டல் அறைகளுக்கு தீவைத்தபடி இருந்தனர்.

அதை சமாளித்தபடி முன்னேறிய கமாண்டோக்கள், இறுதியாக 4 தீவிரவாதிகளையும் சுட்டுக் கொன்றனர். தீவிரவாதிகள் வைத்திருந்த ஒரு ஏ.கே.47 ரக துப்பாக்கியும் கைப்பற்றப்பட்டது. காலை 8.30 மணிக்கு சண்டை முடிவுக்கு வந்தது. புதன்கிழமை இரவு தொடங்கி, 62 மணி நேர சண்டைக்கு பிறகு தாஜ் ஓட்டல் மீட்கப்பட்டது. இதன்மூலம், மும்பை நகரம் முழுவதும் மீண்டும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டது.
ராணுவ நடவடிக்கை வெற்றி என்பதை குறிக்கும் வகையில், இரண்டாவது மாடியில் இருந்து கமாண்டோ ஒருவர், கீழே இருந்த பத்திரிகையாளர்களை நோக்கி சைகை காண்பித்தார். உடனே ஓட்டலை சுற்றி இருந்த பொதுமக்கள் ஆனந்த கூச்சலிட்டனர்.

சண்டைக்கு நடுவே சிக்கித் தவித்த 2 ஓட்டல் ஊழியர்களை கமாண்டோக்கள் பத்திரமாக வெளியே கொண்டு வந்தனர். சண்டை முடிவடைந்தவுடன், டாடா குழும தலைவர் ரத்தன் டாடா, ஓட்டலுக்கு வந்து பார்வையிட்டார்.

4 தீவிரவாதிகளும் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, மேலும் தீவிரவாதிகள் யாராவது பதுங்கி இருக்கிறார்களா? வெடிகுண்டுகள் இருக்கின்றனவா? என்பதை தேடும் பணி தொடங்கியது. இதற்காக, வெளியே இருந்த கமாண்டோக்களும் உள்ளே சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். தாஜ் ஓட்டலில் 565 அறைகள் உள்ளன. ஒவ்வொரு அறையாக தேடும் பணி நடந்தது.
தாஜ் ஓட்டலில் இருந்து 22 உடல்கள் மீட்கப்பட்டதாக மத்திய உள்துறை சிறப்பு செயலாளர் எம்.எல்.குமாவத் நேற்று இரவு தெரிவித்தார்.


இதற்கிடையே, தீவிரவாதிகளின் தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 183 ஆக உயர்ந்துள்ளது. டிரைடண்ட் ஓட்டல் மற்றும் நரிமன் இல்லத்தில் இருந்து ஏராளமான உடல்கள் மீட்கப்பட்டதையடுத்து, சாவு எண்ணிக்கை இந்த அளவுக்கு உயர்ந்துள்ளது.
295 பேர் காயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
துப்பாக்கி சண்டையில் மொத்தம் 14 தீவிரவாதிகள் கொல்லப்பட்டு உள்ளனர். ஒரு தீவிரவாதி தப்பி ஓடிவிட்டான். ஒருவன், உயிருடன் பிடிபட்டுள்ளான். அவனிடம் துருவித்துருவி விசாரணை நடந்து வருகிறது.

No comments: