கோவை, நவ.12-
இலங்கை தமிழர் பிரச்சினையில் மத்திய அரசு உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் கூறினார்.
தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் பொள்ளாச்சியில் நடைபெறும் `மரியாதை' பட சூட்டிங்கில் கலந்துகொள்வதற்காக நேற்று காலை விமானம் மூலம் கோவை வந்தார். கோவை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு விஜயகாந்த் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்ய முடியாது என்று சொல்லியிருப்பது பற்றி?
பதில்:- அது அவர்களுடைய உரிமை. அவர்கள் அறிவிக்கிறார்கள். யார்வேண்டுமானாலும், என்னவேண்டுமானாலும் குரல் கொடுக்கலாம். இந்திய அரசின் கடமை என்ன? இந்திய அரசு என்ன செய்யவேண்டும், உடனடியாக உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுவது நிறுத்தப்படவேண்டும். சமவாய்ப்பு, சம உரிமை எல்லோருக்கும் கிடைக்க வேண்டும்.
கேள்வி:- இதற்கு நிரந்தர தீர்வு என்ன?
பதில்:- போரை நிறுத்த வேண்டும், அரசியல் தீர்வுதான் முடிவாகும். இந்திய அரசுதான் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். சிங்களர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் சம உரிமை வேண்டும். அவர்கள் வீடு அவர்களுக்கு வேண்டும், நிலம் அவர்களுக்கு சொந்தமாக இருக்கவேண்டும். வேலைவாய்ப்பில் சம வாய்ப்பு கொடுக்க வேண்டும். சிங்களர்களுக்கு ஒருவேலை, தமிழர்களுக்கு ஒருவேலை என்று இருக்கக்கூடாது. சிங்களர்கள் 40 மார்க் வாங்கினால் பாஸ் என்றும், தமிழர்கள் 80 மார்க் வாங்கினால் பாஸ் என்றும், அதற்கு பிறகுதான் வேலைவாய்ப்பு என்றும் நிலைமை இருக்கக்கூடாது.
கேள்வி:- இலங்கை தமிழர்களுக்கு நிவாரணம் அனுப்பப்படுவது பற்றி என்ன சொல்கிறீர்கள்?
பதில்:- சுனாமியின்போது பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் போய் சேரவில்லை. நிவாரணம் அனுப்பப்படும் என்று சொல்வார்கள். ஆனால் போய் சேராது.
இவ்வாறு விஜயகாந்த் கூறினார்.
விஜயகாந்த் வந்த விமானத்தில் ம.தி.மு.க. பொது செயலாளர் வைகோவும் வந்திருந்தார். ஈரோடு செல்வதற்காக கோவை விமான நிலையத்தில் வைகோ இறங்கினார். முதலில் வெளியே வந்த விஜயகாந்திடம், விமானத்தில் வந்தபோது வைகோவை சந்தித்து பேசினீர்களா? என்று கேட்டதற்கு, "இருவரும் வெவ்வேறு இருக்கையில் அமர்ந்து இருந்தோம். ஒருவருக்கு ஒருவர் வணக்கம் தெரிவித்துக்கொண்டோம். மற்றபடி எதுவும் பேசவில்லை'' என்று விஜயகாந்த் தெரிவித்தார்.
அவரை தொடர்ந்து வெளியே வந்த வைகோவும், "மரியாதை நிமித்தம் இருவரும் வணக்கம் மட்டும் தெரிவித்துக்கொண்டோம். வேறு எதுவும் பேசவில்லை'' என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment