Monday, November 10, 2008

போரை நிறுத்த முடியாது இலங்கை அரசு திட்டவட்ட அறிவிப்பு

கொழும்பு, நவ.11-விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரண் அடையும் வரை போரை நிறுத்த முடியாது என்று இலங்கை அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்துக்கும் உச்ச கட்ட போர் நடைபெற்று வருவதால், அப்பாவி தமிழர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.

இதனால், இலங்கையில் போர் நிறுத்தம் செய்து சமரச பேச்சு நடத்த வேண்டும் என்று, தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் வற்புறுத்தி வருகிறார்கள். போர் நிறுத்தம் செய்ய இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்று மத்திய அரசுக்கும் கோரிக்கை விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய தயார் என்று, விடுதலைப்புலிகள் தரப்பில் கடந்த சனிக்கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. "இலங்கை அரசுதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை தன்னிச்சையாக மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நாங்கள் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டும்தான் ஈடுபட்டு வருகிறோம்'' என்று, விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு தலைவர் நடேசன் விளக்கம் அளித்து இருந்தார்.

ஏற்கனவே போர் நிறுத்தம் செய்ய இலங்கை அதிபர் ராஜபக்சே மறுத்துவிட்டார். விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரண் அடைந்தால் மட்டுமே போர் நிறுத்தம் என்று அவர் அறிவித்து இருந்தார். இந்த நிலையில், விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பையும் இலங்கை அரசு ஏற்க மறுத்துவிட்டது. இலங்கை விவசாயத்துறை மந்திரி மைத்ரிபாலா ஸ்ரீசேனா நேற்று பாராளுமன்றத்தில் இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.
"விடுதலைப்புலிகளுடன் இலங்கை அரசு போர் நிறுத்தம் செய்து கொள்ளாது. ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடையுங்கள் என்று ஏற்கனவே அவர்களிடம் தெரிவித்துவிட்டோம். எங்கள் நிலையில் எந்த மாற்றமும் இல்லை'' என்று அவர் அறிவித்தார். விடுதலைப்புலிகள் சரண் அடையாவிட்டால் அவர்கள் முற்றிலும் அழிக்கப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.

கடந்த அக்டோபர் 9-ந் தேதி அன்று கொழும்பில் நடைபெற்ற விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் மந்திரி ஸ்ரீசேனா உயிர் தப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார். மந்திரியின் உதவியாளர் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.
இலங்கை மந்திரியும், ராணுவ செய்தி தொடர்பாளருமான கெஹலிய ரம்புக்வெல்லாவும் விடுதலைப்புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை நேற்று நிராகரித்துவிட்டார். பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இதுபற்றி கூறியதாவது:-
"போர் நிறுத்தம் செய்ய தயார் என்று அறிவித்து இருந்தாலும் ஆயுதங்களை கீழே போடுவது பற்றி விடுதலைப்புலிகள் எந்த கருத்தையும் தெரிவிக்கவில்லை. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு தீவிரவாதத்தை கைவிட்டால் மட்டுமே போர் நிறுத்தம் பற்றி பரிசீலிக்க முடியும். விடுதலைப்புலிகளின் வலையில் இந்த நாட்டு மக்களை சிக்க வைக்க ராஜபக்சே அரசு தயாராக இல்லை.

ராணுவ செயலாளர் கோதபய ராஜபக்சே மற்றும் தலைமை ராணுவ தளபதி சரத்பொன்சேகா இருவரையும் படுகொலை செய்ய முயன்றதாலும் ஏராளமான அப்பாவி பொதுமக்கள் மற்றும் ராணுவத்தினரை கொன்று குவித்ததாலும்தான் விடுதலைப்புலிகளுக்கு எதிரான தற்போதைய தாக்குதல் தொடங்கப்பட்டது.
போர் நிறுத்தம் தொடர்பாக, விடுதலைப்புலிகளின் இரட்டைவேடம் பற்றி கடந்த 30 ஆண்டுகளில் எங்களுக்கு போதுமான அளவுக்கு அனுபவம் உள்ளது. தங்கள் நிலையை வலுப்படுத்திக்கொள்வதற்காகவே விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் கோருகிறார்கள்.''
இவ்வாறு ரம்புக்வெல்லா கூறினார்.
விடுதலைப்புலிகளின் தலைமையகமான கிளிநொச்சியை ராணுவம் நெருங்கிவிட்ட நிலையில், போர் நிறுத்த கோரிக்கையை இலங்கை அரசு பரிசீலிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

No comments: