Friday, November 21, 2008

மரணம் அடைந்த நடிகர் எம்.என்.நம்பியார் உடல் தகனம் நடந்தது



சென்னை, நவ.21-
மரணம் அடைந்த நடிகர் எம்.என்.நம்பியார் உடல் தகனம், சென்னையில் நேற்று நடந்தது. அவருக்கு நடிகர்-நடிகைகள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.

தமிழ் திரையுலகில் `வில்லன்' நடிப்பில் தனி முத்திரை பதித்தவர், எம்.என்.நம்பியார். எம்.ஜி.ஆர், சிவாஜிகணேசன், ஜெமினிகணேசன் போன்ற பழம்பெரும் கதாநாயகர்களில் இருந்து இளைய தலைமுறை கதாநாயகர்களான அர்ஜுன், விஜய் வரை பல தலைமுறை நடிகர்களுடன் நடித்தவர். திரையுலகை மீளா துயரில் ஆழ்த்திவிட்டு, நேற்று முன்தினம் அவர் மரணம் அடைந்தார்.
நடிகர்-நடிகைகள், அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்கள்.
கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்றிருந்த அவருடைய மூத்த மகன் சுகுமாரன் நம்பியார், கோவை சென்றிருந்த இளைய மகன் மோகன் நம்பியார் ஆகிய இருவரும் தந்தை மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், உடனடியாக சென்னை திரும்பினார்கள்.

நம்பியாரின் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக அவருடைய வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. `தினத்தந்தி' அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், லட்சிய தி.மு.க. தலைவர் விஜய டி.ராஜேந்தர், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (பிலிம்சேம்பர்) தலைவர் கே.ஆர்.ஜி, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம.நாராயணன், நடிகர்கள் எஸ்.எஸ்.ராஜேந்திரன், ரவிச்சந்திரன், கே.பாக்யராஜ், கார்த்திக், பிரகாஷ்ராஜ், ராமராஜன், பார்த்திபன், விஜயகுமார், விசு, விவேக், மனோஜ், ராஜீவ், லிவிங்ஸ்டன், ஒய்.ஜி.மகேந்திரன், நிழல்கள் ரவி, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ், கஞ்சா கருப்பு, நடிகைகள் வைஜயந்திமாலா, மீனா, குஷ்பு, சிம்ரன், ஷோபனா, பூர்ணிமா பாக்யராஜ், எம்.என்.ராஜம், கோவை சரளா, தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, கவிஞர் வைரமுத்து, டைரக்டர்கள் எஸ்.பி.முத்துராமன், அமிர்தம், எஸ்.ஏ.சந்திரசேகரன், ஷங்கர், கஸ்தூரிராஜா, இசையமைப்பாளர் சங்கர் கணேஷ், பட அதிபர்கள் `கலைப்புலி' எஸ்.தாணு, சங்கிலி முருகன், பிரமிட் நடராஜன், திருவான்மிர் வட்டார நாடார் சங்க செயலாளர் திருப்புகழ் நாடார் மற்றும் ஏராளமான திரையுலக பிரமுகர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.

பொதுமக்கள் அஞ்சலிக்குப்பின், எம்.என்.நம்பியார் உடலுக்கு குடும்ப முறைப்படி இறுதி சடங்குகள் நடைபெற்றன.
பிற்பகல் 2.30 மணிக்கு அவருடைய உடல் ஊர்வலமாக பெசன்ட்நகர் மின்சார மயானத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. அங்கு அவருடைய உடல் தகனம் நடந்தது.
நம்பியாரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து, மும்பையில் இருந்து நடிகர் அமிதாப்பச்சன் இரங்கல் செய்தி அனுப்பி இருந்தார். அதில், ``மிக சிறந்த நடிகரை, ஆன்மிகவாதியை, நல்ல மனிதரை இந்த சமூகம் இழந்து விட்டது'' என்று குறிப்பிட்டு இருந்தார். செல்போன் மூலமும் தொடர்புகொண்டு நம்பியாரின் மகன் சுகுமாரன் நம்பியாரிடம், அமிதாப்பச்சன் துக்கம் விசாரித்தார்.

பெங்களூரில் இருந்து நடிகை சரோஜாதேவி அனுதாபம் தெரிவித்தார். நம்பியாரின் மறைவு பற்றி அவர், நிருபரிடம் கூறியதாவது:-
``நம்பியார் மரணம் அடைந்த தகவல் அறிந்து, நான் மிகுந்த வேதனை அடைந்தேன். அவருடன் நான் 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து இருக்கிறேன். பரிசுத்தமான மனிதர். எப்போதும் தமாசாக பேசுவார். என்னை பார்க்கும்போதெல்லாம் பெங்களூரில் உள்ள ஒரு பத்திரிகையின் பெயரை சொல்லித்தான் கூப்பிடுவார்.
``எனக்கு கொஞ்சம் தண்ணீர் கொடு'' என்று கேட்பார். நீங்க குடிக்க மாட்டீர்களே என்று கேட்டால், ``நான் காவிரி தண்ணீரை சொன்னேன்'' என்பார். வயதானால் எல்லோருக்கும் முகம் மாறும். நம்பியாருக்கு கடைசி வரை முகம் மாறவில்லை. அது கடவுள் அருள்.
என் காலில் `ஆபரேஷன்' நடந்திருப்பதால், உடனடியாக சென்னை வர முடியவில்லை. வருகிற 8-ந் தேதி நேரில் வந்து துக்கம் விசாரிக்க முடிவு செய்து இருக்கிறேன்.''

இவ்வாறு சரோஜாதேவி கூறினார்.
மரணத்தை முன்பே அறிந்திருந்தார்
மறைந்த எம்.என்.நம்பியார் தனது மரணத்தை முன்பே அறிந்திருந்தார். மகன் சுகுமாரன் நம்பியார் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு புறப்பட்டபோது, ``எனக்கு 90 வயதாகி விட்டது. இதற்கு மேல் நான் தாங்க மாட்டேன். நான் போயிடுவேன்'' என்று சொல்லியிருக்கிறார்.
இந்த தகவலை சுகுமாரன் நம்பியார் சொல்லி, கண்கலங்கினார்.

No comments: