Monday, November 24, 2008

சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் ஜெயலலிதா அறிவிப்பு


சென்னை, நவ.25-
சட்டமன்ற கட்சி தலைவர்கள் கூட்டம் நடத்துவது மிகப்பெரிய மோசடி நாடகம் என்றும், கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்றும் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சிங்கள அரசால் இலங்கை தமிழர்கள் தாக்கப்படுவது குறித்து ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டம் கடந்த 14.10.2008 அன்று தி.மு.க. அரசால் கூட்டப்பட்டது. அந்த கூட்டத்தில், தமிழகத்தை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் 2 வார காலத்தில் பதவி விலகுவார்கள் என்ற அளவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசிய பிறகு, "மத்திய அரசின் நடவடிக்கை திருப்தி அளிப்பதாக இருக்கிறது'' என்று கூறி பாராளுமன்ற உறுப்பினர்களின் ராஜினாமாவிற்கு கருணாநிதி முற்றுப்புள்ளி வைத்தார்.

பின்னர், "இந்திய பேரரசு தனது செல்வாக்கை பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்ற அளவில் 12.11.2008 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் ஓர் தீர்மானம் இயற்றப்பட்டது.
அந்த தீர்மானத்தில் கலந்து கொண்டு அ.தி.மு.க. சார்பில் பேசிய சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், போர் நிறுத்தம் இல்லை என்று இலங்கை அதிபர் அறிவித்துவிட்டதால், ஏற்கனவே அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும், மத்திய அரசுக்கு கூட்டணி கட்சிகள் கொடுத்து வரும் ஆதரவை திரும்ப பெறவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

இந்த சூழ்நிலையில், 25.11.2008 அன்று காலை 10 மணியளவில் முதல்-அமைச்சரின் அறையில் சட்டமன்றத்தில் இடம் பெற்றுள்ள கட்சிகளின் தலைவர்கள் கூட்டம் கூட்டப்படும் என்று அழைப்பிதழை இன்று (24.11.2008) மாலை அனுப்பியிருக்கிறார் கருணாநிதி. இந்த கூட்டம் எதற்கு என்றே புரியவில்லை. இந்த கூட்டம் தேவையற்ற ஒன்று என்பதுதான் அ.தி.மு.க.வின் கருத்து.
இலங்கை தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண தவறிய மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், முதல்-அமைச்சர் கருணாநிதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாடு சட்டமன்ற பேரவையை கலைக்க வேண்டும்; தமிழகத்தை சேர்ந்த அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும்; மத்திய அரசுக்கு தமிழ்நாட்டை சேர்ந்த கூட்டணி கட்சிகள் கொடுத்து வரும் ஆதரவை விலக்கிக் கொள்ள வேண்டும் என்பது தான் அ.தி.மு.க.வின் நிலைப்பாடு.
இதனை உடனடியாக நிறைவேற்ற முன்வர வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்வதோடு, முதல்-அமைச்சர் கருணாநிதியால் நாளை கூட்டப்பட்டிருக்கும் சட்டமன்ற கட்சி தலைவர்களின் கூட்டத்தை அ.தி.மு.க. புறக்கணிக்கும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

No comments: