Friday, November 7, 2008

`ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் முறைகேடா?

`ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் முறைகேடா?பதவியை ராஜினாமா செய்யத் தயார்மத்திய மந்திரி ராசா பேட்டி
புதுடெல்லி, நவ.8-
`ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்து இருந்தால் எனது மந்திரி பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று மத்திய தொலைதொடர்புத் துறை மந்திரி ஆ.ராசா தெரிவித்தார்.
மொபைல் சர்வீசுக்கு தேவையான 2 ஜி `ஸ்பெக்ட்ரம்' (தொலைபேசி அலைவரிசை) ஒதுக்கீடு செய்ததில், மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சகம், முறைகேடாக, செல்போன் சேவையில் இல்லாத `ஸ்வான் டெலிகாம்' மற்றும் `னிடெக்' என்ற இரு நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ததாகவும், அந்த நிறுவனங்கள் தொலைதொடர்பு சேவையே செய்யாமல் தங்களது பங்குகளை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்று கொள்ளை லாபம் ஈட்டியுள்ளதாகவும், இதனால் மத்திய அரசுக்கு 60 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருப்பதாகவும் இடதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்த ஒதுக்கீடு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும், ஏற்கனவே நடந்த ஏலத்தை ரத்து செய்து விட்டு, புதிதாக ஏலம் விட வேண்டும் என்றும் அந்த கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்த குற்றச்சாட்டுகளை மத்திய தொலை தொடர்புத்துறை மந்திரி ஆ.ராசா பலமுறை மறுத்துள்ளார். இந்த நிலையில் அவர் நேற்று டெல்லியில் அவசரம், அவசரமாக நிருபர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அந்த கூட்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
`ஸ்பெக்ட்ரம்' ஒதுக்கீட்டில், `டிராய்' (இந்திய தொலைதொடர்பு ஒழுங்குமுறை ஆணையம்) அமைப்பின் பரிந்துரைகள் முழுக்க, முழுக்க கடைப்பிடிக்கப்பட்டு, முதலில் விண்ணப்பித்தவர்களுக்கு ஜி2 (இரண்டாம் தலைமுறைக்கான சேவை) தொடங்குவதற்கு அலைவரிசை ஒதுக்கீடு செய்யப்பட்டது. முறைகேடாக எந்த ஒதுக்கீடும் நடைபெறவில்லை.
புதிய நிறுவனங்களுக்கு 2ஜி விதிகளுக்கு உட்பட்டே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஜி2 அலைவரிசை ஒதுக்கீட்டின் போது பின்பற்றப்படும் நடைமுறை மற்றும் இதனால் அரசுக்கு எந்த வித நஷ்டமும் ஏற்படவில்லை என்பதை பிரதமர் மன்மோகன்சிங், நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோரை சந்தித்து ஏற்கனவே விளக்கம் அளித்துள்ளேன்.
மேலும், குற்றம் சாட்டப்பட்டுள்ள நிறுவனங்கள் தங்களது பங்குகளை விற்றது குறித்து விசாரணை நடத்தும்படி தொலை தொடர்பு ஆணையத்துக்கு உத்தரவும் பிறப்பித்து உள்ளேன்.
நாட்டில் பின் தங்கியுள்ள கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் தொலைபேசி சேவையை மேம்படுத்துவதற்காகவே தனியார் நிறுவனங்களுக்கு அலைவரிசை ஒதுக்கப்பட்டது. இந்த நடவடிக்கையால் தனியார் நிறுவனங்கள் சேவை தொடங்கிய உடனேயே அரசுக்கு சுமார் 5 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் கிடைக்கும்.
பயன்பாட்டில் இல்லாத தொலைபேசி அலைவரிசையை கண்டறிந்து மற்ற தொலைதொடர்பு நிறுவனங்களுக்கு அளித்ததால்தான் தொலைபேசி கட்டணம் குறைந்துள்ளது. 3-ம் தலைமுறைக்கான அலைவரிசை பெறுவதற்கு வருகிற ஜனவரி மாதம் திட்டமிட்டபடி ஏலம் விடப்படும். இதனால் தொலை தொடர்புத்துறையின் அதி நவீன தொழில் ட்ப வசதிகளை பொது மக்கள் பெறுவார்கள்.
சட்டத்துக்கு புறம்பாக ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால், தொலைதொடர்புத் துறை அமைச்சகம் சட்டத்தை மீறி நடந்து இருந்தால், எனது மந்திரி பதவியை நான் ராஜினாமா செய்யத் தயார்.மேற்கண்டவாறு மந்திரி ஆ.ராசா தெரிவித்தார்.

No comments: