Wednesday, November 12, 2008

பிரதமர் மன்மோகன் சிங்குடன் பராக் ஒபாமா டெலிபோன் பேச்சு

புதுடெல்லி, நவ.13-
அமெரிக்க அதிபராக வெற்றி பெற்றுள்ள பராக் ஒபாமா, நேற்று காலையில் பிரதமர் மன்மோகன் சிங்கை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.
தொலைபேசியில் பேச்சு
கடந்த 5-ந் தேதி நடந்த அமெரிக்க தேர்தலில் வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியை பெற்றுள்ள பராக் ஒபாமா, பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த தலைவர்களையும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி வருகிறார் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி உட்பட 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்களிடம் தன்னுடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.
ஆனால், முக்கிய நட்பு நாடாக உருவாகி உள்ள இந்தியாவின் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் அவர் பேசவில்லை. அதிபர் புஷ்சுக்கு ஆதரவாளர் என்பதால் மன்மோகன் சிங்கை ஒபாமா புறக்கணித்ததாக தகவல்கள் வெளியாகின. அதை மன்மோகன் சிங் மறுத்தார். இந்த நிலையில் நேற்று காலையில் ஒபாமா தொலைபேசியில் பேசினார்.
அப்போது மன்மோகன் சிங்கிடம் அவர் கூறியதாவது:-
இந்தியா வர ஆர்வம்
இந்தியா-அமெரிக்க நட்புறவு மிகவும் முக்கியமானது ஆகும். எனினும் இந்த அளவிலேயே திருப்தி அடையாமல் உறவை மேம்படுத்த வேண்டும். உலக அளவிலான அனைத்து முக்கிய பிரச்சினைகளிலும் இந்தியாவுடன் இணைந்து செயல்பட விரும்புகிறேன்.
இந்தியாவின் வளர்ச்சியில் உங்களுடைய (மன்மோகன் சிங்) பங்கு பாராட்டத்தக்கது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன் நிதி மந்திரியாகவும், தற்போது பிரதமராகவும் நீங்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறீர்கள். விரைவில் இந்தியாவுக்கு வருகை தர ஆர்வத்துடன் இருக்கிறேன்.
இவ்வாறு ஒபாமா தெரிவித்தார்.
ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உத்வேகம்
மன்மோகன் சிங் பேசுகையில், ``அமெரிக்க அதிபராக நீங்கள் (ஒபாமா) பெற்றுள்ள வரலாற்று சிறப்பு மிக்க வெற்றியின் மூலமாக உலகம் முழுவதும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களுக்கு உத்வேகம் ஏற்பட்டு உள்ளது. எதிர்வரும் சவால்களை முறியடித்து உங்களுடைய புதிய நிர்வாகம் வெற்றி பெற வாழ்த்துகள். நீங்களும் உங்கள் மனைவியும் இந்தியாவுக்கு வர வேண்டும். உங்களுக்கு சிறப்பான வரவேற்பு காத்து இருக்கிறது'' என்று ஒபாமாவிடம் கூறினார்.
அதிபராக வெற்றி பெற்று 8 நாட்கள் கழித்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் ஒபாமா பேசி இருக்கிறார். முன்னதாக கடந்த சனிக்கிழமை அன்று ஒபாமா தொடர்பு கொண்டதாகவும் அப்போது வளைகுடா நாடுகளுக்கு சென்றதால் அவருடன் பேச முடியவில்லை என்றும் மன்மோகன் சிங் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

No comments: