Wednesday, November 19, 2008

இலங்கை இன பிரச்சினைக்கு தீர்வு காண விடுதலைப்புலிகள் ஆதரவு கட்சிகளுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு


கொழும்பு, நவ.20-
இலங்கை இனப்பிரச்சினைக்கு தீர்வு காண வருமாறு விடுதலைப்புலிகள் ஆதரவு கட்சியான தமிழ் தேசிய கூட்டணி மற்றும் ஐக்கிய தேசிய கட்சி ஆகியவற்றுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார்.

இலங்கையில் விடுதலைப்புலிகள் வசம் இருக்கும் பகுதிகளை மீட்க ராணுவம் தீவிரமாக போரிட்டு வருகிறது. இதனால், அந்த பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகி இருக்கின்றனர். எனவே, போர் நிறுத்தம் செய்யுமாறு உலக அளவில் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.
எனினும் தீவிரவாதத்தை ஒடுக்கும் நடவடிக்கையில்தான் ராணுவம் ஈடுபட்டு இருப்பதாக இலங்கை அதிபர் ராஜபக்சே கூறுகிறார். இந்த நிலையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண வருமாறு விடுதலைப்புலிகள் ஆதரவு அரசியல் கட்சிகளுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்து இருக்கிறார். இது குறித்து வெளியுறவு மந்திரி ரோஹிதா பொகலகாமா கூறியதாவது:-

விடுதலைப்புலிகளுடன் செய்து கொண்ட போர் நிறுத்த ஒப்பந்தம் முறிந்தபோதிலும் இலங்கை அரசு உறுதியான முடிவை எடுத்துள்ளது. ஒரு அரசியல் தீர்வை நோக்கியே இலங்கை அரசு செல்கிறது. இனப்பிரச்சினைக்கு அரசியல் ரீதியாக இறுதி தீர்வு காண வருமாறு ஐக்கிய தேசிய கட்சி மற்றும் விடுதலைப்புலிகளின் ஆதரவை பெற்ற தமிழ் தேசிய கூட்டணி ஆகிய கட்சிகளுக்கு அதிபர் ராஜபக்சே அழைப்பு விடுத்து உள்ளார்.
அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் கமிட்டியின் தலைவரும் அறிவியல் மந்திரியுமான திஸா விடரனா சமர்ப்பித்த இடைக்கால திட்டங்களை கடந்த ஜனவரி மாதம் அதிபர் ராஜபக்சே ஏற்றுக் கொண்டதோடு உடனடியாக அமலுக்கு கொண்டு வந்தார். அதன் காரணமாக கிழக்கு மாகாணத்தில் ஜனநாயக அரசு மலர்ந்து தமிழர் ஒருவர் முதல்-மந்திரியாக இருக்கிறார். மக்களின் கையில் ஆட்சி அதிகாரம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.

தீவிரவாதத்தை ஒடுக்கும் பணியில் மட்டுமே ராணுவம் முழுவீச்சில் ஈடுபடுத்தப்படுகிறது. அரசியல் பிரச்சினைகளை அரசியல் தீர்வு மூலமாகவே முடிவுக்கு கொண்டு வர முடியும் என்பதை சர்வதேச சமுதாயத்துக்கு ராஜபக்சே மீண்டும் உறுதி அளிக்கிறார். அரசியல் சட்டத்தின் 13-வது பிரிவை அமலுக்கு கொண்டு வருவதில் இலங்கை அரசு உறுதியாக இருக்கிறது.
அண்டை நாடான இந்தியா உடன் இலங்கை அரசுக்கு நெருக்கமான உறவு உள்ளது. இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், இரண்டு நாடுகளின் உயர்மட்ட தலைவர்களும் பரஸ்பரம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகின்றனர். தனியாக பேச்சுவார்த்தையும் நடைபெறுகிறது.
இவ்வாறு பொகலகாமா தெரிவித்தார்.

முன்னதாக இலங்கை பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் அவர் உரையாற்றியபோது, "இலங்கையில் தீவிரவாதத்தை ஒடுக்க சர்வதேச நாடுகளின் உதவியும் ஆதரவும் கிடைக்கிறது. இந்தியா, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் இருதரப்பு உறவுகள் மேம்பாடு அடைந்துள்ளன. இலங்கையில் உள் கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள சீனா பெரிய அளவில் உதவி செய்கிறது. ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக ஜப்பானில் இருந்து 25 சதவீதம் அதிகமாக உதவி கிடைக்கிறது''என்றார்.

No comments: