Sunday, November 9, 2008

விடுதலைப்புலிகளின் போர் நிறுத்தத்தை இலங்கை அதிபர் ஏற்பாரா?

கொழும்பு, நவ.10-
போர் நிறுத்தம் செய்யத் தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் அறிவித்து இருப்பதை இலங்கை அதிபர் ராஜபக்சே ஏற்றுக் கொள்வாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இலங்கை பாராளுமன்றத்தில் பேசிய அவர், விரைவில் கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டு அங்கு தேர்தல் நடத்தப்போவதாக தெரிவித்து உள்ளார்.
இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும், அரசுக்கும் இடையே கடந்த 2002-ம் ஆண்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது. நார்வே நாட்டின் முயற்சியால் இது சாத்தியமானது. ஆனால், சிங்கள இனவாத கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக்கு வந்த ராஜபக்சே, இரண்டு ஆண்டுகளுக்கு முன் விடுதலைப்புலிகள் மீது தாக்குதலை தொடங்கினார்.
இதையடுத்து விடுதலைப்புலிகளும் பதில் தாக்குதல் நடத்தினர். சில மாதங்களுக்கு முன், போர் நிறுத்தம் ஒப்பந்தம் முறிந்து விட்டதாக இலங்கை அரசு அறிவித்தது. அதன் காரணமாக நார்வே அரசு அதிர்ச்சி அடைந்தது. இலங்கை அரசின் இந்த செயலுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் பான்-கி-மூன் வருத்தம் தெரிவித்தார்.
தற்போது முழு அளவிலான போர் நடந்து வருவதால் லட்சக்கணக்கான அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே, போரை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கை வலுவடைந்து இருக்கிறது. இலங்கை அரசை மத்திய அரசு நிர்ப்பந்தம் செய்ய வேண்டும் என்று அரசியல் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
ஆனால், `போர் நிறுத்தம் என்பது ஒரு தரப்புக்கு மட்டும் பொருந்தாது. விடுதலைப்புலிகளும் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும்' என்று தமிழக முதல்வர் கருணாநிதி இரண்டு நாட்களுக்கு முன் தெரிவித்தார். இந்திய கம்னிஸ்டு செயலாளர் தா.பாண்டியனும் விடுதலைப்புலிகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்றார்.
இந்த நிலையில், போர் நிறுத்தம் செய்ய தயாராக இருப்பதாக விடுதலைப்புலிகள் நேற்று முன்தினம் அறிவித்தனர்.
இது குறித்து அரசியல் பிரிவு தலைவர் நடேசன் கூறுகையில், "போர் நிறுத்தம் செய்வதில் விடுதலைப்புலிகளுக்கு எந்த தயக்கமும் கிடையாது. போர் நிறுத்தம் நீடிக்க வேண்டும் என்பதே எங்களுடைய உறுதியான நிலைப்பாடு. அதில் எந்த மாற்றமும் கிடையாது. தற்போது கூட இலங்கை அரசுதான் தன்னிச்சையாக போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி தாக்குதல் நடத்தி வருகிறது. நாங்கள் தற்காப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டுள்ளோம்'' என்றார்.
ஆனால், விடுதலைப்புலிகளின் போர் நிறுத்தத்தை அதிபர் ராஜபக்சே ஏற்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இலங்கையின் நிதி மந்திரி பொறுப்பையும் தன் வசம் வைத்திருக்கும் அதிபர் ராஜபக்சே, வரும் 2009-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை கடந்த வியாழக்கிழமை அன்று இலங்கை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அதில், ராணுவத்துக்கு மட்டும் இலங்கை பணத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கி இருக்கிறார். இது கடந்த ஆண்டை விட ரூ.4 ஆயிரம் கோடி அதிகம் ஆகும். விடுதலைப்புலிகளுடன் போரிடுவதற்காகவே இவ்வளவு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு இருக்கிறது.
பட்ஜெட்டை தாக்கல் செய்து விட்டு ராஜபக்சே பேசுகையில், "விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு ஜனநாயக பாதையில் இணைய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் ராணுவ நடவடிக்கை நீடிக்கும். தீவிரவாதம் முற்றிலுமாக அழிக்கப்படும். இலங்கையின் வடக்கு பகுதியில் சிறு இடத்தில் மட்டுமே தீவிரவாதம் இருக்கிறது. அந்த பகுதியை ராணுவம் மீட்ட பிறகு, வடக்கு மாகாணத்தில் தேர்தல் நடத்தப்படும்'' என்றார்.
கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கு பகுதிகளை ராணுவம் மீட்டாலும் விடுதலைப்புலிகளின் கொரில்லா தாக்குதல்கள் நீடிக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. அதை சமாளிக்க ராணுவ வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் தளவாடங்களை வாங்கி குவிக்கவும் ரூ.20 ஆயிரம் கோடியை செலவிட ராஜபக்சே தீர்மானித்து இருக்கிறார்.
இதற்கிடையே, இலங்கை ராணுவமும் விமானப்படையும் கிளிநொச்சியில் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. பரந்தன் சந்திப்பில் உள்ள கடல் புலிகளின் தலைமையகம் மீதும் விடுதலைப்புலிகளின் பீரங்கி நிலைகளின் மீதும் நேற்று பிற்பகலில் விமான தாக்குதல் நடந்தது. ஒரே சமயத்தில் நடந்த இந்த தாக்குதல்களில் விடுதலைப்புலிகள் தரப்புக்கு பலத்த சேதம் ஏற்பட்டதாக ராணுவம் தெரிவித்து உள்ளது.
இதுபோல அக்கராயன் குளம், பல்லாலி, பூனாடிகுளம், மாங்குளம் ஆகிய பகுதிகளை ராணுவம் கைப்பற்றி விட்டது. விடுதலைப்புலிகளின் 3 பதுங்கு குழிகளும் அழிக்கப்பட்டன. முல்லைத் தீவில் அந்தன் குளம் பகுதியிலும் ராணுவம் தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது.
இந்த சூழ்நிலையில், தமிழ் ஐக்கிய விடுதலை முன்னணியின் தலைவர் வீரசிங்கம், யாழ்ப்பாணம் பகுதியில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். கொழும்பு திரும்பியதும் அதிபர் ராஜபக்சேயிடம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments: