Saturday, January 24, 2009

விடுதலைப்புலிகள் பதிலடி: 1500 ராணுவத்தினர் பலி!. முல்லைத் தீவில் பாசன குளம் புலிகளால் தகர்ப்பு!.





கொழும்பு:

இலங்கை ராணுவத்தினர் முல்லைத் தீவை நோக்கி தொடர்ந்து முன்னேறி வருவதால், அவர்களை தடுத்து நிறுத்தும் வகையில், களமடுகுளம் என்ற ஒரு பெரிய பாசனக் குளத்தை புலிகள் தகர்த்தனர். இதில் இலங்கை ராணுவ வீரர்கள் பலர் உயிர் இழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.


இந்த குளம் உடைப்பு தொடர்பாக இலங்கை விமானப்படை வெளியிட்டுள்ள வீடியோ காட்சிகளில், குளம் உடைந்து தண்ணீர் வெளியேறுவதும் அதனால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்திருப்பதும் தெரிய வந்துள்‌ளது. இதுவரை 500 இலங்கை ராணுவத்தினரின் சடலங்களை மீட்டிருப்பதாக புலிகள் தரப்பில் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ராணுவ அதிகாரிகள் கூறியதாவது: முல்லைத் தீவின் தென்பகுதியில் உள்ள புதுக்குடியிருப்பில் புலிகளின் மேலும் இரண்டு முகாம்களை ராணுவத்தினர் கைப்பற்றினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்தது. இந்த இரண்டு முகாம்களிலும் தங்குவதற்கு ஏற்ற வகையிலான சொகுசான வசதிகள் மற்றும் சுகாதார வசதிகள் இருந்ததால், புலிகளின் முக்கியத் தலைவர்கள் சிலர் இங்கு தங்கியிருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

ராணுவத்தினர் முன்னேறி வருவதை தடுக்கும் வகையில், கல்மாடுகுளம் என்ற பாசனக் குளத்தையும் நேற்று காலை புலிகள் வெடிவைத்து தகர்த்தனர். இதனால், அப்பகுதியில் 5 சதுர கி.மீ., அளவுக்கு தண்ணீர் பரவியுள்ளது. இவ்வாறு ராணுவ அதிகாரி கூறினார்.

இதற்கிடையில், மக்கள் தஞ்சம் அடைந்துள்ள பகுதிகளில் இலங்கை ராணுவத்தினர் நேற்று நடத்திய தாக்குதலில் 10 பேர் பலியானதாகவும் 20 பேர் காயம் அடைந்ததாகவும், கடந்த மூன்று நாட்களில் 50 பேர் பலியானதாகவும், 100 பேர் காயம் அடைந்ததாகவும் புலிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, January 20, 2009

நாடு முழுவதும் விழாக்கோலம்: அமெரிக்காவின் 44வது அதிபராக பதவியேற்றார் பராக் ஒபாமா - முழுமையான செய்தி தொகுப்பு.


வாஷிங்டன்:

வாஷிங்டன் நகரில் நடந்த கோலாகல விழாவில், அமெரிக்காவின் அதிபராக, பராக் ஒபாமா நேற்று பதவி ஏற்றார். கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர், அமெரிக்க அதிபராக பதவியேற்பது இதுவே முதல் முறை.


கடும் பொருளாதார நெருக்கடியையும், வேலை இழப்பையும் அமெரிக்கா சந்தித்துவரும் நிலையில், 44வது அதிபராக ஒபாமா பதவியேற்பது, அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

கென்ய நாட்டைச் சேர்ந்த கருப்பின தந்தைக்கும், அமெரிக்காவின் கென்சாசை சேர்ந்த வெள்ளையின தாய்க்கும் பிறந்தவர் ஒபாமா. தந்தை கருப்பர் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒபாமாவும் கருப்பர் இனத்தவராக கருதப்படுகிறார். அவர் ஹவாயிலும், இந்தோனேசியாவிலும் சில காலம் வளர்ந்தவர். சாதாரண பணியாளராக வாழ்க்கையை துவக்கி, அமெரிக்காவின் மிக உயரிய பதவியை அடைந்துள்ளார்.


ஹாவர்டு பல்கலைக் கழகத்தில் வக்கீலாக பட்டம் பெற்றவர்.இதுவரை, இனப் பாகுபாடு காரணமாக அடிமைகளாகவும், அதைத் தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவும் தாங்கள் பாவிக்கப்படுவதாக கருதிவரும் ஆப்ரிக்க அமெரிக்கர்கள் மத்தியில், ஒபாமா அதிபராக பதவியேற்றது எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்கும் முன் ஒபாமாவை, வெள்ளை மாளிகையின் வடக்கு போர்டிகோவில் வரவேற்றார், பதவி விலகிய அதிபர் புஷ். பின் அங்கிருந்து, பதவியேற்பு விழா நடக்கும் அரங்குக்கு இருவரும் சென்றனர்.கடந்த 1861ம் ஆண்டு, அமெரிக்க அதிபராக ஆபிரகாம் லிங்கன் பதவியேற்ற போது, அவர் பயன்படுத்திய பைபிள் புத்தகத்தில் கைவைத்தபடியே, அதிபர் பதவியேற்பு உறுதிமொழியை எடுத்துக் கொண்டார் ஒபாமா.

பதவியேற்பு விழாவை ஒட்டி, காபிடல் அரங்கம் பகுதி முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. உளவுத்துறையை சேர்ந்தவர்கள், குறிபார்த்து சுடுவதில் பெரும் திறமை பெற்றவர்களும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு இருந்தனர். எந்தவித அசம்பாவிதங்களும் நடக்காத வகையில், விழாவுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

அமெரிக்கா மட்டுமின்றி, வெளிநாட்டில் வசிக்கும் அமெரிக்கர்களும் லட்சக்கணக்கில், அங்கு குழுமியிருந்து, ஒபாமாவுக்கு வாழ்த்து கோஷங்கள் எழுப்பினர். வாஷிங்டன் நகரம் மட்டுமின்றி, அமெரிக்கா முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.இந்திய நேரப்படி இரவு 10.00 மணிக்கு அமெரிக்க காபிடல் கட்டடத்தின் மேற்கு அரங்கில் இசை நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது.

அமெரிக்க அரசின் கடற்படை பேண்டு குழுவினர், சான் பிரான்சிஸ்கோ , சான் பிரான்சிஸ்கோ கிரிஸ் இசைக்குழு அமைப்பினர் கலந்து கொண்டு இசை நிகழ்ச்சியை பிரமாதப்படுத்தினர்.கலிபோர்னியாவை சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் டயயானி பெயன்ஸ்டீன், கூட்டு பார்லிமென்ட் கமிட்டியின் தலைவர் என்ற வகையில் வரவேற்புரை ஆற்றி, விழாவை துவக்கி வைத்தார்.

துணை அதிபர் ஜோ பிடெனுக்கு சுப்ரீம் கோட் இணை நீதிபதி ஜான் பால் ஸ்டீவன்ஸ் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பின், ஜான் வில்லியம்சின் இசை நிகழ்ச்சி நடந்தது.நாட்டின் முதல் பெண்மணியாகும் மிச்சேல், ஆபிரகாம் லிங்கன் பயன்படுத்திய பைபிளை எடுத்து வந்து, கையில் பிடித்திருக்க, அதன் மீது கைவைத்தபடி பதவி பிரமாணம் எடுத்தார் புதிய அதிபர் ஒபாமா.


சரியாக 10.38 மணிக்கு அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். 10.45 மணிக்கு உரை நிகழ்த்தினார். பின்னர் வெள்ளை மாளிகைக்கு சென்றார்.ஒபாமா பதவியேற்பு விழாவை ஒட்டி நகரின் மையப்பகுதிகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, வாகனப் போக்குவரத்து முழுமையாக நிறுத்தப்பட்டு இருந்தது.தற்போது, 47 வயதாகும் ஒபாமாவிடம் இருந்து, சிக்கலான நிலையை சந்தித்துவரும் அமெரிக்கர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எதிர்கட்சியினர், கடுமையான விஷயங்களில் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று ஏற்கனவே, ஒபாமா அழைப்பு விடுத்திருந்தார்.

இனப்பாகுபாடு ஒழிவதற்காகவும், கருப்பர், வெள்ளையர் சமத்துவத்துக்காகவும் கடுமையாக போராடி மறைந்த, மனித உரிமை தலைவர் மார்டின் லூதர் கிங் ஜூனியர் கல்லறையில் நேற்று முன்தினம் அஞ்சலி செலுத்திய ஒபாமா, "மக்களுக்கு இந்த நாடு நிறைய செய்யவேண்டியுள்ளது' என்று குறிப்பிட்டார்.தன்னை எதிர்த்து அதிபர் தேர்தலில் போட்டியிட்ட குடியரசுக் கட்சி வேட்பாளர் ஜான் மெக்கெய்னுக்கு நேற்று முன்தினம் விருந்து அளித்து கவுரவித்தார் ஒபாமா. இதில், வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சர் காலின் பாவெல், துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பிடென் ஆகியோரும் கலந்து கொண்டனர். அப்போது, அதிபர் தேர்தல் விவாதங்களின் போது நடந்த, சுவாரசியமான விஷயங்களை பகிர்ந்து கொள்ள மெக்கெய்ன் தயங்கவில்லை. கலகலப்பாக விருந்து நடந்து முடிந்தது.

அதிபராக ஒபாமா பதவியேற்றதும், புஷ்ஷின் எட்டு ஆண்டு அதிபர் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. உடன் புஷ், அவரது மனைவி, குழந்தைகள் மற்றும் சிலர் அங்கிருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஆண்டிரீஸ் விமானப்படை தளத்துக்கு சென்றனர். அங்கு விமானப்படை விமானம் தயாராக நிறுத்தப்பட்டு இருந்தது.அதில், தன் சொந்த ஊரான டெக்சாசுக்கு புறப்பட்டுச் சென்றார்.

டெக்சாஸ், மிட்லாந்தில் தரையிறங்கிய புஷ், அங்கு அளிக்கப்பட்ட வரவேற்பை ஏற்றுக் கொண்ட பின், கிராபோர்டு பகுதியில் உள்ள தன் வீட்டுக்கு சென்றடைந்தார்.புஷ் அதிபராக பதவி வகித்த காலத்தின் கடைசியில், நாட்டின் பல தலைவர்களுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.


ரஷ்யா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, டென்மார்க், தென்கொரியா, இஸ்ரேல், பிரேசில், ஜப்பான், பிரிட்டன் உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களை தொடர்பு கொண்டு பேசினார்.பதவிக்காலம் முடிவுக்கு வரும் கடைசி நாளான்று, 189 கைதிகளுக்கு மன்னிப்பும், ஒன்பது பேருக்கு தண்டனைக் கால குறைப்பும் வழங்கினார். இதற்கு முன், கிளின்டன் பதவி விலகும் போது, 396 பேருக்கு மன்னிப்பும், 61 பேருக்கு தண்டனைக் குறைப்பும் வழங்கினார். அதிபர் ரீகன் பதவி விலகும் போது, 393 பேருக்கு மன்னிப்பும், 13 கைதிகளுக்கு தண்டனைக் குறைப்பும் வழங்கியிருந்தார்.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்ப்பு!.




வாஷிங்டன்:

எல்லா நாடுகளுக்கும் அமெரிக்கா நண்பனாக இருக்கும் என பதவியேற்றதும் மக்களுக்கு ஆற்றிய உரையில் ஒபாமா பேசும் போது குறிப்பட்டார்.

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழா வாஷிங்டனில் உள்ள தேசிய அரங்கில் கோலாகலமாக துவங்கியது. விழாவை பிரபல குரு ஒருவர் பிரார்த்தனையுடன் துவக்கி வைத்தார். தொடர்ந்து சிறப்பு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இசை நிகழ்ச்சி நடக்கும் போது பொதுமக்களும் இணைந்து பாடினர்.

தொடர்ந்து அவர் பேசுகையில் நாட்டில் பொருளாதார நிலைமை பெரும் சரிவில் இருக்கிறது. நாட்டு முன்னேற்றத்திற்கு நாம் கடுமையாக உழைக்க வேண்டியுள்ளது. இத்தனை நாளாக அதிபராக இருந்த புஷ் நாட்டின் முன்னேற்றத்திற்காக கடுமையாக உழைத்துள்ளார். அவர் தியாகம் போற்றத்தக்கது. அவருக்கு நான் நன்றி சொல்கிறேன். அமெரிக்காவை பொறுத்தவரை உலகில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் நண்பன் . துணையாக இருப்போம். என்றார் அதிபர் ஒபாமா.

அமெரிக்க அதிபராக பராக் ஒபாமா பதவியேற்றார். அவருக்கு நீதிபதி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து மக்களிடம் பேசினார். அப்போது அவர் , முன்னாள் அதிபர் புஷ் நாட்டுக்காக பெரும் தியாகம் செய்துள்ளார். என்றார். முன்னதாக துணை அதிபராக ஜோ பிடன் பதவியேற்றார். அவருக்கு நீதிபதி ஜான்பால் ஸ்டிவன்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பைபிள் மீது கை வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

பதவியேற்பு விழா நடக்கும் மேடைக்கு இந்திய நேரப்படி (இரவு 10. 15 மணிக்கு) வந்தார். இவரது முன்னும் பின்னும் மூத்த அதிகாரிகளும் , பாதுகாப்பு துறை மூத்த அதிகாரிகளும் வந்தனர். இவர் வந்தபோது குழுமியிருந்த மக்கள் ஆரவார கரகோஷம் எழுப்பினர். உற்சாகம் பொங்கி எழுந்ததை காண முடிந்தது.

அமெரிக் துணை அதிபராக ஜோ பிடன் பதவியேற்றார். அவருக்கு நீதிபதி ஜான்பால் ஸ்டிவன்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பைபிள் மீது கை வைத்து உறுதிமொழி எடுத்துக்கொண்டார்.

Wednesday, January 14, 2009

இது உண்மையா? - பாகம் - ஒன்று.


அன்புசால் தமிழ் பெருமக்களே!.

தினமலர் நாளிதழில் "புலிகளுடன் தமிழக தலைவர்கள் ஆயுத வியாபாரம்"
எனும் தலைப்பில், இலங்கை அரசில் நியமன எம்.பி.,யாக பதவியில் உள்ள,
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ராணுவத் தளபதியாக இருந்தவர் கருணா அம்மான் "தினமலர்' இதழுக்கு அவர் அளித்த விரிவான பேட்டி- யை படித்ததும் துணுக்குற்றேன்.

விடுதலைப் புலிகள், தமிழகத் தலைவர்கள் இதற்கு பதில் சொல்லவேண்டும்.
சொல்வார்களா?.
அன்புடன்,
யுகா @ யுகநேசன் .
"தினமலர்' பேட்டி இதோ :

புலிகளுடன் தமிழக தலைவர்கள் ஆயுத வியாபாரம்

""புலிகளுக்குத் தேவையான பயங்கர ஆயுதங்களை தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள், தமிழகத்தில் இருந்து கடல் வழியாகக் கடத்தப்படுகின்றன. இந்த கடத்தலின் பின்னணியில் தமிழகத்தில் புலி ஆதரவு பேசும் தலைவர்கள் இருக்கின்றனர். கடத்தலை முறியடிக்க இலங்கை ராணுவம் முயலும் போது தான், தமிழகத்தின் அப்பாவி மீனவர்களும் பாதிக் கப்படுகின்றனர்,'' இப்படி அதிர்ச்சியான தகவலை தெரிவித்திருப்பவர் புலிகள் இயக் கத்தில் ராணுவப் பொறுப்பில் இருந்த கருணா அம்மான்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் ராணுவத் தளபதியாக இருந்தவர் கருணா அம்மான். இலங்கை மட்டக் களப்பு மாவட்டத்தில் விவசாயக் குடும்பத்தில், விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற பெயரில் பிறந்த இவர், '83ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, கருணா அம்மானாக மாறினார். படிப்படியாக உயர்ந்து புலிகளின் ராணுவப்பிரிவு தலைமை தளபதியாக இருந்து, இலங்கை அரசுப் படைக்கு எதிராக போர்க்களங்களில் நின்றவர். இலங்கையின் வடக்குப்பகுதி முழுவதையும், போர் நடவடிக்கையால் புலிகள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தவர்.

தற்போது, இலங்கை ராணுவ வசமாகியுள்ள கிளிநொச்சி, ஆனையிறவு போன்ற பகுதிகளில் இருந்த ராணுவ முகாம்களை தாக்கி அழித்து அவற்றை புலிகள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். பிரபாகரனோடு ஏற்பட்ட மோதலால், 2004ம் ஆண்டு புலிகள் இயக்கத்தில் இருந்து வெளியேறிய இவர், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள்(டி.எம்.வி.பி.,) என்ற அமைப்பைத் துவக்கினார். இலங்கை கிழக்கு மாகாணத்தில் இவரது கட்சி தான் தற்போது ஆட்சியில் உள்ளது. இலங்கை அரசில் நியமன எம்.பி.,யாக பதவியில் உள்ளார். இவர், புலிகளின் ராணுவத் தளபதியாக இருந்த போது பிடித்த பகுதிகள் முழுவதும் இப்போது மீண்டும் ராணுவக் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளன.

இலங்கையில் புலிகளின் நிலைக்களங்களை ராணுவம் முழுவதுமாக அழித்து, உள்நாட்டுப் போர் முடிவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையில் கடுமையான பாதுகாப்பு கெடுபிடிகளுக்கு இடையே, "தினமலர்' இதழுக்கு அவர் அளித்த விரிவான பேட்டி:

உங்கள் குடும்ப பின்னணி பற்றி...

இலங்கை மட்டக்களப்பு மாவட்டத்தில் வயல்களின் ஊடாக இருக்கிறது எனது சொந்த கிராமம்; அருகில் கடலும் உண்டு. அப்பா விவசாயி. சொந்தமாக நிலம் இருந்தது. அம்மாவின் குடும்பத்தில் அனைவரும் படித்தவர்கள். நாங்கள் ஐந்து பேர். நான் கடைசியாக பிறந்தவன். எங்கள் அனைவரையும் அப்பா நன்கு படிக்க வைத்தார். படித்து பட்டம் பெற்று அனைவரும் நல்ல நிலையில் இருக்கின்றனர். குடும்பத்தில் எதற்கும் குறைவில்லாமல் மகிழ்ச்சியாகவே இருந்தது.

இலங்கைத் தமிழர் போராட்டத்தில் ஈடுபட்டதற்கு நேரடியான பாதிப்புகள் எதுவும் உங்களுக்கு இருந்ததா?

இது பற்றி விரிவாக சொல்ல வேண்டும். '83ம் ஆண்டு குடாநாட்டில் அரசியல் ரீதியான போராட்டங்கள் தீவிரமாகியிருந்தன. ஆதே ஆண்டு ஜூலை 23ம் தேதி நடந்த போராட் டத்தின் போது, 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் இலங்கை முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. தமிழர்களுக்கு எதிராக துவேஷங்கள் விதைக்கப்பட்டன. அப்போதைய சிங்கள அரசியல்வாதிகள் இப்பிரச்னையை மிகவும் மோசமாக கையாண்டு, இனமோதலை உருவாக்கினர்; இலங்கையில் கலவரம் வெடித்தது. கிட்டத் தட்ட ஐந்தாயிரம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்; உடைமைகள் நாசமாக்கப்பட்டன. கொழும்பில் கலவரம் தீவிரமாக இருந்தது. கலவரத்தில் சிதைந்து போன பல குடும்பங்கள், எங்கள் பகுதிக்கு அகதிகளாய் தஞ்சம் வந்தனர்.

அவர்கள் சொன்ன விஷயங்கள் கடுமையான அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தின. இலங்கை முழுவதும் கொந்தளிப்பான நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பு இது தொடர்பான துண்டு பிரசுரங்களை கிராமங்கள் தோறும் வெளியிட்டு பிரசாரம் செய்தது. அதில் இருந்த விஷயங்கள் எங்களை ஈர்த்தன. இதைத் தொடர்ந்து எங்கள் பகுதியில் இருந்து 20 இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்தோம். உடனடியாக பயிற்சிக்காக வல்வெட்டித்துறையில் இருந்து, தமிழகத்தின் கோடியக்கரைக்கு படகில் அனுப்பினர். அங்கிருந்து மதுரை சென்றோம். அங்கு தான் பிரபாகரனை சந்தித்தோம். சேலம், கொளத்தூரில் இருந்த மையத்தில் தான் நான் பயிற்சி எடுத்தேன். இந்திய அரசு எங்கள் போராட்டத்தை ஆதரித்து, எல்லாவகை உதவியையும் செய்ததை இப்போதும் நன்றியுடன் நினைவு கூர்கிறேன்.

நீங்கள் புலிகளுடன் சேர்ந்த காலத்தில் இலங்கையில் பல்வேறு விடுதலை இயக்கங்கள் தோன்றியிருந்ததே...

பிளாட், ஈரோஸ், டெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப்., என்று பல அமைப்புகள் இருந்தன. இவை எல்லாமே இந்தியாவில் உதவி பெற்றன. ஆனால், இவைகளில் இல்லாத அமைப்பு ரீதியான ஒழுக்கம் புலிகள் இயக்கத்தில் இருந்தது. குடிப்பது, பெண்கள் மீதான தவறான கண்ணோட்டம் போன்ற பல்வேறு விஷயங்களில் தீவிரமான தனி மனித ஒழுக்கத்தை கடைபிடித்தது. எங்கள் குடும்பம் ஏற்கனவே கட்டுப்பாடு ஒழுக்கத்தை அதிகமாக வலியுறுத்தியது. இந்த பின்னணியால் தான் புலிகள் இயக்கத்தை தேர்ந்தெடுத்தேன்.

ஒழுக்கமான இயக்கத்தைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தில் தங்கியிருந்த போது, பல நேரங்களில் தங்களுக்குள் மோதிக் கொள்வதும், பொதுமக்களுடன் மோதிக்கொள்வதையும் நடைமுறையில் கடைபிடித்தார்களே.

1986ம் ஆண்டு தீபாவளியன்று சென்னை சூளைமேட்டில் சாலையில் சென்றவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினார்களே. பாண்டி பஜாரில் துப்பாக்கியால் மோதிக்கொண்டார்களே...

உண்மை தான். விடுதலை இயக்கம் என்று இந்தியாவால் அங்கீகரிக்கப்பட்டு, சகல உதவிகளையும் பெற்ற நாங்கள், அதன் பின் தான் உலக நாடுகள் பலவற்றாலும் விடுதலைப் போராளிகள் என்று அங்கீகரிக்கப்பட்ட நாங்கள், எப்படி பயங்கரவாதிகளாக மாற்றம் பெற்றோம் என்பதை சொல்ல வேண்டும்.விடுதலை இயக்கமாக அங்கீகரிக்கப்பட்டதை, அமைப்பின் தலைவராக இருந்த பிரபாகரன் முறையாகப் பயன்படுத்தவில்லை. அவரது எதேச்சதிகாரமான போக்கும், ஆணவமும், வரட்டு கவுரவமும் இதை பயங்கரவாத இயக்கமாக மாற்றியது.

இந்திய அமைதிப்படையை அனுப்பி சமாதான முயற்சி நடந்தபோது, பல்வேறு பிரச்னைகள் நடந்தன. அவற்றை அத்துடன் விட்டிருக்க வேண்டும். ஆனால், நன்றி மறந்து, இந்தியாவுக்குள் புகுந்து, அங்கு ராஜிவ் காந்தியை கொலை செய்துவிட்டார். இப்படித்தான், இயக்கத்தை எதேச்சதிகாரமாக பயங்கரவாத இயக்கமாக மாற்றிவிட்டார்.

ராஜிவ்காந்தியை கொலை செய்வது பற்றிய முடிவு எடுத்த போது நீங்கள் உடன் இருந்தீர்களா? அப்போது இயக்க ரீதியாக விமர்சனங்கள் சொல்லப்படவில்லையா?

தெரியவே தெரியாது. ஆண்டன் பாலசிங்கத்துக்குக் கூட தெரியாது.

கொலை நடந்து முடிந்த உடனேயாவது தெரியுமா?

அப்போதும் தெரியாது. பின்னர், சிவராசன் ஆட்கள் பெங்களூரில் பிடிபட்டார்களே, அதுக்குப்பிறகு தான் இயக்கத்தில் அனைவருக்கும் தெரிந்தது. சிவராசனை அனைவருக்கும் தெரியும் என்பதால், இதை இயக்கம் தான் செய்தது என்று தெரிந்தது. தொடர்ந்து இயக்கத்தில் அது தொடர்பான விமர்சனங்கள் எழுந்தன. நானும் எனது கருத்தை தெரிவித்தேன். விடுதலைக்காக இயங்கிக் கொண்டிருக்கும் நாம், இது போன்ற செயல்களை செய்வது தேவையற்றது. இது இயக்கத்தை பாதிக்கும் என்று சொன்னேன்.பிரபாகரன் அதை நியாயப்படுத்தினார். அமைதிப்படை செய்த காரியம் சரியல்ல... "தமிழ்ப் பெண்களை அவர்கள் கற்பழித்தனர்' என்று, பல விஷயங்களைச் சொல்லி நியாயப்படுத்தினார். மற்றொரு நாட்டில் சென்று ஒரு தலைவரை கொல்வது நியாயமான செயல் அல்ல; இதை எந்த நாட்டுக்காரனும் ஏற்கமாட்டான் என்று சொன்னேன். அதை அவர் ஏற்காமல் மழுப்பி விட்டார்.

இந்த காரணத்தை முன்வைத்து இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர்கள் யாரும் உண்டா?

அப்படி யாரும் இல்லை. ஆனால் இனி இந்தியாவின் உதவி கிடைக்காது என்பது தெளிவாக தெரிந்தது. அதன்பின் தான், ஐரோப்பிய நாடுகளில் உதவி தேடப்பட்டது. தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டன.

இயக்கத்தை நடத்துவதற்கும், ஆயுதங்கள் வாங்குவதற்கும் பணம் வேண்டுமே. எந்த உற்பத்தியையும் சாராமல் இருந்த அமைப்புக்கு பணம் எப்படி வந்தது?

ஈழத் தமிழர்கள் அறிவாளிகள். பொருளீட்டுவதற்காக அவர்கள் பல நாடுகளுக்கும் சென்றனர். 40ம் ஆண்டு வாக்கிலே, ஐரோப்பிய நாடுகளில் குடியேறி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டவர்கள் ஏராளம். '83ம் ஆண்டு கலவரத்துக்குப்பின், வெளியேறி, ஐரோப்பா, அமெரிக்கா, கனடா என்று வெளிநாடுகளுக்கு சென்றவர்கள் ஏராளம். இவர்கள் மத்தியில் பிரசாரம் செய்து புலிகள் பணம் திரட்டினர். கண்டிப்பாக பணம் தரவேண்டும். அவர்கள் பற்றிய பட்டியல் இயக்கத்தில் இருந்தது. கண்டிப்பாக அவர்களிடம் பணம் வசூலிக்கப்பட்டது.

போராட்டத்துக்கான ஆயுதங்களை வாங்குவதற்கு பேரங்கள் நடத்தியது யார்?

கிழக்காசிய நாடுகளில் இருந்து தான் முதலில் ஆயுதங்கள் வாங்கப்பட்டன. கே.பி.என்., என்ற கே.பத்மநாபன் தான் ஆயுத பேரம் நடத்தியவர். கம்போடியா, இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து நாடுகளில் தான் வியாபாரிகளுடன் பேசி ஆயுதங்களை வாங்கி அனுப்புவார். அதன்பின், உக்ரேன் நாட்டில் இருந்து ஆயுதங்கள் வாங்கப்பட்டன. சீன தயாரிப்புகளும், உக்ரேன் கம்பெனிகள் மூலம் எங்களுக்கு கிடைத்துக் கொண்டிருந்தன.

ஆயுதங்களை சிக்கலின்றி எப்படி கொண்டு வந்தீர்கள்?

வெளிநாடுகளில் உள்ள வர்த்தக கம்பெனிகள் பெயரில் உள்ள கப்பல்களில் அனுப்புவர். அதை யாரும் கண்டுபிடிக்க முடியாது. பெரும்பாலும் வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் பெயரில் இருந்த கப்பல்களில் தான் ஆயுதங்கள் வந்தன. பல நேரங்களில் உபயோகத்துக்கு இனி உதவாது என்ற நிலையில் உள்ள கப்பல்களில் தான் ஆயுதங்கள் கொண்டுவரப்படும். அத்துடன் அந்த கப்பல் அங்கேயே கிடக்கும்.

தமிழகத்தில் உள்ள தமிழர்கள் யாராவது ஆயுத ரீதியாக உதவி செய்திருக்கிறார்களா?

தமிழகத்தில் இருந்து ஆயுத ரீதியாக பல உதவிகள் கிடைத்திருக்கின்றன. வெடி பொருட்கள், கண்ணிவெடி செய்வதற்கான மூலப் பொருட்கள் தமிழகத்தில் இருந்து பலர் கடத்தி தந்துள்ளனர். அலுமினியம் பவுடர், பைபர் பிளாஸ்டிக் மெட்டரீயல் போன்றவையும் தமிழகத்தில் இருந்து கொண்டு வருவார்கள். அது இப்போது வரை கடத்தப்பட்டது. மன்னார்வளைகுடா வழியாத்தான் அதைக் கொண்டு வருவார்கள். இதை, இலங்கை ராணுவம் தற்போது தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது. எனவே இனி கடத்தல் நடத்துவது கடினம்.

தமிழகத்தில், புலி ஆதரவு பேசும் தலைவர்களுக்கு இந்த ஆயுதக் கடத்தல் பேரத்தில் தொடர்பு இருந்ததா?

இருந்தது. இந்த கடத்தலின் ஊடாகத்தான், நெடுமாறன் வந்திருக்கிறார். வைகோ வந்திருக்கிறார். எல்லாரும் இல்லீகலாகத்தான் வந்தனர்; கள்ளத்தோணியில் தான் வந்தனர்.

ஆயுத கடத்தல் ரீதியான நேரடி தொடர்பு தமிழக தலைவர்களுக்கு இருக்கிறதா?

இருக்கிறது; பணம் விடுதலைப் புலிகளால் வழங்கப்படுகிறது. இதுதான் உண்மையான விஷயம். தமிழர்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறும் பலத் தலைவர்களுக்கும் அந்த சப்போர்ட் தான், ஆயுதம் தயாரிப்பதற்கான மூலப் பொருட்கள் கடத்துவதற்கு உதவியாக உள்ளது. இதில் கிடைக்கும் பணம் தான் இவர்களை, புலிகளுக்கு ஆதரவாக பேச வைக்கிறது.

பணம் நேரடியாக தமிழகத் தலைவர்களுக்கு போய்ச் சேர்ந்ததா?

இல்லை. மீனவர்கள் போர்வையில் ஆயுத தயாரிப்புக்கான மூலப்பொருள் கடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல ஏஜென்டுகள், மீனவர்கள் போர்வையில் இதைச் செய்கின்றனர். இந்த ஏஜென்டுகளுக்கு பின்னணியில் புலி ஆதரவு பேசும் தமிழகத் தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் மூலமாக பணம் தாராளமாக போய் சேர்கிறது. இப்படி வரும் மூலப் பொருட்களை இலங்கை கடற்படை மடக்கிப் பிடிக்கிறது. இந்த கடத்தலை தடுக்கும் பொருட்டுத்தான், அடிக்கடி துப்பாக்கிச் சூடுகள் நடக் கின்றன. இலங்கை கடற்படை அனைவரையும் சந்தேகக் கண்ணுடன் பார்ப்பதால் தமிழகத்தில் பல அப்பாவி மீனவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இலங்கையில் தமிழர் வாழ்க்கை இவ்வளவு நெருக்கடிகளை சந்திக்க யார் காரணம்?

இன்றைக்கு இலங்கையில் இந்த அழிவுகளும் விளைகளும் யாரால் நடக்கிறது? அது பிரபாகரனால் தானே நடக்கிறது. இதை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இவருடன் நான் 22 ஆண்டுகள் இருந்திருக்கிறேன். ராணுவத்துடனான அனைத்து சண்டைகளையும் நான் தான் நடத்தினேன்.அவர் ஒரு முறை கூட போர்க்களத்துக்கு வந்தது கிடையாது. பிரபாகரன் என்றால் ஒரு டம்மி ஆள் போலத்தான். அரசியல் ரீதியாக முதிர்ச்சியடைந்த நபராக மாற்றுவதற்கு நாங்கள் முயற்சி செய்தோம். குறிப்பாக நானே அவரிடம் நேரடியாக பலமுறை பேசியுள்ளேன்.நான் ஒருவன் தான் அப்போது அவரிடம் பேச முடியும். இயக்கத்தின் செயல்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும். கொள்கைகளை மாற்ற வேண்டும். தனிநபர்களை கொல்வதை நிறுத்த வேண்டும்; பொதுமக்களை கொல்வதை நிறுத்த வேண்டும் என்று சொன்னேன்.

சிங்கள மக்களை கொலை செய்வதை நிறுத்த வேண்டும்; முஸ்லிம் மக்களுடன் இணக்கம் வேண்டும் என்று சொன்னேன்.புலிகள் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்களே...இது பிரபாகரனின் பாசிச மனநிலை. தான் என்ற அகங்காரத்தில் எடுத்த முடிவு. கிழக்கு மாகாணத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றிய போது நான் கடுமையாக எதிர்த்தேன். அங்கே தமிழ், சிங்கள, முஸ்லிம்கள் சேர்ந்து வாழ்கின்றனர். ஒருவரை ஒருவர் சார்ந்திருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. இதை வலியுறுத்தி சொன்னேன்.எதையும் கேட்கவில்லை. யாழ்ப்பாணம் பகுதியில் இருந்த முஸ்லிம்களை விரட்டியடித்தனர். வீடுகளில் இருந்த பொருட்களை சூறையாடினர். வர்த்தக மையங்களை கொள்ளையடித்து பொருட்களை தெருவில் போட்டு விற்றனர். நூறு கோடி ரூபாய்க்கு மேல் இப்படி பொருட்கள் விற்கப்பட்டது. ஒரு பொருளை கூட எடுத்துச் செல்வதற்கு அவர்கள் அனுமதிக்கப்படவில்லை.

இப்போது போர்க்களத்தில் நிற்கிற பானு என்பவர் தான் சூறையாடுவதற்கு தலைமை ஏற்றவர். இவையெல்லாம் மறையாத வடுக்கள். இவற்றையெல்லாம் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும். தமிழர் பிரச்னையை தீர்க்க பல வாய்ப்புகள் இருந்தன. பேச்சுவார்த்தைக்கு சாதகமான சூழ்நிலைகள் இருந்தன. இவை எதையும் பிரபாகரன் பயன்படுத்திக் கொள்ளவில்லை. பேச்சுவார்த்தைகளுக்கும் வாய்ப்பு அளிக்கவில்லை.

நீங்கள் இயக்கத்தை விட்டு வெளியேறுவதற்கு இவைதான் காரணமா...

நான் வெளியேறுவதற்கு பல காரணங்கள் இருந்தன. 22 ஆண்டுகள் நான் போர்க்களத்தில் இருந்துள்ளேன். சண்டைகளுக்கு தலைமை ஏற்றிருந்தேன். ராணுவப் பொறுப்பாளராக நான்தான் இருந்தேன். அமைப்பில் 25க்கும் மேற்பட்ட பிரிவுகள் உள்ளன. அவை ஒவ்வொன்றுக்கும் ஒரு பொறுப்பாளர் இருந்தனர்.அயல்நாட்டு உறவுக்கு என்று கூட பிரிவு இருக்கிறது. ராணுவத்துக்கு நான் தான் தலைமை பொறுப்பாளன். ஒரு நாட்டின் ராணுவ அமைப்பு போல் தான் செயல்பட்டோம். 30 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். இதில், ஆறாயிரம் பேர் பெண்கள்.ஒரு கட்டத்தில், அரசியல் தீர்வுக்கு வாய்ப்பு இருக்கும் போது ஏன் போராட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. குறிப்பாக 2000 ஆண்டுகளுக்கு பின், நடந்த பேச்சுவார்த்தைகளை கணக்கில் எடுக்க வேண்டும். 2001ம் ஆண்டில் நடந்த பேச்சுவார்த்தை முக்கியமானது.

சர்வதேச சமூகத்தின் கண்காணிப்புடன் பேச்சு நடந்தது. பேச்சு வார்த்தைக் குழுவில் நானும் ஒருவனாக நியமிக்கப்பட்டிருந்தேன். உலக நாடுகளில் நாங்கள் பேசினோம். சமஷ்டி முறையிலான தீர்வு ஒன்றை எடுப்பதற்கு முயற்சி செய்தோம். கடைசியில் நார்வேயில் நடந்த பேச்சு வார்த்தையில் ஓர் ஒப்பந்தத்தை பரிசீலிக்கிறோம் என்பதாக ஒரு அறிக்கையை தயாரித்து ஒப்பந்தம் போடப்பட்டது.இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போடுவதற்கான இறுதி வடிவம் தயாரித்து முடிவு எடுக்கப்பட்ட போது, நாங்கள் பிரபாகரனிடம் இது பற்றி கேட்கவில்லை.

அதற்கு ஒரு காரணம் இருந்தது. பேச்சு வார்த்தைக்கு எங்களை அழைத்த போதே, "பேச்சு பேச்சு என்று சொல்லி ஐந்து ஆண்டுகளை கடத்துங்கள். அதற்குள் ஆயுதங்களை வாங்கி குவித்து மீண்டும் தாக்குதல் நடத்தலாம்' என்று, பிரபாகரன் எங்களிடம் சொல்லி அனுப்பியிருந்தார்.நாட்களைக் கடத்துவது என்றால் விஷயம் இல்லாமல் முடியாது. ஐந்து வருடம் என்பது இயலாது. சர்வதேச சமூகமே இதை பார்த்துக் கொண்டிருக்கிறது. என்ன செய்ய முடியும். மீண்டும் காலம் கடத்த முடியாது. ஒப்பந்தத்தை பரிசீலிப்பதாகத்தான ஒப்பந்தத்தில்தானே கையெழுத்துப் போடுகிறோம். நீங்கள் போடுங்கள் என்று பாலசிங்கத்திடம் நான் சொன்னேன்.அவரும் சம்மதித்து கையெழுத்தைப் போட்டார்.

அதன்பின்தான் சொன்னார், "இதை நான் அங்கு கொண்டு வந்தால், பிரபாகரன் என்னை சுட்டுப்போடுவான். நான் என்ன செய்ய' என்றார். "நார்வேயிலிருந்து நீங்கள் நேராக லண்டனுக்கு போய்விடுங்கள். ஒப்பந்த பத்திரத்தை நான் கொண்டு போகிறேன்' என்று சொன்னேன்.நானும், தமிழ்ச்செல்வனும் ஒப்பந்தத்துடன் இலங்கைக்கு கொண்டு வந்து மொழிப் பெயர்ந்து பிரபாகரனிடம் கொடுத்தோம். இதைப் பார்த்ததும் மிகுந்த கோபப்பட்டார். அதைத் தூக்கி வீசி எறிந்தார் பிரபாகரன். புலிகள் அமைப்புக்குள் நடந்த பயங்கர மோதலால் 6,000 போராளிகள் வெளியேறினர்.


இவ்வாறு பேட்டியளித்து . . பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். கருணா அம்மான்.
தினமலர் இதழுக்கு அளித்த பேட்டி தொடர்ச்சி "இது உண்மையா? - பாகம் - இரெண்டு" - என விரைவில் இந்த வலைதளத்தில் பார்க்கலாம்.

நன்றி:
தினமலர் நாளிதழ்.

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், நாளை இலங்கை செல்கிறார்!.


புதுடெல்லி, ஜன.15-

இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், நாளை (வியாழக்கிழமை) இலங்கை சென்று முக்கிய தலைவர்களை சந்தித்து பேசுகிறார்.

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கு எதிரான ராணுவ தாக்குதல் உச்ச கட்டத்தை அடைந்துள்ளது.

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலையை தடுத்து நிறுத்த உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று, தமிழக தலைவர்கள் கடந்த சில மாதங்களாக மத்திய அரசை வற்புறுத்தி வருகிறார்கள்.

இலங்கை தமிழர் பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலமாக தீர்வு காண முடியாது என்றும், பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காண வேண்டும் என்று, மத்திய அரசும் கருத்து தெரிவித்து இருந்தது.

தமிழக தலைவர்களின் வேண்டுகோளை ஏற்று, வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி இலங்கை செல்வார் என்று பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்து இருந்தார். ஆனால், அவருடைய இலங்கை பயணம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில், வெளியுறவுத்துறை செயலாளர் சிவசங்கர் மேனன், இலங்கை செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.


அவர், நாளை (வியாழக்கிழமை) இலங்கை தலைநகர் கொழும்பு செல்கிறார். இலங்கையின் வெளியுறவு மந்திரி உள்ளிட்ட உயர் மட்ட தலைவர்களுடன் பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் பேச்சு நடத்துகிறார். இலங்கை அதிபர் ராஜபக்சேவையும் அவர் சந்தித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரான கிளிநொச்சி மற்றும் ஆனையிறவு போன்ற முக்கிய தளங்களை கைப்பற்றிய இலங்கை ராணுவம், தற்போது அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரே பகுதியான முல்லைத்தீவை நோக்கி முன்னேறி வருகிறது.

இந்த சூழ்நிலையில், இந்திய வெளியுறவுத்துறை செயலாளரின் இலங்கை பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Monday, January 12, 2009

அமெரிக்க அதிபர் பரக் ஒபாமா பதவியேற்பு விழா!.

வாஷிங்டன்:

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவிற்கு, வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.வரும் 20ம் தேதி, அமெரிக்காவின் புதிய அதிபராக பரக் ஒபாமா பதவி ஏற்கிறார்.
அமெரிக்க அரசியலில் முதல் முறையாக கறுப்பர் இனத்தைச் சேர்ந்த ஒருவர் அதிபராக பதவி ஏற்கவுள்ளார். இவரின் பதவியேற்பு விழா, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வெகு சிறப்பாக நடக்கவுள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த விழாவில் 20 லட்சம் பேர் கலந்து கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த விழாவிற்காக நகரின் மையப் பகுதியில் 3.5 சதுர கி.மீ., அளவிற்கு தடுப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது.


நாடு முழுவதிலும் இருந்து 96 பிரிவுகளைச் சேர்ந்த 8,000 அதிகாரிகள் இந்த பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். பொடோமாக் ஆற்றில் உள்ள பாலத்தை மூடி விட்டனர். விர்ஜினியா மாகாணத்தில் இருந்து வரும் பாலங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.

அதிநவீன ஆயுதங்கள் ஏந்திய பாதுகாப்பு வீரர்கள், குண்டு துளைக்காத கண்ணாடி, வானில் பறந்து கொண்டிருக்கும் பைட்டர் விமானம், ரகசிய கண்காணிப்பு போன்றவை இந்த பாதுகாப்பின் சிறப்பம்சங்கள்.

வாஷிங்டன் நகருக்கு வரும் முக்கிய இரு பாதைகளிலும் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.







இந்நிலையில், விழாவிற்கு வருவோர் ரயிலில் வர வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

திருமங்கலம் வெற்றி தி.மு.க. சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம் கருணாநிதி பேட்டி!


சென்னை ஜன. 12-

திருமங்கலம் இடைத் தேர்தல் வெற்றி குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியை இன்று கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நிருபர்கள் சந்தித்து கருத்து கேட்டனர்.

நிருபர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது குறித்து உங்கள் கருத்து?.

பதில்: கடந்த பொது தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்த இடத்தில் இப்போது மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இது தி.மு.க. ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கருதுகிறேன்.

வெற்றி கனி வழங்கிய திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த கழகத்தினருக்கும், தோழமை கட்சியினருக்கும், அதன் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கேள்வி: கம்யூனிஸ்டு கட்சிகளும், பா.ம.க.வும் ஆதரவு அளிக்காத நிலையில் திருமங்கலத்தில் கிடைத்துள்ள வெற்றி குறித்து..?

பதில்: உங்களுக்கே தெரியும். அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தராதது மட்டுமல்ல, கடுமையாக தாக்கியும் பேசினார்கள்.

கேள்வி: இந்த வெற்றியால் கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி னாலும் உங்கள் அணிக்கு இழப்பு இல்லை என கருதுகிறீர்களா?

பதில்: அதைப்பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.

கேள்வி: இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளதாக கருது கிறீர்களா?

பதில்: நாங்கள் வெற்றி பெறாவிட்டால், இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக வெற்றி என்று வெற்றி பெற்ற கட்சிகள் சொல்லி இருப்பார்கள். நீங்களும் சொல்லி இருப்பீர்கள்.

கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் உங்களை மீண்டும் சந்தித்து கூறி இருக்கிறாரே?

பதில்- இலங்கையில் நடைபெறும் படுகொலைகள், ராணுவ தாக்குதல்கள், தமிழ் இன அழிவுகள் இவைகள் எல்லாம் என்னுடைய உள்ளத்தையும் உணர்வுள்ள அனைவரது உள்ளத்தையும் உலுக்கி கொண்டிருக்கிறது.

இது பற்றி தான் டாக்டர் ராமதாஸ்,வீரமணி, திருமாவளவன் ஆகியோர் என்னி டம் பேசும் நிலை ஏற்பட்டது. அவர்கள் என்னை சந்தித்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழி வகை காண வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

நான் மீண்டும் இதற்காக முயற்சிகள் மேற் கொண்டு சோனியா காந்தியையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்பு கொண்டு பேசுவதாக உறுதி அளித்துள்ளேன். அப்படி பேசும் வாய்ப்பு ஏற்படும் போது, இலங்கையில் ஏற்படும் போர் நிறுத்தத் தால், இலங்கை தமிழர்களுக்கு நன்மை என்பதோடு, இந்தியாவுக்கும் பெருமை என்று எடுத்துக் சொல்வேன்.

கேள்வி: மீண்டும் டெல்லி சென்று நேரடியாக வலியுறுத்துவீர்களா?.

பதில்: இப்போது எதுவும் சொல்ல முடியாது. போனில் பேசுவோம் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டால் செல்வோம்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.

திருமங்கலம் வெற்றி பற்றிய செய்தி கிடைத்ததால் முதல்-அமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.பேட்டியின் போது அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

கருணாநிதியுடன் ராமதாஸ்-கி.வீரமணி, திருமாவளவன் சந்திப்பு; இலங்கை பிரச்சினை பற்றி ஆலோசனை!.




சென்னை, ஜன. 12-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இன்று சந்தித்து பேசினர்.

9.30 மணி முதல் 10.25 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் வெளியே வந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதற்காக நாங்கள் மூன்று பேரும் கையெழுத்திட்டு முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் ஒரு மனு கொடுத்துள்ளோம்.

இலங்கையில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் இலங்கை அரசு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்த போது தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட 15 கட்சி கள் அதில் இடம் பெற்றன.

அப்போது ஒரு குறைந்த பட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் இலங்கை தமிழர் களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றி வைப்பதற்கான அமைதிபேச்சு வார்த்தைகள் நடைபெறுவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆதரவாக செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 15 கட்சி தலைவர் களும் கையெழுத்தும் போட்டுள்ளோம். இதை முதல்-அமைச்சரிடம் சுட்டி காட்டினோம். தமிழ் நாட்டில் ஓட்டு மொத்த தமிழர்களும் ஒன்றுபட்டு எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் மரியாதை இல்லை.

இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக சொல்ல வில்லை. அமெரிக்கா, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் எல்லாம் போரை நிறுத்தி விட்டு பேச்சு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.

இலங்கை பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்று பல முறை மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் பாராளுமன்றத்தில் பேசியும் உள்ளனர். 7 கோடி தமிழக மக்களும் எடுத்த முயற் சிகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. நாங்கள் கருணாநிதியிடம் ஒரு வேண்டுகோள் வைத் துள்ளோம். மீண்டும் உடனடியாக மத்திய அர சிடம் பேசுங்கள், போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்துங்கள் என்று கூறினோம். அவரும் இன்று பேசுவதாக சொல்லி இருக்கிறார். அதை ஒரு அறிக்கையாக வெளியிடவும் கேட்டு கொண்டுள்ளோம்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திருமாவளவன் கூறும் போது, "இலங்கை தமிழர் களை காப்பாற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளோம்'' என்றார்.

கி.வீரமணி கூறுகையில், இலங்கையில் 4 லட்சம் அப்பாவி தமிழர்கள் முல்லைத்தீவில் பாது காப்பு இல்லாமல் உள்ள னர். உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். தமிழர்களை அழிக்கும் முயற்சிக்கு துணை போவதாக இந்திய அரசின் நிலைப்பாடு இருக்க கூடாது.

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்'' என்றார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே.மூர்த்தி எம்.பி. ஆகியோர் உடன் சென்றனர்.

Friday, January 9, 2009

டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு !.



தமிழகம் ஜனவரி 09,

எண்ணெய் நிறுவன அதிகாரிகள் மற்றும் டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் பெட்ரோல், டீசலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இருசக்கர வாகன ஓட்டிகள் பெட்ரோல் கிடைக்காமல் அவதிக்கு ஆளாகியுள்ளதோடு, டீசல் கிடைக்காததால் அரசு மற்றும் தனியார் வாகனங்கள் மற்றும் பஸ்கள் நிறுத்தப்படும் அபாயமும் உருவாகியுள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த கொதிப்படைந்துள்ளனர்.

"இருக்கிற சம்பளம் போதாது; இன்னும் வேண்டும்' என, வலியுறுத்தி எண்ணெய் நிறுவன அதிகாரிகள் நேற்று முன்தினம் முதல், காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் உள்ளிட்ட 13 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களைச் சேர்ந்த 55 ஆயிரம் அதிகாரிகள் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தைச் சேர்ந்த அதிகாரிகள் மட்டும் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் ஸ்டிரைக்கில் பங்கேற்கவில்லை. இருப்பினும், கச்சா எண்ணெய் எடுப்பதில் துவங்கி அவற்றை சுத்திகரித்து பெட்ரோல், டீசலாக மாற்றி "பங்க்'களுக்கு அனுப்புவது வரையிலான அனைத்து பிரிவு அதிகாரிகளும் ஸ்டிரைக்கில் ஈடுபட்டுள்ளதால், பணிகள் பாதிப்படைந்துள்ளன.

ஸ்டிரைக்கில் ஈடுபடப் போவதாக அதிகாரிகள் அறிவித்திருந்தாலும், "விரைவில் பெட்ரோல், டீசல் விலை குறையும்' என்ற அரசின் அறிவிப்பு காரணமாக பெட்ரோல் "பங்க்'கள் அதிக அளவில் ஸ்டாக் வைக்கவில்லை. இதனால், குறைவான அளவில் இருந்த பெட்ரோல், டீசல் விற்றுத் தீர்ந்து, நேற்று காலை முதலே தட்டுப்பாடு ஏற்படத் துவங்கியது.

லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக டேங்கர் லாரிகளும் நேற்று முன்தினம் இரவு முதல் ஸ்டிரைக்கில் ஈடுபட்டன. இதனால், "பங்க்'களுக்கு பெட்ரோல், டீசல் சப்ளை செய்வதில் பாதிப்பு அதிகரித்தது. தமிழகம் முழுவதும் 3,300 பெட்ரோல் "பங்க்'களும், சென்னையில் 300 "பங்க்'களும் உள்ளன. சென்னையில் உள்ள பாதிக்கும் மேற்பட்ட "பங்க்'களில் நேற்று காலை முதல் கூட்டம் அலைமோதியது.

இருசக்கர வாகனங்கள், ஆட்டோக்கள், கார்கள் என ஒரே நேரத்தில் பெட்ரோல் "பங்க்'களை முற்றுகையிட்டன. கூட்டத்தைச் சமாளிக்க முடியாததால், "ரேஷன்' முறை அமல்படுத்தப்பட்டது. மினரல் வாட்டருக்கு பயன்படுத்தப்படும் 20 லிட்டர் கேன்களை எடுத்துவந்த ஆட்டோ டிரைவர்கள், அதை நிரப்பித் தருமாறு கேட்டனர். பெட்ரோல் "பங்க்' ஊழியர்கள் மறுப்பு தெரிவித்ததால் வாக்குவாதமும், பரபரப்பும் ஏற்பட்டது.

அனைத்து "பங்க்'களிலும் கூட்டம் நிரப்பியிருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தட்டுப்பாட்டைக் காரணம் காட்டி ஆட்டோ டிரைவர்கள் பலர் வாடகையை உயர்த்தியதால் பயணிகள் அவதியடைந்தனர். இதே நிலை நீடித்தால், பள்ளி, கல்லூரிகளுக்கு இயக்கப்படும் வேன்களும், ஆட்டோக்களும், பஸ்களும் இயங்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அதே நேரத்தில், மாநகர பஸ்கள், அரசு பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயங்குமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இதனால், பொதுமக்கள் மிகுந்த கொதிப்படைந்துள்ளனர்.

Wednesday, January 7, 2009

தி.மு.க. ஆட்சியில் வன்முறை நடப்பதாக குற்றம் சுமத்துவதா? ஜெயலலிதாவுக்கு கருணாநிதி கண்டனம்


சென்னை, ஜன.8-

தி.மு.க. ஆட்சி காலத்தில் வன்முறைகள் நடப்பதாக ஜெயலலிதா கூறியுள்ளதற்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கண்டனம் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கேள்வி:- திருமங்கலம் தொகுதி நிலவரம் பற்றி கருத்து கூறிய தலைமை தேர்தல் கமிஷனர் கோபால் சாமி "முன்பு பீகார்- இப்போது தமிழ்நாடு'' என்ற அளவிற்கு கூறி வருத்தப்பட்டதாக செய்திகள் வந்துள்ளதே?

பதில்:- அவர் கூறியிருப்பது- பீகார் போன்ற மாநிலங்களில் ஏற்கனவே தேர்தல் நடைபெற்றபோது அதிக அளவில் வன்முறை, அதற்கு தேர்தல் கமிஷன் துணை என்பதைப் போல சிலர் பிரசாரம் செய்ததை நினைவிலே கொண்டு, தற்போது தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வேண்டுமென்றே கோளாறு செய்கிறார்கள் என்ற குற்றச்சாட்டை ஜெயலலிதா, கோபால்சாமி, தா.பாண்டியன் போன்றவர்கள் கற்பனை செய்து சொல்லியிருப்பதால் "முன்பு பீகார்- இப்போது தமிழ்நாடு'' என்று ஒப்பிட்டுச் சொல்லியிருப்பாரென்று கருதுகிறேன்.

ஏனென்றால் இவ்வளவு பெரிய குற்றசாட்டினை தேர்தல் நேரத்தில் தலைமை தேர்தல் கமிஷனர் அந்தஸ்தில் இருப்பவர் யாரும் சாட்டியதில்லை. ஜெயலலிதா சொன்னது போல் அப்படி வாக்குப்பதிவு இயந்திரத்தில் நடக்குமானால் தேர்தல் கமிஷன் ஒன்றே தேவையில்லை அல்லவா?


கேள்வி:- சில காவல் துறை அதிகாரிகளின் பெயர்களை சொல்லி அவர்களை பதவி நீக்கம் செய்யும் வரையில் ஓய மாட்டேன் என்று முன்னாள் முதல்-அமைச்சர், இந்நாள் எதிர்க்கட்சி தலைவர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?

பதில்:- அவர் பதவியிலே இருந்த போது அதிகாரிகளையெல்லாம் சவுக்கால் அடித்து வேலை வாங்குவதாகச் சொன்னவர் ஆயிற்றே! அவர் ஆட்சியிலே இருந்த போது தேர்தல் ஆணையம் காவல்துறை அதிகாரி ஒருவரை மாற்றம் செய்ய வேண்டுமென்று ஆணை பிறப்பித்தபோது, அதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கே சென்றவர்தான் ஜெயலலிதா.

கேள்வி:- திருமங்கலம் வாக்காளர்களை விலைக்கு வாங்க முடியாது என்று வைகோ பேசியிருக்கிறாரே?

பதில்:- முயற்சி செய்து கண்ட அனுபவத்தினை கூறியிருக்கிறார் போலும்.


கேள்வி:- திருமங்கலத்தில் தா.பாண்டியன் பேசும் போது, உங்கள் பக்கம் வெற்றுக்காற்று தான் வீசுவதாகவும், அவர்கள் பக்கம் வீசுவது தான் வெற்றி காற்று என்றும் பேசியிருக்கிறாரே?

பதில்:- அவர் பக்கம் கரன்சி காற்று வீசுவதாகத்தான் அந்த கட்சியிலே உள்ள அடி மட்டத் தொண்டர்களே கூறிக்கொள்கிறார்கள்.

கேள்வி:- திருமங்கலத்தில் பேசிய ஜெயலலிதா ஒவ்வொரு கூட்டத்திலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறாரே?

பதில்:- தேர்தலை நடத்துவது தன்னாட்சி அதிகாரம் கொண்ட மத்திய தேர்தல் கமிஷன். ஜெயலலிதாவும், வைகோவும், தா.பாண்டியனும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்து குற்றஞ்சாட்டுவதற்கு தேர்தல் ஆணையம் தான் பதிலளிக்க வேண்டும். அவர்களும் பதிலளித்து விட்டார்கள். இருப்பினும் தொடர்ந்து இந்த குற்றச்சாட்டைக் கூறி வருகிறார்கள்.

கேள்வி:- "இரண்டு ஏக்கர் இலவச நிலம் தருவதாக கூறிவிட்டு, பொருளாதார மண்டலம், தகவல் தொழில் நுட்ப பூங்கா என்று விளைநிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. ஏழைகளின் நிலங்களை பறித்து வருகிறார்கள். அந்த நிலங்களையெல்லாம் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பதுதான் அ.தி.மு.க. ஆட்சி செய்யப்போகும் முதல் வேலை'' என்று ஜெயலலிதா திருமங்கலத்தில் சொல்லியிருக்கிறாரே?
பதில்:- அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களைப் பயன்படுத்தி நிலமற்ற ஏழை, எளியவர்களுக்கு இலவசமாக நிலம் வழங்கும் திட்டத்தை தி.மு.கழக அரசு கொண்டு வந்தது உண்மை தான். அந்த திட்டத்தின் கீழ் 15-12-2008 வரை 2 லட்சத்து 10 ஆயிரத்து 39 ஏக்கர் நிலம், 1 லட்சத்து 74 ஆயிரத்து 853 பேருக்கு வழங்கப்பட்டது.

அவர்கள் எல்லாம் அந்த நிலத்தில் உழுது பயிரிட்டு பயன் பெற்று வருகிறார்கள் என்று பேட்டியும் கொடுத்துள்ளார்கள். அவர்களிடம் உள்ள நிலத்தைத் தான் மீட்கப் போவதாக ஜெயலலிதா சொல்லியிருக்கிறார். உண்மையிலேயே மீட்கப்பட வேண்டியது ஜெயலலிதா கும்பலால் ஆக்கிரமிக்கப்பட்டு கைவசப்படுத்தப்பட்டுள்ள தலித்களுக்கு சொந்தமான சிறுதாவூர் பகுதிகளிலே உள்ள நிலங்களைத் தான்! அதைத்தான் தற்போது அவர்களுடன் கூட்டணியாக உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலச் செயலாளர் வரதராஜனும் கூறி வருகிறார்.

கேள்வி:- நடுநிலையோடு இருந்து பணியாற்ற வேண்டிய இடத்தில் இருக்கும் சில அதிகாரிகள் இப்போதெல்லாம் ஒரு தரப்பாகப் பேசுவது சரியா?

பதில்:- ரத்தம் தண்ணீரை விட வலிமை வாய்ந்தது என்பது பழமொழி.


கேள்வி:- ஜெயலலிதா இடைத்தேர்தல் பிரசாரத்தில் இன்றைய ஆட்சியில் வன்முறை நடைபெறுவதாக கூறியிருக்கிறார். அவருடைய ஆட்சியிலே என்ன நிலை?

பதில்:- 15-8-1981-ல் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மீது திருச்சியில் காரை மறித்து தாக்குதல்.

29-10-1991 அன்று ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் ரமேஷ் காரில் சென்ற போது தாக்குதல்.

13-3-1992 அன்று மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் பி.சொக்கலிங்கம் காரில் கடத்தப்பட்டு தாக்கப்பட்டார். 19.5.1982 அன்று ஐ.ஏ.எஸ். பெண் அதிகாரி சந்திரலேகா மீது எழும்பூர் ரெயில் நிலையம் அருகே ஆசிட் பாட்டில் வீசப்பட்டு தாக்கப்பட்டார்.

10.12.92 அன்று சட்டப்பேரவை முன்னாள் தலைவர் ராஜாராம் வீட்டிற்குள் 15 பேர் புகுந்து தாக்குதல் நடத்தினர்.

14.12.92 அன்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியசாமி உயர்நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே 100 பேர் கொண்ட ஆளுங்கட்சியினரால் தாக்கப்பட்டார்.

11.5.93 அன்று எம்.ஜி.ஆர். மன்ற மாநிலத் தலைவராக இருந்த எம்.ஜி.சுகுமார் ராமநாதபுரம் மாவட்டத்தில் நிகழ்ச்சி முடிந்து வந்து கொண்டிருந்து போது தாக்கப்பட்டார்.

19.6.94 அன்று திருச்சியில் எஸ்.ஆர்.ராதா அ.தி.மு.க.வினரால் தாக்கப்பட்டார்.

12.7.94 அன்று அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் அனந்தகிருஷ்ணனை வீட்டிலேயே சென்று பத்து பேர் தாக்கினர்.

21.7.94 அன்று வழக்கறிஞர் விஜயன் சென்னையில் அவரது வீட்டிலே தாக்கப்பட்டார்.

10.11.94 அன்று உப்பிலியாபுரம் சட்டமன்ற உறுப்பினர் ரவிச்சந்திரன் சென்னையில் தாக்கப்பட்டார்.

2.12.94 அன்று மத்திய தேர்தல் கமிஷனர் சேஷன் விமான நிலையத்தில் கேரோ செய்யப்பட்டு, பின் அவர் தங்கியிருந்த ஓட்டலிலும் தாக்கப்பட்டார்.

8.2.95 அன்று ராணிப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மோகன் என்பவர் அரிவாளால் தாக்கப்பட்டார்.

30.5.95 அன்று கூடுதல் அரசு வழக்கறிஞர் சண்முகசுந்தரம் தாக்கப்பட்டார்.

18.6.2001 அன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த பாண்டி என்பவர் மதுரையில் கொலை செய்யப்பட்டார்.

9.8.2001 அன்று தமிழக முன்னேற்றக்கழகத்தின் பொதுச்செயலாளர் கணேசபாண்டியன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

31.12.2001 அன்று முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.பாலன் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

12.3.2002 அன்று கோவை ரத்தினசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர் கொலை செய்யப்பட்டார்.

28.3.2003 அன்று ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கொலை செய்யப்பட்டார்.

1.5.2002 அன்று தி.மு.க.வை சேர்ந்த வெங்கடேசன் தர்மபுரி மாவட்டத்தில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

3.6.2002 அன்று சென்னையில் தீனதயாளன் என்ற சிவசேனா நிர்வாகி கொலை செய்யப்பட்டார்.

26.7.2004 அன்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லை மாவட்டத்தில் தாக்கப்பட்டார்.

3.9.2004 அன்று காஞ்சீபுரம் மாவட்டத்தில் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை செய்யப்பட்டார்.

31.12.2004 அன்று நெல்லையில் முன்னாள் அமைச்சர் ஆலடி அருணா தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

4.2.92 அன்று எம்.ஜி.ஆர். நினைவில்ல பொறுப்பாளர் முத்து மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு.

13.6.2001 அன்று ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு.

10.7.2003 அன்று மதுரையில் செரினா மீது கஞ்சா வைத்திருந்ததாக வழக்கு.

14.8.91 அன்று தராசு அலுவலகம் மீது தாக்குதல்.

12.9.2002 அன்று காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த தாளமுத்து நடராஜன் என்பவர் கொலை.

24.3.2004 அன்று திருவேற்காட்டில் தி.மு.க.வைச் சேர்ந்த கஜேந்திரன் கொலை.

9.10.2005 அன்று திருவள்ளூர் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சுதர்சனம் கொலை.

23.1.2004 அன்று திருவரங்கத்தில் திருமண மண்டபம் தீ விபத்தில் 61 பேர் உயிரிழப்பு.

16.7.2004 அன்று கும்பகோணத்தில் பள்ளியில் தீ விபத்து-19 குழந்தைகள் உயிரிழப்பு.

6.11.2005 அன்று சென்னையில் நிவாரண நிதி வழங்கப்பட்டபோது நெரிசலில் சிக்கி 6 பெண்கள் உயிரிழப்பு.

18.12.2005 அன்று சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நிவாரண நிதி வழங்கப்பட்ட பொது நெரிசலில் சிக்கி 42 பேர் உயிரிழப்பு. 37 பேர் காயம்.

11.12.2004 அன்று தமிழர் விடுதலை இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் வல்லம் இரா.அறிவழகன் கொலை செய்யப்பட்டார்.

கவர்னர் சென்னாரெட்டி காரை வழிமறித்து தாக்கப்பட்டது; சட்டமன்ற உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் தாக்கப்பட்டது; நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் உறவினர் மீதே கஞ்சா வழக்கு என்று எழுதிக்கொண்டே போகலாம்.

இவ்வளவு ஜெயலலிதா ஆட்சியில் நடைபெற்றவை. அவர்தான் தி.மு.க. ஆட்சியில் வன்முறை என்கிறார்.



கேள்வி:- லாரிகள் வேலை நிறுத்தம் 3-வது நாளாக நீடிக்கிறதே?

பதில்:- லாரிகள் வேலை நிறுத்தம் காரணமாக பொதுமக்களும், தொழிலாளர்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். பொதுமக்கள் நலன், நாட்டின் பொருளாதார நிலை ஆகியவற்றை கருத்தில் கொண்டு இப்பிரச்சினை குறித்து இரு தரப்பினரும் மீண்டும் அமர்ந்து பேசி லாரிகள் வேலை நிறுத்தத்திற்கு சுமுகமான முடிவினை உடனடியாகக் காண வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tuesday, January 6, 2009

தமிழக சட்டசபை 21-ந் தேதி கூடுகிறது!.- கவர்னர் பர்னாலா உரை!.




பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை 21-ந் தேதி கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் பர்னாலா உரையாற்றுகிறார்.

சென்னை, ஜன.7-

தமிழக சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 5 நாட்கள் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் 2009-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் தேதியை கவர்னர் பர்னாலா நேற்று அறிவித்தார்.

ஆண்டுதோறும் சட்டசபையின் முதலாவது கூட்டம் கவர்னரின் உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா நேற்று வெளியிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்ற செயலாளர் மா.செல்வராஜ் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், ``தமிழக சட்டமன்றத்தின் கூட்டத்தை 2009-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி அன்று (புதன்கிழமை) கவர்னர் கூட்டியுள்ளார். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு சட்டமன்ற பேரவை மண்டபத்தில் உரை நிகழ்த்த உள்ளார். அவ்வமயம் தங்கள் வருகையை வேண்டுகிறேன். மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் அவை கூடும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் 11-வது சட்டமன்றத்தின் 10-வது கூட்டத்தொடர் வருகிற 21-ந் தேதி கூடும்போது, முதல் நாளில் கவர்னர் உரை நிகழ்த்துவார். அதில், இந்த ஆண்டுக்கான நலத்திட்டங்கள் பற்றிய சில அறிவிப்புகள் இருக்கும்.

கவர்னர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார். அதனை சபாநாயகர் தமிழில் மொழி பெயர்த்து வாசிப்பார். கவர்னர் உரையை தமிழில் வாசிக்கும் வழக்கம் முதன் முதலில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் (1977) அறிமுகப்படுத்தப்பட்டது. இடையில் 2003, 2004 ஆண்டுகளில் அது நிறுத்தப்பட்டு 2005-ம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

கூட்டத்தின் 2-வது நாளான 22-ந் தேதி அன்று சமீபத்தில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் சிலரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அதன்பிறகு அன்றைய தினமே ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். அதனை ஆளுங்கட்சி உறுப்பினர் முன்மொழிவார். ஆளுங்கட்சியின் மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார். அதன்பின் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். இதில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுவார்கள். கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பதில் உரையை நிகழ்த்துவார்.

கடந்த ஆண்டில் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 23-ந் தேதி தொடங்கி, பிப்ரவரி 1-ந் தேதி வரை (சனி, ஞாயிறு நீங்கலாக) 7 நாட்கள் நடந்தது. இந்த ஆண்டில் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது பற்றி சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும். முதல் நாள் கூட்டம் முடிந்த பிறகு, அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில்தான், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். மேலும், என்னென்ன மசோதா தாக்கல் செய்யப்படும் என்பது பற்றியும் தெரியவரும்.

அனேகமாக இக்கூட்டத்தொடர் சுமார் ஒரு வார காலம் நடக்கலாம். இதுவரை எந்தவொரு சட்டமசோதாவும் சட்டமன்ற அலுவலகத்துக்கு வரவில்லை எனத்தெரிகிறது. இந்த அறிவிப்புக்கு பிறகு இனிமேல் வரக்கூடும். இதுதவிர, உரிமை மீறல் பிரச்சினை, செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ராஜினாமா விவகாரம் பற்றியெல்லாம் இந்த தொடரில் முடிவெடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடந்தபோதுதான் தை மாதத்தை தமிழ் மாதங்களின் முதல் மாதமாக அறிவித்து சட்டமசோதா தாக்கல் (29.1.2008) செய்யப்பட்டது. அந்த சட்டம் 1.2.2008-ல் நிறைவேறியது. அதுபோல் இந்த ஆண்டும் ஏதேனும் முக்கிய சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம்.

திருமங்கலம் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் நடக்கும் கூட்டத்தொடர் என்பதால் இது மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே சூடு பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இந்த கூட்டத்தொடர் முடிந்த சில நாள்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

Saturday, January 3, 2009

இன்றைய செய்திகள் . . . .ஞாயிறு ,ஜனவரி,4, காலை நிலவரம் . . . .

ஞாயிறு :ஜனவரி,4,தற்போதைய செய்திகளின் தொகுப்பு.


முல்லைத் தீவில் இலங்கை ராணுவத்தினர் தீவிர தாக்குதல்

கொழும்பு:

விடுதலைப் புலிகளில் முக்கிய பகுதியான கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து, முல்லை தீவினை கைப்பற்றவும், ராணுவம் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளில்லா கிளிநொச்சி பகுதியை தான் ராணுவம் கைப்பற்றி உள்ளது என தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், முல்லை தீவு பகுதியை கைபற்று வதாக கூறிகொண்டு, அப்பாவி பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக விடுதலை புலிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



டில்லியில் கடும் பனிமூட்டம்

புதுடில்லி :
தலைநகர் டில்லியில் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. இதனால், டில்லி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் பனிமூட்டத்தையடுத்து ஒன்பது உள்நாட்டு விமானங்கள், பதினொரு சர்வதேச விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 20 ரயில்கள் தாமதாக கிளம்ப உள்ளன.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்: பான்-கி-மூன் வருத்தம்


ஐ.நா.:

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி.மூன் வருத்தம் தெரிவித்துள்ளார். காசா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினர் மீது கடந்த பல நாட்களாக, இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதவிர, தரைப்படை தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. இதற்காக ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலை நிறுத்த தான் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பாக்தாத்தில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி, 8 பேர் படுகாயம்

பாக்தாத்:

பாக்தாத்தின் தென் பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும், 8 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தென் பாக்தாத் பகுதியில் உள்ள அஸ்குரா பகுதியில் இக்குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

இலங்கை போர் விமானங்கள் பயங்கர தாக்குதல், முல்லைத்தீவில் சரமாரி குண்டு வீச்சு!.


கிளிநொச்சியை அடுத்து, முல்லைத் தீவில் இலங்கை போர் விமானங்கள் சரமாரி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியான தாக, விடுதலைப்புலிகள் புகார் கூறி உள்ளனர்.

கொழும்பு, ஜன.4-

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் கடந்த 25 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

ராஜபக்சே இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு, விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தினார்.


விடுதலைப்புலிகளின் தலைநகராக செயல்பட்ட கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கடுமையான தாக்குதல் நடந்தது. விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்பால் சிறிய நகரங்கள் மற்றும் சில கிராமங்களை ராணுவம் கைப்பற்றியபோதிலும் கிளிநொச்சியை எளிதில் நெருங்க முடியவில்லை.

பல மாதங்களாக நீடித்த கடுமையான சண்டைக்கு பிறகு நேற்று முன்தினம் கிளிநொச்சி நகரை ராணுவம் கைப்பற்றியது. இந்த தகவலை, அதிபர் ராஜபக்சே வெளியிட்டார்.
கிளிநொச்சியை ராணுவம் கைப் பற்றி விட்டாலும், பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. அனேகமாக அவர் முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள பதுங்கு குழிக்குள் தங்கியிருக்கலாம் என, இலங்கை ராணுவ வட்டாரங்கள் நம்புகின்றன. அதனால், அந்தப் பகுதியில் இலங்கை போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.இலங்கையில் நடந்து வரும் உள்நாட்டு சண்டையில், விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தங்களின் தலைநகராகச் செயல்பட்டு வந்த கிளிநொச்சியை, இலங்கை ராணுவத்திடம் பறிகொடுத்துள்ளனர். புலிகள் தலைவர் பிரபாகரன் எங்கு தங்கியுள்ளார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகின்றன


கிளிநொச்சி நகரை ராணுவம் பிடித்தாலும், அந்த மாவட்டத்தின் பல பகுதிகளும் முல்லைத் தீவு மாவட்டம் முழுவதும் இன்னமும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இதனால், கிளிநொச்சியை காலி செய்துவிட்டு முக்கியத் தளங்கள் மற்றும் அலுவலகங்களை முல்லைத் தீவுக்கு விடுதலைப்புலிகள் மாற்றி விட்டனர்.

இதனால் கிளிநொச்சி நகருக்குள் ராணுவம் நுழைந்தபோது வெறிச்சோடி காணப்பட்டது. எனினும், நேற்று அங்கு ராணுவத்தினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதாக, ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்கரா தெரிவித்தார்.



ஆள் இல்லாத கிளிநொச்சியை கைப்பற்றியதால் ஆத்திரம் அடைந்த இலங்கை ராணுவம், முல்லைத்தீவை நோக்கி முன்னேறிச்சென்று தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்தினருக்கு உதவியாக விமானப்படையின் போர் விமானங்களும், ராணுவ ஹெலிகாப்டர்களும் சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றன.

விடுதலைப்புலிகளின் மற்றொரு முக்கிய தளமான யானை இறவை நோக்கி ராணுவம் முன்னேறிச்சென்று இருப்பதாகவும், இன்னும் 2 கிலோ மீட்டர் தூரமே உள்ள யானை இறவை விரைவில் பிடித்துவிடுவோம் என்றும், ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியதாவது:

"கிளிநொச்சியில் இருந்து தப்பியோடிய புலிகள் அனைவரும் முல்லைத் தீவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று விட்டனர். புலித் தலைவர் பிரபாகரனும், முல்லைத் தீவில் உள்ள பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் மறைந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதையடுத்து, முல்லைத் தீவை குறிவைத்து, ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. புலித் தலைவர்களின் மறைவிடங்கள் என்று கருதப்படும் பகுதிகளில், ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன."
இவ்வாறு பொன்சேகா கூறினார்.

பிரபாகரன் நடமாட்டம் குறித்து, "பாட்டம் லைன்' என்ற பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


அடர்ந்த காட்டுப் பகுதியில், பூமிக்கு அடியில் 30 அடி ஆழத்தில்அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் பிரபாகரன் தங்கியுள்ளார். இந்த பதுங்கு குழி, முற்றிலும் குளிரூட்டப்பட்ட ("ஏசி') வசதியுடையது. ஜெனரேட்டர்கள் உதவியுடன் "ஏசி' இயங்குகிறது. பிரபாகரனின் நேரடிகண்காணிப்பின் கீழ் இந்த பதுங்கு குழி அமைக்கப் பட்டது. தனது நடமாட்டத்தைராணுவம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, இரவு நேரங்களில் மட்டுமேஅவர் பதுங்கு குழியில் இருந்து வெளியில் வருகிறார்.இவ்வாறு அந்தபத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.முல்லை தீவு நோக்கி: கிளிநொச்சியைகைப்பற்றிய பின், முல்லைத் தீவு, யானையிறவு ஆகிய பகுதிகளை நோக்கிராணுவம் முன்னேறி வருகிறது.


முல்லைத்தீவில் செயல்பட்டு வரும் கடற்புலிகளின் தலைமையகத்தின் மீது ஜெட் விமானங்கள் குண்டு மழை பொழிந்தபோது, எம்.ஐ-24 ரக ஹெலிகாப்டர்கள், ராணுவத்துக்கு ஆதரவாக விடுதலைப்புலிகளின் தளங்களை தாக்குவதாக கூறி பொது மக்கள் வசிக்கும் பகுதியிலும் குண்டுகளை வீசின.

முல்லைத் தீவை ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விமானப்படை குண்டுகளை வீசுவதாக விடுதலைப்புலிகள் தரப்பில் புகார் கூறப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் 4 அப்பாவி தமிழர்கள் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஏராளமான வீடுகளும் சில வணிக வளாகங்களும் குண்டு வீச்சில் சேதம் அடைந்ததாக விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளம் தெரிவித்து உள்ளது.



இதற்கிடையே கிளிநொச்சியை பிடித்ததாக அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் அறிவித்த சிறிது நேரத்துக்குள் தலைநகர் கொழும்பில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதில் 3 விமானப்படை வீரர்கள் பலியாகினர்.

நேற்று முல்லைத் தீவு பகுதியில் தீவிர தாக்குதல் நடைபெற்றதால் கொழும்பில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என்று கருதி ராணுவத்தினர் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், கொழும்பு நகரின் வர்த்தக பகுதியில் நேற்று மீண்டும் குண்டு வெடித்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் சேதம் அடைந்தன. அதைத்தொடர்ந்து கொழும்பில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.



கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கார்டன், சிறுபான்மை குடிமக்களான தமிழர்களின் கவலைகளை இலங்கை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புதிய தலைநகர் முல்லை தீவு


கிளிநொச்சி வீழ்ச்சிக்கு பின் விடுதலைப் புலிகளும், அவர்களின் நடவடிக்கைகளும் முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:

கிளிநொச்சி தங்கள் கையை விட்டு போய் விடும் என்பது, புலிகளுக்கு சில வாரங்களுக்கு முன்னரே உறுதியாக தெரிந்து விட்டது. இதையடுத்து, தங்கள் நடவடிக்கைகளை முழுவதுமாக முல்லைத் தீவுக்கு மாற்றி விட்டனர். புலிகளின் ஆலோசனை மையங்கள், தகவல் தொடர்பு என அனைத்துமே முல்லைத் தீவுக்கு மாற்றப்பட்டு விட்டன. தற்போது, முல்லைத் தீவு தான் புலிகளின் புதிய தலைமையகமாக மாறியுள்ளது.

இலங்கையின் வடக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய நகரம் தான் முல்லைத் தீவு. கடற்புலிகளின் தலைமையகம் இங்கு தான் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

"இலங்கை போரில் விடுதலைப்புலிகள் பின்தங்கியிருப்பது போர் தந்திரம்தான்" - வைகோ கருத்து


மதுரை, ஜன.4-

"இலங்கை போரில் விடுதலைப்புலிகள் பின்தங்கியிருப்பது போர் தந்திரம்தான். நிச்சயம் அவர்கள் வெல்வார்கள்'' என்று வைகோ கூறினார்.

வீரபாண்டிய கட்டபொம்மனின் 250-வது பிறந்தநாள் விழா நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க.பொது செயலாளர் வைகோ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இலங்கையில் கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றி விட்டதாக சிங்கள அரசு கொக்கரிக்கிறது. ஆனால் அது உண்மையல்ல. ஐ.நா.சபையின் தடை உத்தரவை மீறி சிங்கள அரசு குண்டுகளை வீசி வருகிறது. இலங்கை அதிபர் ராஜபக்சே மிகவும் கொடூரமானவராக நடந்து கொள்கிறார். அவரது நடவடிக்கை நீடிக்காது.

தமிழினத்தை அழிக்கும் இலங்கை ராணுவத்துக்கு உதவும் மத்திய அரசை கண்டிக்கிறோம். போரில் விடுதலைப்புலிகள் பின்தங்கியிருப்பது ஒரு போர் தந்திரம்தான். நிச்சயம் அவர்கள் வெல்வார்கள். நாங்கள் அவர்களுக்கு உறுதுணையாக இருப்போம்.

திருமங்கலம் தொகுதியில் அடியாட்கள் மற்றும் பண பலத்தால் வெற்றி பெறலாம் என்று நினைக்கிறார்கள். ஓட்டுக்கு ரூ.5 ஆயிரத்தை அவர்கள் கொடுக்கிறார்கள். அந்த தொகுதி முழுவதும் பணம் விதைக்கப்பட்டு உள்ளது.

தேர்தல் கமிஷன் நியாயமான முறையில் செயல்பட்டதால்தான் அதிகாரிகள் மாற்றப்பட்டு இருக்கிறார்கள். பாதுகாப்புக்கு துணை ராணுவம் வருகிறது. அதன் கட்டுப்பாட்டில் தேர்தலை அமைதியாக நடத்த வேண்டும். இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் முத்துராமலிங்கம் 25 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் கூறினார்.

"தமிழ் மக்களைவிட இலங்கை போர் வெறியர்கள்தான் முக்கியமானவர்களா?" - பிரதமருக்கு, டாக்டர் ராமதாஸ் உருக்கமான கடிதம்!.



சென்னை, ஜன.4-

டெல்லியில் திட்டம் தீட்டி செயல்படும் அதிகாரிகளுக்கு தமிழ் மக்களை விட இலங்கை போர் வெறியர்கள்தான் முக்கியமானவர்களா? என்று பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, டாக்டர் ராமதாஸ் உருக்கமாக கடிதம் எழுதியுள்ளார்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-
மும்பையில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலின் விளைவாக ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து நீங்களும், வெளியுறவுத்துறை மந்திரியும் அதிகக் கவனம் செலுத்த வேண்டிய நிலையில் இருக்கிறீர்கள் என்பதை நாங்கள் உணர்ந்திருக்கிறோம். என்றபோதிலும், சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையில் ஆயுதப் படைகள் நடத்திவரும் கொடுமைகளையும், அதன் விளைவாக முதல்-அமைச்சர் கருணாநிதி வேதனையுடன் சுட்டிக் காட்டியுள்ளபடி `ஒவ்வொரு நொடியும் ஒரு தமிழன் உயிர் இழப்பதையும் ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. மணிக்கு மணி நிலைமை மோசமடைந்து வருகிறது.

மனித உரிமைகளை அப்பட்டமாக மீறி வருவதாக இலங்கைக்கு எதிராகத் தொடர்ந்து குற்றம் சாற்றப்பட்டு வருகிறது.

இனப்படுகொலையும் மக்களுக்கு எதிரான பிற கொடுமைகளும் நடந்து கொண்டிருக்கிற அல்லது அத்தகைய ஆபத்து ஏற்படக்கூடிய `உடனடி ஆபத்து' நிலையில் உள்ள 8 நாடுகளில் ஒன்றாக இலங்கையை, நிïயார்க்கில் இருந்து செயல்படும் இனப்படுகொலைத் தடுப்புத் திட்ட அமைப்பின் அறிக்கையில் சேர்த்திருப்பது, இலங்கைக்கு எதிராக அண்மையில் வெளியாகியிருக்கும் கடும் கண்டனமாகும். நிலைமை மோசமாக இருந்தபோதிலும், இலங்கை அரசு கவலைப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்திய அரசு செயல்படாமல் இருப்பதே இதற்குக் காரணம்.


கடலுக்கு அப்பால், தங்கள் சகோதரர்களும், சகோதரிகளும் வேட்டையாடப்படுவதை, ஏதும் செய்ய முடியாமல் பார்த்துக் கொண்டிருக்க வேண்டிய நிலையில் உள்ள 6 கோடிக்கும் மேற்பட்ட இந்தியத் தமிழர்களின் கவுரவத்தையும், சுய மரியாதையையும், கொழும்பில் உள்ள அடக்குமுறை அரசின் முகவர்களுடன் கூட்டாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் டெல்லியில் உள்ள தப்பெண்ணம் படைத்த சில அதிகாரிகள் இனியும் காலில் போட்டு நசுக்க முடியாது. டெல்லியிடம் `சலுகைகளுக்காக' எப்போதும் கெஞ்சிப் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கும் நிலைக்கு அவர்களைக் குறுக்கிவிட முடியாது.

இரண்டு நிகழ்வுகள் தெளிவாகத் தெரிகின்றன. டிசம்பர் 4-ந் தேதி பிரதமரைத் முதல்-அமைச்சர் கருணாநிதி தலைமையில் தமிழக அனைத்துக் கட்சித் தலைவர்கள் சந்தித்துப் பேசிய 2, 3 நாட்களுக்குள், இலங்கையின் போர்ப்படைத் தளபதி சரத் பொன்சேகா திமிர்த்தனமாகப் பேசினார்: ``போர் நிறுத்தம் செய்யுமாறு இலங்கை அரசை ஒருபோதும் இந்திய அரசு வலியுறுத்தாது. தமிழ்நாட்டின் அரசியல் `கோமாளிகள்' கூறுவதையும் அது செவிமடுக்காது'' என்றார்.

முன்னதாக, மத்திய அரசு செயல்பட வலியுறுத்தி கடந்த அக்டோபரில் தமிழகச் சட்டப் பேரவை ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றிய உடனே, முன்னாள் தூதர்கள் என்.என்.ஜா, கே.பி.எஸ்.மேனன், அனைத்திந்தியக் காங்கிரசின் வெளியுறவுப் பிரிவு இணைச் செயலர் ராவ்னி தாக்கூர் ஆகியோர் அடங்கிய உயர் நிலைக் குழு ஒன்று டெல்லியில் இருந்து கொழும்புக்குச் சென்றது.

மத்திய அரசு, தமிழக அரசியல்வாதிகள் கூறுவதை செவிமடுக்காது என்றும், போர்ப்படை நடவடிக்கைகளை நிறுத்துமாறு இலங்கை அரசை வலியுறுத்தாது என்றும் பொருள்படும் வகையில் அந்தக் குழு அங்கு வெளிப்படையாக அறிக்கைகள் வெளியிட்டது. டெல்லிக்கும், கொழும்புக்கும் இடையே கமுக்க உடன்பாடு இல்லை என்றால் இவை நடந்திருக்காது.

இலங்கை தொடர்பாக இந்தியாவின் அறிவிக்கப்பட்ட நிலைப்பாடு என்பது நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. பிரதமரான நீங்களே கூறியிருக்கிறீர்கள்: ``ஒன்றுபட்ட இலங்கை என்ற கட்டமைப்புக்குள், அனைத்து சமூகத்தினரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில், அமைதி வழியில் பேச்சு நடத்தி அரசியல் தீர்வு காண்பதில்தான் முன்னேற்றத்துக்கான வழி அடங்கியிருக்கிறது'' என்று நாடாளுமன்றத்துக்கு அளித்த ஆண்டு அறிக்கையில் பாதுகாப்பு அமைச்சகம் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது: ``போர்ப்படைத் தீர்வு இல்லை என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

எனினும், இலங்கை அரசு வெறித்தனமாகப் பின்பற்றி வரும் `போர்ப்படைத் தீர்வு'க்கு முடிவு கட்டுவதற்கும், அரசியல் தீர்வுக்கான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கும், இந்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. உங்களிடம் அளித்த அறிக்கையில் கேட்டுக்கொண்டுள்ளபடி, நேரடியாக இல்லை என்றாலும், மறைமுகமாக ஐ.நா. பாதுகாப்பு மன்றம் மூலமாக செய்திருக்கலாம்.

டெல்லியின் அக்கறையற்ற, உணர்ச்சியற்ற அணுகுமுறையையே இது காட்டுகிறது. ஏனெனில், `இனப் படுகொலை வெறியாட்டத்தால்' பாதிக்கப்படுவோர், உதவிக்கும் குரல் கொடுப்பதற்கும் வழியற்ற தமிழர்கள் என்பதுதான் இதற்குக் காரணம்.


குறிப்பாகத் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், பொதுவாக இந்தியாவில் உள்ள தமிழர்களும் ஒன்றைத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள். டெல்லியில் உள்ள திட்டம் தீட்டிச் செயல்படும் அதிகாரிகளுக்கும் அக்கறையற்ற கொள்கை வகுப்பாளர்களுக்கும், சட்டத்துக்குக் கட்டுப்பட்ட கோடிக்கணக்கான தமிழ் மக்களைவிடவும், கொழும்பில் உள்ள போர் வெறியர்களும் இனப்படுகொலை வெறியர்களும்தான் மிகவும் முக்கியமானவர்களா? இந்த கோடிக்கணக்கான தமிழ் மக்களின் கவுரவம், சுயமரியாதை குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இல்லையா? இதை இறுதி பதிலாக எடுத்துக் கொள்ளலாமா?

"காலம் கடப்பதற்கு முன்பு எங்களுக்கு விடை தேவை. நீங்கள் அவசர உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நான் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளேன்".

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் அறிக்கையில் கூறியுள்ளார்.

Friday, January 2, 2009

"விடுதலைப்புலிகளின் தலைநகரமாக செயல்பட்ட கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டோம்" - ராஜபக்சே அறிவிப்பு






விடுதலைப்புலிகளின் தலைநகரமாக செயல்பட்ட கிளிநொச்சியை கைப்பற்றி விட்டதாக, இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.
கொழும்பு, ஜன.3-

இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாடு (தமிழ் ஈழம்) கேட்டு விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போர் புரிந்து வருகிறார்கள்.

கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கிய இந்த போர், 25 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.


விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை ஏற்கனவே ராணுவம் கைப்பற்றி விட்டது. அடுத்து விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரமாக விளங்கும் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் தாக்குதலை தொடங்கியது.

விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, ராணுவத்தினரால் கிளிநொச்சியை எளிதாக கைப்பற்ற முடியவில்லை. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கடும் போரில் இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகி வந்தனர்.


இந்த நிலையில், கிளிநொச்சிக்கு அரண் போல் அமைந்திருந்த முக்கியமான இரு தளங்களான பரந்தன் மற்றும் இரணைமடு ஆகியவற்றை நேற்று முன்தினம் ராணுவம் கைப்பற்றியது. இதன்மூலம் கிளிநொச்சியை நோக்கி அதிக அளவில் எதிர்ப்பு இன்றி ராணுவத்தினரால் எளிதாக முன்னேற முடிந்தது.

கிழக்கில் ஏ-9 நெடுஞ்சாலையில் இருந்து ஒரு படைப்பிரிவினரும், மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து இரு படைப்பிரிவினரும் முன்னேறிச்சென்று நேற்று காலை கிளிநொச்சி நகருக்குள் நுழைந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டதாக, மாலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்து வரும் கிளிநொச்சியில் 10 ஆண்டுகளுக்குப்பிறகு முதன் முதலாக ராணுவம் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் முக்கிய போர் படை தளமான `93 பேஸ்' மற்றும் பெண் புலிகளின் நிர்வாக அலுவலகமும் கைப்பற்றப்பட்டன.

பரந்தன் பகுதியில் விடுதலைப்புலிகளின் தளபதியாக செயல்பட்ட இளம்பிறையன் போரில் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்து உள்ளது. ராணுவத்தினரின் முன்னேற்றத்தை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடுவதாக, இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கரா தெரிவித்தார்.

ஆனால், கிளிநொச்சியை ராணுவத்தினர் கைப்பற்றியது தொடர்பாக, விடுதலைப்புலிகள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலில், ராணுவத்தினரை எதிர்த்து போர் புரிந்த `ராதா ரெஜிமெண்ட்' பிரிவை சேர்ந்த 35 பெண் புலிகள் பலியானார்கள். கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கிளிநொச்சி போரில், மொத்தம் 100 விடுதலைப்புலிகள் பலியானதாக ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலைப்புலிகளிடம் உள்ள 6 விமான ஓடுதளங்களில், இரணைமடு உள்ளிட்ட மூன்று தளங்கள் ராணுவத்தினரின் வசம் வந்துவிட்டதாகவும், விடுதலைப்புலிகளின் அடுத்த புகலிடமான முல்லைத்தீவு பகுதியையும் ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2 மாதங்களாகவே கிளிநொச்சி வீழ்ந்துவிடும் என்று ராணுவம் அறிவித்து வந்தாலும், விடுதலைப்புலிகள் ஏறத்தாழ 17 கிலோமீட்டர் தூரத்துக்கு மணலை குவித்து பாதுகாப்பு அரண் அமைத்து இருந்ததாலும், தொடர்ந்து பெய்து வந்த பருவ மழையினாலும் கிளிநொச்சியை எளிதாக நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பரந்தன் மற்றும் இரணைமடு வீழ்ச்சியை தொடர்ந்து எளிதாக கிளிநொச்சியை நோக்கி முன்னேறிய ராணுவத்தினருக்கு அதிகமான எதிர்ப்பு இல்லை என்றும், முதலில் கிளிநொச்சி ரெயில் நிலையத்தை கைப்பற்றியதாகவும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போர் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பொதுமக்கள் கிழக்கு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டதால் நேற்று ராணுவம் நுழைந்தபோது கிளிநொச்சி நகர தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன.


கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றிய தகவலை தனது டெலிவிஷன் உரையில் அறிவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடையும்படி வேண்டுகோள் விடுத்தார்.

"ஈடு இணையற்ற இந்த வெற்றியின் மூலம் நமது ராணுவத்தினரின் பெருமை சரித்திரத்தில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும். உலகின் சக்திவாய்ந்த தீவிரவாத இயக்கம் என்று வர்ணிக்கப்படும் விடுதலைப்புலிகளின் முக்கிய கோட்டையை கைப்பற்றி இருப்பது, தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போருக்கு கிடைத்த வெற்றியாகும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.


கிளிநொச்சி நகரை இழந்துவிட்டதால், தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு சிறிய பகுதியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு பகுதி மட்டுமே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு அமைப்பான `பிளாட்' இயக்க தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறி இருக்கிறார்.

"விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பில்தான் அதிக கவனம்செலுத்தி வருகிறார்கள். என்றாலும், பிரபாகரன் மறைந்து இருக்கும் இடத்தை இன்னும் ராணுவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றும் அவர் தெரிவித்தார்.


கிளிநொச்சி போர் பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் உடனடியாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், வடக்கு பகுதியை இழந்தாலும் ராணுவத்துக்கு எதிராக கொரில்லா தாக்குதல் தொடரும் என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது..

மேலும் செய்திகளுக்கு :