Saturday, January 3, 2009

இன்றைய செய்திகள் . . . .ஞாயிறு ,ஜனவரி,4, காலை நிலவரம் . . . .

ஞாயிறு :ஜனவரி,4,தற்போதைய செய்திகளின் தொகுப்பு.


முல்லைத் தீவில் இலங்கை ராணுவத்தினர் தீவிர தாக்குதல்

கொழும்பு:

விடுதலைப் புலிகளில் முக்கிய பகுதியான கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியதை தொடர்ந்து, முல்லை தீவினை கைப்பற்றவும், ராணுவம் தொடர்ந்து தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில், ஆளில்லா கிளிநொச்சி பகுதியை தான் ராணுவம் கைப்பற்றி உள்ளது என தெரிவித்துள்ள விடுதலைப் புலிகள், முல்லை தீவு பகுதியை கைபற்று வதாக கூறிகொண்டு, அப்பாவி பொதுமக்கள் மீது ராணுவம் தாக்குதல் நடத்தி வருவதாக விடுதலை புலிகள் புகார் தெரிவித்துள்ளனர்.



டில்லியில் கடும் பனிமூட்டம்

புதுடில்லி :
தலைநகர் டில்லியில் கடும் பனிமூட்டம் நிலவிவருகிறது. இதனால், டில்லி வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பனிமூட்டம் காரணமாக, விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடும் பனிமூட்டத்தையடுத்து ஒன்பது உள்நாட்டு விமானங்கள், பதினொரு சர்வதேச விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 20 ரயில்கள் தாமதாக கிளம்ப உள்ளன.

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல்: பான்-கி-மூன் வருத்தம்


ஐ.நா.:

காசா மீதான இஸ்ரேல் தாக்குதல் குறித்து ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி.மூன் வருத்தம் தெரிவித்துள்ளார். காசா பகுதியில் உள்ள ஹமாஸ் இயக்கத்தினர் மீது கடந்த பல நாட்களாக, இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல் நடத்தி வருகிறது. இதுதவிர, தரைப்படை தாக்குதலையும் இஸ்ரேல் தொடங்கி இருக்கிறது. இதற்காக ஐ.நா., பொதுச் செயலர் பான்-கி-மூன் வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலை நிறுத்த தான் தொடர்ந்து முயற்சி செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


பாக்தாத்தில் குண்டு வெடிப்பு: 2 பேர் பலி, 8 பேர் படுகாயம்

பாக்தாத்:

பாக்தாத்தின் தென் பகுதியில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் இரண்டு பேர் பலியானார்கள். மேலும், 8 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர். தென் பாக்தாத் பகுதியில் உள்ள அஸ்குரா பகுதியில் இக்குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

No comments: