Monday, January 12, 2009

திருமங்கலம் வெற்றி தி.மு.க. சாதனைக்கு கிடைத்த அங்கீகாரம் கருணாநிதி பேட்டி!


சென்னை ஜன. 12-

திருமங்கலம் இடைத் தேர்தல் வெற்றி குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதியை இன்று கோபாலபுரத்தில் உள்ள அவரது வீட்டில் நிருபர்கள் சந்தித்து கருத்து கேட்டனர்.

நிருபர்கள் கேட்ட கேள்வியும் அதற்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க. வெற்றி பெற்றுள்ளது குறித்து உங்கள் கருத்து?.

பதில்: கடந்த பொது தேர்தலில் தி.மு.க. வெற்றி வாய்ப்பை இழந்த இடத்தில் இப்போது மகத்தான வெற்றி பெற்றுள்ளது. இது தி.மு.க. ஆட்சியின் சாதனைகளுக்கு கிடைத்த அங்கீகாரம் என்று கருதுகிறேன்.

வெற்றி கனி வழங்கிய திருமங்கலம் தொகுதி வாக்காளர்களுக்கும் இந்த வெற்றிக்காக உழைத்த கழகத்தினருக்கும், தோழமை கட்சியினருக்கும், அதன் தலைவர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

கேள்வி: கம்யூனிஸ்டு கட்சிகளும், பா.ம.க.வும் ஆதரவு அளிக்காத நிலையில் திருமங்கலத்தில் கிடைத்துள்ள வெற்றி குறித்து..?

பதில்: உங்களுக்கே தெரியும். அதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தராதது மட்டுமல்ல, கடுமையாக தாக்கியும் பேசினார்கள்.

கேள்வி: இந்த வெற்றியால் கம்யூனிஸ்டு கட்சிகள் கூட்டணியில் இருந்து விலகி னாலும் உங்கள் அணிக்கு இழப்பு இல்லை என கருதுகிறீர்களா?

பதில்: அதைப்பற்றி நான் எதுவும் கூற விரும்பவில்லை.

கேள்வி: இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக அமைந்துள்ளதாக கருது கிறீர்களா?

பதில்: நாங்கள் வெற்றி பெறாவிட்டால், இந்த வெற்றி பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டமாக வெற்றி என்று வெற்றி பெற்ற கட்சிகள் சொல்லி இருப்பார்கள். நீங்களும் சொல்லி இருப்பீர்கள்.

கேள்வி: இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று டாக்டர் ராமதாஸ் உங்களை மீண்டும் சந்தித்து கூறி இருக்கிறாரே?

பதில்- இலங்கையில் நடைபெறும் படுகொலைகள், ராணுவ தாக்குதல்கள், தமிழ் இன அழிவுகள் இவைகள் எல்லாம் என்னுடைய உள்ளத்தையும் உணர்வுள்ள அனைவரது உள்ளத்தையும் உலுக்கி கொண்டிருக்கிறது.

இது பற்றி தான் டாக்டர் ராமதாஸ்,வீரமணி, திருமாவளவன் ஆகியோர் என்னி டம் பேசும் நிலை ஏற்பட்டது. அவர்கள் என்னை சந்தித்து இலங்கையில் போர் நிறுத்தம் ஏற்பட வழி வகை காண வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.

நான் மீண்டும் இதற்காக முயற்சிகள் மேற் கொண்டு சோனியா காந்தியையும், பிரதமர் மன்மோகன் சிங்கையும் தொடர்பு கொண்டு பேசுவதாக உறுதி அளித்துள்ளேன். அப்படி பேசும் வாய்ப்பு ஏற்படும் போது, இலங்கையில் ஏற்படும் போர் நிறுத்தத் தால், இலங்கை தமிழர்களுக்கு நன்மை என்பதோடு, இந்தியாவுக்கும் பெருமை என்று எடுத்துக் சொல்வேன்.

கேள்வி: மீண்டும் டெல்லி சென்று நேரடியாக வலியுறுத்துவீர்களா?.

பதில்: இப்போது எதுவும் சொல்ல முடியாது. போனில் பேசுவோம் போக வேண்டிய அவசியம் ஏற்பட்டால் செல்வோம்.

இவ்வாறு முதல்- அமைச்சர் கருணாநிதி கூறினார்.

திருமங்கலம் வெற்றி பற்றிய செய்தி கிடைத்ததால் முதல்-அமைச்சர் கருணாநிதி மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்.பேட்டியின் போது அமைச்சர்கள் அன்பழகன், ஆற்காடு வீராசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

No comments: