Saturday, January 3, 2009

இலங்கை போர் விமானங்கள் பயங்கர தாக்குதல், முல்லைத்தீவில் சரமாரி குண்டு வீச்சு!.


கிளிநொச்சியை அடுத்து, முல்லைத் தீவில் இலங்கை போர் விமானங்கள் சரமாரி குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதில் அப்பாவி பொதுமக்கள் பலியான தாக, விடுதலைப்புலிகள் புகார் கூறி உள்ளனர்.

கொழும்பு, ஜன.4-

இலங்கையில் விடுதலைப்புலிகளுக்கும் ராணுவத்தினருக்கும் கடந்த 25 ஆண்டுகளாக போர் நடைபெற்று வருகிறது.

ராஜபக்சே இலங்கை அதிபராக பொறுப்பேற்ற பிறகு, விடுதலைப்புலிகள் மீதான தாக்குதலை தீவிரப்படுத்தினார்.


விடுதலைப்புலிகளின் தலைநகராக செயல்பட்ட கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் முதல் கடுமையான தாக்குதல் நடந்தது. விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்பால் சிறிய நகரங்கள் மற்றும் சில கிராமங்களை ராணுவம் கைப்பற்றியபோதிலும் கிளிநொச்சியை எளிதில் நெருங்க முடியவில்லை.

பல மாதங்களாக நீடித்த கடுமையான சண்டைக்கு பிறகு நேற்று முன்தினம் கிளிநொச்சி நகரை ராணுவம் கைப்பற்றியது. இந்த தகவலை, அதிபர் ராஜபக்சே வெளியிட்டார்.
கிளிநொச்சியை ராணுவம் கைப் பற்றி விட்டாலும், பிரபாகரன் எங்கே இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. அனேகமாக அவர் முல்லைத் தீவில் அடர்ந்த காட்டுப் பகுதியில் அமைக்கப் பட்டுள்ள பதுங்கு குழிக்குள் தங்கியிருக்கலாம் என, இலங்கை ராணுவ வட்டாரங்கள் நம்புகின்றன. அதனால், அந்தப் பகுதியில் இலங்கை போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.இலங்கையில் நடந்து வரும் உள்நாட்டு சண்டையில், விடுதலைப் புலிகளுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தங்களின் தலைநகராகச் செயல்பட்டு வந்த கிளிநொச்சியை, இலங்கை ராணுவத்திடம் பறிகொடுத்துள்ளனர். புலிகள் தலைவர் பிரபாகரன் எங்கு தங்கியுள்ளார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் இலங்கையில் பரபரப்பாக பேசப்படுகின்றன


கிளிநொச்சி நகரை ராணுவம் பிடித்தாலும், அந்த மாவட்டத்தின் பல பகுதிகளும் முல்லைத் தீவு மாவட்டம் முழுவதும் இன்னமும் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இதனால், கிளிநொச்சியை காலி செய்துவிட்டு முக்கியத் தளங்கள் மற்றும் அலுவலகங்களை முல்லைத் தீவுக்கு விடுதலைப்புலிகள் மாற்றி விட்டனர்.

இதனால் கிளிநொச்சி நகருக்குள் ராணுவம் நுழைந்தபோது வெறிச்சோடி காணப்பட்டது. எனினும், நேற்று அங்கு ராணுவத்தினர் தீவிர சோதனையில் ஈடுபட்டதாக, ராணுவ செய்தி தொடர்பாளர் உதய நாணயக்கரா தெரிவித்தார்.



ஆள் இல்லாத கிளிநொச்சியை கைப்பற்றியதால் ஆத்திரம் அடைந்த இலங்கை ராணுவம், முல்லைத்தீவை நோக்கி முன்னேறிச்சென்று தாக்குதல் நடத்தி வருகிறது. ராணுவத்தினருக்கு உதவியாக விமானப்படையின் போர் விமானங்களும், ராணுவ ஹெலிகாப்டர்களும் சரமாரியாக குண்டுகளை வீசி வருகின்றன.

விடுதலைப்புலிகளின் மற்றொரு முக்கிய தளமான யானை இறவை நோக்கி ராணுவம் முன்னேறிச்சென்று இருப்பதாகவும், இன்னும் 2 கிலோ மீட்டர் தூரமே உள்ள யானை இறவை விரைவில் பிடித்துவிடுவோம் என்றும், ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இலங்கை ராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியதாவது:

"கிளிநொச்சியில் இருந்து தப்பியோடிய புலிகள் அனைவரும் முல்லைத் தீவில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதிக்கு சென்று விட்டனர். புலித் தலைவர் பிரபாகரனும், முல்லைத் தீவில் உள்ள பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் மறைந்திருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இதையடுத்து, முல்லைத் தீவை குறிவைத்து, ராணுவம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. புலித் தலைவர்களின் மறைவிடங்கள் என்று கருதப்படும் பகுதிகளில், ராணுவ விமானங்கள் குண்டுகளை வீசி வருகின்றன."
இவ்வாறு பொன்சேகா கூறினார்.

பிரபாகரன் நடமாட்டம் குறித்து, "பாட்டம் லைன்' என்ற பத்திரிகையில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:


அடர்ந்த காட்டுப் பகுதியில், பூமிக்கு அடியில் 30 அடி ஆழத்தில்அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பான பதுங்கு குழிக்குள் பிரபாகரன் தங்கியுள்ளார். இந்த பதுங்கு குழி, முற்றிலும் குளிரூட்டப்பட்ட ("ஏசி') வசதியுடையது. ஜெனரேட்டர்கள் உதவியுடன் "ஏசி' இயங்குகிறது. பிரபாகரனின் நேரடிகண்காணிப்பின் கீழ் இந்த பதுங்கு குழி அமைக்கப் பட்டது. தனது நடமாட்டத்தைராணுவம் கண்டுபிடித்து விடக்கூடாது என்பதற்காக, இரவு நேரங்களில் மட்டுமேஅவர் பதுங்கு குழியில் இருந்து வெளியில் வருகிறார்.இவ்வாறு அந்தபத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.முல்லை தீவு நோக்கி: கிளிநொச்சியைகைப்பற்றிய பின், முல்லைத் தீவு, யானையிறவு ஆகிய பகுதிகளை நோக்கிராணுவம் முன்னேறி வருகிறது.


முல்லைத்தீவில் செயல்பட்டு வரும் கடற்புலிகளின் தலைமையகத்தின் மீது ஜெட் விமானங்கள் குண்டு மழை பொழிந்தபோது, எம்.ஐ-24 ரக ஹெலிகாப்டர்கள், ராணுவத்துக்கு ஆதரவாக விடுதலைப்புலிகளின் தளங்களை தாக்குவதாக கூறி பொது மக்கள் வசிக்கும் பகுதியிலும் குண்டுகளை வீசின.

முல்லைத் தீவை ராணுவம் சுற்றி வளைத்துள்ள நிலையில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் விமானப்படை குண்டுகளை வீசுவதாக விடுதலைப்புலிகள் தரப்பில் புகார் கூறப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலில் 4 அப்பாவி தமிழர்கள் பலியானார்கள். 5 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் ஏராளமான வீடுகளும் சில வணிக வளாகங்களும் குண்டு வீச்சில் சேதம் அடைந்ததாக விடுதலைப்புலிகளின் ஆதரவு இணையதளம் தெரிவித்து உள்ளது.



இதற்கிடையே கிளிநொச்சியை பிடித்ததாக அதிபர் ராஜபக்சே நேற்று முன்தினம் அறிவித்த சிறிது நேரத்துக்குள் தலைநகர் கொழும்பில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடந்தது. அதில் 3 விமானப்படை வீரர்கள் பலியாகினர்.

நேற்று முல்லைத் தீவு பகுதியில் தீவிர தாக்குதல் நடைபெற்றதால் கொழும்பில் மீண்டும் தாக்குதல் நடக்கலாம் என்று கருதி ராணுவத்தினர் உஷார்படுத்தப்பட்டனர். இந்த நிலையில், கொழும்பு நகரின் வர்த்தக பகுதியில் நேற்று மீண்டும் குண்டு வெடித்ததில் 3 பேர் காயம் அடைந்தனர். பல வாகனங்கள் சேதம் அடைந்தன. அதைத்தொடர்ந்து கொழும்பில் உள்ள முக்கிய இடங்கள் மற்றும் சிங்களர்கள் வசிக்கும் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது.



கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றியது பற்றி கருத்து தெரிவித்த அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் கார்டன், சிறுபான்மை குடிமக்களான தமிழர்களின் கவலைகளை இலங்கை அரசு கருத்தில் கொள்ள வேண்டும் என்றும், தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அமைதி வழியில் பேச்சு வார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

புதிய தலைநகர் முல்லை தீவு


கிளிநொச்சி வீழ்ச்சிக்கு பின் விடுதலைப் புலிகளும், அவர்களின் நடவடிக்கைகளும் முல்லைத் தீவுக்கு இடம் பெயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து இலங்கை அரசியல் பார்வையாளர்கள் கூறியதாவது:

கிளிநொச்சி தங்கள் கையை விட்டு போய் விடும் என்பது, புலிகளுக்கு சில வாரங்களுக்கு முன்னரே உறுதியாக தெரிந்து விட்டது. இதையடுத்து, தங்கள் நடவடிக்கைகளை முழுவதுமாக முல்லைத் தீவுக்கு மாற்றி விட்டனர். புலிகளின் ஆலோசனை மையங்கள், தகவல் தொடர்பு என அனைத்துமே முல்லைத் தீவுக்கு மாற்றப்பட்டு விட்டன. தற்போது, முல்லைத் தீவு தான் புலிகளின் புதிய தலைமையகமாக மாறியுள்ளது.

இலங்கையின் வடக்கு கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள மிகச் சிறிய நகரம் தான் முல்லைத் தீவு. கடற்புலிகளின் தலைமையகம் இங்கு தான் செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments: