Monday, January 12, 2009

கருணாநிதியுடன் ராமதாஸ்-கி.வீரமணி, திருமாவளவன் சந்திப்பு; இலங்கை பிரச்சினை பற்றி ஆலோசனை!.




சென்னை, ஜன. 12-

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், திராவிட கழக தலைவர் கி.வீரமணி ஆகியோர் முதல்-அமைச்சர் கருணாநிதியை கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் இன்று சந்தித்து பேசினர்.

9.30 மணி முதல் 10.25 மணி வரை இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் வெளியே வந்த டாக்டர் ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது:-

இலங்கை தமிழர்களை காப்பாற்றுவதற்காக நாங்கள் மூன்று பேரும் கையெழுத்திட்டு முதல்-அமைச்சர் கருணாநிதியிடம் ஒரு மனு கொடுத்துள்ளோம்.

இலங்கையில் ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் இலங்கை அரசு அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்தியில் அமைந்த போது தி.மு.க., காங்கிரஸ், பா.ம.க. உள்ளிட்ட 15 கட்சி கள் அதில் இடம் பெற்றன.

அப்போது ஒரு குறைந்த பட்ச செயல் திட்டம் உருவாக்கப்பட்டது. இதில் இலங்கை தமிழர் களின் நியாயமான கோரிக்கைகளை நிறை வேற்றி வைப்பதற்கான அமைதிபேச்சு வார்த்தைகள் நடைபெறுவதற்கு ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, ஆதரவாக செயல்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் 15 கட்சி தலைவர் களும் கையெழுத்தும் போட்டுள்ளோம். இதை முதல்-அமைச்சரிடம் சுட்டி காட்டினோம். தமிழ் நாட்டில் ஓட்டு மொத்த தமிழர்களும் ஒன்றுபட்டு எடுத்த அனைத்து முயற்சிகளுக்கும் மரியாதை இல்லை.

இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு இதுவரை வெளிப்படையாக சொல்ல வில்லை. அமெரிக்கா, ஜப்பான், நார்வே போன்ற நாடுகள் எல்லாம் போரை நிறுத்தி விட்டு பேச்சு தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளன.

இலங்கை பிரச்சினைக்கு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்வு காண முடியாது என்று பல முறை மத்திய மந்திரி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன்சிங் ஆகியோர் பாராளுமன்றத்தில் பேசியும் உள்ளனர். 7 கோடி தமிழக மக்களும் எடுத்த முயற் சிகளுக்கு மத்திய அரசு செவி சாய்க்கவில்லை. நாங்கள் கருணாநிதியிடம் ஒரு வேண்டுகோள் வைத் துள்ளோம். மீண்டும் உடனடியாக மத்திய அர சிடம் பேசுங்கள், போர் நிறுத்தத்துக்கு வலியுறுத்துங்கள் என்று கூறினோம். அவரும் இன்று பேசுவதாக சொல்லி இருக்கிறார். அதை ஒரு அறிக்கையாக வெளியிடவும் கேட்டு கொண்டுள்ளோம்.

இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறினார்.

திருமாவளவன் கூறும் போது, "இலங்கை தமிழர் களை காப்பாற்றி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தவறினால் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் என்பதையும் மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லும்படி கூறியுள்ளோம்'' என்றார்.

கி.வீரமணி கூறுகையில், இலங்கையில் 4 லட்சம் அப்பாவி தமிழர்கள் முல்லைத்தீவில் பாது காப்பு இல்லாமல் உள்ள னர். உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும். தமிழர்களை அழிக்கும் முயற்சிக்கு துணை போவதாக இந்திய அரசின் நிலைப்பாடு இருக்க கூடாது.

இலங்கை தமிழர்கள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம்'' என்றார்.

இந்த சந்திப்பின் போது அமைச்சர்கள் ஆர்க்காடு வீராசாமி, துரைமுருகன், பா.ம.க. தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே.மூர்த்தி எம்.பி. ஆகியோர் உடன் சென்றனர்.

No comments: