Friday, January 2, 2009

"விடுதலைப்புலிகளின் தலைநகரமாக செயல்பட்ட கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டோம்" - ராஜபக்சே அறிவிப்பு






விடுதலைப்புலிகளின் தலைநகரமாக செயல்பட்ட கிளிநொச்சியை கைப்பற்றி விட்டதாக, இலங்கை அதிபர் ராஜபக்சே அறிவித்தார்.
கொழும்பு, ஜன.3-

இலங்கையில், தமிழர்களுக்கு தனி நாடு (தமிழ் ஈழம்) கேட்டு விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தி போர் புரிந்து வருகிறார்கள்.

கடந்த 1983-ம் ஆண்டு தொடங்கிய இந்த போர், 25 ஆண்டுகளாக தொடர்ந்து நீடித்து வருகிறது.


விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு மாகாணங்களை ஏற்கனவே ராணுவம் கைப்பற்றி விட்டது. அடுத்து விடுதலைப்புலிகளின் அரசியல் மற்றும் நிர்வாக தலைநகரமாக விளங்கும் கிளிநொச்சியை கைப்பற்றுவதற்காக, கடந்த செப்டம்பர் மாதம் தாக்குதலை தொடங்கியது.

விடுதலைப்புலிகளின் கடுமையான எதிர்ப்பு காரணமாக, ராணுவத்தினரால் கிளிநொச்சியை எளிதாக கைப்பற்ற முடியவில்லை. கடந்த சில மாதங்களாக நடைபெற்ற கடும் போரில் இரு தரப்பிலும் ஏராளமானவர்கள் பலியாகி வந்தனர்.


இந்த நிலையில், கிளிநொச்சிக்கு அரண் போல் அமைந்திருந்த முக்கியமான இரு தளங்களான பரந்தன் மற்றும் இரணைமடு ஆகியவற்றை நேற்று முன்தினம் ராணுவம் கைப்பற்றியது. இதன்மூலம் கிளிநொச்சியை நோக்கி அதிக அளவில் எதிர்ப்பு இன்றி ராணுவத்தினரால் எளிதாக முன்னேற முடிந்தது.

கிழக்கில் ஏ-9 நெடுஞ்சாலையில் இருந்து ஒரு படைப்பிரிவினரும், மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து இரு படைப்பிரிவினரும் முன்னேறிச்சென்று நேற்று காலை கிளிநொச்சி நகருக்குள் நுழைந்தனர். கிளிநொச்சியை கைப்பற்றிவிட்டதாக, மாலையில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

விடுதலைப்புலிகளின் ஆதிக்கத்தில் இருந்து வரும் கிளிநொச்சியில் 10 ஆண்டுகளுக்குப்பிறகு முதன் முதலாக ராணுவம் கைப்பற்றி இருப்பதாக அறிவிக்கப்பட்டது. விடுதலைப்புலிகளின் முக்கிய போர் படை தளமான `93 பேஸ்' மற்றும் பெண் புலிகளின் நிர்வாக அலுவலகமும் கைப்பற்றப்பட்டன.

பரந்தன் பகுதியில் விடுதலைப்புலிகளின் தளபதியாக செயல்பட்ட இளம்பிறையன் போரில் கொல்லப்பட்டதாகவும் ராணுவம் அறிவித்து உள்ளது. ராணுவத்தினரின் முன்னேற்றத்தை தொடர்ந்து, விடுதலைப்புலிகள் காட்டுப் பகுதிக்குள் தப்பி ஓடுவதாக, இலங்கை ராணுவ செய்தி தொடர்பாளர் பிரிகேடியர் உதய நாணயக்கரா தெரிவித்தார்.

ஆனால், கிளிநொச்சியை ராணுவத்தினர் கைப்பற்றியது தொடர்பாக, விடுதலைப்புலிகள் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதற்கிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற தாக்குதலில், ராணுவத்தினரை எதிர்த்து போர் புரிந்த `ராதா ரெஜிமெண்ட்' பிரிவை சேர்ந்த 35 பெண் புலிகள் பலியானார்கள். கடந்த 2 நாட்களாக நடைபெற்ற கிளிநொச்சி போரில், மொத்தம் 100 விடுதலைப்புலிகள் பலியானதாக ராணுவ தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

விடுதலைப்புலிகளிடம் உள்ள 6 விமான ஓடுதளங்களில், இரணைமடு உள்ளிட்ட மூன்று தளங்கள் ராணுவத்தினரின் வசம் வந்துவிட்டதாகவும், விடுதலைப்புலிகளின் அடுத்த புகலிடமான முல்லைத்தீவு பகுதியையும் ராணுவத்தினர் சுற்றி வளைத்து தாக்கி வருவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த 2 மாதங்களாகவே கிளிநொச்சி வீழ்ந்துவிடும் என்று ராணுவம் அறிவித்து வந்தாலும், விடுதலைப்புலிகள் ஏறத்தாழ 17 கிலோமீட்டர் தூரத்துக்கு மணலை குவித்து பாதுகாப்பு அரண் அமைத்து இருந்ததாலும், தொடர்ந்து பெய்து வந்த பருவ மழையினாலும் கிளிநொச்சியை எளிதாக நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், பரந்தன் மற்றும் இரணைமடு வீழ்ச்சியை தொடர்ந்து எளிதாக கிளிநொச்சியை நோக்கி முன்னேறிய ராணுவத்தினருக்கு அதிகமான எதிர்ப்பு இல்லை என்றும், முதலில் கிளிநொச்சி ரெயில் நிலையத்தை கைப்பற்றியதாகவும் மூத்த ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போர் தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பே பொதுமக்கள் கிழக்கு பகுதிக்கு இடம் பெயர்ந்து சென்றுவிட்டதால் நேற்று ராணுவம் நுழைந்தபோது கிளிநொச்சி நகர தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன.


கிளிநொச்சியை ராணுவம் கைப்பற்றிய தகவலை தனது டெலிவிஷன் உரையில் அறிவித்த இலங்கை அதிபர் ராஜபக்சே, விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு சரண் அடையும்படி வேண்டுகோள் விடுத்தார்.

"ஈடு இணையற்ற இந்த வெற்றியின் மூலம் நமது ராணுவத்தினரின் பெருமை சரித்திரத்தில் பல நூற்றாண்டுகளாக நிலைத்திருக்கும். உலகின் சக்திவாய்ந்த தீவிரவாத இயக்கம் என்று வர்ணிக்கப்படும் விடுதலைப்புலிகளின் முக்கிய கோட்டையை கைப்பற்றி இருப்பது, தீவிரவாதத்துக்கு எதிரான உலகளாவிய போருக்கு கிடைத்த வெற்றியாகும்'' என்றும் அவர் குறிப்பிட்டார்.


கிளிநொச்சி நகரை இழந்துவிட்டதால், தற்போது கிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு சிறிய பகுதியும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு பகுதி மட்டுமே விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக, விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு அமைப்பான `பிளாட்' இயக்க தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறி இருக்கிறார்.

"விடுதலைப்புலிகளின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டதால், அந்த இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் பாதுகாப்பில்தான் அதிக கவனம்செலுத்தி வருகிறார்கள். என்றாலும், பிரபாகரன் மறைந்து இருக்கும் இடத்தை இன்னும் ராணுவத்தால் கண்டுபிடிக்க முடியவில்லை'' என்றும் அவர் தெரிவித்தார்.


கிளிநொச்சி போர் பற்றி விடுதலைப்புலிகள் தரப்பில் உடனடியாக எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் பாலசிங்கம் நடேசன் கடந்த செவ்வாய்க்கிழமை அளித்த பேட்டியில், வடக்கு பகுதியை இழந்தாலும் ராணுவத்துக்கு எதிராக கொரில்லா தாக்குதல் தொடரும் என்று அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது..

மேலும் செய்திகளுக்கு :

No comments: