Thursday, January 1, 2009

சென்னையில் ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டுக்கு தீவிரவாதிகள் மிரட்டல்!.


சென்னையில் ஜனாதிபதி, பிரதமர் கலந்து கொள்ளும் மாநாட்டுக்கு தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ளனர்.

சென்னை, ஜன.2-

இந்திய வெளியுறவு அமைச்சகமும், இந்திய தொழில் கூட்டமைப்பும் இணைந்து மாபெரும் தொழில் மாநாட்டுக்கு ஏற்பாடுகள் செய்துள்ளன.

இந்த தொழில் மாநாடு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மைய அரங்கில் வருகிற 7, 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.



8-ந் தேதி இந்த மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டு பேசுகிறார். 9-ந் தேதி நிறைவு நாள் மாநாட்டில் ஜனாதிபதி பிரதீபா பட்டீல் பங்கேற்று பேசுகிறார். இந்த மாநாட்டில் வெளிநாட்டு பிரதிநிதிகள், மத்திய மந்திரிகள், மற்றும் மாநில முதல்-மந்திரிகளும் பங்கேற்க இருக்கிறார்கள்.

உலகம் முழுவதுமுள்ள நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் அதிபர்களும் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர். வெளிநாடுகளில் வாழும் இந்திய வம்சா வழி தொழில் அதிபர்களையும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்திய தொழில் மேம்பாட்டுக்காக இந்த மாநாடு நடத்தப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் இந்தியாவில் புதிய தொழில் தொடங்க உள்ள வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட உள்ளது.


ஜனாதிபதி, பிரதமர் மற்றும் வெளிநாட்டு பிரமுகர்களும் கலந்து கொள்வதால், இந்த மாநாட்டுக்கு வரலாறு காணாத வகையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாடு நடைபெறவுள்ள இடத்தை மத்திய மந்திரி வயலார் ரவி, தொழில்துறை செயலாளர் மோகன்தாஸ், தமிழக போலீஸ் டி.ஜி.பி. கே.பி.ஜெயின், புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட் ஆகியோர் ஏற்கனவே பார்வையிட்டனர்.

மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் மட்டும் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாநாட்டில் கலந்து கொள்ள வரும் வெளிநாட்டு பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் தங்குவதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


இந்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தொழில் கூட்டமைப்பு தலைமை அலுவலகத்துக்கு இ-மெயில் மூலம் ஒரு மிரட்டல் கடிதம் வந்தது. `அவர்பி 123 அட் யாகூ.கோ.யுகே' என்ற இணையதள முகவரியிலிருந்து அந்த மிரட்டல் கடிதம் வந்திருந்தது.

கடிதத்தில் `சென்னையில் நீங்கள் நடத்தும் 3 நாள் தொழில் மாநாட்டை நாங்கள் தீவிரமாக கண்காணித்தப்படி உள்ளோம். எங்களது அடுத்த தாக்குதல் அங்கு தான் நடைபெறும்' என்று எழுதப்பட்டிருந்தது.

`இந்தி முஜாகிதீன்கள்' என்ற அமைப்பு சார்பில் இந்த மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்திய தொழில் கூட்டமைப்பு அதிகாரிகள் இதுபற்றி மத்திய அரசின் உள்துறைக்கு தகவல் அனுப்பினார்கள். உள்துறை அதிகாரிகள் ரகசிய விசாரணை செய்தனர்.
இதற்கிடையில் மும்பையில் தாக்குதல் நடத்திய `டெக்கான் முஜாகிதீன்' என்ற தீவிரவாதிகள் இயக்கத்தின்பேரில், இந்திய தொழில் கூட்டமைப்பு அலுவலகத்துக்கு மேலும் 2 இ-மெயில் மிரட்டல்கள் வந்தன. `டெக்கான் முஜாகிதீன் அட் யாகூ டாட்காம்' என்ற இணையதள முகவரியிலிருந்து இந்த 2 மிரட்டல் கடிதங்கள் வந்தன. மத்திய உள்துறை அதிகாரிகள் இதை ஆய்வு செய்தபோது சவுதி அரேபியாவிலிருந்து இந்த இ-மெயில் மிரட்டல் கடிதங்கள் வந்திருந்தது கண்டறியப்பட்டது. உடனடியாக தமிழக அரசுக்கும் இதுபற்றி மத்திய அரசு தகவல் அனுப்பியது. சென்னையில் நடைபெறும் மாநாட்டுக்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும்படி எச்சரிக்கை செய்தியும் அனுப்பப்பட்டுள்ளது.


இந்த மிரட்டல் கடிதங்கள் குறித்து தமிழக சட்டம்-ஒழுங்கு போலீஸ் டி.ஜி.பி. கே.பி.ஜெயினிடம் நேற்று நிருபர்கள் கேட்டபோது, மிரட்டல் தகவல்கள் வந்தது உண்மைதான் என்றும், அதுபற்றி தீவிர விசாரணை நடப்பதாகவும் தெரிவித்தார். மாநாட்டுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் கூறினார்.

மிரட்டலையொட்டி, மாநாடு நடைபெறவுள்ள இடத்தில் 5 அடுக்கு பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வர்த்தக மையத்தில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் வர்த்தக மையத்திற்கு வரும் நுழைவு வாயில்களில் போலீசார் நின்று பலத்த சோதனைக்கு பிறகே உள்ளே அனுமதிக்கின்றனர்.

பணிகள் நடைபெறும் பகுதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் ரோந்து சுற்றி வருகின்றனர். வர்த்தக மையத்தை சுற்றி போலீசார் மாறுவேடங்களிலும் கண்காணித்து வருகின்றனர். சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த மாநாடாக இது இருப்பதால், இதை சீர்குலைக்கும் வகையில் தீவிரவாதிகள் மிரட்டல் கடிதத்தை அனுப்பியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.


இந்த இ-மெயில் மிரட்டல் கடிதங்கள் குறித்து, சென்னை சைபர் கிரைம் போலீஸ் உதவி கமிஷனர் டாக்டர் சுதாகரன் விசாரித்து வருகிறார்.

No comments: