Thursday, January 1, 2009

இலவச சர்க்கரை பொங்கல் பொருட்கள் மற்றும் வேட்டி-சேலை வழங்கும் தொடக்க விழா!.



சென்னை, ஜன.2-
இலவசம் என்பது கேலி, கிண்டலுக்குரியது அல்ல என்று, பொங்கல் இலவச பொருட்கள் வழங்கும் விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

தமிழ் புத்தாண்டான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, சர்க்கரை பொங்கல் வைப்பதற்கான அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த இலவச சர்க்கரை பொங்கல் பொருட்கள் மற்றும் வேட்டி-சேலை வழங்கும் தொடக்க விழா சென்னை வேளச்சேரியில் நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு, உணவுத்துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். முதல்-அமைச்சர் கருணாநிதி இலவச சர்க்கரை பொங்கல் பொருட்கள் மற்றும் வேட்டி-சேலைகளை பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கிவைத்தார்.

விழாவில் சபாநாயகர் ஆவுடையப்பன், மத்திய மந்திரி ஆ.ராசா, அமைச்சர்கள் துரைமுருகன், ஆற்காடு வீராசாமி, மு.க.ஸ்டாலின், பரிதி இளம்வழுதி, மேயர் மா.சுப்பிரமணியன், அரசு தலைமை செயலாளர் கே.எஸ்.ஸ்ரீபதி, கூட்டுறவு - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு செயலாளர் க.சண்முகம் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

விழாவில், முதல்-அமைச்சர் கருணாநிதி பேசியதாவது:-

தமிழ் புத்தாண்டு என்று கூறி, பொங்கல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு என்பதை நினைவுறுத்தி, அதனை சட்டமாகவும் ஆக்குவதற்கு காரணகர்த்தாக்களாக இருந்த தமிழ் பேரறிஞர்கள் அனைவருக்கும் இந்த விழாவிலே நான் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டிருக்கின்றேன்.

1921, 1931-ம் ஆண்டுகளில் தமிழகத்திலே உள்ள பெரும் புலவர்கள் எல்லாம் ஒரு இடத்திலே கூடி, மறைமலை அடிகளாரின் தலைமையில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினார்கள்.

பல புலவர்களுடைய ஆய்வுக்கு பிறகு, அந்த பேரறிஞர்களின் கண்டுபிடிப்பாக, நமக்கு தை முதல்நாள் தான் தமிழர்களுக்கு ஆண்டு பிறப்பு நாள், வேறு நாட்கள் எல்லாம் வரலாம், போகலாம். ஆனால் தை முதல் நாள்தான், `தை பிறந்தால் வழி பிறக்கும்' என்று ஏழை உழவர்களும், பாடுபடுகின்ற மக்களும், அந்த பாடுபட்ட உழைப்புக்கு கிடைத்த பயனும், இத்தனையும் ஒருசேர கிடைப்பது தை முதல்நாள் தான், அதனால் தான் `தை பிறந்தால் வழிபிறக்கும்'.

திருமணமாகாமல் இருக்கின்ற பெண்ணை பார்த்துக்கூட, அடுத்த வீட்டுக்காரம்மாள் அல்லது எதிர்த்த வீட்டுக்காரம்மாள் சொல்வது, பேசாமல் இருங்கள், வருத்தப்படாமல் இருங்கள், `தை பிறந்தால் உனக்கு வழிபிறக்கும்' என்று சொல்வதற்கு காரணமே, தை பிறந்தால் தான் வீட்டிலே ஒரு நல்ல நிகழ்ச்சியை நடத்துவதற்கு ஏற்ற செலவுக்கு தேவையான பணம் கூட கிடைக்கும்.



ஆகவே தை பிறந்தால் வழிபிறக்கும் என்று சொல்கின்ற இந்த பழமொழி நீண்ட நெடுங் காலத்திற்கு முன்பே உருவாகி, இடையிலே மறந்து போய், இடையிலே அதன் பொருள் விளங்காமல், தை பிறப்பது என்பது, பொங்கல் நாள் பிறப்பது என்பதல்ல, சங்கராந்தியின் விஜயம் என்று பஞ்சாங்கத்தை எடுத்து புரட்டிப் பார்த்தால், அதனுடைய முதல் பக்கத்திலோ, அல்லது மூன்றாம் பக்கத்திலோ, அல்லது இறுதி பக்கத்திலோ ஒரு பயங்கரமான பெண் உருவத்தை போட்டு, அந்த பெண் உருவமும் ஒரு கை, இரண்டு கையோடு இருக்காது, பத்து கைகளோடு விளங்கி, அந்த பெண் உருவத்தின் பல்லும், சாதாரணமாக முல்லை பல்லாகவோ, மல்லிகை பல்லாகவோ இல்லாமல், அந்தப் பல்லும் கோரப் பற்களாக இருந்து இந்த மகர சங்கராந்தி, இன்ன தேதியில், இன்ன லக்கனத்தில் வருகிறாள், எதிலே ஏறிக் கொண்டு வருகிறாள் என்றால், கழுதையில் ஏறிக்கொண்டு வருகிறாள். அல்லது கோவேறு கழுதையில் ஏறிக்கொள்கிறாள். அல்லது புலியின் மீது ஏறிக்கொண்டு வருகிறாள், அல்லது யானை மீது ஏறிக்கொண்டு வருகிறாள்.

அந்த மகர சங்கராந்தியின் பலன் எப்படி இருக்கும் என்றால், நாட்டில் மழை பொழியும் அல்லது பொழியாது. நாட்டில் பஞ்சம் வரும் அல்லது வராது என்ற இரண்டு மாறுபாடான ஜோதிடங்களை உள்ளடக்கியதாக மகரசங்கராந்தி வருவாள்.


இந்த மகரசங்கராந்தி என்பது தமிழர் ஏற்றுக்கொண்டதல்ல. நான் தமிழர் என்று சொல்வதற்கு காரணம், நான் இன்றைய தமிழர்களை சொல்லவில்லை. அன்றைய தமிழர்கள் யாரும் மகர சங்கராந்தியை ஏற்றுக்கொண்டவர்கள் அல்ல.

ஆனால், இடையிலே வந்த தமிழர்கள் அதை ஏற்றுக்கொள்ள கூடிய அளவுக்கு, இடையிலே வந்த தமிழர்கள் அதை ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவுக்கு, இடையிலே வந்தவர்கள் அதற்கான புராணங்களை சோடித்து, அதற்கான கதைகளை அளந்து, அதை நம்பச் செய்து, அதற்கு கடவுள் என்ற கற்பனையைத்தந்து அதனை ஏற்றுக்கொள்ள வைத்தார்கள். அதற்கு மறைமலை அடிகளார் போன்ற தமிழ் பெரியோர்கள், தந்தை பெரியாரைப் போன்ற சீர்திருத்த செம்மல்கள், அறிஞர் அண்ணாவைப் போன்ற அறிவியக்க வாதிகள் எல்லாம் தலையெடுத்து இன்றைக்கு மகர சங்கராந்தி மறைந்து பொங்கல் பூரிப்போடு எழுந்திருக்கின்றது.


நான்; பொங்கலைத்தான் கொண்டாட வேண்டும், நீங்கள் ஏற்கனவே கொண்டாடிக் கொண்டிருந்த மகர சங்கராந்தியை கொண்டாட வேண்டாம் என்று சொல்லவில்லை. அந்த நம்பிக்கை உள்ளவர்கள் கொண்டாடுங்கள். இதிலே நம்பிக்கை இல்லை என்று எண்ணுகின்றவர்கள், எங்களுக்கு தமிழின்பால் தான் அன்பு, தமிழின் மீது தான் பற்று, பாசம், நாங்கள் தமிழர்கள், ஆகவே தமிழர்களுடைய திருநாளை, தமிழர்களுடைய பண்டிகையை தமிழர்கள் முறைப்படி கொண்டாட வேண்டும் என்று எண்ணுகின்றவர்கள் பொங்கல் நாளை கொண்டாடுங்கள் என்று தான் நான் கூற விரும்புகின்றேன்.

அதைக் கொண்டாடியவர்கள் கொண்டாடிக்கொண்டு இருக்கட்டும். அதை கொண்டாடுகின்ற காரணத்தால் நீங்கள் இதை கொண்டாட வேண்டாமென்று சொல்லமாட்டேன். இதைக் கொண்டாடுகின்ற காரணத்தால் அதை கொண்டாட வேண்டாம் என்று நான் தடுத்திட மாட்டேன். அதே நேரத்திலே தமிழன் எதை கொண்டாட வேண்டும், எந்தத் திருநாளை கொண்டாட வேண்டாம் என்பதை சிந்தித்து செயல்படுங்கள் என்று கேட்டுக்கொள்ள எனக்கு கடமை இருக்கிறது. அதை சந்தித்து ஏற்றுக்கொள்கின்ற உரிமை உங்களுக்கு இருக்கிறது. ஆகவே கடமைக்கும் உரிமைக்கும் உள்ள அந்தப் பொருள்தனை உணர்ந்து தமிழர்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இன்று இந்த விழாவில் பொங்கலை முன்னிட்டு சில சமையல் பொருட்கள், அரிசி உள்பட, சர்க்கரை உள்பட இலவசமாக வழங்கப்படுகிறது. இப்படி இலவசமாக வழங்குவதையே சிலர் கேலி செய்கின்ற நிலை நாட்டிலே ஏற்பட்டிருக்கின்றது. வழங்காவிட்டால் நீங்கள் மாத்திரம் உண்ணுகிறீர்கள், உற்சாகமாக இருக்கிறீர்கள், ஏழை எதுவும் இல்லாமல் பசியால், பட்டினியால் அல்லல் படுகிறானே, உங்களுக்கு கண் தெரியவில்லையே என்று கேட்கின்றவர்களும் நாட்டிலே உண்டு. இலவசமாகக் கொடுத்தால், இப்படி எதையும் இலவசமாக கொடுத்தால் நாடு உருப்படுமா என்று கேட்கிறவர்களும் இருக்கின்றார்கள்.

அந்த பொருளாதார மேதைகளுக்கு சொல்லிக்கொள்கிறேன். எல்லோரும் பொருளாதாரத்தின் அடித்தளத்தை உணர்ந்து, பொருளாதாரத்தை எப்படி வளர்ப்பது என்ற ஆய்விலே வெற்றிபெற்று, ஒருசேர பொருளாதாரத்தை வளர்க்க தொடங்கினால் அப்போது வேண்டுமானால் இலவசத்தை வேண்டாம் என்று ஒவ்வொன்றுக்கும் விலை வைத்து, அதை விற்று, அதன் மூலம் வருகின்ற வரவு, அதனால் ஏற்படுகின்ற செலவு, ஆகியவற்றை கணக்கிடலாம்.

அதற்கிடையே வேண்டும் என்றே நாம் செய்கிறோம் என்பதற்காக இலவசம் என்றாலே கிண்டல், இலவசம் என்று சொன்னாலே கேலி, இலவசம் என்று சொன்னாலே அதற்கு ஒரு கேலி சித்திரம், இலவசம் என்று சொன்னாலே, அதற்கு ஒரு ஏகடியத் தலையங்கம் எழுதுகின்ற பத்திரிகைகள் நாட்டிலே இருப்பதை நான் காணுகின்றேன்.


இலவசம் என்றால் அதிலே என்ன கெடுதி?. அன்னதானம் செய்கிறார்களே, அது இலவசம் இல்லையா? மணிமேகலை அச்சய பாத்திரத்தை வைத்துக்கொண்டு, அதிலே அவ்வப்போது விளைகின்ற அன்னத்தை அகதிகளுக்கு, அனாதைகளுக்கு அளித்ததாகக் கவிதையாத்து, அதை காப்பியங்களிலே ஒன்றாக சேர்த்திருக்கிறோமே, அது இலவசம் அல்லவா?. அவ்வளவு ஏன்? நாம் தருகின்ற இலவசங்களை கேலி செய்கின்ற பத்திரிகைகள், அவர்களே வாரம் ஒரு நாள், ஒரு பத்து பக்கங்கங்களை கொண்ட அந்த பத்திரிகை, வேறு 4 பக்கங்களை இணைத்து, இது இலவசம் என்று சொல்கிறார்களே, அது இலவசம் இல்லையா?.

இலவசத்தை இன்று கேலி செய்கின்றவர்கள் எல்லாம், ``இலை வசம் ஆனவர்கள்''. அதனால் அதை கேலி செய்து கொண்டிருக்கிறார்கள். அதனால் நம்மை அவர்கள் கேலி செய்ய, நம்மை கிண்டல் செய்ய, நம்மைப் பற்றி அவதூறு கூற ``இலவசம் என்றால் - அது தி.மு.க.'' என்று இலவசத்திற்கே ஒரு இலக்கணம் சொல்லத் தயாராக இருக்கிறார்கள் என்றால், நாம் அதற்காக கவலைப்படவில்லை.


இலவசத்தைப் பெறுவதற்கு இந்த நாட்டிலே லட்சக்கணக்கான மக்கள் இருக்கிறார்கள். ஏழைகள் மாத்திரமா? இல்லை. சென்னை மாநகரத்திலே யார் யார் எல்லாம் அந்த இலவசங்களை பெற முன்வந்தார்கள் என்பதை நான் அறிவேன்.

மழை பெய்து வெள்ளம் வந்தால், நம்முடைய மேயர், மாநகராட்சி மன்றத்திலே பட்ட பாட்டை 2 நாட்களுக்கு முன்பு பத்திரிகைகளிலே பார்த்தேன். மேயர் தம்பி சுப்பிரமணியன் சொல்லியிருக்கிறார், எங்கள் வீடு இடிந்துவிட்டது என்று நாங்கள் தந்த 2,000 ரூபாய் அல்லது 1,000 ரூபாயை பெற வருகின்றவர்கள் யார் தெரியுமா? காரிலே ஏறிக்கொண்டு வந்தவர்கள், சொந்தக் காரிலே வந்து பணம் கேட்டார்கள் என்றெல்லாம் கூடச் சொன்னார்.

அது அவர்களைப் பொறுத்தவரை ஒரு உரிமை; இலவசமாக கொடுக்கும் போது ஏழைகளுக்கு மட்டும் கொடுப்பதா?. நாங்கள் ஒரு காலத்திலே ஏழைகளாக ஆகமாட்டோம் என்பது என்ன நிச்சயம்?. ஆகவே எங்களுக்கும் கொடுங்கள் என்று உரிமையோடு கேட்கிறார்கள்.

எனவே இலவசம் என்பது கேலிக்குறியது அல்ல. கிண்டலுக்குரியது அல்ல. அதிலும் இன்றைக்கு தருகின்ற, பொங்கலுக்காக தருகின்ற இந்த இலவச வேட்டியானாலும், சேலையானாலும், அல்லது பொங்கல் சமைப்பதற்காக தருகின்ற சர்க்கரை ஆனாலும், அரிசி ஆனாலும், துணை பொருட்களானாலும், இவைகள் எல்லாம் நாம் ஒவ்வொரு வீட்டிலும், நான் வந்து பொங்கல் அளித்து, நானும் உங்களோடு அமர்ந்து சாப்பிட வசதியும், வாய்ப்பும் இல்லாத காரணத்தால், உங்கள் வீடுகளிலும் அதற்கான வசதி வாய்ப்புகள் இன்னும் ஏற்படாத காரணத்தால், நானே வந்து உங்கள் வீட்டில் உங்களோடு அமர்ந்து, உங்களுக்கும் தந்து எனக்கும் அதிலே பங்கெடுத்துக்கொள்வதைப் போலத்தான் இந்த பொங்கல் விழாவிலே இந்த அரிசியும், பருப்பும், சர்க்கரையும் இலவச வேட்டியும், சேலையும் வழங்கப்படுகின்றன என்பதை நீங்கள் எண்ணிக்கொள்ள வேண்டும்.
ஒரு சகோதரன் தந்தது என்று சகோதரிகளும், நம்முடைய பிள்ளை கொடுத்தது, நம்முடைய மகன் வாங்கி அளித்தது என்று தாய்மார்களும், எண்ணிக்கொண்டு இதைப் பெற்று கொள்கிறார்களே அல்லாமல், இலவசம், நாங்கள் எல்லாம் இரவலர்களாக ஆகி விட்டோம், ஆகவே இந்த அரங்கத்திலே இவைகளை எல்லாம் இலவசமாக பெறுகிறோம் என்ற எண்ணத்தோடு அல்ல; அவர்கள் பெறுவது!, உரிமையோடு தருகிறேன். உறவு மனப் பான்மையோடு தருகிறேன், என் அக்காள், தங்கைகளுக்கு தருகிறேன், வேலைகளை; அண்ணன், தம்பிகளுக்கு தருகிறேன் வேட்டிகளை என்ற அந்த உணர்வோடு தான் நான் தருகிறேன்.

அந்த உணர்வோடு தான் அவர்களும் அதை வாங்கி பயன்படுத்துகிறார்கள். அந்த உறவை பரிமாறிக்கொள்கிற நாளாகத் தான் இந்தப் பொங்கல் நாள் இருக்கிறது. பொங்கல் நாள் என்று மாத்திரமல்ல, தமிழர் ஆண்டின் முதல் நாள், தைத் திருநாள், தை முதல் நாள், நம்முடைய தமிழ் ஆண்டு பிறப்பு நாள், என்ற முறையிலே இது அமைகிறது.
அந்த வகையில் இன்னும் 10 நாட்கள் கழித்துத்தான் பொங்கல் கொண்டாட விருக்கிறோம் என்றாலும், முன்கூட்டியே நான் கொடுப்பதற்கு காரணம், அந்த நேரத்தில் அனைவருக்கும் ஒட்டு மொத்தமாக தர இயலாது. அந்த நேரத்திலே ஏறத்தாழ 2 கோடி மக்களுக்கு வேட்டி, சேலை தருவதென்றால் எவ்வளவு நெருக்கடி ஏற்படும், நெரிசல் ஏற்படும் என்பதையும் அதைக் கட்டுப்படுத்த முடியாமல், ஒரு காலத்தில் சென்னை எம்.ஜி.ஆர். நகரிலே நடைபெற்றதே, அதைப் போன்ற நிகழ்ச்சிகள் நடைபெற்று விடக்கூடும், அப்படி நடைபெறாமல் தடுக்கத் தான் நிதானமாக, அமைதியாக அவரவர்களும் தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப இவைகளை பெறுவதற்கான வழிவகுத்து, கட்டுப்பாட்டோடு, கடமை உணர்வோடு இந்த காரியத்தை செய்ய நம்முடைய அரசு அதிகாரிகள் தங்களை தயார்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முக்கியமாக நம்முடைய உணவு அமைச்சர் தம்பி எ.வ.வேலு, அவருடைய பெயரை பார்த்தாலே ``ஏவா'' வேலு, ஏவ வேண்டியது அவசியமே இல்லை. ஏவாமலே வேலை செய்கின்றவர் வேலு, அந்த வேலு நான் இந்தத் திட்டத்தை சொன்னவுடன், அவரே ஏவா வேலுவாக இருந்து, இந்த திட்டத்தை இவ்வளவு அருமையாக தயாரித்து அவருடைய செயலாளர்கள் மூலமாகவும், அவர்களுடைய ஒத்துழைப்போடும் இதை வெற்றி கரமாக இன்றைக்கு நிறைவேற்றி வருகிறார். இது இன்று முதலே தொடங்குகிறது. நான் தொடங்கி வைக்கின்றேன். பொங்கல் நாள் வரையிலும் இது தொடரும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி பேசினார்.

No comments: