Tuesday, January 6, 2009

தமிழக சட்டசபை 21-ந் தேதி கூடுகிறது!.- கவர்னர் பர்னாலா உரை!.




பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் தமிழக சட்டசபை 21-ந் தேதி கூடுகிறது. முதல் நாள் கூட்டத்தில் கவர்னர் பர்னாலா உரையாற்றுகிறார்.

சென்னை, ஜன.7-

தமிழக சட்டமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் கடந்த நவம்பர் மாதம் 10-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை 5 நாட்கள் நடந்து முடிந்தது.

இந்த நிலையில் 2009-ம் ஆண்டின் முதல் சட்டமன்ற கூட்டத்தொடர் நடக்கும் தேதியை கவர்னர் பர்னாலா நேற்று அறிவித்தார்.

ஆண்டுதோறும் சட்டசபையின் முதலாவது கூட்டம் கவர்னரின் உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டுக்கான கூட்டத்தொடர் 21-ந் தேதி தொடங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா நேற்று வெளியிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்ற செயலாளர் மா.செல்வராஜ் இது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளார். அதில், ``தமிழக சட்டமன்றத்தின் கூட்டத்தை 2009-ம் ஆண்டு ஜனவரி 21-ந் தேதி அன்று (புதன்கிழமை) கவர்னர் கூட்டியுள்ளார். அன்றைய தினம் காலை 9.30 மணிக்கு சட்டமன்ற பேரவை மண்டபத்தில் உரை நிகழ்த்த உள்ளார். அவ்வமயம் தங்கள் வருகையை வேண்டுகிறேன். மறுநாள் (வியாழக்கிழமை) காலை 9.30 மணிக்கு மீண்டும் அவை கூடும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் 11-வது சட்டமன்றத்தின் 10-வது கூட்டத்தொடர் வருகிற 21-ந் தேதி கூடும்போது, முதல் நாளில் கவர்னர் உரை நிகழ்த்துவார். அதில், இந்த ஆண்டுக்கான நலத்திட்டங்கள் பற்றிய சில அறிவிப்புகள் இருக்கும்.

கவர்னர் தனது உரையை ஆங்கிலத்தில் வாசிப்பார். அதனை சபாநாயகர் தமிழில் மொழி பெயர்த்து வாசிப்பார். கவர்னர் உரையை தமிழில் வாசிக்கும் வழக்கம் முதன் முதலில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில்தான் (1977) அறிமுகப்படுத்தப்பட்டது. இடையில் 2003, 2004 ஆண்டுகளில் அது நிறுத்தப்பட்டு 2005-ம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்கப்பட்டது.

கூட்டத்தின் 2-வது நாளான 22-ந் தேதி அன்று சமீபத்தில் மறைந்த சட்டமன்ற முன்னாள் உறுப்பினர்கள் சிலரின் மறைவுக்கு இரங்கல் குறிப்பு வாசிக்கப்படும். அதன்பிறகு அன்றைய தினமே ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் கொண்டு வரப்படும். அதனை ஆளுங்கட்சி உறுப்பினர் முன்மொழிவார். ஆளுங்கட்சியின் மற்றொரு உறுப்பினர் வழிமொழிவார். அதன்பின் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும். இதில் அனைத்து கட்சி உறுப்பினர்களும் பேசுவார்கள். கூட்டத்தொடரின் கடைசி நாளில் முதல்-அமைச்சர் கருணாநிதி தனது பதில் உரையை நிகழ்த்துவார்.

கடந்த ஆண்டில் முதல் கூட்டத்தொடர் ஜனவரி 23-ந் தேதி தொடங்கி, பிப்ரவரி 1-ந் தேதி வரை (சனி, ஞாயிறு நீங்கலாக) 7 நாட்கள் நடந்தது. இந்த ஆண்டில் கூட்டத்தொடர் எத்தனை நாட்கள் நடக்கும் என்பது பற்றி சட்டமன்ற அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில்தான் முடிவு செய்யப்படும். முதல் நாள் கூட்டம் முடிந்த பிறகு, அலுவல் ஆய்வுக்குழு கூடும். அதில்தான், கூட்டத்தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது பற்றி முடிவு செய்யப்படும். மேலும், என்னென்ன மசோதா தாக்கல் செய்யப்படும் என்பது பற்றியும் தெரியவரும்.

அனேகமாக இக்கூட்டத்தொடர் சுமார் ஒரு வார காலம் நடக்கலாம். இதுவரை எந்தவொரு சட்டமசோதாவும் சட்டமன்ற அலுவலகத்துக்கு வரவில்லை எனத்தெரிகிறது. இந்த அறிவிப்புக்கு பிறகு இனிமேல் வரக்கூடும். இதுதவிர, உரிமை மீறல் பிரச்சினை, செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ. ராஜினாமா விவகாரம் பற்றியெல்லாம் இந்த தொடரில் முடிவெடுக்கப்படலாம் என்றும் தெரிகிறது.

கடந்த ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடந்தபோதுதான் தை மாதத்தை தமிழ் மாதங்களின் முதல் மாதமாக அறிவித்து சட்டமசோதா தாக்கல் (29.1.2008) செய்யப்பட்டது. அந்த சட்டம் 1.2.2008-ல் நிறைவேறியது. அதுபோல் இந்த ஆண்டும் ஏதேனும் முக்கிய சட்டமசோதாக்கள் தாக்கல் செய்யப்படலாம்.

திருமங்கலம் இடைத்தேர்தல் முடிந்த பின்னர் நடக்கும் கூட்டத்தொடர் என்பதால் இது மிகவும் விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. இலங்கை தமிழர் பிரச்சினை உள்பட பல்வேறு பிரச்சினைகளில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளிடையே சூடு பறக்கும் விவாதங்கள் நடக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற தேர்தல் வருவதால் இந்த கூட்டத்தொடர் முடிந்த சில நாள்களில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

No comments: