Wednesday, December 31, 2008

"இன்று 2009 பிறக்கிறது" - தலைவர்கள் புத்தாண்டு வாழ்த்து!.





சென்னை, ஜன.1-

புத்தாண்டையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

2008-ம் ஆண்டு முடிந்து இன்று 2009-ம் ஆண்டு பிறந்துள்ளது. புத்தாண்டையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருணாநிதி

சமத்துவம், சமுதாய நல்லிணக்கம், மதச்சார்பின்மை, அரசியல் சமூக அறிவியல் பொருளாதார நிலைகளில் தமிழகம் நிலையான-வலுவான முன்னேற்றம் காண அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என புத்தாண்டு நாளில் உறுதி ஏற்போமாக என்று, முதல்-அமைச்சர் கருணாநிதி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
2008-ம் ஆண்டு முடிந்து இன்று (வியாழக்கிழமை) 2009-ம் ஆண்டு பிறக்கிறது. இதையொட்டி முதல்-அமைச்சர் கருணாநிதி மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இது குறித்து முதல்-அமைச்சர் கருணாநிதி வெளியிட்டு உள்ள வாழ்த்துச் செய்தியில் கூறி இருப்பதாவது:-



புத்தாண்டு 2009 பிறக்கிறது! "ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம்'' என்பதைக் கொள்கை நெறியாக நமக்கு வகுத்துத் தந்த மாமேதை பேரறிஞர் அண்ணா பிறந்த நூற்றாண்டில் மலர்கிறது, இந்தப் புத்தாண்டு!

2006-ம் ஆண்டு இந்த அரசு பொறுப்பேற்றது முதல் இதுவரை புதிய வரிவிதிப்பு எதுவுமின்றி - ஏராளமான வரிச்சலுகைகளுடன்:- விவசாயிகளின் துயர்தீர 7 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி; நிலமற்ற ஏழை விவசாயக் குடும்பங்களுக்கு இலவச நிலம்; சத்துணவுடன் வாரம் மூன்றுமுறை முட்டைகள் - வாழைப்பழங்கள்; கர்ப்பிணிப் பெண்களுக்கு 6 ஆயிரம் ரூபாய்; ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு 20 ஆயிரம் ரூபாய்; இலவச வண்ணத் தொலைக் காட்சிப் பெட்டிகள்;



எரிவாயு இணைப்புடன் இலவச அடுப்புகள், ஏழைத் தொழிலாளர் நலம் பெற அமைப்புசாரா நல வாரியங்கள் முதலான பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி - 1 கிலோ அரிசி 1 ரூபாய்க்கு வழங்கும் திட்டம்;- கிராமப்புற மக்களின் அவசர மருத்துவ உதவிக்கு நடமாடும் மருத்துவக்குழு ஊர்திகள் திட்டம்; - பள்ளிச்சிறார் இருதயநோய் அறுவை சிகிச்சைத் திட்டம்; அரசுப் பணியாளர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்;

385 ஊராட்சி ஒன்றியப் பெருந்தலைவர்களுக்கும் வாகனங்கள்; மானிய விலையில் 10 மளிகைப் பொருள்கள்;


தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம்; தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம்; தமிழ்நாடு நரிக்குறவர் நல வாரியம்; தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்; அருந்ததியர்க்கு தனி உள் இட ஒதுக்கீடு வழங்கிட நடவடிக்கை!

-எனும் புதிய திட்டங்களையும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினர் அனைவரும் பலன் பெற்றிடும் வகையில் நடைமுறைப்படுத்திய 2008-ம் ஆண்டு "தைத் திங்கள் முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டு தொடங்கும் நாள்'' எனச் சட்டம் இயற்றித் தந்த வரலாற்றுப் பெருமையோடு விடை பெற; தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழாவைச் சீரோடும் சிறப்போடும் கொண்டாடுவதற்கு, சர்க்கரைப் பொங்கல் தயாரிக்கத் தேவையான பச்சரிசி, வெல்லம் முதலிய பொருள்களை எல்லோர்க்கும் வழங்கும் புதிய திட்டத்தைத் தொடங்கி வைப்பதுடன், ஏழை எளியோர்க்கு இலவச வேட்டி சேலை வழங்கும் திட்டத்தையும் தொடங்கி 2009 புத்தாண்டு மலர்கிறது!



இந்த இனிய ஆங்கிலப் புத்தாண்டுத் திருநாளில் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த நல்வாழ்த்துகள் உரித்தாகுக!
சாதி மதங்களின் பெயரால் தீவிரவாதச் செயல்கள் எந்தவொரு பகுதியிலும் தலையெடுப்பதை முற்றிலும் தடுத்திடுவோம் எனும் உணர்வோடு 2009-ம் ஆண்டினை வரவேற்போம்! சமத்துவம், சமுதாய நல்லிணக்கம், மதச் சார்பின்மை, அரசியல் சமூக அறிவியல் பொருளாதார நிலைகளில் தமிழகம் நிலையான - வலுவான முன்னேற்றம் காண அனைவரும் இணைந்து பாடுபடுவோம் என இந்தத் திருநாளில் உறுதியேற்போமாக!

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறி உள்ளார்.

ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

மலர்கின்ற புத்தாண்டை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் எனதருமை தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வறுமை நீங்கி வளம் பெறவும், இருள் நீங்கி ஒளி பிறக்கவும், குடும்ப ஆட்சி ஒழிந்து மக்களாட்சி மலரவும், தீவிரவாதம் வேரறுக்கப்பட்டு அமைதி தழைக்கவும், அனைவரின் வாழ்விலும் மந்தம் அகன்று மந்தகாசம் பொங்கவும், இந்த புத்தாண்டு திருநாளில் நாம் அனைவரும் சபதம் ஏற்போம்.

இந்த புத்தாண்டு மக்கள் அனைவருக்கும் எல்லா நலன்களையும், வளங்களையும் வழங்குகிற ஆண்டாக விளங்க வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்து, அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

வைகோ

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களின் துயரங்கள் நீங்கி, இலங்கையில் துன்பக்கடலில் தவிக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு உரிமை வாழ்வும், விடியலும் பூக்கும் என்ற நம்பிக்கையோடு, தமிழக மக்களுக்குப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
தங்கபாலு

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் நலன் எனும் மாபெரும் சக்தி நாடெங்கும் ஓங்கி உயர்ந்திட அமைதி, சமாதானம், மத நல்லிணக்கம் மிளிர்ந்திட அனைவருக்கும் ஒன்றுப்பட்டு உழைப்போம். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உலகெங்கும் வாழும் அனைத்து மக்களுக்கும், குறிப்பாக தமிழ் இன சகோதர, சகோதரிகளுக்கும் வழங்கி மகிழ்கிறோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தா.பாண்டியன்

இநதிய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியிருப்பதாவது:-

வளமும், மனித நேயமும், தமிழ்ச் சமுதாயம் படைத்திட புத்தாண்டு நமக்கு சக்தியாகவும் வெற்றியையும் தந்திட வேண்டும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு தா.பாண்டியன் கூறியுள்ளார்.

விஜயகாந்த்

தே.மு.தி.க. நிறுவன தலைவர் விஜயகாந்த் கூறியிருப்பதாவது:-

2009-ம் ஆண்டு அரசியல் ரீதியாக மிகவும் முக்கியமான ஆண்டாகும். பாராளுமன்ற தேர்தல் இந்த ஆண்டில் தான் வர உள்ளது. தீவிரவாதம் இந்தியாவின் ஒற்றுமைக்கே சவாலாக உள்ளது. இலவச கணினி பயிற்சி, 1 லட்சம் பேருக்கு வேலை போன்றவற்றை செயலாக்கி வருகிறோம். தே.மு.தி.க. நேர்மையானவர்களை கொண்டு நல்ல அரசியல் நடத்த பாடுபட்டு வருகிறது. இந்த புத்தாண்டு தமிழ்நாட்டு வரலாற்றில் புதிய திருப்புமுனையாக அமைய வேண்டுமென்ற அடிப்படையில் எனது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.
எம்.ஜி.ஆர்.கழகம்

எம்.ஜி.ஆர். கழக தலைவர் ஆர்.எம்.வீரப்பன் கூறியிருப்பதாவது:-

2008-ம் ஆண்டு இலங்கை தமிழ் மக்களுக்கு நேர்ந்துவரும் கொடுமைகள் தமிழ் மக்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த குறைகளைஎல்லாம் 2009-ம் ஆண்டில் தீர்த்து முழு மகிழ்வுடன் தமிழ் மக்கள் வாழ எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.

திருநாவுக்கரசர் எம்.பி.

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய செயலாளர் திருநாவுக்கரசர் எம்.பி. வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "புத்தாண்டில் தீவிரவாதம், வன்முறை, வறுமை, அறியாமை போன்ற தீமைகள் அகன்று அனைவரின் வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வாழ்த்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.

மத்தியமந்திரி ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இனம், மதம், மொழி என்ற எல்லைகளை கடந்து தேசத்தின் வளர்ச்சிக்காக உழைப்போம். அனைவருக்கும் என் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

கி.வீரமணி

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பிறக்கும் 2009-ம் ஆண்டு தமிழ் புத்தாண்டை (தை முதல் நாளை) தமிழர்கள் முதன்முதல் கொண்டாடிட உரிமை பெற்று தந்த ஆண்டு. தன்மானம், தன்னிறைவு, தன்னம்பிக்கையுடன் வாழ வழி வகுக்கும் ஆண்டாகவும் அமையும் என்ற நம்பிக்கையுடன் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

புதியநீதிக்கட்சி நிறுவன தலைவர் ஏ.சி.சண்முகம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "இன்றைய நாள், நாட்டு மக்கள் அனைவருக்கும் இனிய நாள். நமது நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்லும் ஆண்டாகவும் அமைய வேண்டும். இந்த இனிய நாளில் நம் நாட்டு மக்கள் எல்லா வளங்களும், நலன்களும் பெற்று வாழ இறைவனை வேண்டி, அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று கூறியுள்ளார்.

ஜெகத்ரட்சகன்

ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

புத்தாண்டு பிறக்கின்ற இந்த வேளையில் புத்தர், இயேசு, காந்தி போன்ற மானுட வர்க்கத்தின் உயர்ந்த மானுடர்கள் போதித்த அன்பு, அறம், அமைதி என்ற மூன்றையும் நினைவில் கொண்டு மானுட வர்க்கம் உய்யும் வழியை எண்ணிப்பார்க்க வேண்டும். அன்பும், அமைதியும், அறவழியில் தான் மனிதநேயத்தை வளர்க்க முடியும். அந்த மனிதநேயத்தை வளர்க்கும் இந்த புத்தாண்டு. இந்த புத்தாண்டை எதிர்நோக்குவோர் மனிதநேயமும், அன்பும் மலரட்டும் என்பதுமே இந்த புத்தாண்டில் நாம் எதிர்நோக்கும் இனிய செய்தி.

இந்த இனிய புத்தாண்டில் தமிழகத்தை பொறுத்தவரையில் தமிழக முதல்-அமைச்சர் கருணாநிதி உறுதியான, பொறுப்புமிக்க, ஆற்றல் மிகுந்த அரவணைப்பும், தலைமையும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த வாழ்க்கையும், வளமான எதிர்காலமும் அமையும் என்ற நம்பிக்கையோடு எனது வாழ்த்து செய்தினை ஜனநாயக முன்னேற்றக்கழகம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

சமாதானப்பிரபு திருச்சபைகளின் சீனியர் பிஷப் பி.ஏ. ஜேம்ஸ் சந்தோஷம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "தேசத்திற்காக பாடுபடுகிற அத்தனை தலைவர்களையும் இறைவன் ஆசீர்வதிக்கும் படியாகவும், உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தீர்ந்து, நாடும் நாட்டு மக்களும் இன்பற்று வாழ எல்லாம் வல்ல இறைவனை பிராத்திப்போம்'' என்று கூறியுள்ளார்.

கார்த்தி ப.சிதம்பரம்

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் செல்வபெருந்தகை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சையதுசத்தார், அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழக தலைவர் சேதுராமன், தேசிய லீக் கட்சி தலைவர் எம்.பஷீர் அகமது, பாரதீய ஜனதா கட்சியின் சிறுபான்மை பிரிவு மாநில தலைவர் கனிபாய், தலித் மக்கள் முன்னணி தலைவர் குமரி அருண், அம்பேத்கார் மக்கள் கட்சி நிறுவன தலைவர் மத்தியாஸ்.

ராமசாமி படையாச்சியார் வாழப்பாடியார் பேரவை தலைவர் வி.தேவதாஸ், தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தள தலைவர் பி.முகமது இஸ்மாயில், பொதுச்செயலாளர் வி.பி.இதயவண்ணன், இஸ்லாமிய இலக்கிய கழக துணை தலைவர் பிரசிடெண்ட் அபுபக்கர், பொதுச்செயலாளர் எம்.எம்.இதயத்துல்லா.

தமிழக கேபிள் டி.வி. ஆப்பரேட்டர்கள் பொது நல சங்க மாநில தலைவர் சகிலன், பாட்டாளி மக்கள் முன்னேற்ற கட்சி நிறுவன தலைவர் சி.என்.ராமமூர்த்தி, வி.ஜி.பி. உலக தமிழ் சங்க தலைவர் வி.ஜி.சந்தோசம், அம்பேத்கார் முன்னணி கழக மாநில பொதுச்செயலாளர் திண்டிவனம் ஸ்ரீராமுலு, தென் இந்திய பொதுநலச் சங்க மாநில பொதுச்செயலாளர் பி.வி.ராஜேந்திரன், ஜனதா தளம் (ஐக்கியம்) கட்சியின் தலைமை பொதுச்செயலாளர் டி.ராஜகோபால்.

பேரவை-கட்சிகள்

தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் மன்ற பொதுச்செயலாளர் மீனாட்சிசுந்தரம், சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை பொதுச்செயலாளர் மேலை நாசர், தமிழ் மாநில முஸ்லீம் லீக் கட்சி தலைவர் சேக் தாவூத், அகில இந்திய கட்டிட தொழிலாளர்கள் சங்க பொதுச்செயலாளர் மு.பன்னீர் செல்வம், அனைத்து செட்டியார்கள் முன்னேற்ற பேரவையின் தலைவர் கே.சி.அருணாசலம்.
புரட்சிபாரதம் கட்சியின் மாநில தலைவர் பூவை.ஜெகன்மூர்த்தி, தமிழர் தந்தை ஆதித்தனார் தமிழ்பேரவை நிறுவன தலைவர் ஏ.காமாட்சி பாண்டியன், சென்னை செடியூல்டு கேஸ்ட் நலசங்கத்தின் தலைவர் ராஜசேகர், தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி, தமிழக கட்டிட தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் தலைவர் பொன்குமார்.

ராஜீவ்மக்கள் காங்கிரஸ் தலைவர் ஏ.ஜி.நரசிம்மன், ராஷ்டீரிய லோக் தள் கட்சி தலைவர் இளஞ்சூரியன், தமிழ்நாடு ஜனதா தளத்தின் பொதுசெயலாளர் ஜான்மோசஸ், ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல்அலி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.காதர்மொகைதீன், ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக மாநில தலைவர் மாமல்லன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

ப.சிதம்பரம்

மத்திய உள்துறை மந்திரி ப.சிதம்பரம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இன்றுடன் 2008-ம் ஆண்டு நிறைவுபெற்று, 2009-ம் ஆண்டு தொடங்க இருக்கிறது. 2008-ம் ஆண்டின் தொடக்கம் முதல் பொருளாதாரச் சூழ்நிலை உலகத்திற்கே ஒரு சவாலாக இருந்ததை நாம் மறக்க முடியாது.

பொருளாதார சவாலை நாம் எதிர்கொண்ட வேளையில் சில தீய அந்நிய சக்திகள் இந்தியாவில் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டன. இந்த சவாலையும் எதிர்கொண்டு இந்தியாவின் இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. பொது மக்களின் முழு ஒத்துழைப்புடன் மட்டுமே அரசின் முயற்சிகள் வெற்றி பெற முடியும்.

அமைதியான, வலிமை பாரதம் உருவாக 2009-ம் ஆண்டும், தொடர்ந்து வரும் ஆண்டுகளுக்கும் வழிவகுக்கும் என்ற நம்பிக்கையோடு அனைவருக்கும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

இவ்வாறு வாழ்த்து செய்தியில் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்மாநில செயலாளர் என்.வரதராஜன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "பல முக்கியமான நிகழ்வுகளை சந்தித்த 2008 ஆண்டு விடைபெறுகிறது. தமிழகத்தில் பேய் மழை-வெள்ளத்தின் பாதிப்புகள் கிராமப்புற மக்களின் வாழ்க்கையை அவலம் நிறைந்ததாக ஆக்கியுள்ளன. இந்த பின்னணியில் எதிர் வரும் 2009-ம் ஆண்டு மக்களின் வாழ்வில் ஒளி ஏற்றுவதாக அமையட்டும்''என்று கூறியுள்ளார்.

சரத்குமார்

அகில இந்திய சமத்துவமக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "கடுமையான பொருளாதார சரிவுகளால் பாதிப்பிற்குள்ளாகியிருக்கும் உலக நாடுகள் அத்தகைய சரிவுகளிலிருந்து மீண்டு நல்வாழ்வதற்கான தொடக்கம் இன்று புதியதாக பிறக்கும் புத்தாண்டில் இருந்து மலரட்டும். ஏழை எளிய மக்களின் வாழ்வுநிலை உயர்ந்து மக்கள் நல்வாழ்வு வாழ வேண்டும் என்பதை புத்தாண்டு தின வாழ்த்தாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், "உழைக்கும் மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சி உருவாக்கும் என்ற நம்பிக்கையுடன் எதிர்வரும் 2009-ம் ஆண்டையும் மகிழ்ச்சியுடன் வரவேற்போம். தமிழீழம், தமிழீழத்துக்கு எதிரான அரசியல் கட்சிகளை ஒதுக்கித் தள்ளி விட்டு, ஆதரவான சக்திகள் ஒன்று சேர்ந்து ஆளும் தி.மு.க. தலைமையில் அணி திரள இந்த புத்தாண்டு ஏதுவாக அமைந்திட வேண்டுமென எனது இனிய ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

தமிழ்நாடு வர்த்தக காங்கிரஸ் தலைவர் எச்.வசந்தகுமார், ஜெ.எம்.ஆரூன் எம்.பி. ஆகியோரும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Tuesday, December 30, 2008

கர்நாடகாவில் எட்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில்,ஆளுங்கட்சியான பா.ஜ., பெரும்பான்மை பலம்.


பெங்களூரு :

கர்நாடகாவில் எட்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத்தேர்தலில், எட்டு தொகுதிகளிலும், காங்., கட்சி படு தோல்வி அடைந்தது. ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்ற ஆளுங்கட்சியான பா.ஜ., பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. மூன்று தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடகத்தில் மொத்தமுள்ள 224 சட்டசபைத் தொகுதிகளில், 110 தொகுதிகளைக் கைப்பற்றிய பா.ஜ., கடந்த மே மாதம் பதவியேற்றது. அறுதிப் பெரும்பான்மை பெற, மேலும் மூன்று தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இந்தக் குறைவை ஈடுகட்ட, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஆறு பேர் ஆதரவு அளித்தனர். எதிர்க்கட்சிகளான ம.ஜ.த.,வும், காங்கிரசும் இணைந்து, சுயேச்சை எம்.எல்.ஏ.,க்களை விலைபேச ஆரம்பித்தனர். இதையறிந்த பா.ஜ., மாற்று வழியைக் கையாண்டது. "ஆபரேஷன் கமலா' என்ற திட்டத்தில், ம.ஜ.த.,வைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.,க்களையும், காங்கிரசைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.,க்களையும் பதவியை ராஜினாமா செய்ய வைத்து, பாரதிய ஜனதாவில் சேர்த்துக் கொண்டது.


காலியான இந்த ஏழு சட்டசபைத் தொகுதிகளுக்கும், மத்தூர் தொகுதி ம.ஜ.த., உறுப்பினர் சித்தராஜு மறைவால் ஏற்பட்ட காலி இடத்திற்கும் சேர்த்து, மொத்தம் எட்டு சட்டசபைத் தொகுதிகளுக்கு 27ம் தேதி, இடைத்தேர்தல் நடந்தது. இதன் ஓட்டு எண்ணிக்கை நேற்று துவங்கியது. ஹூக்கேரி, அரபாவி, தேவதுர்கா, தொட்டபல்லாபூர், கார்வார் ஆகிய ஐந்து தொகுதிகளில், பாரதிய ஜனதா அமோக வெற்றி பெற்றது. இதனால், சட்டசபையில் அறுதிப் பெரும்பான்மை இடத்தைப் பெற்றுள்ளது. மதுகிரி, மத்தூர், துருவகரே ஆகிய மூன்று தொகுதிகளில் மதச்சார்பற்ற ஜனதா தளம் வெற்றி பெற்றது.


கடந்த மே மாதம் நடந்த தேர்தலில், இந்த எட்டு தொகுதிகளிலும், பாரதிய ஜனதாவுக்கு எந்த இடமும் இல்லை. தற்போது பெற்ற வெற்றியின் மூலம், ஐந்து தொகுதிகளில் பாரதிய ஜனதா தனது முத்திரையைப் பதித்துள்ளது. ஐந்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் இரு தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது; மூன்று தொகுதிகளில் தோல்வியைத் தழுவியது. அதே நேரத்தில், கடந்த முறை காங்கிரஸ் வெற்றி பெற்ற துருவகரே என்ற தொகுதியை இம்முறை ம.ஜ.த., தட்டிப்பறித்தது. எட்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற காங்கிரஸ், அனைத்திலும் தோல்வியைத் தழுவியது. இதனால், காங்கிரஸ் தலைவர்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.


மதுகிரி தொகுதியில் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மனைவி அனிதா, முதன் முறையாக வெற்றி பெற்று சட்டசபைக்குள் நுழைகிறார். இடைத்தேர்தலில் போட்டியிட்ட, ஏற்கனவே அமைச்சர்களாக உள்ள, உமேஷ் கட்டி, பாலச்சந்திர ஜார்கிஹோளி, சிவண்ண கவுடா நாயக், ஆனந்த் அஸ்னோதிகர் ஆகியோர் வெற்றி பெற்றனர்.


துருவகரே தொகுதியில் போட்டியிட்ட பாரதிய ஜனதா வேட்பாளர் லட்சுமி நாராயணா வெற்றி வரிசையில் இருந்தார். கடைசி நேரத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் முன்னுக்கு வந்த செய்தியைக் கேட்டவுடன் மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் சகோதரர் மகன் குருசரண், மத்தூர் தொகுதியில் போட்டியிட்டார். எனினும், அவருக்குத் தோல்வியே பரிசாகக் கிடைத்தது. இந்தத் தொகுதி, முன்னாள் முதல்வர் கிருஷ்ணாவின் சொந்த தொகுதி.


சமீபத்தில் நடந்த ஆறு மாநில தேர்தல்களில், மூன்று மாநிலங்களில் காங்., வெற்றி பெற்றாலும், இக்கட்சியின் ஒட்டுமொத்த ஓட்டு சதவீதம் படிப்படியாக குறைந்து வருகிறது. கர்நாடகாவிலும் இக்கட்சி பலம் இழந்து வருவதை, நேற்றைய தேர்தல் முடிவு காட்டி விட்டது.

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு!.


சென்னை, டிச. 30-
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறி யிருப்பதாவது:-
2007- 2008 ஆம் ஆண் டிற்கு `சி' மற்றும் `டி' பிரிவு அலுவலர்கள் அனைவருக்கும் 30 நாட்கள் ஊதியத்திற்கு இணையாக ரூ.2500 உச்ச வரம்புக்குட்பட்டு போனஸ் வழங்கிடவும், `ஏ மற்றும் பி' பிரிவு அலுவலர்களுக்கு ரூ.1000 சிறப்பு போனஸ் வழங்கிடவும், ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு ரூ.300 வழங்கிடவும் முதல்- அமைச்சர் கருணாநிதி ஆணையிட்டுள்ளார்.
ஒரு நிதியாண்டில் குறைந் தபட்சம் 240 நாட்கள் அல்லது அதற்கு மேலாக பணிபுரிந்த சில்லரைச் செலவினத்தின் கீழ் மாத அடிப்படையில் நிர்ண யிக்கப்பட்ட ஊதியம் பெறும் முழு நேர மற்றும் பகுதிநேரப் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெறும் பணியாளர்கள், தொகுப்பூதியம் பெற்று வந்த சத்துணவுத்திட்டப் பணியாளர்கள், ஒருங்கி ணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டத்தில் பணிபுரியும் பணியாளர்கள் வரையறுக்கப்படாத ஊதிய விகிதத்தில் பணி யாளர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் ஒப்பந்தப் பணியாளர்கள், ஒப்பந்த அடிப்படையிலான தற்காலிக உதவியாளர்கள் மற்றும் குறைந்தது 240 நாட்கள் அல்லது அதற்கு மேலும் தினக்கூலி பெற்று பின்னர் நிரந்தரப்பணியாளர்களாகவும் பணியாற்றியவர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் ரூ.1000/- வழங்கப்படும்.
உள்ளாட்சி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றில் பணிபுரியும் அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள், பல்கலைக்கழக மானியக்குழு, அனைத் திந்திய தொழில் கல்விக்குழு, இந்திய வேளாண் ஆராய்ச் சிக் கழகத்தின் ஊதிய விகிதங்களின் கீழ் வரும் அனைவருக்கும் இந்த போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு இந்த ஆண்டில் சுமார் ரூ.253 கோடி செலவாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி!.


புதுடில்லி :

காஷ்மீரில் சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்பட்டது. தேர்தல் முடிவில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. தேசிய மாநாட்டுக் கட்சி 28 இடங்களை கைபற்றியது. தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டு இரு தினங்களுக்குப் பிறகு, இன்று காங்கிரஸ் கட்சியுடன் சேர்ந்து கூட்டணி ஆட்சி அமைப்பது குறித்து டில்லியில் ஆலோசனை கூட்டம் நடந்தது.


டில்லியில் பிரதமர் இல்லத்தில் அவசர கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைவர் சோனியாவை உமர் அப்துல்லா சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்குப் பிறகு, காங்கிரஸ் ஒரு மனதாக, காஷ்மீரில் தேசிய மாநாட்டுக் கட்சிக்கு ஆதரவு அளித்து கூட்டணி ஆட்சி நடத்த ஒப்புதல் அளித்துள்ளது. மேலும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முதல்வர் வேட்பாளர் உமர் அப்துல்லாவை‌ முதல்வராக ஏற்றுக்கொள்ளவும் சம்மதம் தெரிவித்துள்ளது.


ஆலோசனை கூட்டத்துக்குப் பிறகு மத்திய அமைச்சர் சைபுதீன், செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், உமர் அப்துல்லா காஷ்மீருக்கு ஒரு நல்ல முதல்வராக இருப்பார் என நம்பிக்கை தெரிவித்தார்.

குடியரசு அணிவகுப்பு ஒத்திகை!..
















மிஸ் இந்தியா போட்டி!.


Monday, December 29, 2008

மதுரையில் குடிபோதையில் ரகளை: 15 பஸ்கள் உடைப்பு: 45 பேர் கைது!.


மதுரை:

தீரன் சின்னமலைக்கு சிலை வைக்க இடம் ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தவர்களில் சிலர், குடி போதையில் ரகளை செய்து, 15 பஸ்களின் கண்ணாடியை உடைத்தனர். போலீசார் தடியடி நடத்தி 45 பேரை கைது செய்தனர்.

மாசி வீதி, மேற்கு மாசி வீதி சந்திப்பில், தமிழ்நாடு அனைத்து கவுண்டர்கள் நலச்சங்கம் சார்பில், சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலைக்கு சிலை வைக்க இடம் ஒதுக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர். தூத்துக்குடியை சேர்ந்த அனைத்து கவுண்டர் நலச்சங்க பொதுச் செயலர் கருணாகரன் தலைமை வகித்தார். மாநிலத்தலைவர் கரூர் ராமசாமி, மாநில பொருளாளர் பிரமியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.பகல் 11.45 மணிக்கு ஆர்ப்பாட்டம் தொடங்கி 12.45 மணிக்கு ஆர்ப்பாட்டம் முடிந்ததும் கலைந்து சென்றனர்.அப்போது குடிபோதையில் இருந்த சிலர், வடக்கு வெளி வீதி சிக்னல் அருகே பஸ்களை மறித்தனர்.

ஆர்ப்பாட்ட இடத்தில் இருந்த போலீசார் ஓடி வந்தனர். அதற்குள் கும்பலாக திரண்டவர்கள் அவ்வழியே வந்த பஸ்கள் மீது கல்வீசினர்.கிருஷ்ணராயர் தெப்பம் தெரு, சிம்மக்கல் வரை தொடர்ந்து 15 பஸ்களின் கண்ணாடிகள் நொறுக்கப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை புதிய தாழ்தள சொகுசு பஸ்கள். இதை தவிர ரோட்டோரம் நின்றிருந்த ஆட்டோ, கார், பைக்குகளை சேதப்படுத்தினர். போலீசார் அக் கும்பல் மீது தடியடி நடத்தினர். ஆத்திரமடைந்த கும்பல் கடைகள் மீது கல்வீசினர். போலீசார் கும்பலை கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். இதனால், ஆத்திரமடைந்த கும்பல் வாகனத்தின் கண்ணாடிகளை உடைத்தனர்.

கல்வீச்சில், ஈடுபட்டவர்களில் போதையில் இருந்த ஒருவரை அந்த பகுதியில் உள்ள பொது மக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர். இதில் காயமடைந்த அவரை மீட்டு போலீசார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு கமிஷனர் நந்தபாலன், துணை கமிஷனர்கள் தொண்டிராஜ், ராஜேந்திரன் அதிரடிப்படையுடன் வந்து ரகளையை கட்டுப்படுத்தினர். இதனால், அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கல்வீச்சு சம்பவத்தால் பதற்றம் அடைந்து அப்பகுதி கடைகள் அடைக்கப்பட்டன. மதியம் 1 மணிக்குள் இந்த சம்பவங்கள் நடந்து முடிந்தன. ரகளை அடங்கிய பின் கடைகள் திறக்கப்பட்டு சகஜநிலை திரும்பியது. ரகளையில் ஈடுபட்ட 45 பேரை போலீசார் கைது செய்தனர்.போலீஸ் கமிஷனர் நந்தபாலன் கூறுகையில்,"சம்பவம் நடந்த 10 நிமிடத்தில், போலீசார் திறமையாக செயல்பட்டு கலவரக்காரர்களை கைது செய்து, நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்' என்றார்.

வங்கதேச பொதுத்தேர்தல்: ஷேக் ஹசீனா அ‌மோக வெற்றி!.


தாகா:

வங்கதேசத்தில் பொதுத்தேர்தலில் ஷேக் ஹசீனா அமோக வெற்றி பெற்றார்.

வங்கதேசத்தில் பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே, ஏழு ஆண்டு இடைவெளிக்கு பின் நேற்று பொதுத்தேர்தல் நடந்தது. தேர்தலையொட்டி வரலாறு காணாத அளவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 50 ஆயிரம் ராணுவ வீரர்கள் உட்பட ஆறு லட்சம் பாதுகாப்பு படையினர், கண்காணிப்பில் ஈடுபட்டனர்.மொத்தம் 300 இடங்களுக்கான தேர்தலில் 1,552 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். முன்னாள் பிரதமர்கள் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கும், கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

தேர்தலையொட்டி, நாடு முழுவதும் 35 ஆயிரத்து 263 ஓட்டுச் சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன. காலை 8 மணிக்கு ஓட்டுப் பதிவு துவங்கியதுமே, ஏராளமான மக்கள் ஆர்வத்துடன் வந்து ஓட்டளித்தனர். பல ஓட்டுச் சாவடிகளில் நீண்ட வரிசை காணப்பட்டது. குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் அதிகளவில் ஓட்டளித்தனர்.
பெரிய அளவில் வன்முறை எதுவும் இல்லாமல், தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. சர்வதேச நாடுகளில் இருந்து வந்துள்ள பார்வையாளர்கள், தேர்தல் நடவடிக்கையை கண்காணித்தனர்.

சில இடங்களில், வன்முறையில் ஈடுபட்ட அரசியல் கட்சியினர், கைது செய்யப்பட்டனர்.தாகா, ஆதம்ஜி கல்லூரி ஓட்டுச் சாவடியில் ஓட்டுப் போட்ட ஷேக் ஹசீனா, "எதிர்க்கட்சியினர் பெருமளவில் கள்ள ஓட்டுப் போடுகின்றனர். குறிப்பாக, மேற்கு சுவதான்கா, நோயகலி அகிய பகுதிகளில் அதிகளவில் முறைகேடு நடந்துள்ளது. இருந்தாலும் எங்கள் கூட்டணி தான் வெற்றி பெறும்' என்றார்.தாகா, சிட்டி கல்லூரியில் அமைக்கப்பட்டு இருந்த ஓட்டுச் சாவடியில் கலிதா ஜியா ஓட்டுப் போட்டார்.

ஓட்டுப் பதிவு முடிந்ததும், உடனடியாக ஓட்டு எண்ணிக்கை துவங்கியது. ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி 221 இடங்களை பெற்று அமோக வெற்றி பெற்றார். கலிதா ஜியாவின் வங்கதேச தேசிய கட்சிக்கும் வெறும் 29 இடங்கள் மட்டுமே கிடைத்தது. இவைதவிர ஜாத்தியா கட்சிக்கு 27இடங்களும், வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி கட்சிக்கு 27இடங்களும், மற்ற கட்சிகளுக்கு 11 இடங்களும் கிடைத்தது. இதன்மூலம், வங்கதேசத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக ராணுவ ஆதரவுடன் நடக்கும் இடைக்கால ஆட்சி முடிவடைந்து, ஷேக் ஹசீனா தலைமையில் மீண்டும் ஜனநாயக ஆட்சி மலரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

"இறுதி வரை போராடுவேன்" - "ஒரு போதும் எனது மண்ணைவிட்டு செல்லமாட்டேன்" விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் - பேட்டி!.




கொழும்பு, டிச.30-

ஒரு போதும் எனது மண்ணை விட்டு செல்ல மாட்டேன் என்றும், இறுதி வரை போராடுவேன் என்றும் விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் கூறியுள்ளார்.

ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கு இ-மெயில் மூலம் பிரபாகரன் அளித்துள்ள பேட்டியை கொழும்பில் இருந்து வெளிவரும் வீரகேசரி பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- உங்கள் பாதுகாப்புக்காக வெளிநாட்டுக்கு செல்லப்போவதாக வதந்திகள் நிலவுகின்றன. உங்கள் சகாக்களை விட்டு விட்டு செல்ல நீங்கள் முயற்சிக்கிறீர்களா?

பதில்:- இவை அனைத்தும் இலங்கை அரசின் ஊடகங்கள் நடத்தும் முற்றிலும் பொய்யான பிரசாரங்கள்தான். நான் ஒருபோதும் எனது மண்ணை விட்டு செல்லமாட்டேன். மக்களின் உரிமைக்காக இறுதி வரை போராடுவேன்.

கேள்வி:- நீங்கள் நாளுக்கு நாள் வயதாகிவருகிறீர்கள். ஆனால் ஈழம் இன்னும் கைகூட வில்லையே?

பதில்:- எமது போராட்டம் ஒரு சுதந்திர போராட்டமாகும். எமது சுதந்திர போராட்டத்திற்கு கால எல்லையோ, வயது எல்லையோ கிடையாது.

கேள்வி:- கிளிநொச்சியை சில தினங்களில் ராணுவம் கைப்பற்றிவிடும் என்ற கருத்து நிலவுகிறதே?

பதில்:- எமது போராட்ட வரலாற்றில் இதை விட பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளுக்கும், இலங்கை அரசின் பிரசாரத்திற்கும் முகம் கொடுத்துள்ளோம். நாம் யாழ்ப்பாணத்தை கைவிட்டு வன்னி பிரதேசத்திற்கு வந்தபோது எம்மால் மீண்டும் ஒருபோதும் பாரம்பரிய ராணுவமாக செயல்பட முடியாது என இலங்கை அரசு பெரும் பிரசாரம் மேற்கொண்டது. ஆனாலும் அதன்பின் ஓயாத அலைகள் 1, 2 மற்றும் 3 மூலம் முல்லைத்தீவு, ஆனையிறவு மற்றும் வன்னியின் பெரும்பகுதியை கைப்பற்றினோம்.

தற்போது நாம் விரைவில் கிளிநொச்சியை இழந்துவிடுவோம் என இலங்கை அரசு பிரசாரம் செய்கிறது. கடந்த சில நாட்களாக கிளிநொச்சியில் நடைபெற்ற மோதல்களில் இலங்கை ராணுவம் சந்தித்த பாரிய இழப்புகள் புலிகளின் எதிர்கால வெற்றியை வெளிப்படுத்துகிறது.

கேள்வி:- உங்களின் பயங்கரவாத செயல்பாடுகளை விரும்பாத காரணத்தால்தான் சர்வதேச சமூகம் உங்களை கைவிட்டுள்ளதா?

பதில்:- எமது போராட்டம் நேர்மையான போராட்டம் என சர்வதேச சமூகம் இப்போது புரிந்து கொண்டுள்ளது. நாம் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை.

மக்களை இலக்காக வைத்து விமான குண்டுவீச்சுகளை மேற்கொள்ளும் இலங்கை அரசின் நடவடிக்கைகள் பயங்கரவாத நடவடிக்கைகள் இல்லையென்றால் மக்களை பாதுகாப்பதற்காகவும், அவர்களின் உரிமைகளை பெறுவதற்காகவும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பயங்கரவாதமாகுமா? என்பதை சர்வதேச சமூகம் புரிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி:- கடந்த ஜனாதிபதி தேர்தலை நீங்கள் புறக்கணித்ததன் மூலம் ராஜபக்சேவை ஜனாதிபதி ஆக்கியதை பற்றி தற்போது என்ன நினைக்கிறீர்கள்? அரசாங்கத்தின் முக்கியஸ்தர்கள் சிலரால் உங்கள் இயக்கத்திற்கு பணம் வழங்கப்பட்டதால்தான் நீங்கள் அந்த தேர்தலை புறக்கணித்தீர்கள் என்று கூறப்படுகிறதே?

பதில்:- மக்கள் தாமாகவே தேர்தலை புறக்கணித்தனர். இது தொடர்பாக பொய்யான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. எமது போராட்டம் நேர்மையான போராட்டமாகும். பணம், லஞ்சம் மற்றும் பதவி போன்றவற்றினால் அதை ஒழிக்க முடியாது.

கேள்வி:- புலிகள் பலம் இழந்து விட்டதாக சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன. அது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்:- நாம் பலம் இழந்து விடவில்லை. எமது பலம் மக்கள்தான். அண்மையில் கிளிநொச்சியில் நடைபெற்ற சண்டை இதற்கு பதில் அளிக்கின்றது. எமது எதிர்கால போராட்டங்கள் மூலம் எமது பலம் குறைந்துவிடவில்லை என்பது தெரிய வரும்.

இவ்வாறு பிரபாகரன் கூறியுள்ளார்.

கூவத்தில் குழந்தைகள் குளிப்பதை பார்க்க வேண்டும்: தி.நகர் பாலம் திறந்து வைத்து முதல்வர் ஆசை!.


சென்னை, டிச.30-

கூவம் ஆற்றில் பளிங்கு போல் தண்ணீர் ஓடும் வரை எனக்கு நிம்மதி இருக்காது என்று முதல்-அமைச்சர் கருணாநிதி உருக்கமுடன் கூறினார்.

சென்னை தியாகராயநகர் கோபதி நாராயண சாலை (ஜி.என்.செட்டி ரோடு) - திருமலை சாலை சந்திப்பு இடையே ரூ.161/2 கோடி செலவில் புதிய மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு மேயர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.

மத்திய தரைவழி, கப்பல் போக்குவரத்து துறை மந்திரி டி.ஆர்.பாலு, உள்ளாட்சித்துறை அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த விழாவில் முதல்-அமைச்சர் கருணாநிதி கலந்துகொண்டு புதிய மேம்பாலத்தை திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மேம்பாலத் திறப்புவிழா நிகழ்ச்சியிலே கலந்துகொண்டு வெள்ளம்போல் கூடியிருக்கின்ற உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைவதோடு, பெருமிதமும் கொள்கின்றேன். ஏனென்றால், சென்னை மாநகரத்தைக் காண்போர் அனைவருமே கவலையோடு தெரிவித்துக் கொண்டிருக்கின்ற ஒரு செய்தி போக்குவரத்து நெரிசல். `என்ன, காலையிலே பத்து மணிக்கு வருவதாகச் சொன்னீர்கள்; 12 மணி வரையிலே வரவில்லையே' என்று கேட்டால், `என்ன செய்ய, போக்குவரத்தில் நெரிசல் அப்படி' என்று சமாதானம் சொல்லுகின்ற நிலை இன்னமும் சென்னை மாநகரத்திலே இருப்பதை நம்மால் காண முடிகின்றது.

அந்த நெரிசலைப் போக்குவதற்கு வழி என்ன என்று சிந்திக்கின்ற ஒரு ஆட்சி, சிந்திக்கின்ற ஒரு மாநகராட்சி மன்றம் சென்னையிலே இருக்கின்ற காரணத்தால், அந்த ஆட்சியை நடத்துகின்ற இயக்கம், தி.மு.க. இருக்கின்ற காரணத்தால், அந்த இயக்கத்திற்குத் துணையாக காங்கிரஸ் போன்ற இயக்கங்கள் விளங்குகிற காரணத்தால், அவர்களுடைய துணையோடும், நேர்மையான, நாணயமான, ஊக்கம் மிகுந்த, உற்சாகம் மிகுந்த அதிகாரிகளுடைய துணையாலும், நாம் பாலங்களை, மேம்பாலங்களை சென்னை மாநகரத்திலே அதிகமாக உருவாக்கினால், போக்குவரத்து நெரிசலை ஓரளவிற்குச் சமாளிக்கமுடியும் என்ற முடிவிற்கு வந்தோம்.

அந்த முடிவின்படிதான் இன்றைக்கு இதுவரையிலே இங்கே எடுத்துச் சொல்லப்பட்டதே 76 பாலங்கள் என்றும், அவற்றிலே சிறிய பாலங்களுடைய கணக்கு 26 என்றும், மேம்பாலங்களுடைய கணக்கு 10-க்கும் மேற்பட்டவை என்றும் எடுத்துக்காட்டப்பட்டது. அந்தப் பாலங்கள் எல்லாம், கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தபிறகு உருவானவை என்பதை யாரும் மறந்திருக்கமுடியாது.

அப்படி உருவான பாலங்களைப் பாராட்டுவதற்குப் பதிலாக, இந்தப் பாலங்களெல்லாம் ஊழல் நிறைந்தவை என்று சொல்லி, பாலங்களைக் கட்டிமுடித்த மறுநாளே அதைக் கட்டுவதற்கு முற்பட்ட ஸ்டாலினையும், அதற்குத் துணைபுரிந்த அரசின் தலைவராக அன்றைக்கு முதல்-அமைச்சராக இருந்த என்னையும், என்னைச் சார்ந்தவர்களையும் கைது செய்தனர்.

மீண்டும் நாம் மக்களுடைய ஆதரவைப் பெற்று ஆட்சிக்கு வந்தவுடன், ஸ்டாலின் அப்பொழுது மேயராக இருந்தபோது கட்டிய பாலத்தைவிட அதிகமாக, அந்தத் துறைக்கே அமைச்சராக ஆனபிறகு, இன்னும் அதிகமாகப் பாலங்களை சென்னை மாநகரத்திலே கட்டுகிற நிலைமை ஏற்பட்டு, அந்தப் பாலங்களைக் கட்டிக் கொண்டிருக்கின்றார். அவை மிகச் சிறந்த பாலங்களாக இன்றைக்கு அமைந்திருக்கின்றன.

இன்றைக்குக் காலையில் நம்முடைய தம்பி ஸ்டாலின் ஒரு காலண்டர் தயாரித்து, அதில் 10. 15 படங்கள் நிறைந்த ஒரு தொகுப்பைக் காட்டினார். அந்தத் தொகுப்பில் என்னை மிக மிகக் கவர்ந்த ஒரு படம். அதிலே பல படங்கள் இருந்தன. மிக மிகக் கவர்ந்த ஒரு படம்; ஒரு கோபுரம், அந்தக் கோபுரத்தைச் சுற்றி மதில்சுவர். அந்த மதில் சுவருக்கு அப்பால் ஒரு அருமையான பளிங்கு கற்கள் பதிக்கப்பட்ட சாலை. ` இது எந்த ஊர்' என்று கேட்டேன். `இது மதுரை மீனாட்சி அம்மன் கோவில்' என்று ஸ்டாலின் சொன்னார்.

`மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பிரகாரத்தை முன்பு சுற்றும்போது, சாலையெல்லாம் வெறும் மண் சாலையாக அல்லவா இருக்கும். இப்போது வந்துள்ள நம்முடைய மாநகராட்சி மேயருடைய பணி இது' என்று சொன்னார். கண்ணாடியைப் போல இருக்கிறது; கோவிலைச் சுற்றியுள்ள அந்தச் சாலை. நம்முடைய கொள்கைகள் வேறு.
இருந்தாலும்கூட, நம்முடைய நகராட்சி நிர்வாகத்திலே ஒவ்வொரு நகரமும், ஒவ்வொரு பகுதியும், தூய்மையாக இருக்கவேண்டும்; எடுப்பாக இருக்கவேண்டும்; கவர்ச்சியாக இருக்கவேண்டும்; சுற்றுலாப் பயணிகளைச் சுண்டியிழுக்க வேண்டும். அப்படிப்பட்ட முறையில் நம்முடைய நகரங்களும், நம்முடைய சாலைகளும், நம்முடைய ஊர்களும், நம்முடைய ஊர் நிர்வாகமும் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், நாம் பணியாற்றி வருகின்றோம்.

கிராமங்கள் நகரங்களாகவும், நகரங்கள் மாநகரங்களாகவும் மாறினால்தான், நாம் ஆட்சி நடத்துகிறோம் என்பதற்குப் பொருள். இல்லாவிட்டால், எல்லோரையும் போல நாமும் வந்தோம்; அவர்களைப் போல நாமும் முடிந்தவரையிலே ஆட்சி நடத்தினோம்; அதிகாரிகள் சொன்னதைக் கேட்டோம்; நாம் நினைத்து எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை;

மக்களுக்கென்று எந்த காரியத்தையும் நாம் செய்யவில்லை; மாற்றார் பார்த்துப் பாராட்டுகின்ற அளவிற்கு, மற்ற நாட்டுக்காரர்கள் பார்த்து வியக்கின்ற அளவிற்கு, எந்தக் காரியத்தையும் செய்யவில்லையென்றால், நாம் பதவிக்கு வருவதற்கும், ஏற்கனவே இருந்தவர்கள் பதவியிலே இருந்ததற்கும், எந்த வித வேறுபாடும் கிடையாது.

நீங்கள் எண்ணிப் பார்க்கவேண்டும்; நம்முடைய சென்னை ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தது? பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு எப்படியிருந்தது? சாலைகள் உண்டா? சாலைகள் ஒழுங்காக இருந்ததுண்டா? இல்லை. இன்றைக்கு எவ்வளவு நேர்த்தியாக சென்னை மாறியிருக்கின்றது. ஆனால், என்னைப் பொறுத்தவரையில் இந்த மாற்றம் போதாது.

இன்னும் நிறைய மாற்றங்கள் தேவை. அதைத்தான் ஸ்டாலின் பேசும்போது குறிப்பிட்டார். இன்னமும் என் தந்தைக்குப் பூரண திருப்தியில்லை என்று சொன்னார், உண்மைதான். கூவம் திருந்துகிற வரையில் எனக்குத் திருப்தி இருக்காது. கூவத்திலே தெளிந்த நீரோடைபோல, பளிங்கு போல தண்ணீர் செல்கிற வரையில், அங்கே நம்முடைய வீட்டுப் பிள்ளைகள் குதித்து, நீந்தி விளையாடுவதைப் பார்க்கிற வரையில், எனக்கு நிச்சயமாக நிம்மதி இருக்காது; மகிழ்ச்சி இருக்காது.

ஏனென்றால், நான் கேள்விப்பட்டிருக்கிறேன்; நான் பார்த்ததில்லை. நம்முடைய தந்தையர் காலத்திலே சொல்லியிருக்கிறார்கள்.- `பச்சையப்ப முதலியார் கூவத்திற்கு வந்து குளித்துவிட்டுச் செல்லுவார்; கூவத்திலே பச்சையப்ப முதலியார் இறங்கிக் குளிப்பதை நாங்கள் பார்த்திருக்கிறோம்' என்று. ஆனால், நீங்கள் பச்சையப்பர்களாக ஆகாமுடியாவிட்டாலும், தமிழின்பால், அறிவின்பால், கல்வியின்பால், இச்சையப்பர்களாக ஆகவேண்டும்.

இன்றையதினம் இங்கே திறந்து வைக்கப்பட்டிருக்கின்ற இந்தப் பாலத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தேன். அருகில் அண்ணா மேம்பாலம் இருக்கிறது. கலைவாணர் என்.எஸ்.கே-வினுடைய சிலையை இங்கே அமைத்தவர் அண்ணா. சிறப்பாக அந்த நினைவாகவும், என் தலைமையிலே நடைபெற்ற அந்த விழாவில், அண்ணாவின் வாழ்க்கையில் கடைசி நிகழ்ச்சியாக கலைவாணருடைய சிலையை இந்தச் சாலையிலேதான் திறந்துவைத்தார் என்பதற்காகவும், அந்தச் சாலையை இணைக்கின்ற இந்தப் பாலத்திற்கு "கலைவாணர் மேம்பாலம்'' என்ற பெயரைச் சூட்டுகிறேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் கருணாநிதி கூறினார்.

விழா முடிவடைந்த பின்னர் அவர் காரில் சென்று புதிய மேம்பாலத்தை பார்வையிட்டார்.

திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானின் குடும்பத்தினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்!. (?).


சென்னை, டிச.30-

திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானின் குடும்பத்தினர் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் லதா அதியமான் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம் போட்டியிடுகிறார்.

இந்த நிலையில் லதா அதியமானின் மாமியார் தெய்வானையம்மாள், நாத்தனார் நளினா, கொழுந்தனார்கள் ரவி, கண்ணன், அவருடைய மனைவி வானதி ஆகியோர் நேற்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை அவரது இல்லத்தில் திருமங்கலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் லதா அதியமானுடைய மாமியார் தெய்வானையம்மாள், நாத்தனார் அ.நளினா, கொழுந்தனார்கள் ரவி, கண்ணன், அவருடைய மனைவி வானதி ஆகியோர் நேரில் சந்தித்து, தங்களை அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக்கொண்டனர். அப்போது இவரது குடும்பத்தை சேர்ந்த கீர்த்தனா, பூரணசந்திரன் ஆகியோரும் உடன் இருந்தனர்.

அவர்களை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வரவேற்று அ.தி.மு.க. அடிப்படை உறுப்பினர் கார்டை வழங்கினார்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்கு கூடுதலாக 1,700 போலீஸ் குவிப்பு!.


திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக கூடுதலாக 1,700 போலீசார் குவிக்கப்படுகிறார்கள். 7-ந்தேதி மாலை 5 மணிக்கு மேல் வெளியூர் ஆட்கள் தங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மதுரை, டிச.30-

மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் ஜனவரி மாதம் 9-ந் தேதி நடைபெற உள்ளது. தி.மு.க. சார்பில் லதா அதியமான், அ.தி.மு.க. சார்பில் முத்துராமலிங்கம், தே.மு.தி.க. சார்பில் தனபாண்டியன் உள்பட 26 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்.

அனைத்து கட்சியினரும் திருமங்கலம் தொகுதியில் முகாமிட்டு தீவிரமாக தங்கள் வேட்பாளருக்கு ஆதரவு திரட்டி வருகிறார்கள்.

அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பிரசாரத்தில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில், வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா செய்வதாக கூறி அ.தி.மு.க-தி.மு.க.வினர் இடையே நேற்று முன்தினம் கடும் மோதல் ஏற்பட்டது. இது தொடர்பாக 230 பேர் மீது போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். இரு தரப்பினரும் தேர்தல் பார்வையாளர்களிடம் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் தமிழக சட்டம்-ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. டி.ராஜேந்திரன் நேற்று மதுரை வந்தார். திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பாதுகாப்பு குறித்து கோர்ட்டு அருகே உள்ள போலீஸ் விடுதியில் அவர் ஆலோசனை நடத்தினார்.

இதில் தென்மண்டல ஐ.ஜி. சஞ்சீவ்குமார், மதுரை சரக டி.ஐ.ஜி. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் உள்பட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் கூடுதல் டி.ஜி.பி. ராஜேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருமங்கலம் இடைத்தேர்தல் பாதுகாப்புக்காக 400 பேர் கொண்ட 3 யூனிட் போலீசார், பட்டாலியனை சேர்ந்த 6 கம்பெனி போலீசார் என 1,700 போலீசார் கூடுதலாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.

தொகுதியில் 11 போலீஸ் நிலையங்களிலும் தலா ஒரு போலீஸ் துணை சூப்பிரண்டு, இன்ஸ்பெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 2 போலீஸ் நிலையங்களுக்கு ஒரு கூடுதல் துணை சூப்பிரண்டும் நியமிக்கப்பட்டுள்ளனர். அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் கூடுதலாக 3 வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. தொகுதி முழுவதும் பரவலாக அதிரடிப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பிரசாரத்தில் ஈடுபடும் முக்கிய பிரமுகர்களுக்கு தனி பாதுகாப்பு கொடுக்கப்படும். தொகுதியில் உள்ள அனைத்து திருமண மண்டபங்கள், விடுதிகளில் சோதனை நடத்த போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த இடங்களில் வெளியூர் ஆட்கள் தங்கி இருந்தால் அவர்கள் வெளியேற்றப்படுவர். மெயின் ரோடுகளில் முக்கிய சந்திப்புகளில் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளி மாவட்டத்தை சேர்ந்த வாகனங்கள் குறித்து கண்காணிக்கப்படும். கடந்த 2 நாட்களில் மட்டும் தேர்தல் மோதல் தொடர்பாக 17 வழக்குகளில் தி.மு.க.வினர் மீது 9 வழக்குகளும், அ.தி.மு.கவினர் மீது 8 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

திருமங்கலம் தொகுதியில் உள்ள 240 கிராமங்களில் 33 கிராமங்கள் பதற்றமான கிராமங்களாக கண்டறியப்பட்டு அங்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. 190 பூத்துகளில் 65 பூத்துகள் பதற்றம் நிறைந்தவை என்று கண்டறியப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு அன்று அந்த பூத்துகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும். யாரும் தவறான பிரசாரத்தில் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. தொகுதியில் இன்று (நேற்று) முதல் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். தேவைப்பட்டால் மேலும் கூடுதல் போலீசார் வரவழைக்கப்படுவர். மத்திய போலீஸ் படை தேவையில்லை என்று கருதுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில், திருமங்கலம் இடைத்தேர்தலுக்கான பிரசாரத்தை ஜனவரி மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் முடிக்க வேண்டும் என்றும், இந்த காலக்கெடுவுக்கு பிறகு, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர் நபர்கள் அனைவரும் திருமங்கலம் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும் என்றும் தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி ஒரு தொகுதியில் தேர்தல் நடைபெறுவதற்கு 48 மணி நேரத்திற்கு முன் பிரசாரத்தை முடிக்க வேண்டும். அதன்படி, ஜனவரி மாதம் 9-ந் தேதி தேர்தல் நடைபெறவுள்ள திருமங்கலம் தொகுதியில் 7-ந் தேதி மாலை 5 மணிக்குள் தேர்தல் பிரசாரத்தை முடித்துவிட வேண்டும். அப்போதுதான் தொகுதி வாக்காளர்கள் சாதாரணமாக வாக்களிக்க முடியும்.

தற்போது இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக ஏராளமான கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர். அவர்களால் நியாயமான, நேர்மையான வாக்குப்பதிவு நடப்பதற்கான சூழல் பாதிக்கப்படலாம். இதைத்தொடர்ந்து, தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள வெளியூர் நபர்கள் ஜனவரி மாதம் 7-ந் தேதி மாலை 5 மணிக்கு பிறகு தொகுதியை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. எனவே, வெளியூர் நபர்கள் நுழையாதவாறு தொகுதி சீல் வைக்கப்படும்.

வெளியூர் நபர்களுக்கு விதிக்கப்படும் தடை, மாநில அரசு பாதுகாப்பு வசதியை அனுபவிக்கும் அனைத்து கட்சி பிரமுகர்களுக்கும் பொருந்தும். மாவட்ட தேர்தல் அதிகாரி, மாவட்ட போலீஸ் அதிகாரி ஆகியோர் தேர்தல் பிரசார காலக்கெடுவுக்கு பின்னர் வாக்காளராக இல்லாத முக்கிய பிரமுகர்கள் யாரையும் தொகுதிக்குள் அனுமதிக்கக் கூடாது. முக்கிய பிரமுகர்கள் யாரும் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டியது இந்த அதிகாரிகளின் கடைமை ஆகும்.

இவ்வாறு நரேஷ் குப்தா கூறியுள்ளார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா, திருமங்கலம் தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்வதற்காக இன்று (30-ந் தேதி) மதுரை வருகிறார். மதுரை கலெக்டர் அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அதே போன்று மத்திய தேர்தல் ஆணையத்தின் துணை கமிஷனர் ஜெயப்பிரகாஷ் வருகிற 2-ந் தேதி மதுரை வருகிறார். பின்னர் அவர் திருமங்கலம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து ஆய்வு செய்கிறார்.

மின்வெட்டை ரத்து செய்ய தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு நிபந்தனை : ஆற்காடு வீராசாமி அறிவிப்பு


சென்னை :
மின்வெட்டை ரத்து செய்ய ‌தமிழக அரசு தொழிற்சாலைகளுக்கு புதிய நிபந்தனை விதித்துள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் மின்சார துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி தலைமையில் தொழிலதிபர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தொழிலதிபர்களுக்கு இரண்டு நிபந்தனைகளை முன்வைத்தார்.
கூட்டம் முடிந்ததும் அமைச்சர் ஆற்காடு வீராசாமி நிபந்தனைகள் குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார் .அப்போது அவர் கூறியதாவது:-

உயர் அழுத்த மின்சாரத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை 30% மாக குறைப்பது, குறைந்த மின் அழுத்த தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை 15%மாக குறைப்பது. இது முதல் நிபந்தனை. இரண்டாவது நிபந்தனை, வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை அளித்தால், அந்த தொழிற்சாலைகளுக்கு மின்வெட்டை ரத்து செய்ய அரசு தயாராக உள்ளது .

கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து தொழிலதிபர்களும் அரசின் இரண்டாவது நிபந்தனைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாளை முதல்வர் கருணாநிதியை சந்தித்து பேசு இருக்கிறேன்.

முதல்வரின் ஒப்புதல் பெற்ற பிறகு ஜனவரி மாதம் 1-ந் தேதி முதல் 2 நாள் விடுமுறை விடும் அனைத்து தொழிற்சாலைகளுக்கும் மின்வெட்டை ரத்து செய்ய ஏற்பாடு செய்யப்படும். தற்போது மத்திய அரசிடம் கேட்ட மின்சாரம் தமிழகத்துக்கு கிடைத்து வருகிறது.

ஜனவரி 15-ந் தேதிக்குள் மேலும் 500 மெகாவாட் மின்சாரம் தர மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. இதனால் மின்வெட்டு படிப்படியாக குறையும்.

இவ்வாறு ஆற்காடு வீராசாமி கூறினார்.

Sunday, December 28, 2008

"இந்தியாவை எதிர்த்து போரிட 500 மனித வெடிகுண்டுகளுடன் 35 ஆயிரம் தீவிரவாதிகள் தயார்!." - பாகிஸ்தான் தலிபான் தளபதி கொக்கரிப்பு!.


பெஷாவர், டிச.29-

பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் இந்தியாவுக்கு எதிராக தாக்குதல் நடத்த 500 மனித வெடிகுண்டுகள் மற்றும் நவீன ஆயுதங்களுடன் 35 ஆயிரம் தலிபான் தீவிரவாதிகள் தயாராக இருப்பதாக பாகிஸ்தானை சேர்ந்த தலிபான் தளபதி அறிவித்துள்ளான்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய நேரடி யுத்தத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை அழித்து ஒழிக்குமாறு இந்தியா மற்றும் உலக நாடுகள் விடுத்த கோரிக்கையை அந்த நாடு ஏற்க மறுக்கிறது. அதே நேரத்தில், `பாகிஸ்தானில் தீவிரவாதிகளே இல்லை' என்று கூறி வருகிறது.

இதற்கிடையே, பாகிஸ்தானின் முகத்திரையை கிழிக்கும் வகையில் ஏராளமான தீவிரவாத அமைப்புகள் அந்த நாட்டு ராணுவத்துக்கு ஆதரவு அளித்து வருகின்றன. பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால் இந்திய ராணுவத்தின் மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்போவதாக தலிபான் அமைப்பின் ஒரு பிரிவு ஏற்கனவே அறிவித்து உள்ளது.

இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானில் உள்ள தெற்கு வஜிரிஸ்தான் என்ற இடத்தை மையமாக கொண்டு செயல்படும் தலிபான் தீவிரவாத அமைப்பின் `முல்லா நஜீர் குழு (வாலி முகமது)' என்று பிரிவும் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவு தெரிவித்து இருக்கிறது.

இது தொடர்பாக, பெஷாவரில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகைக்கு தலிபான் அமைப்பின் பாகிஸ்தான் தளபதியும் முல்லா நஜீர் குழுவின் செய்தி தொடர்பாளருமான தெசில் கான் என்பவன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

இந்தியா-பாகிஸ்தான் இடையே எழுந்துள்ள தற்போதைய பதற்றத்தை தொடர்ந்து எங்களுடைய உண்மையான இலக்கை (இந்தியா) நாங்கள் அடையாளம் கண்டு கொண்டு விட்டோம். எனவே, தற்போதைய சூழ்நிலையில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு எதிராக நாங்கள் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட மாட்டோம்.

பாகிஸ்தான் அரசின் கொள்கைகளை நாங்கள் எதிர்த்து வருகிறோம். ஆனால், நாட்டின் இறையாண்மைக்கு ஊறு ஏற்படும்போது தங்களுடைய உயிரையும் கொடுக்க தலிபான்கள் தயங்க மாட்டார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிராக எந்தவித உக்கிரமான நடவடிக்கையையும் மேற்கொள்ள வேண்டாம் என்று இந்தியாவை எச்சரிக்கிறோம். இல்லாவிட்டால், தற்கொலைப்படை தாக்குதல்கள் மூலமாக இந்தியாவையே அழித்து விடுவோம்.

இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக போரில் ஈடுபடுவோம். பாகிஸ்தானின் கிழக்கு எல்லையை (இந்திய எல்லை) காப்பதற்காக 500 மனித வெடிகுண்டுகள் தயாராக உள்ளனர். மேலும், அதி நவீன ஆயுதங்களுடன் 35 ஆயிரம் தலிபான்களும் பாகிஸ்தான் ராணுவத்துடன் சேர்ந்து போரிடுவார்கள்.

இவ்வாறு தெசில் கான் தெரிவித்து உள்ளான்.

முன்னதாக, `பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான தீவிரவாதிகள் போரிடுவார்கள்' என்று தலிபான் அமைப்பின் மற்றொரு பிரிவின் தலைவரான பைதுல்லா மசூத் என்பவன் கடந்த புதன்கிழமை அன்று தெரிவித்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

அவன் வெளியிட்ட அறிக்கையில், `பாகிஸ்தான் எங்களுக்கு நெருக்கமானது. அங்கு வாழும் மக்களும் நாங்களும் அதன் குடிமக்களே. எனவே, போர் முனையில் எங்களுடைய இயக்கத்தினரும் முன்னணியில் நின்று போரிடுவார்கள்' என்று அறிவித்து இருந்தான்.

"ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல்" - தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி தகவல்!.


புதுடெல்லி, டிச.29-

ஏப்ரல்-மே மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும், அடுத்த மாதம் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசாமி கூறினார்.

தற்போதைய பாராளுமன்றத்தின் பதவிக்காலம் மே மாத மத்தியில் முடிவடைகிறது. எனவே, அதற்குள் தேர்தல் நடத்தப்பட்டு புதிய பாராளுமன்றம் அமைக்கப்பட வேண்டும். தேர்தல் நடத்த தலைமை தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. சமீபத்தில் அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.

இந்நிலையில், தலைமை தேர்தல் கமிஷனர் என்.கோபாலசாமி டெல்லியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், பாராளுமன்ற தேர்தல் எப்போது நடத்தப்படும்? என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு கோபாலசாமி கூறியதாவது:-

மார்ச் மாதம், மாணவர்களுக்கு தேர்வு நடைபெறும் மாதம். எனவே, அதற்கு பிறகு தேர்தல் நடத்துவதுதான் நல்லது. ஏப்ரல்-மே மாதங்களில் தேர்தல் நடத்துவதற்கு பெருமளவு வாய்ப்பு உள்ளது. இதைப்பற்றி இப்போதே விரிவாக பேச இயலாது. அடுத்த மாத மத்தியில், திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதன்பிறகு நாங்கள் உட்கார்ந்து பேசுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

காஷ்மீர் சட்டசபை தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு கோபாலசாமி கூறியதாவது:-

அமர்நாத் கோவில் பிரச்சினை காரணமாக, காஷ்மீரில் உடனடியாக தேர்தல் நடத்த ஆரம்பத்தில் நான் விரும்பவில்லை. அரசியல் கட்சிகளும் கூட தேர்தலை விரும்பாமல் இருந்தனர். டிசம்பர் மாதத்தில் வானிலை மோசமாக இருக்கும் என்பதால், அவர்களால் பிரசாரம் செய்யவே முடியாது.

ஆனால் அதையெல்லாம் மீறி, காஷ்மீரில் 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. இதில் முந்தைய தேர்தலை விட, 15 முதல் 20 சதவீதம் கூடுதலாக ஓட்டுகள் பதிவாகி உள்ளன.

இதற்கு தீவிரவாதிகள் மீதான பயம் குறைந்துள்ளதும், வானிலை நன்றாக இருந்ததும்தான் காரணம். கடந்த ஓராண்டாகவே தீவிரவாத சம்பவங்கள் பெருமளவு குறைந்து விட்டன. எனவே, மக்களுக்கு பயம் இல்லை. தீவிரவாதம் இல்லாததுதான், கூடுதல் ஓட்டுப்பதிவுக்கு முக்கிய காரணம்.

மேலும், யாரையும் கட்டாயப்படுத்தி ஓட்டுப்போட வைக்கக்கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு இருந்தேன். அதன்படி தேர்தல் நடந்திருப்பது எனக்கு திருப்தி அளிக்கிறது. இந்த தேர்தலில் நான் நடுவர்தான். வாக்காளர்களுக்குத்தான் ஆட்ட நாயகர் விருது தர வேண்டும்.
இவ்வாறு கோபாலசாமி கூறினார்.

திருமங்கலத்தில் (தி.மு.க- அ.தி.மு.க.) பயங்கர மோதல்



திருமங்கலம் தொகுதியில் தி.மு.க-அ.தி.மு.க.வினர் இடையே நேற்று பயங்கர மோதல் ஏற்பட்டது. 20 கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

திருமங்கலம், டிச.29-

மதுரை மாவட்டம் திருமங்கலம் சட்டசபை தொகுதியில் வருகிற 9-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால், அங்கு அனல் பறக்கும் பிரசாரம் நடந்து வருகிறது. திருமங்கலம் மற்றும் தொகுதியில் உள்ள கிராமங்களில் தேர்தல் அலுவலகங்களை திறந்தும், `பூத்'கள் அமைத்தும் தி.மு.க.வினரும் அ.தி.மு.க.வினரும் தீவிர பிரசாரம் செய்து வருகிறார்கள்.

நேற்று அங்கு இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இதில் சிலருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன.

நேற்று முன்தினம் இரவு செக்கானூரணி அருகே புளியங்குளத்தில் உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்தில் அந்த கட்சியை சேர்ந்தவர்கள் தங்கி இருந்தனர். நேற்று காலை அங்கு வந்தவர்கள் அ.தி.மு.க.வினரின் 2 கார்களை அடித்து நொறுக்கினர். இதில் ஒரு கார், முன்னாள் அமைச்சர் நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. இதேபோல் கே.மீனாட்சிபட்டியிலும் அ.தி.மு.க.வை சேர்ந்தவரின் கார் அடித்து நொறுக்கப்பட்டது.

இதுகுறித்து புளியங்குளத்தை சேர்ந்த அ.தி.மு.க. கிளைச் செயலாளர் முத்தன் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தேனி மாவட்ட தி.மு.க.செயலாளர் மூக்கையா, திருமங்கலம் யூனியன் தலைவர் கொடி.சந்திரசேகர், புளியங்குளம் ஊராட்சி தலைவர் பாண்டியராஜன், மதுரை மாநகராட்சி 3-ம் பகுதி செயலாளர் ஒச்சுபாலு, 4-ம் பகுதி செயலாளர் ஜெயராமன், புளியங்குளம் ஒன்றிய கவுன்சிலர் கோபு உள்பட 50 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த சம்பவம் நடந்த சில மணி நேரத்தில் திருமங்கலத்தில் இருந்து உசிலம்பட்டி இடையே உள்ள அ.தி.மு.க. தேர்தல் அலுவலகங்களை தேனி மாவட்ட செயலாளர் தங்கதமிழ்ச்செல்வன் பார்வையிட்டவாறு சென்றார்.

பன்னீர்க்குண்டு என்ற ஊர் அருகே சென்றபோது அவரது காரை ஒரு கும்பல் மறித்தது. காரில் இருந்து தங்கத்தமிழ்ச்செல்வன் உள்பட அ.தி.மு.க.வினர் இறங்கினர். அப்போது அந்த கும்பல் கற்களை வீசியதால் காரில் இருந்து இறங்கி அவர்கள் தப்பி ஓடினர்.

இந்த சம்பவம் குறித்து புகார் செய்ய அ.தி.மு.க.வினர் சிந்துபட்டி போலீஸ் நிலையத்திற்கு சென்று கொண்டு இருந்தனர். அதேசமயம், கல்வீச்சு நடத்தியவர்களும் அங்கு சென்றனர்.

போலீஸ் நிலையம் அருகே சென்றபோது இரண்டு கட்சிகளையும் சேர்ந்தவர்களுக்கு இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது.

இதில் சின்னமனூர் நகர அ.தி.மு.க. பொருளாளர் வேதநாயகம் (வயது 57) என்பவருக்கு பல் உடைந்து முகத்தில் காயம் ஏற்பட்டது. அவர் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

இதுகுறித்து அ.தி.மு.க. சார்பில் பன்னீர்க்குண்டு ஊராட்சி மன்ற தலைவர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் உக்கிரபாண்டி உள்பட சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல் தி.மு.க. ஒன்றிய செயலாளர் உக்கிரபாண்டி கொடுத்த புகாரின் பேரில் கொடிவயிரவன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

திருமங்கலம் 23-வது வார்டு பகுதியில் நடந்த மோதலில் அ.தி.மு.க.வை சேர்ந்தவர்கள் தாக்கப்பட்டனர். தூத்துக்குடியை சேர்ந்த ரவி (வயது 36) என்பவர் வெட்டப்பட்டார். ஈரோடு வடக்கு மாவட்ட அ.தி.மு.க.செயலாளர் பழனிச்சாமி (57) என்பவர் கல்வீச்சில் காயம் அடைந்தார்.

இவர்கள் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர்.

திருமங்கலம் பகுதியில் உள்ள கீழஉரப்பனூர் இந்திராநகர், நெடுங்குளம், சந்தைப்பேட்டை, கொக்குளம், ஆலம்பட்டி, உலகானி ஆகிய பகுதிகளில் நேற்று காலை வாக்காளர்களை சிலர் ரகசியமாக சந்தித்து ஓட்டுக்கு பணம் கொடுப்பதாக தகவல் பரவியது.

இதைத்தொடர்ந்து தி.மு.க.வினர் அங்கு திரண்டு சென்று வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுத்து நிறுத்த முயற்சித்தனர். இதனால் இரு தரப்புக்கும் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் அங்கிருந்த கார்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

மேலும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஆண்டிபட்டி ராஜ்குமார், சேலம் மாதேசுவரன், ரவிச்சந்திரன், கோவை செந்தில்குமார், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு சத்தியானந்தம், தூத்துக்குடி செல்வம், போடி பிரவிண்குமார், பாலகருப்பு, நெல்லை ஏசுதுரை, முஜிபுர்ரகுமான், நம்பிராஜன், சங்கர், முத்துவிஜயன் உள்பட 14 பேரை தி.மு.க.வினர் பிடித்தனர்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக கூறி அவர்களை திருமங்கலம் தாலுகா போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் தீவிர விசாரணை நடத்தி தி.மு.க.வினர் ஒப்படைத்த 14 பேரிடம் முகவரியை வாங்கிக்கொண்டு அவர்களை விடுவித்தனர்.

இதற்கிடையே, அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் கே.ஏ.செங்கோட்டையன், முன்னாள் எம்.பி.தங்கதமிழ்ச்செல்வன், எஸ்.பி.எம்.சையதுகான், ராஜன்செல்லப்பா மற்றும் அ.தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.

"தி.மு.க.வினர்தான் அ.தி.மு.க.வினரை தாக்கினார்கள். 14 பேர் மீது பொய்யான புகார் கூறி அவர்களை தி.மு.க.வினர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்'' என்று கூறினார்கள்.

அப்போது போலீசாருக்கும், அ.தி.மு.க.வினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

திருமங்கலம் நகர் பகுதியில் ஈரோடு மாவட்ட செயலாளர் பழனிச்சாமி தலைமையில் அ.தி.மு.க.வினர் தேர்தல் பணியில் ஈடுபட்டு இருந்தனர். நேற்று காலை அங்கு வந்த ஒரு கும்பல் பழனிச்சாமியின் காரை தாக்கியதில் கார் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின.

திருமங்கலம் நகராட்சி 21-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் விஜயனையும் தாக்க முயற்சி நடந்தது. அவரது அலுவலகமும் ஒரு கும்பலால் சூறையாடப்பட்டது. திருமங்கலம் தொகுதியில் நடைபெற்ற மோதல்களில் மொத்தம் 20 கார்கள் நொறுக்கப்பட்டன.

இந்த சம்பவங்களை தொடர்ந்து திருமங்கலம் தொகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் திருமங்கலம் நகர் மற்றும் தொகுதியில் உள்ள கிராமங்களில் போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

இதற்கிடையே, வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அ.தி.மு.க.வினர் மீது தி.மு.க.வினர் நேற்று திருமங்கலம் தொகுதி தேர்தல் பார்வையாளர் சுனில்குமார் குஜுரிடம் புகார் மனு கொடுத்தனர்.
இதேபோல் தங்கள் கட்சியினரை தி.மு.க.வினர் தாக்கியதாக அ.தி.மு.க.வினரும் தேர்தல் பார்வையாளரிடம் புகார் மனு கொடுத்து இருக்கிறார்கள்.

"காஷ்மீர் தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை" - ஜனநாயகம் வெற்றி !.




ஸ்ரீநகர், டிச.29-

காஷ்மீர் மாநில சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் ஆதரவுடன் தேசிய மாநாட்டு கட்சி ஆட்சி அமைக்க உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 2002-ம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்காததால், காங்கிரஸ் கட்சியும், முப்தி முகமது சயீது தலைமையிலான மக்கள் ஜனநாயக கட்சியும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைத்தன. கடந்த ஆகஸ்டு மாதம், அமர்நாத் நில விவகாரத்தில், காங்கிரஸ் அரசுக்கான ஆதரவை மக்கள் ஜனநாயக கட்சி வாபஸ் பெற்றது. இதனால் அரசு கவிழ்ந்தது. சட்டசபை கலைக்கப்பட்டது.

இதையடுத்து, காஷ்மீர் சட்டசபைக்கு தேர்தல் நடத்தப்பட்டது. தீவிரவாதிகள் தாக்குதல் அபாயம் கருதி, 7 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. நேற்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது.

காஷ்மீர் மாநிலத்தில் மொத்தம் 87 தொகுதிகள் உள்ளன. அங்கு ஆட்சி அமைப்பதற்கு குறைந்தபட்சம் 44 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆனால், எந்த கட்சிக்கும் இந்த மெஜாரிட்டி கிடைக்கவில்லை. உமர் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டு கட்சி, 28 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப்பெரும் கட்சியாக திகழ்கிறது. மக்கள் ஜனநாயக கட்சி 21 தொகுதிகளிலும், காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், பா.ஜனதா 11 தொகுதிகளிலும், ஜம்மு-காஷ்மீர் தேசிய சிறுத்தைகள் கட்சி, சுயேச்சைகள் உள்ளிட்டோர் 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளனர்.

அமர்நாத் நில விவகாரம் காரணமாக, ஜம்மு பகுதியில் பா.ஜனதா அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. கடந்த தேர்தலில் ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜனதா வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தலில் முக்கிய தலைவர்கள் அனைவருமே வெற்றி பெற்றுள்ளனர். போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா வெற்றி பெற்றுள்ளார். அவரது மகன் உமர் அப்துல்லா, முன்னாள் முதல்-மந்திரி முப்தி முகமது சயீது, அவரது மகள் மெகபூபா முப்தி, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் முதல்-மந்திரி குலாம்நபி ஆசாத், மாநில பா.ஜனதா தலைவர் அசோக் கஜரியா, மார்க்சிஸ்ட் கம்யு னிஸ்டு கட்சி மூத்த தலைவர் முகமது யூஉசுப் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்.


தேர்தலில் அதிக இடங்களில் வென்ற தேசிய மாநாட்டு கட்சி, கூட்டணி ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று தேசிய மாநாட்டு கட்சி தலைவர் உமர் அப்துல்லா கூறினார். பா.ஜனதாவுடன் கூட்டணி இல்லை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். பா.ஜனதாவுடன் கூட்டு சேருவதை விட, எதிர்க்கட்சி வரிசையில் அமர்வோம் என்று அவர் குறிப்பிட்டார்.

இத்தேர்தலில் பரூக் அப்துல்லாவை முதல்-மந்திரி பதவி வேட்பாளராக தேசிய மாநாட்டு கட்சி அறிவித்திருந்தது. ஆனால் தற்போது எம்.பி.யாக உள்ள பரூக் அப்துல்லா, எம்.பி.யாக நீடிப்பதையே விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். எனவே, அவரது மகன் உமர் அப்துல்லா, முதல்-மந்திரி ஆவார் என்று தெரிகிறது. இதுபற்றி உமர் அப்துல்லாவிடம் கேட்டபோது, யார் முதல்-மந்திரி? என்று பின்னர் முடிவு செய்யப்படும் என்று அவர் கூறினார்.

தேசிய மாநாட்டு கட்சியும், மக்கள் ஜனநாயக கட்சியும் எதிரெதிர் துருவங்களாக இருக்கும் கட்சிகள். ஆகவே, அவை இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க வாய்ப்பு இல்லை. அதை விட்டால், தேசிய மாநாட்டு கட்சியும், காங்கிரசும் இணைந்தால்தான் மெஜாரிட்டி பலம் கிடைக்கும். எனவே, காங்கிரஸ் ஆதரவைப் பெற தேசிய மாநாட்டு கட்சி முயன்று வருகிறது.

ஆனால், தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளிப்பது பற்றி காங்கிரஸ் கட்சி எதுவும் கூறவில்லை. இதுபற்றி விவாதிப்பதற்காக, பிரதமர் மன்மோகன்சிங் இல்லத்தில் நேற்று மாலை காங்கிரஸ் மேல்மட்டக்குழு கூட்டம் நடைபெற்றது. அதில் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரிதிவிராஜ் சவான், சோனியாவின் அரசியல் செயலாளர் அகமது படேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டம் ஒரு மணி நேரம் நடைபெற்றது. ஆனால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. காஷ்மீரைச் சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி குலாம்நபி ஆசாத், மத்திய மந்திரி சைபுதின் சோஸ் உள்ளிட்ட அம்மாநில மூத்த தலைவர்களுடன் இன்று சோனியா காந்தி ஆலோசனை நடத்தி, தேசிய மாநாட்டு கட்சிக்கு ஆதரவு அளிப்பது பற்றி முடிவு எடுப்பது என்று இக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

அதே சமயத்தில், காஷ்மீரில் எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்று பா.ஜனதா அறிவித்துள்ளது.

இதற்கிடையே, காஷ்மீர் தேர்தல் குறித்து பிரதமர் மன்மோகன்சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். டெல்லியில் காங்கிரஸ் ஆண்டு விழா கூட்டத்தில் கலந்து கொண்ட மன்மோகன்சிங், இந்த தேர்தல் ஜனநாயகத்துக்கும், தேசிய ஒருமைப்பாட்டுக்கும் ஆதரவாக நடத்தப்பட்ட தேர்தல் என்று கூறினார்.

சோனியா காந்தி கூறுகையில், `யார் வெற்றி பெற்றார்கள் என்பது பிரச்சினை அல்ல. காஷ்மீர் மக்கள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பதுதான் இதில் கவனிக்க வேண்டியது. இதிலிருந்து அண்டை நாடு (பாகிஸ்தான்) பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்' என்றார்.

Saturday, December 27, 2008

"அஜ்மல் கசாப் எழுதிய கடிதத்துக்கு ஓரிரு நாளில் பதில் அனுப்பப்படும்'' - பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி தகவல்!.



இஸ்லாமாபாத், டிச.28-

தனக்கு சட்ட உதவி அளிக்க வக்கீலை நியமிக்க வேண்டும் என்று கோரி அஜ்மல் கசாப் எழுதிய கடிதத்துக்கு ஓரிரு நாளில் பதில் அனுப்பப்படும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி தெரிவித்தார்.

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஈடுபட்ட 9 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அஜ்மல் அமீர் இமான் என்கிற அஜ்மல் கசாப் என்கிற ஒரே ஒரு தீவிரவாதி மட்டும் உயிரோடு பிடிபட்டான். ஆனால் அவன் தங்கள் நாட்டைச் சேர்ந்தவனே அல்ல என்று பாகிஸ்தான் இன்னமும் மறுத்து வருகிறது.

இதற்கிடையில், மும்பை சிறையில் அடைக்கப்பட்டுள்ள அஜ்மல், தனக்கு சட்ட உதவி அளிக்க வேண்டும் என்றும், அதற்காக ஒரு வக்கீலை நியமிக்கும்படியும் கோரி பாகிஸ்தானுக்கு கடிதம் எழுதினான். இந்த வார தொடக்கத்தில் அந்தக் கடிதத்தை டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரிடம் இந்திய அதிகாரிகள் கொடுத்தனர்.

இந்தக் கடிதம் குறித்து, இஸ்லாமாபாத் நகரில் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

அந்தக் கடிதம் கிடைத்தது. தனக்கு சட்ட உதவி வேண்டும், அதற்காக ஒரு வக்கீலை நியமிக்க வேண்டும் என்று அஜ்மல் கேட்டுக் கொண்டதாக ஒரு கடிதத்தை இந்திய அதிகாரிகள் கொடுத்துள்ளனர். அந்தக் கடிதத்தில் அஜ்மல் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவன் என்றும் இந்திய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

அந்தக் கடிதம் பற்றி தீவிரமாக பரிசீலித்து வருகிறோம். அஜ்மல் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவனா? அவனுக்கு சட்ட உதவி அளிக்கப்படுமா? அல்லது மறுக்கப்படுமா? என்று டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதருக்கு, எங்களது வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்னும் ஓரிரு நாளில் பதில் அனுப்பும்.

இப்போதுள்ள சூழ்நிலையில் வெளியுறவுத்துறவு அமைச்சரோ, வேறு மூத்த அதிகாரிகளோ பதில் சொல்ல முடியாது. தெளிவான அறிக்கை வடிவில் அந்த பதில் அமையும்.

அஜ்மல் பற்றி தீவிரமாக விசாரித்து வருகிறோம். இப்போதைக்கு அஜ்மல் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவரா, இல்லையா என்று யூகத்தின் அடிப்படையில் நான் பதில் அளிக்க முடியாது. இது ஒரு வினோதமான வழக்கு. அஜ்மல் பற்றியும், அவனது கடிதம் பற்றியும் அரசின் பல்வேறு துறைகளும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு உள்ளன. பல சமயங்களில், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டு இருப்பவர்கள் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று இந்திய அரசாங்கம் கூறியபோதெல்லாம், அல்லது பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவனா என்று உறுதி செய்யும்படி இந்தியா கோரியபோதெல்லாம் இல்லை என்றே நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆகவே அஜ்மல் விஷயத்தில் இப்போது எதையும் உறுதியாகச் சொல்ல முடியாது.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் மறைவிடம் மீது விமானங்கள் குண்டு வீச்சு!.





கொழும்பு, டிச.28-

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனின் மறைவிடங்கள் மீது நேற்று இலங்கை போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்தின. முல்லைத்தீவை நோக்கி ராணுவம் முன்னேறுகிறது.


விடுதலைப்புலிகளின் அரசியல் தலைநகரமான கிளிநொச்சியை கைப்பற்றும் நோக்கில் சிங்கள ராணுவம் கடந்த 2 மாதங்களாக தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள சில முக்கிய ஊர்களை சிங்கள ராணுவம் கைப்பற்றியதாக கூறினாலும் இன்னும் கிளிநொச்சியை நெருங்க முடியவில்லை. இருதரப்பினருக்கும் இடையே கடும் சண்டை நடந்து வருகிறது.

இந்த நிலையில், நேற்று மதியம் 12 மணி அளவிலும், பிற்பகல் ஒரு மணி அளவிலும் இலங்கை போர் விமானங்கள் முல்லைத் தீவின் புதுக்குடியிருப்பு பகுதியில் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் வசிப்பதாக கருதப்படும் மறைவிடங்களை குறி வைத்து 5 தடவை குண்டுகளை வீசி தாக்கின.

`இந்த தாக்குதலின்போது, இலக்கின் மீது துல்லியமாக குண்டுகள் வீசி தகர்க்கப்பட்டதாக' இலங்கை விமானப்படை செய்தி தொடர்பாளர் ஜனக நாணயக்காரா தெரிவித்தார்.

இலங்கை போர் விமானங்கள் வீசிய குண்டுகள் முல்லைத் தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பில் மக்கள் வசிக்கும் வீடுகள் மீது விழுந்தன. இத்தாக்குதலில் சத்திய சீலன் சத்தியராஜ்(17), விதுசாயினி(10), செல்வராஜா செல்வரஞ்சன்(4) ஆகியோர் படுகாயமடைந்தனர். இதில் பொதுமக்களின் ஏராளமான வீடுகளும் சேதமடைந்தன.


இதனிடையே, சிங்கள ராணுவத்தின் 59-வது படைப்பிரிவினர் முல்லைத்தீவு அருகேயுள்ள கோடாலிகல்லு என்ற இடத்தில் நேற்று முன்தினம் இரவு விடுதலைப்புலிகளின் நிலைகள் மீது தீவிர தாக்குதல் நடத்தினர்.

நீண்ட நேர சண்டைக்குப்பின் விடுதலைப்புலிகளின் தற்காப்பு அரணை முறியடித்து சிங்கள சிப்பாய்கள் மாங்குலம்-முல்லைத்தீவு நெடுஞ்சாலையில் அமைந்துள்ள முல்லியவளை என்னும் நகருக்குள் புகுந்தனர். மேலும், வடக்கு முல்லியவளை பகுதியில் செயல்பாட்டில் இல்லாத விடுதலைப்புலிகளின் 40 அடி உயர தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு கோபுரம் ஒன்றையும் ராணுவம் கைப்பற்றினர்.

இதேபோல் முல்லியவளை பகுதியில் நடந்த உக்கிரமான சண்டையில் விடுதலைப்புலிகளுக்கு பலத்த சேதத்தை உண்டாக்கிய சிங்கள ராணுவத்தினர் 34-வது தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தானிïற்று என்னும் கிராமத்தை கைப்பற்றினர்.


இந்த இரண்டு தாக்குதல்களின் காரணமாக விடுதலைப்புலிகள் மேலும் வடக்கு நோக்கி விரட்டியடிக்கப்பட்டதாகவும், இது விடுதலைப்புலிகளுக்கு பேரிழப்பாகும் எனவும் சிங்கள ராணுவம் கூறுகிறது.

இதன் மூலம் முல்லைத்தீவை நோக்கி ராணுவம் முன்னேறி செல்லுவதற்கு இருந்த அனைத்து தடைகளும் அகற்றப்பட்டுள்ளதாக சிங்கள ராணுவம் அறிவித்துள்ளது.

எனவே, இனி வரும் நாட்களில் இப்பகுதிகளில் தங்களது நிலைகளை வலுப்படுத்திக் கொண்டு விடுதலைப்புலிகள் மீது ராணுவம் தீவிர தாக்குதல் நடத்தலாம் என்றும் கருதப்படுகிறது.

"போர் வேண்டாம், அனைத்து பிரச்சினைகளையும் பேசி தீர்க்கலாம்" - பாகிஸ்தான் அதிபர் சர்தாரி!.




இஸ்லாமாபாத், டிச.28-

அமெரிக்கா, சீனாவின் நிர்பந்தத்தை அடுத்து, பாகிஸ்தான் அதிபர் சர்தாரி பணிந்து வருகிறார். `வேண்டாம் போர்', அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும் என்று அவர் இறங்கி வந்திருக்கிறார்.

மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு எதிராக தீவிர நடவடிக்கை எடுக்க மறுத்து வந்த பாகிஸ்தான், இந்தியா படையெடுக்கப்பபோவதாக வீண் போர் பீதியையும் கிளப்பி வந்தது. எல்லையில் படைகளை குவித்து, போர் ஒத்திகையிலும் இறங்கியது.

இதனால், இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மேகம் சூழ்ந்த நிலையில், பதற்றத்தை தணிக்கும் விதத்தில் அமெரிக்கா, பாகிஸ்தானின் நெருங்கிய நட்பு நாடான சீனா மற்றும் சவுதி அரேபியா ஆகிய நாடுகள் பாகிஸ்தானுக்கு அறிவுரை வழங்கின. தீவிரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் பாகிஸ்தானுக்கு நிர்பந்தம் கொடுத்தன.


3 நாடுகளின் நிர்பந்தம் வந்த அடுத்த நாளான நேற்றே, பாகிஸ்தான் அதிபர் சர்தாரியின் பேச்சில் `சுருதி' குறைந்துவிட்டது. "போரைப்பற்றி நாங்கள் பேசவில்லை. அனைத்து பிரச்சினைகளுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முடியும்'' என்று, அவருடைய மனைவி பெனாசிர் படுகொலை செய்யப்பட்ட முதல் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆற்றிய உரையில் சர்தாரி குறிப்பிட்டார்.

"பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளை நாங்கள் நிச்சயம் அழிப்போம். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்'' என்று உறுதியுடன் தெரிவித்த அதே நேரத்தில், "அதுபற்றி இந்தியா எங்களுக்கு சர்வாதிகாரமாக கட்டளையிட முடியாது'' என்றும், அவர் விட்டுக்கொடுக்காமல் பேசினார். தனது உரையில் சர்தாரி மேலும் கூறியதாவது-


"தீவிரவாதம் என்ற புற்றுநோயினால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டு இருந்தாலும் அதை முற்றிலும் எங்களால் குணமாக்க முடியும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்போம். இந்தியா-பாகிஸ்தான் பிராந்தியத்தில் எழுந்துள்ள பிரச்சினைக்கு போரினால் தீர்வு காண முடியாது. போரினால் இந்த பிராந்தியம் முழுமையாக பாதிக்கப்படும். பேச்சுவார்த்தைதான் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான எங்களது மிகப்பெரிய ஆயுதம், கருவி.

உலகின் பழைமையான ஜனநாயக நாட்டிற்கும் (அமெரிக்கா) உலகின் பெரிய ஜனநாயக நாட்டிற்கும் (இந்தியா) நான் சொல்லிக்கொள்ள விரும்புவது எல்லாம், நாங்கள் சொல்வதை கேளுங்கள். எங்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் பகிர்ந்து கொள்ள நிறைய அனுபவங்கள் எங்களுக்கு உண்டு. ஏராளமான எங்கள் மக்களை இழந்து இருக்கிறோம். போரைப்பற்றி நாங்கள் பேசவில்லை. பழிவாங்குவது பற்றியும் பேசவில்லை.


இந்த பிராந்தியத்தில் (இந்தியா) உள்ள சிலர், ஒருவேளை பாகிஸ்தானின் மனோதிடத்தை, தைரியத்தை பரிசோதிக்க விரும்பினால், அவர்களுக்கு நான் சொல்வதெல்லாம், பலமுறை எங்கள் மனோதிடம் பரிசோதிக்கப்பட்டுவிட்டது. எனவே, தயவு செய்து மீண்டும் அதை பரீட்சித்து பார்க்க வேண்டாம் என்பதுதான். எங்களிடம் சில பலவீனங்கள் இருப்பது உண்மைதான்.

அதை நாங்களே சரிசெய்துவிடுவோம். ஆனால், உங்கள் (இந்தியா) கட்டளைக்கு கீழ்ப்படிந்து அல்ல. தீவிரவாதிகளை ஒழிக்க நாங்களே விரும்பி நடவடிக்கை எடுத்து வருகிறோம். நீங்கள் (நிர்பந்தம் அளிக்கும் நட்பு நாடுகள்) விரும்புவதால் அல்ல. அதற்கான சரியான நேரத்தை நாங்கள் தேர்ந்து எடுப்போம். ஒவ்வொரு துயர நிகழ்வுமே, நமக்கு கிடைக்கும் ஒரு வாய்ப்புதான். இன்றைய தினம் உலகின் கவனம் பாகிஸ்தான் மீது திரும்பி உள்ளது. எங்களுக்கு அதிகமான உதவி தேவைப்படுகிறது''.

இவ்வாறு சர்தாரி கூறினார்.

இந்திய போர்க்கப்பல்கள் அரபிக்கடல் நோக்கி விரைவு.!. - போர்?.








விசாகப்பட்டினம், டிச.28-

போர் பதற்றம் ஏற்பட்டு இருப்பதால், இந்திய போர்க்கப்பல்கள் அரபிக்கடல் பகுதிக்கு விரைந்து உள்ளன.

மும்பை தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து, இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்ற பயத்தில் பாகிஸ்தான் தனது படைகளை இந்திய எல்லையில் குவித்து வருகிறது. பதுங்கு குழிகளையும் அமைத்து வருகிறார்கள். ஜெய்சல்மார், பார்மர், கங்காநகர், புஜ், ரஜோரி பகுதிகளில் உள்ள இந்திய ராணுவ நிலைகளை நோக்கி பாகிஸ்தான் படைகள் நிறுத்தப்பட்டு உள்ளன. பாகிஸ்தான் போர் விமானங்கள் ஒத்திகையில் ஈடுபட்டு உள்ளன.

பாகிஸ்தானின் 9 போர்க்கப்பல்களும் இந்திய கடல் எல்லைக்கு அருகில் அணிவகுத்து நிற்கின்றன. தன்னிடம் உள்ள நீர்மூழ்கி கப்பல்களையும் பாகிஸ்தான் தயார் நிலையில் வைத்து இருக்கிறது.

இதேபோல் இந்தியாவும் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் படைகளை நிறுத்தி உள்ளது. இந்திய விமானப்படை, கடற்படை மற்றும் கடலோர பாதுகாப்பு படை, மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவையும் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன.

மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்து இருந்த `கெடு' முடிந்து விட்டதால் போர் பதற்றம் அதிகரித்து உள்ளது.

இதனால் இந்தியாவின் கிழக்கு கடற்கடை பகுதியில் நிறுத்தப்பட்டு இருந்த `ஐ.என்.எஸ்.ஜலஷ்வா', `ஐ.என்.எஸ்.ரன்வீர்' உள்ளிட்ட மிகவும் சக்தி வாய்ந்த 6 போர்க்கப்பல்கள் அரபிக்கடலுக்கு, அதாவது இந்தியாவின் மேற்கு கடற்கரை பகுதிக்கு விரைந்து உள்ளன. ஆனால் இதை கடற்படை பெரிதுபடுத்த விரும்பவில்லை.


இதுபற்றி இந்திய கடற்படை அதிகாரி ஒருவர் கூறுகையில்; தற்போது எழுந்துள்ள சூழ்நிலைக்கும், நவீன போர்க்கப்பல்கள் மேற்கு கடற்கரை பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதற்கும் சம்பந்தம் இல்லை என்றும், வழக்கமான பயிற்சிக்காக அவை சென்று இருப்பதாகவும் தெரிவித்தார்.

அதே சமயம், இந்தியாவின் கிழக்கு கடற்கரை பகுதியிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு இருக்கிறது. கிழக்கு கடற்கரை பகுதியில் கடற்படை கப்பல்களும், கடலோர பாதுகாப்பு படை கப்பல்களும் `உஷார்' நிலையில் வைக்கப்பட்டு உள்ளன.